மகிழ்விலும், துயரத்திலும்; வெற்றிகளிலும், தோல்விகளிலும்; பாதுகாப்பிலும் பாதுகாப்பு அச்சுறத்தல்களிலும்; தொடர்ந்த நட்பு. நானும் என் வாழ்க்கைத் துணையும் இன்று உயிருடன் வாழ்தலுக்குரிய உறுதிப்பாட்டை தம் உயிரை கொடுத்தாகினும் காப்பாற்றும் செயற்பாட்டுன் கூடிய உறவு. உயிர் அச்சுறுத்தல்கள் எதிரிகளிடம் இருந்தும், எம்மவர்களிடம் இருந்தும் வந்த போது பின் நிற்காது எல்லாவற்றையும் இழந்தாகினும் என்ற வைராக்கியத்துடன் எம்மை காப்பாற்றிய உறவு.
என் பொது சமூக வாழ்வு போராட்டத்தில் உறைவிடம், உணவு, பாதுகாப்பு, ஆதரவு, அரவணைப்பு என்று நீண்ட உறவு எங்களுடையது. என்னையும், என் வாழ்க்கைத் துணையையும் அண்ணா, அக்கா என்று விழித்து இணைத்த உறவு. கூடவே தன் தாயையும் எம்முடன் இணைத்து பயணித்த உறவு.
ஆம் அவள்தான் சறோ என்ற எமது சிநேகித உறவு.
எமது குலம், கோத்திரம், சாதி, சமயம் எந்த ஊர், என்ன பிரதி உபகாரம் என்று ஏதும் எதிர்பார்க்காமல் எம்மை அரவணைத்த உறவு. தனது உடன் பிறப்புக்களையும் மேவிய பாசப் பிணைப்பு அது. தன் பிள்ளைகளையும், எம் பிள்ளைகளையும் ஒன்றாக பார்த்து பராமரித்த உறவு. என் மகனின் பல்கலைக் கழக வாழ்க்கை கால கட்டங்களில் அவருக்கும் சேர்த்து உணவு கட்டிய தாயுள்ள உணர்வு.
யாரையும் குறை கூறாத உறவு. எம்மையும் ஒருபொழுதேனும் குறை கூறியறியாத உறவு. இரத்த உறவு, கூடிப்பிறந்த உறவு, ஊர் உறவு, வேலையிடத்து உறவு, அனாமதேயமாக ஏற்பட்ட உறவு என்று எல்லாவற்றையும் இணைத்துப் பயணித்த அந்த வெள்ளந்தி உறவு சறோவிற்கு ஒரு பெரிய உறவு வட்டத்தை உருவாக்கியே இருந்தது.
பகடு, ஆடம்பரியம், பொய்மையாக பழகாதிருத்தல், எதிர்பார்பின்றிய நட்பு, எள்ளி நகையாடியவர்களையும் உறவு சொல்லி அழைத்த பண்பு என்று அடுக்கிக் கொண்டே போகலாம். இந்த பண்புகளை எமக்குள்ளும் வலுவாக்கி, உருவாக்கிய உயரிய செயற்பாடுகள் நாம் தங்களிடம் இருந்து கற்ற நற் பாடங்கள் அல்லவா.
தன் வாழ்விற்கான சேமிப்புகளையும் ஈகை செய்து திரும்புமா..? திரும்பாதா…? என்ற கேள்விகளுக்கு அப்பாற்பட்டு நாம் கேட்காலே உதவி செய்த மனபாங்கு. அது உன் கன்னிக் காலத்து செயற்பாடுகள். அது இன்றுவரை யாருடனும் பகிராத இரகசியம் காத்த பண்பு என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
உன் ஓட்டத்திற்கு வேகத் தடை போட்ட அந்த 10 வருடத்திற்கு முந்தைய மூளையை நோக்கிய இரத்த குழாய் வெடிப்பு. பல தடவை அறுவை சிகிச்சை… மரண வாயிலை தொட்டு வந்த தருணங்கள்…. அகரம் மறந்த அந்த நாட்கள்… எல்லாவற்றிலும் நாமும் வைத்தியசாலை, சத்திர சிகிச்சை மண்டப வாயிலில் காத்திருக்க மீண்டு… மீண்டு… மறு பிறவி எடுத்து வந்த அந்த தருணங்கள். நாம் துடித்த ஆற்ற முடியாத துன்பத் தருணங்கள் இன்றும் நினைவில் வந்து போகின்றன. ஆனாலும் நீ மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்து அகரத்தை உன் ஞாபகத்திற்குள் கொண்டு வந்து எமக்கு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி தருணங்கள்.
ஆனாலும் நீ எழுந்து நடமாட முடியாத முளை ஏவல் அற்ற சூழ்நிலைகள். ஆனாலும் படுத்த படுக்கையில் கூட உனது நகைச்சுவை கலந்த கலந்துரையாடல்கள்… எம்மை என்றும் போல வீட்டிற்கு வரவழைத்து விருந்தோம்பல்கள்…. தொடராமல் இல்லை. இவை நம்ப முடியாத தருணங்கள். வீட்டில் விருந்து படைத்த தருணங்கள் 1970 களின் பிற்கூற்றில் ஆரம்பித்து உன் மரணவாயில் வரையும் தொடர வைத்த அந்த செயற்பாடுகள் மறக்க முடியுமா..?
ஆலை மரத்தை அதன் விழுதுகளே தாங்கிப் பிடிக்கின்றன. விழுதுகள் இன்றேல் ஆலை மரம் வீழ்ந்து விடும் என்ற நிலையில் நீ படுக்கையில் வீழ்ந்த போது உன்னை உனது கணவன் சிவா உம், பிள்ளைகளும், தாயும், நண்பர் கூட்டமாகிய நாங்களும் விழுதுகளாய் இருந்து தாங்கி நின்றோம். ஆலை மர விழுதுகள் மரத்தை தமக்கு பாரமாக எப்போதும் நினைத்ததும் இல்லை. சுமை என்று நழுவ விட்டுச் சென்றதும் இல்லை. நாமும் உன் விடயத்தில் அப்படியே உனக்கும் உதவியாய் இருந்தோம். தாளை மரத்தை தாங்கும் கங்குகள் போலிருந்து எம்மை உன்னைத் தாங்கும் வலிமையை மனநிலையை உருவாக்கிய நீயே எமக்கான கடமையை செய்ய விடாது இடை வெளியில் உன் மூச்சை இந்த இயற்கை அடைத்தது ஏனோ…? எமது புலம்பல் கேட்கவா இல்லை உனக்கு.
உன் கணவன் பிள்ளைகள் தாய் உறவினர்களுக்கு ஆறுதல் கூற நாம் எம்மை தயார்படுத்த முடியாத துயரத்திற்குள் தள்ளிச் சென்றுவிட்ட ஆற்றுப்படுத்த முடியாத துயரத்திற்குள் தள்ளிய அந்த இயற்கையை தூற்றி நிற்கின்றேன். என்றும் போல் நாம் விழுதுகளாக… கங்குகளாக.. உன்னை தாங்கி பிடிக்கும் வரம் எமக்கு கிடைக்காதா…? என்று ஏங்கும் நட்பு உறவுகள் நாங்கள் சறோ.
ஏன் அவசரப்பட்டு விட்டாய் கடந்த 10 வருடங்களில் பலதடவை மீண்டும் மீண்டும் எழுந்து வந்ததைப் போலவே இம்முறையும் எழுந்து வருவாய்தான் என்றிருந்தோம் ஏமாற்றி விட்டாயே. இல்லை…இல்லை… ஏமாற்றவில்லை எமது இதயங்களில் நினைவுகளாக இனிமையாய் உறைந்து விட்டாய் சறோ. நட்பு என்ற சொற்கள் உச்சரிக்கும் போதெல்லாம் உன்னை விஞ்சி யாரும் எம் மனதில் இனி உதிக்கப் போவதில்லை.
ஈழ விடுதலைப் போராட்டத்தின் பல தலைவர்கள், போராளிகளின் உயர் வாழ்தலை உறுதிப்படுத்தி பலரில் நீயும் ஒருவராய் மிளிர்கின்றார். போராளிகள் பொது மக்களில் பலர் எம்மை விட்டுப் பிரிந்துவிட்டாலும் சிலர் இன்னம் உயர்வாழ்கின்றனர். அவர்கள் யாவரது உயிர்வாழ்தலையும் உறுதிப்படுத்தியதில் நீயும் ஒரு களம் கண்ட போராளிதான். இது என் இரங்கல் புலம்பல் மட்டும் அல்ல எம்மில் பலரதும் இரங்கல்…. ஆற்றுப்படுத்த முடியாத துயரம்தான் இது.
போய் வா நட்பே என்று எமது இதயங்களின் இனிமையாய் உன் நினைவுகளை நாம் தாங்கிச் சென்று பயணிப்போம் .
(மரண நிகழ்வு பற்றிய விபரம் அறிய இங்கே அழுத்தவும்….: https://www.ripbook.com/93351499/notice/103921)