இன்று, சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவது பற்றிய விமர்சனங்களை முன்வைப்போர், மாற்றுக் கருத்துகளைத் தெரிவிப்பவர்கள், எதிர்ப்பாளர்கள் ஆகியோர் எதிரிகளாகவும் தேசத்துரோகிகளாகவும் கட்டமைக்கப்படுகிறார்கள்.
மாற்றுக் கருத்துக்கு மதிப்பற்ற சமூகத்தைத் திட்டமிட்டு கட்டமைப்பதற்கு, ஆட்சியாளர்களும் அதிகாரத்தில் உள்ளவர்களும் செல்வந்தர்களும் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருக்கிறார்கள்; இது மிகவும் அபாயகரமானது.
சர்வதேச நாணய நிதியம் மீதான விமர்சனங்களைக் கண்டு ஆட்சியாளர்கள் கலங்குகிறார்கள். அதனாலேயே மாற்றுக் கருத்தாளர்கள் முடக்கப்படுகிறார்கள். இப்போது இலங்கையில் நடந்து கொண்டிருப்பது, இனி நடக்கப் போகும் ஒரு பெரிய பேரழிவுக்கான முன்னோட்டம் மட்டுமே!
இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு சர்வரோக நிவாரணி, சர்வதேச நாணய நிதியத்திடமே இருக்கிறது என்பது கிட்டத்தட்ட முடிந்த முடிவாகி விட்டது. சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் வாங்குவது பற்றிக் கதைப்பவர்கள், அடிப்படையான மூன்று விடயங்களை திட்டமிட்டு மறைக்கிறார்கள்.
முதலாவது, சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கை மேற்கொள்வதன் ஊடு, இலங்கையின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியும் என்று ஆதரிப்பவர்கள், எவ்வாறு இந்த நெருக்கடியை கையாள்வது என்பது பற்றி விரிவாகப் பேசுவதில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனானது, எவ்வாறு இலங்கையின் கடனை அடைக்க உதவப் போகிறது என்பது பற்றி, இதுவரையும் வாய் திறக்கவில்லை.
இந்த இடத்தில், சில விடயங்களை ஆணித்தரமாக பேச வேண்டி உள்ளது. இலங்கையின் மொத்த அந்நியக் கடன் அண்ணளவாக 52 பில்லியன் அமெரிக்க டொலர் ஆகும். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெறக்கூடிய அதிகபட்சக் கடன், நான்கு பில்லியன் அமெரிக்க டொலர் மட்டுமேயாகும். அத்தொகையும் பல்வேறு தவணைகளிலேயே வழங்கப்படும். எனவே, சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கிடைக்கும் கடன் தொகை, இலங்கையின் கடனை அடைக்க போதுமானது அல்ல.
வங்குரோத்து நிலையில் உள்ள இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுவதனூடு, மீண்டும் சர்வதேச அரங்கில் கடன் பெறுவதற்கு தகுதியானதாக மாறுகிறது. இதனால், இலங்கையால் மீண்டும் கடனை பெற்றுக் கொள்ள இயலும். இந்த ஒற்றைக் காரணத்துக்காகவே, இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் கடனைப் பெற்றுக்கொள்ள அடம்பிடிக்கிறது.
இப்பொழுது முன்மொழியப்படும் யோசனைகள் அனைத்தும் மேலும், இலங்கையை கடனாளி ஆக்குவதைப் பற்றியதேயன்றி, இலங்கையின் கடனைக் குறைக்கும் நோக்கம் கொண்டவை அல்ல.
தற்போதைய கதையாடல்களின் ஊடு, இலங்கையின் பொருளாதார நெருக்கடி என்பது, கடன் வாங்க இயலாது போனமை என்பதாகச் சுருக்கப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் பல்பரிமாண அம்சங்கள் பேசப்படாமல் தவிர்க்கப்படுகின்றன.
குறிப்பாக, நாட்டில் புரையோடிப் போயுள்ள ஊழல் முக்கியமான காரணம். கடந்த மூன்று தசாப்த காலங்களில், விலக்கில்லாது எல்லா அரசாங்கங்களும் ஊழலில் ஒன்றுக்கொன்று சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபித்துள்ளன.
ஆனால், இன்று இது பேசுபொருள் அல்ல. திசைதிருப்புதல்களின் ஊடாக, பொருளாதார நெருக்கடிக்கான உண்மையான காரணிகள் பேசப்படாமல், பார்த்துக் கொள்ளப்படுகின்றன. ஏனெனில், என்றாவது இவை பொதுத்தளத்தில் விரிவாகப் பேசப்படும் போது, கட்டமைப்பு ரீதியான மாற்றம் தவிர்க்க இயலாததாகும். அதை ஆட்சியாளர்களும் அரசியல்வாதிகளும் அதிகாரத்தை ருசிப்போரும் விரும்பவில்லை.
இரண்டாவது அம்சம், சர்வதேச நாணய நிதியத்திடம் இலங்கை கடன் பெறுகின்ற முதலாவது சந்தர்ப்பம் இதுவன்று. 1965ஆம் ஆண்டு முதல் இலங்கை தொடர்ச்சியாக, சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெற்றுள்ளது. இதுவரை 16 தடவைகள் இவ்வகையான கடன் திட்டங்களுக்குள் இலங்கை ஆட்பட்டு உள்ளது.
தொடர்ச்சியாகக் கடன் வாங்கிய போதும், இலங்கையால் அதன் அந்நியக் கடனைக் குறைக்கவோ, அடைக்கவோ இயலவில்லை. மாறாக, இலங்கையின் அந்நியக் கடனின் தொகை, தொடர்ச்சியாக அதிகரித்து வந்துள்ளது.
இந்நிலையில் இம்முறை பெறப்படுகின்ற கடன் மட்டும், இலங்கையின் கடன் சுமையை எவ்வாறு தீர்க்கும் என்பது பற்றி, யாரும் கருத்துரைப்பதில்லை. சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் பெறுகின்ற ஒவ்வொரு முறையும், இலங்கை தொடர்ச்சியான சமூகநல வெட்டுகளை நடைமுறைப்படுத்தி வந்துள்ளது என்பதையும் நினைவில் கொள்வது தகும்.
வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்பதாயின், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து கடன் பெறப்பட்ட ஒவ்வொரு தடவையும், ஒருங்கே சமூகநல வெட்டுகளும் அந்நிய கடன் அதிகரிப்பும் நடந்துள்ளன.
பேசப்படாத மூன்றாவது முக்கிய விடயம், இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள் யார் என்கிற விடயத்தை, இன்று வரை இலங்கை அரசாங்கம் இரகசியமாக வைத்துள்ளது.
குறிப்பாக, இலங்கைக்கு கடன் வழங்கிய தனியார் நிறுவனங்கள் எவை என்கிற தகவல், இன்று வரை பகிரங்கப்படுத்தப்படவில்லை. இது இரண்டு அம்சங்களை கோடிட்டுக் காட்டுகிறது.
முதலாவது, இலங்கைக்கு கடன் வழங்கியவர்கள் யார் என்பதை அறிகின்ற உரிமை, அனைத்து இலங்கையர்களுக்கும் உண்டு. ஆனால், அந்த உரிமை மறுக்கப்பட்டிருக்கிறது.
இரண்டாவது, இலங்கை அரசாங்கம் குறித்த விடயத்தில் இரகசியம் காப்பதானது, கடன் வழங்குநர்கள் குறித்த சந்தேகங்களை எழுப்புகிறது. இதை மறைப்பதற்காக, சீனக் கடன்தான் இலங்கையை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளியது என்ற பொய், திரும்பத் திரும்பச் சொல்லப்படுகிறது.
கொள்கை வகுப்பாளர்கள், நிபுணர்கள் மத்தியில், சர்வதேச நாணய நிதியத்துக்குச் செல்வது, நெருக்கடியிலிருந்து இலங்கைக்கு ஒரு பாதையை புலப்படுத்தும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.
ஆனால், சர்வதேச நாணய நிதியம் கடன் வழங்குவதன் பெயரால், இலங்கையில் கட்டமைப்பு மாற்றங்களைக் கோருகிறது. இந்த மாற்றங்கள் இலங்கையில் எஞ்சியுள்ள சமூகநலத் திட்டங்களையும் முழுமையாக அழித்துவிடக் கூடியவை.
சர்வதேச நாணய நிதியத்திடம் சரணாகதி அடைவதையே நோக்காகக் கொண்டுள்ள அரசாங்கத்திடம், எதிர்பார்க்க அதிகமில்லை.
‘அந்நியத் தலையீடு’, ‘இறையாண்மைக்கு சவால்’ என்று அடிக்கடி கூச்சலிடுகின்ற பேரினவாதிகளையும் கொண்டுள்ள அரசாங்கமே, சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதனூடு, இலங்கையின் இறையாண்மையை அடகுவைக்கும் செயலை முன்னெடுக்கிறது.
கவனிப்புக்குரியது யாதெனில், கடனை திருப்பிச் செலுத்துவதில் அக்கறை காட்டுகிற அரசாங்கம், திருடப்பட்ட, கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தவில்லை. மாறாக, இன்னமும் கடனைப் பெறுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்ளும் முகமாக, சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்படுகிறது.
எந்தக் கட்டமைப்பு ஊழலை வரன்முறையின்றி சாத்தியமாக்கியதோ, அதே கட்டமைப்பில் மாற்றங்கள் நிகழும் என எதிர்பார்ப்பது மடத்தனம்.
சர்வதேச நாணய நிதியத்துடன், ‘அலுவலர் நிலை உடன்பாடு’ (Staff Level Agreement) விரைவில் எட்டப்படும் என்று, ஜனாதிபதி தனது பாராளுமன்ற உரையில் தெரிவித்தார். கேள்வி யாதெனில், இந்த உடன்பாட்டை பகிரங்கப்படுத்த அரசாங்கம் தயாரா? மடியில் கனமில்லையாயின் வெளிப்படுத்த வேண்டியதுதானே!
Devil is in the detail என்றொரு கூற்று ஆங்கிலத்தில் உண்டு. இந்தக் கூற்று, இதற்கு மிகவும் பொருந்தும். சர்வதேச நாணய நிதியத்திடம் உடன்படிக்கை எட்டப்பட்டது என்ற செய்தியால் பலனில்லை.
என்னென்ன விடயங்கள் பேசப்பட்டன என்பதும் இலங்கை அரசாங்கம் உடன்பட்ட நிபந்தனைகள் எவை என்பன, பகிரங்கப்படுத்த வேண்டும்.
மக்கள் இப்போது, அரசாங்கத்திடம் கோர வேண்டியது, வெளிப்படைத் தன்மையையே ஆகும். மூடிய கதவுகளுக்குப் பின்னால், எமது தலைவிதியை யாரோ சிலர் முடிவு செய்வதை அனுமதிக்க இயலாது; அனுமதிக்கவும் கூடாது.
நாட்டின் வளங்களும் சொத்துகளும், இலங்கை குடிமக்களுக்குச் சொந்தமானவை; மக்களுக்காகவை. அவற்றை மக்களின் அனுமதியின்றி பகிர்ந்தளிப்பதோ, தனியார் மயமாக்குவதோ, குத்தகைக்கு விடுவதோ மக்களை அவமதிக்கும் செயல் மட்டுமல்ல; வீட்டுக்குள் அனுமதியின்றிப் புகுந்து திருடும் செயலுக்கு ஒப்பானது.