அண்மைக்காலமாக தமிழகத்தின் அரசியற் செயற்பாட்டுக் களத்தில் மிகப் பெரிய மாறுதலை ஒரு சிந்தனை மாற்றத்தை நான் உணருகிறேன். அது மேலும் மேலும் வளர்ந்து வரவேண்டும் என்று விரும்புகிறேன்.
இன்றைய கூட்டத்தில் உரையாற்றியவர்கள் இருவர் குறிப்பிட்ட இரண்டு முக்கிய விடயங்கள் குறித்து சிறு கவனக்குவிப்பினை ஏற்படுத்துவதற்கான பதிவு இது.
1. இதில் உரையாற்றிய தோழர் அவ்வை அவர்களது குறிப்பு.
“நாங்கள் வந்து இவ்வளவு காலமும் இந்த யுத்தத் தால் பாதிக்கப்பட்டுச் சிதறிப் போயிருக்கிறம். இன்னமும் சமூக அக்கறையும் மனித நேயமும் கொண்ட ஆக்கள் தான் நாங்கள் எல்லோரும். ஆனால் ஏதோ ஒரு விதத்தில எங்கள ஒரு கயிறு இணைத்திருக்கிறது. அதே மாதிரி ஏதோ ஒரு இடத்தில ஏதோ ஒரு விதமா எங்கள எல்லா இடத்திலயும் ஏதோ ஒன்று வெட்டி வைத்திருக்கிறது. அது இலக்கியம் படைக்கிற ஆக்களாக இருந்தாலும் சரி,அரசியல் கட்டுரை எழுதுற ஆக்களாக இருந்தாலுஞ்சரி சாதாரண மக்கள் எண்டாலும் சரி எங்களுக்குள்ள இன்னும் ஒரு விரோதமும் ஒரு குரோதமும் இருக்குது. நாங்கள் மறுக்கேலாது. ஒன்றில் நாங்கள் புலி சார்பான ஆட்களாக இருக்கிறம். புலிக்கு வக்காலத்து வாங்குறம் புலி எதிர்ப்பாளர்களை எங்களுக்குப் பிடிக்கேல்ல. அல்லது புலி எதிர்ப்பாளர்களுக்கு புலிகளைப்பற்றிக் கதைச்சாலே பிடிக்கேல்ல. அல்லது எங்களுடைய போராட்ட வரலாற்றையும் போராட்டத்தின்ர முக்கியமான அம்சங்களையும் சரியான முறையில் விளங்கிக் கொள்ள முடியாத மாதிரி அடுத்த ஜெனறேசன் அதற்கடுத்த ஜெனறேசன் அதற்கடுத்த ஜெனறேசன் விளங்கிக் கொள்ள முடியாத மாதிரி எங்கட சூழலைக் கலையும் இலக்கியமும் எல்லாமும் கட்டி வைத்திருக்கிறது என நான் நம்புறன்”.
“அவ்வை”
முதலில் விரோதங்களும் குரோதங்களும் கொண்டவைதான் எமது தேசிய விடுதலைப் போராட்டம் என்பது என்றகதையைச் சொல்லிக் கொண்டு. ஈழதேசம் என்பது தேசமல்ல கதை. அதற்குள் பல்லாயிரம் கதைகள் இருக்கின்றன. அங்கே காலத்தில் நடந்ததெல்லாம் ஒரு போராட்டமல்ல வெறும் யுத்தங்கள். என்பதை மீளவும் அழுத்திச் சொல்லிக் கொண்டு. புலியெதிர்ப்பு என்பது அஜித் ரசிகருக்கானதும் விஜய் எதிர்ப்பானதுமான மனநிலை அல்ல. அங்கே ஒரு இனத்தை அதற்குள் இருந்த பல்வேறு சமூகங்களை அடியோடு சூறையாடிய தாண்டவத்தின் எதிர் நிலை. அதனைப் பல்வேறு தளத்தில் பல்வேறு வகையினர் வெளிப்படுத்தினார்கள். அதனால் பலர் மாண்டார்கள். அந்த மாண்டவர்களை மனதிலிருத்திச் சொல்லுகிறேன்
தோழர் அவ்வை நீங்கள் இந்த வார்த்தைகளை உதிர்த்தே இருக்கக் கூடாது. உங்களுக்கு என்னை விடவும் அதிக கதைகள் தெரியும்.
- பா. செயப்பிரகாசம் தோழர் அவர்கள் உரைத்தது.
“ ஒரு விடுதலைப் போராட்டம். குறிப்பாக ஒரு தேசிய இன விடுதலைப் போராட்டம் எந்த அடிப்படையில் நடத்தப்பட வேண்டுமோ அவ்வாறு நடத்தப்படவில்லை. எல்லாப் போராளி இஙக்கங்களுமே இந்தப் பிழையைச் செய்திருக்கின்றன. இந்தப் பிழைச் செய்தவர்களில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்பதல்ல. எல்லோருமே ஒரு சமபாடுடையவர்கள். இவர்கள் “புளொட்”ஐ அழித்தார்கள். “ரெலோ”வை அழித்தார்கள். “ஈரோஸ்”ஐப் பணிந்து போக வைத்தார்கள்.என்றெல்லாம் சொல்லப்படுகிறது . ஆனால் இவர்கள் முந்திக் கொண்டதனாலே இவர்கள் செய்தார்கள். சிலவேளை புளொட் அம்ப்பினர் முந்திக் கொண்டிருந்தால் அல்லது இந்தியாவின் ஆசிகளைப் பெற்ற ரெலோ அமைப்பினர் முந்திக் கொண்டிருந்தால் அவர்கள் செய்திருப்பார்கள். ஈபி.ஆர்.எல். எவ்வும் அதே தான்.”
“செயப்பிரகாசம்” - உண்மையில் இந்த அமைப்புக்களுக்கிடையில் மிகப் பெரிய வித்தியாசங்கள் பல இருந்தன. உதாரணத்திற்குஒன்றைச் சொல்லுகிறேன்.
புளொட்டின் அராஜகப் போக்கினை மறுதலித்து அமைப்பின் ஒட்டு மொத்தச் செயற்பாட்டையும் ஈழத்தில் நிறுத்திவிட அவர்களது ஈழத்தின் தளச் செயற்காட்டாளர்களால் முடிவெடுக்கவும் செயற்படுத்தவும் முடிந்தது. இறுதியில் தங்களுடைய தலைவனுக்கு அதன் கீழிருந்தவர்களால் மரணதண்டனையைக் கொடுக்கவும் முடிந்தது.
புலிகள் ரெலோவை அழித்து சில நாட்களில் எனது கிராமத்திலிருந்த ஈ.பி.ஆர். எல். எவ். முகாமில் இருந்த போராளிகளுடன் உரையாடிய போது புலிகள் தங்கள் மீது போர் தொடுத்தால் தங்களுடைய முகாம் பொறுப்பாளரைச் சுட்டுவிட்டுத்தான் புலிகளைச் சுடுவோம். ஏனெனில் எந்த சக போராளிகளையும் கொல்லக் கூடாது என்ற பிடிவாதக்காரன் அவன் என்பார்கள். இப்படி எண்ணம் கொண்ட எந்த ஒரு புலியை நீங்கள் சுட்டுவீர்கள்? புலிகளின் போராளிகளிற்கு என்ன புரிதலை அவர்கள் பயிற்றுவித்தார்கள் என்பதனை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்.
“நாங்கள் அழிய வேண்டி வந்தால் இலங்கை பூராவும் இரத்த ஆறு ஓடும்” எனத் தமிழ்ச் செல்வன் அறிவித்த போது அதனைக் கொண்டாடியது புலிகள் மட்டுமல்ல அத்தனை தமிழ்த் தேசிய ஊடகங்களும் தான்.. அதனை மக்களையும் ரசிக்கும் படியும் அதற்குத் தலையாட்டும் படி செய்து கொண்டு வந்து விட்டது புலிப்பாசிச மனநிலை. வெட்கப்படவும் கோபங்கொள்ளவும் வேண்டிய கதையைக் கொண்டாட வைத்தது பாசிச மனநிலை. இதனைத் தோழர் அவ்வையும் தோழர் செயப்பிரகாசமும் விளங்கிக் கொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.
இறுதியாக தமிழகத்தில் எழுந்து வரும் பாசிச மனநிலையை இனங்கண்டு புத்துயிர்ப்புப் பெற்ற நண்பர்கள் போற்றத்தக்கவர்கள். ஆனால் கடந்த 40 வருடமாக ஈழத்தில் நடந்தவை குறித்துத் தொப்பூழ் கொடி உறவாக இருந்தும் கைவிட்டு விட்டீர்களே. இறுதிக் காலத்தில் நடந்த கதையை மட்டுமல்ல காலம் பூராவும் நடந்த கதைகளை இனியாவது கேளுங்கள். முத்துக்குமாரை நெருப்பில் தள்ளிவிட்டவனையாவது கண்டு பிடியுங்கள்.