சர்வதேச நாணய நிதியத்திடம் இதற்கு முன்னர் 16 தடவைகள் இலங்கை கடன் வாங்கியதே, அக்கடனினால் இலங்கையால் அந்நியக் கடனை அடைக்க முடிந்ததா அல்லது, இலங்கை மேலும் கடனாளியாகியதா என்ற வினாவை எழுப்புவோர் யாருமில்லை.
கடந்த காலத்தில், சர்வதேச நாணய நிதியத்திடம் வாங்கப்பட்ட கடனால் ஏற்பட்ட மாற்றங்கள் என்ன என்பது பற்றிப் பேசுவாரில்லை. ஆனால், எப்படியாவது இன்னொருமுறை கடனை வாங்கிவிட வேண்டும் என்று, எல்லோரும் கங்கணம் கட்டிக் கொண்டுள்ளார்கள்.
இலங்கையின் அந்நியக் கடன் பற்றியும் பொருளாதார நெருக்கடி பற்றியும், பேசுவோர் பேசாமல் தவிர்க்கின்ற சில விடயங்கள் உண்டு. அவை, முக்கியமானவை.
இந்த நாட்டின் இன்றைய நெருக்கடிக்கான காரணங்களை, கடந்த சில ஆண்டுகளின் நிகழ்வுகளில் மட்டும் விசாரித்தறிய இயலாது. எனினும், எதிர்க்கட்சிகளும் ஆய்வாளர்களும், அனைத்து பொருளாதாரப் பிரச்சினைகளையும், 2020இல் தெரிவான அரசாங்கத்தின் தலையில் சுமத்த முற்படுகின்றனர். இந்நெருக்கடியில், அவ்வரசாங்கத்துக்கு முக்கிய பங்குண்டு என்பதில் மறுப்பில்லை.
ஆனால், அடிப்படையான சில கோளாறுகள், இந்த நாட்டை நுகர்வுப் பொருளாதாரத்தினுள் தள்ளி, தேசிய உற்பத்திகளுக்கு குழி பறித்து, அந்நியக் கடன்களுக்கு உட்படுத்திய அனைத்து அரசாங்கங்களுக்கும் உரியன; இது வசதியாக மறக்கப்படுகிறது.
இன்றைய நெருக்கடிக்கு, உடனடிக் காரணியாக உள்ள அந்நியச் செலாவணி நெருக்கடியை எடுத்து நோக்கினால், இந்த நாட்டின் உழைப்பாளர்களில் ஐந்தில் ஒருவர், நேரடியாக அல்லது மறைமுகமாக ஓர் அந்திய நாட்டுக்காக உழைக்கின்றார். இது இரண்டு அடிப்படையான தாக்கங்களை ஏற்படுத்துகிறது.
ஒருபுறம், உள்நாட்டுத் தொழில் விருத்தி தடைப்படுகிறது. மறுபுறம், அயல் உழைப்பு வருமானத்தில் முற்றாக தங்கியிருக்கும், பலரைக் கொண்ட ஒரு சமூகமாக நம்மை உருமாற்றியுள்ளது.
இத்தோடு, தொடர்புடையதாக அந்நியச் செலாவணிக்கு இன்னொரு பரிமாணமும் உண்டு. அது நீண்ட போரின் விளைவால் தோற்றம்பெற்ற ஒரு புலம்பெயர் சமூகம். இப்பின்னணியிலும் எழுகின்ற கேள்வி யாதெனில், இவ்வாறு பல்முனைப்பட்ட அந்நியச் செலாவணி வருமானம், நாட்டுக்கு இருந்தபோதும் இந்தப் பங்களிப்பில், எவ்வளவு நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு உதவியுள்ளது? இந்த அந்நியச் செலாவணி, எங்கு செலவிடப்படுகிறது?
எமது அந்நியச்செலாவணியில் பெரும்பகுதி, இறக்குமதியில் செலவாகிறது. இதற்கு அடிப்படையான காரணம், எம்மிடம் உட்பொதிந்துள்ள நுகர்வுப் பண்பாடு. திறந்த பொருளாதாரத்தின் அறிமுகத்தோடு உடன்பிறந்த உலகமயமாக்கல், இந்நுகர்வை புதிய தளத்துக்கு நகர்த்தியுள்ளது.
இன்று நாம், அர்த்தமற்ற ஒரு நுகர்வுப் பழக்கத்துக்கு அடிமைப்பட்டுள்ளோம். அதன் துணை விளைவுகளாகவே உணவு இறக்குமதியின் பெருக்கமும் தனியார் கல்வியும் தனியார் மருத்துவமும் கட்டுபாடின்றி பெருகும் ஆடம்பரப் பொருட்களின் நுகர்வும் அமைகின்றன. இவையனைத்துக்கும் அந்நியச்செலாவணியே பயன்படுகிறது. இவ்வாறு அந்நியச் செலாவணி வீணாகின்றபோது, தொடர்ச்சியான அந்நியக் கடன்கள் மூலம் நுகர்வு குறையாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது.
எமது அடிப்படையான பொருளாதார நிலைப்பாடுகளில் மாற்றம் தேவை. இந்த அடிப்படைச் சிக்கல்களைத் தீர்க்காமல், எந்தவொரு கடனும் பயன் தராது. ஆனால், இந்த மாற்றத்துக்கு அரசியல்வாதிகளோ, அரசாங்கமோ தயாராக இல்லை.
எல்லோருக்கும் இருக்கின்ற ‘ஆபத்பாண்டவன்’ சர்வதேச நாணய நிதியம். இதனிடம் கடன் வாங்கச் சொல்லிப் விதந்துரைக்கின்றவர்கள், இதுவரை உலகில் எந்த நாட்டை, சர்வதேச நாணய நிதியம் கடனில் இருந்து மீட்டது என்ற தகவலைச் சொல்வார்களா? சர்வதேச நாணய நிதியத்தால் மீட்கப்பட்ட நாடென்று, எதுவுமில்லை. இரண்டு நாடுகளை உதாரணமாகக் காட்ட முடியும்.
முதலாவது நாடு உக்ரேன். 2014இல், சர்வதேச நாணய நிதியத்திடம் உக்ரைன், 17 பில்லியன் அமெரிக்க டொலரை கடனாக வாங்கியது. இதற்காக விதிக்கப்பட்ட கட்டமைப்பு மாற்றங்களில், இரண்டு பிரதானமானவை.
முதலாவது, அரசுக்குச் சொந்தமான விளைநிலங்களைத் தனியாருக்கு விற்பனை செய்வதும், தனியாரின் நிலக் கொள்வனவு தொடர்பான கட்டுப்பாடுகளை நீக்குவதும் ஆகும்.
இரண்டாவது, உக்ரேன் உயிரியல் தொழில்நுட்ப விவசாயம், மரபணு மாற்றப்பட்ட பயிர்ச்செய்கை, மான்சாண்டோவின் நச்சு பயிர்கள், இரசாயனங்கள் விற்பனை ஆகியவற்றுக்கு அனுமதியளித்தல் ஆகியனவாகும்.
இதன்மூலம், பல்தேசியக் கம்பெனிகளுக்கான வாயில்கள் திறக்கப்பட்டன; ஐரோப்பா முழுவதிலும் மிகவும் பழைமையான ஒரு விவசாய நிலம் அழிக்கப்பட்டது. இதற்கு, உக்ரேனிய அரசாங்கம் உடன்பட்டது. அந்த அரசாங்கமும், ஓர் அமெரிக்கச் சதியின் விளைவால் ஆட்சிக்கு வந்தது என்பதும் கவனிப்புக்குரியது.
சர்வதேச நாணய நிதியத்தின் கடனைத் தொடர்ந்து, உக்ரேனில் நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டமைப்பு மாற்றங்களின் விளைவால், மான்சாண்டோ, பிளாக்ராக், வான்கார்ட் ஆகியவை 20 மில்லியன் ஹெக்டேருக்கு மேற்பட்ட நிலங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. சுருக்கமாகச் சொல்வதாயின் இந்நிறுவனங்கள், உக்ரேன் விளைநிலங்களில் 70 சதவீதத்துக்கு மேற்பட்டதை வாங்கியுள்ளன. ஐரோப்பாவில் மிகவும் வளமான மண், இப்போது பல்தேசியக் கம்பெனிகளுக்குத் திறக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, இன்னும் கடன்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் உடன்பட்டது. அதற்கு மாற்றாக, உக்ரேன் ஓய்வூதியம், எரிபொருள் மானியங்களைக் குறைக்க வேண்டும்.
ஆனால், சர்வதேச நாணய நிதியம் வழங்க உடன்பட்ட கடன்தொகையை, எதுவித முன்நிபந்தனைகளின்றி வழங்க முன்வந்தது ரஷ்யா. இதைத் தொடர்ந்து நடந்தவைக்கும், இப்போதைய போருக்கும் நெருங்கிய தொடர்புண்டு.
இரண்டாவது உதாரணம், ஆர்ஜென்ரீனா. சர்வதேச நாணய நிதியக் கடன் ஆர்ஜென்ரீனாவில் தோற்றுள்ளதாக, இவ்வாண்டு தொடக்கத்தில் அந்த நிறுவனமே ஏற்றுள்ளது.
ஆர்ஜென்ரீனாவின் கதை, தனியே அதற்கு மட்டும் உரியதல்ல. இது முழு மூன்றாமுலகுக்கும் உரியது. குறிப்பாக, கடந்த நூற்றாண்டில் தென்அமெரிக்காவில், கடன் என்ற போர்வையில் சர்வதேச நாணய நிதியம் இழைத்த கொடுமைகள் ஏராளம். குறிப்பாக, 1990களில் தென்அமெரிக்காவில் உலகமயமாதலும் திறந்த பொருளாதாரமும் தீவிரமாக நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டதைத் தொடர்ந்து, ‘கட்டமைப்புச் சீராக்கம்’ எனப்படும் அரச நிர்வாகத் துறையைக் கட்டுப்படுத்தலும், அரசதுறைகளைத் தனியார் மயமாக்கலும் தொடர்ந்தன.
பலநாடுகளில், சர்வதேச நாணய நிதியம் பொருளாதாரக் கொள்கைகளை ஒழுங்குபடுத்திக் கட்டமைக்கும் பணியில் ஈடுபட்டது. இவ்வாறு, சர்வதேச நாணய நிதியத்தால் வடிவமைக்கப்பட்ட பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டதொரு நாடு ஆர்ஜென்ரீனா.
இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆர்ஜென்ரீனா, கடும் பொருளாதார நெருக்கடிக்கு உட்பட்டது. சர்வதேச நாணய நிதியக் கடன் உட்பட, பல கடன்களையும் தீர்க்க இயலாது மக்கள் மீது மேலும் சுமைகளை ஏற்றிய ஒரு நிலையில், அங்கு ஆட்சிமாற்றமொன்று நடைபெற்றது.
இடதுசாரிப் போக்கான புதிய அரசாங்கம், எந்தக் கடனையும் வட்டியையும் மீளச் செலுத்துவதில்லை என்ற முடிவை மிகத் தெளிவாக எடுத்தது. இதன் விளைவால், ஆர்ஜென்ரீனா மீது கடுமையான சர்வதேச அழுத்தங்கள் ஏவப்பட்டன. ஆனால், பலவாறான சர்வதேச அழுத்தங்கையும் மீறி, ஆர்ஜென்ரீனாவின் பொருளாதாரம் சிறிது சிறிதாக நெருக்கடியில் இருந்து மீண்டது.
அதன் பின்னர், நெருங்கிய நட்பு நாடான வெனிசுவேலாவின் உதவியுடன், சர்வதேச நாணய நிதியத்திடம் வாங்கிய கடனை முழுமையாக அடைத்ததோடு, சர்வதேச நாணய நிதியத்திடம் இனிமேல் கடன் வாங்குவதில்லை என்ற முடிவையும் எடுத்தது. ஆனால், இது நீண்டகாலம் நிலைக்கவில்லை. ஒரு சதியின் விளைவால், தீவிர வலதுசாரி அரசாங்கம் பதவிக்கு வந்தது.
புதிய ஜனாதிபதியின் முதல் காரியங்களில் ஒன்று, சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்தியமை ஆகும். ஆர்ஜென்ரீனா நாட்டுக்குள் மீண்டும் சர்வதேச நாணய நிதியம் நுழைந்தது. மிகக்குறுகிய காலத்தில், அந்நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இன்று, இலங்கை போன்று வங்குரோத்து நிலையில் ஆர்ஜென்ரீனா உள்ளது. இப்போது சர்வதேச நாணய நிதியத்திடம் கையேந்துகிறார்கள்.
இதன் பின்னணியிலேயே, சர்வதேச நாணய நிதியம், ஆர்ஜென்ரீனாவில் தோல்வியடைந்ததை தொடர்ந்து வழங்கிய ஒப்புதல் வாக்குமூலத்தை நோக்க வேண்டும். சர்வதேச நாணய நிதியம், ‘ஆபத்பாண்டவனோ’, ‘இரட்சகனோ’ இல்லை. இந்த உண்மை விளங்காவிடின், இன்னலில் தொடர்ந்தும் உழல்வதற்கு நாம் கடமைப்பட்டவர்கள்.