(விருட்சமுனி)
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பழம்பெரும் தமிழ் கிராமங்களில் ஒன்று மல்வத்தை. மல்வத்தை கிராமத்தை மையமாக கொண்டு பிரதேச சபை ஒன்றை அமைத்து தர வேண்டும் என்று இக்கிராமத்தையும், அண்டிய கிராமங்களையும் சேர்ந்த தமிழ் மக்கள் கடந்த ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக கோரி வந்திருக்கின்றனர். ஆயினும் அரசாங்கங்களும் சரி, தமிழ் பேசும் தலைமைகளும் சரி இவர்களின் கோரிக்கைகளை பொருட்படுத்தி நடந்ததாக தெரியவில்லை. இந்நிலையில் அண்மைய வருடங்களில் இக்கோரிக்கைக்கான கோஷங்கள் நீறு பூத்த நெருப்பாக அடங்கி கிடந்தன. சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை கோரிக்கை ஆட்சியாளர்களால் நிறைவேற்றி கொடுக்கப்படுகின்ற தறுவாயிலை அடைந்தபோது மல்வத்தைக்கான பிரதேச சபை கோரிக்கையும் மீண்டும் புத்துயிர் பெற்று உள்ளது.
மல்வத்தையை மையமாக கொண்டு கிராம சபை ஒன்று 1987 ஆம் ஆண்டு வரை இயங்கி உள்ளது. ஆனால் அக்கிராம சபைக்கு உட்பட்டு இருந்த பல தமிழ் கிராமங்கள் பின்னர் அக்கிராமங்களை சேர்ந்த மக்களின் அபிப்பிராயம், ஒப்புதல் ஆகியன பெறப்படாமல் சம்மாந்துறை பிரதேச சபையுடனும், நாவிதன்வெளி பிரதேச சபையுடனும் இணைக்கப்பட்டன. இதை தொடர்ந்தே அக்கிராம சபை செயல் இழந்து போனது. ஆனால் அரச நிர்வாகத்தை மக்களின் காலடிக்கு கொண்டு செல்ல வேண்டும் என்கிற அரசாங்க கொள்கையின் அடிப்படையில் மல்வத்தை, வீரமுனை, மல்லிகைத்தீவு, புதுநகரம், கணபதிபுரம், வளத்தாப்பிட்டி, புதுவளத்தாப்பிட்டி, வள்ளுவர்புரம், தம்பிநாயகபுரம், வீரச்சோலை ஆகியன அடங்கலான தமிழ் கிராமங்களை சேர்த்து பிரதேச சபை உருவாக்கி தரப்பட வேண்டும் என்று கோரப்பட்டு வருகின்றது.
மல்வத்தையும், இதை சார்ந்த தமிழ் கிராமங்களும் 32 சதுர கிலோ மீற்றர் பரப்பளவையும் இருபதாயிரத்துக்கும் அதிகமாக சனத் தொகையையும் கொண்டு உள்ளன. இலங்கையில் இதை விட சிறிய பரப்பளவையும், குறைந்த சனத் தொகையையும் கொண்ட பல இடங்களுக்கு தனியான பிரதேச சபைகள் அமைத்து கொடுக்கப்பட்டு உள்ளன. அம்பாறை மாவட்டத்தை பொறுத்த வரை இறக்காமம் பிரதேச சபை இதற்கு மிக நல்ல உதாரணமாக கண் முன் உலாவுகின்றது.
ஆனால் சாய்ந்தமருதுக்கான பிரதேச சபை கோரிக்கையை போல் அல்லாமல் மல்வத்தைக்கான பிரதேச சபை கோரிக்கை கண்டு கொள்ளப்படாமலும், கவனிப்பார் அற்றும், இருந்து வருவதற்கு தமிழ் தலைமைகளின் அலட்சியமும், அசமந்த போக்குமே பிரதான காரணங்கள் ஆகும். ஏனென்றால் தமிழ் தலைமைகள் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள் இக்கோரிக்கையை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கண்டு கொள்ளவும் இல்லை, கவனத்தில் எடுக்கவும் இல்லை. இவர்கள் கண்டு கொண்டு, கவனத்தில் எடுத்து இருந்தால்தானே குறைந்த பட்சம் இதை முக்கியத்துவப்படுத்தவேனும், முன்னிலைப்படுத்தவேனும் செய்து இருப்பார்கள்?
ஆனால் விதிவிலக்காக காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் செல்லையா இராசையா மாத்திரம் மக்களோடு ஒன்றித்து நின்று மல்வத்தை பிரதேச சபைக்கான கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றார். இக்கோரிக்கையை நிறைவேற்றி தர அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க கோரி தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளராக இருந்த மாவை சேனாதிராசாவுக்கு 2010 ஆம் ஆண்டு கடிதம் எழுதி இருக்கின்றார். அதே போல 2012 ஆம் ஆண்டு அம்பாறை கச்சேரிக்கு சென்று எல்லை நிர்ணய ஆணை குழு முன்பாக இப்பிரதேச சபை கோரிக்கையின் நியாயத்தையும், அவசியத்தையும் எடுத்துரைத்து உள்ளார். அடிக்கடி பொது மேடைகளில் பேசி வருவதுடன் பத்திரிகைகளுக்கு அறிக்கைகளும் விட்டு வருகின்றார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் போன்ற முஸ்லிம் தலைமைகளும் சரி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஐக்கிய தேசிய கட்சி ஆகிய பெருந்தேசிய கட்சிகளுடன் ஒட்டி நிற்கின்ற முஸ்லிம் தலைவர்களும் சரி கட்சி அரசியலை கடந்து சாய்ந்தமருதுக்கான பிரதேச சபையை அடைய பகீரத பிரயத்தனங்களை முடுக்கி விட்டிருந்தனர் என்பதும் இதனால்தான் சாய்ந்தமருது பிரதேச சபைக்கான பிரகடனம் இரு மாதங்களுக்கு முன்னர் வர்த்தமானியில் வெளியிடப்பட தயாரானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் இப்பிரதேச சபையின் உருவாக்கத்தில் பங்கும், பங்களிப்பும் வழங்கிய அனைத்து அரசியல் கட்சிகளையும் கௌரவிக்க சாய்ந்தமருது மக்கள் ஆயத்தங்கள் மேற்கொண்டு இருந்தனர்.
தூய முஸ்லிம் காங்கிரஸ் அணியின் நடத்துனர் ஹசன் அலியை சாய்ந்தமருதை சேர்ந்த ஒரு தொகை பிரமுகர்கள் இது தொடர்பாக சந்தித்து பேசியபோது ஹசன் அலி இதை ஒரு அரசியல் விழாவாக நடத்த வேண்டாம் என்று கோரியதுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் அடங்கலாக இப்பிரதேச சபையின் உருவாக்கத்துக்கு பாடுபட்ட முஸ்லிம் தலைவர்கள் அனைவரையும் ஒருசேர அழைத்து கௌரவியுங்கள் என்று கண்டிப்பாக கேட்டிருந்தார் என்பதும் குறிப்பிட்டு சொல்ல தக்க விடயம் ஆகும். ஆனால் கடைசி நேரத்தில் சாய்ந்தமருது பிரதேச சபையின் உருவாக்கம் கிடப்பில் போடப்பட்டது எவரும் எதிர்பார்த்து இருக்காத திருப்பம் ஆகும்.
சாய்ந்தமருது தற்போது கல்முனை மாநகர சபைக்கு உட்பட்ட கிராமம் ஆகும். இந்நிலையில் கல்முனை பள்ளிவாசல் பொது அமைப்புகளின் சம்மேளனம் சாய்ந்தமருது பிரதேச சபைக்கான வர்த்தமானி பிரகடனம் வெளியிடப்பட தயாராகி உள்ளது என்கிற தகவலை அறிந்தவுடன் அவசரமாக கொழும்புக்கு சென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான றிசாத் பதியுதீன், உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா ஆகியோரை சந்தித்து கல்முனை மாநகர சபையில் இருந்து பிரித்து சாய்ந்தமருதுக்கு மாத்திரம் பிரதேச சபை அமைத்து கொடுக்கப்படுவது அநீதி என்று கடுமையான ஆட்சேபனை ஒன்றை முன்வைத்தது.
அதாவது 1897 ஆம் ஆண்டு முதல் 1987 ஆம் ஆண்டு வரை கல்முனையில் 04 உள்ளூராட்சி சபைகள் இயங்கின என்றும் கல்முனை பட்டின சபை கல்முனையிலும், கரைவாகு தெற்கு கிராம சபை சாய்ந்தமருதிலும், கரைவாகு வடக்கு கிராம சபை மருதமுனை, பாண்டிருப்பு போன்றவற்றை சேர்த்ததாகவும், கரைவாகு மேற்கு கிராம சபை சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை போன்றவற்றை சேர்த்ததாகவும் இயங்கின என்றும் இந்த 04 உள்ளூராட்சி சபைகளையும் சேர்ந்த மக்களின் அபிப்பிராயம், ஒப்புதல் ஆகியவற்றை பெறாமல் இவற்றை ஒன்றாக சேர்த்து 1987 ஆம் ஆண்டு கல்முனை பிரதேச சபை உருவாக்கப்பட்டு பின் அது நகர சபையாகவும், அதன் பின் மாநகர சபையாகவும் மாற்றம் பெற்றது என்றும் எடுத்து உரைத்து.
எனவே கல்முனை மாநகர சபையில் இருந்து பிரிக்கப்பட்டு சாய்ந்தமருதுக்கு மாத்திரம் பிரதேச சபை கொடுக்கப்படுவது மற்றைய மக்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதியாக இருக்கும் என்று வாதாடியதுடன் பண்டைய 04 கிராம சபைகளுக்கும் மாற்றீடாக 04 பிரதேச சபைகளை வழங்குவதே அனைத்து மக்களுக்குமான நீதியாக இருக்கும் என்று தீர்வு யோசனையை முன்வைத்தும் இருந்தனர். இவர்களுடைய நிலைப்பாட்டில் இருந்த நியாயங்களை மூன்று அமைச்சர்களும் ஏற்று கொண்டனர். கல்முனை மாநகர சபையை பிரித்து 04 பிரதேச சபைகளை கொடுக்க உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுப்பார்கள் என்று உறுதிமொழி வழங்கினர்.
இந்நிலையிலேயே சாய்ந்தமருது பிரதேச சபையை பிரகடனப்படுத்துகின்ற வர்த்தமானி வெளிவரவே இல்லை. கல்முனை பள்ளிவாசல் பொது அமைப்புகளின் சம்மேளன முக்கியஸ்தர்களில் ஒருவர் கல்முனை வர்த்தகர் சங்க தலைவரான ஷாபி ஹாத்திம். இவருடைய தந்தை கே. கே. மரைக்கார் கல்முனை பட்டின சபை தலைவராக பதவி வகித்தவர். ஹாத்திம் ஊடகங்களுக்கு கருத்து கூறுகையில் சாய்ந்தமருது மக்களின் பிரிந்து செல்கின்ற உரிமையை கல்முனை பள்ளிவாசல் பொது அமைப்புகளின் சம்மேளனம் மறுக்கவே இல்லை, ஆனால் சாய்ந்தமருது மக்களுக்கு மாத்திரம் பிரதேச சபை கொடுக்கப்படுவதை அனுமதிக்கவே முடியாது என்றார். இவருடைய கருத்துப்படி றிசாத் பதியுதீன், பைஸர் முஸ்தபா ஆகியோர் 04 பிரதேச சபைகளையும் அமைத்து தர தயாராக உள்ளனர், ஆனால் ரவூப் ஹக்கீம் நழுவல் போக்கை கைக்கொள்கின்றார். இவ்விடயத்தில் ரவூப் ஹக்கீமுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட எம். பியும், கல்முனையை சேர்ந்தவருமான விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் ஒத்து ஊதுகின்றார் என்றும் ஹாத்திம் கூறினார்.
கல்முனை மாநகர சபையில் இருந்து சாய்ந்தமருது முஸ்லிம் மக்கள் பிரிந்து செல்ல வேண்டும் என்றும் சம்மாந்துறை பிரதேச சபையில் இருந்து மல்வத்தையையும், அண்டிய இடங்களையும் சேர்ந்த தமிழ் மக்கள் பிரிந்து செல்ல வேண்டும் என்றும் விருப்பம் கொண்டு இருப்பதற்கு இடையில் அடிப்படையில் ஒரு வித்தியாசம் உள்ளது. கல்முனை, சாய்ந்தமருது ஆகிய இடங்களை சேர்ந்த முஸ்லிம் மக்களுக்கு இடையில் பிரதேசவாதம் தலை விரித்து ஆடுகின்றது. கடந்த கல்முனை மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் சாய்ந்தமருதில் இருந்து போட்டியிட்ட சிராஸ் மீரா ஷாகிப்பே அதிக விருப்பு வாக்குகளை பெற்று கல்முனை மாநகர சபை முதல்வராக நியமனம் பெற்றார்.
ஆனால் இடையில் இவரிடம் இருந்து இப்பதவியை எடுத்து கல்முனையை சேர்ந்த நிசாம் காரியப்பருக்கு வழங்கினார் ரவூப் ஹக்கீம். இதுவே இரு இடங்களையும் சேர்ந்த முஸ்லிம் மக்களுக்கு இடையில் பிரிவினைவாதம் உச்சம் பெற்று பிரிந்து செல்கின்ற தீர்மானத்தை சாய்ந்தமருது மக்கள் நாடுவதற்கு காரணமாய் அமைந்தது. ஆனால் மல்வத்தையையும் அண்டிய தமிழ் கிராமங்களையும் பொறுத்த வரை பிரச்சினை வேறு விதமானது. முஸ்லிம் தலைமைகளால் திட்டமிடப்பட்ட வகையில் சம்மாந்துறை பிரதேச சபைக்கு உட்பட்ட தமிழ் கிராமங்கள் மிக நீண்ட காலமாக அபிவிருத்தியில் புறக்கணிக்கப்பட்டு வருவதாக இந்த இடங்களை சேர்ந்த தமிழ் மக்கள் விளங்கி வைத்திருக்கின்றனர்.
கடந்த கால யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களும், வறியவர்களும், கல்வியறிவு குறைந்தவர்களுமான இவர்களின் பிரச்சினைகளை செவிமடுக்க முஸ்லிம் தலைமைகள் தயாரில்லை என்று கண்டு கொண்ட நிலையிலேயே மாற்றான் தாய் தலைமைக்கு கீழ் இருக்க தயார் இல்லை என்கிற முடிவில் உறுதியாக உள்ளனர். எனவேதான் தமிழ் பிரதேச சபை வேண்டும் என்பதில் பற்றுறுதியாக உள்ளனர். சாய்ந்தமருதுக்கு பிரதேச சபை வழங்கப்படுவதில் தமிழர்களுக்கு எந்தவொரு ஆட்சேபனையும் கிடையாது. ஆனால் ஒரு வேளை மல்வத்தை பிரதேச சபை கோரிக்கை உரிய தரப்பினர்களின் கவனத்தை ஈர்த்து சாத்தியம் ஆகின்ற நிலையை பெறுகின்றபோது முஸ்லிம்கள் பெருந்தன்மையுடன் புரிந்து நடப்பார்களா? என்பது வலிமையான சந்தேகம்தான்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டு ஆக வேண்டும் என்று அம்பாறை மாவட்ட முஸ்லிம் மக்களில் பெரும்பான்மையானோர் பெரிதும் விரும்புகின்றார்கள். ஆனால் சம்மாந்துறை பிரதேச சபையில் இருந்து தமிழ் கிராமங்கள் பிரிக்கப்படுவதை இவர்கள் விரும்பவே மாட்டார்கள் என்பதுதான் நிதர்சனமாக உள்ளது. இதை நிரூபிப்பதற்கு மிக நல்ல உதாரணமாக கல்முனை தமிழ் உப பிரதேச செயலகம் பிரதேச செயலகமாக தரம் உயர்த்தப்படுவதற்கு முஸ்லிம் தரப்புகளே கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக தடைக்கற்களாக இருந்து வருவதை சுட்டி காட்ட முடியும்.
கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவதற்கு 1993 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியபோதிலும் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் தலையீடு காரணமாக கல்முனை தமிழ் உப பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படாமலேயே உள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சரவை தீர்மானத்தோடு சேர்ந்ததாகவே காரைதீவு, ஈச்சிலம்பற்று, ஒட்டுசுட்டான் ஆகிய உப பிரதேச செயலகங்கள் பிரதேச செயலகங்களாக தரம் உயர்த்தப்பட்டன.
இதனிடையில் கல்முனை தமிழ் உப பிரதேச செயலகம் சட்டவிரோதமாகவே இயங்குகின்றது, எனவே இதை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று கல்முனையை சேர்ந்த முஸ்லிம் கடுமை போக்காளர்கள் சுமார் மூன்று வாரங்களுக்கு முன்னர் ஒன்று கூடி தீர்மானம் எடுத்து இத்தீர்மானத்தை பத்திரிகைகளுக்கு அறிக்கையாக விட்டு உள்ளனர். ஆனால் 1970 களுக்கு முன்னர் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பேசும் மக்கள் பிட்டும், தேங்காய்ப் பூவும் போல மிக நெருக்கமாக வாழ்ந்த காலம் மீண்டும் மலர்தல் வேண்டும் என்று அண்மைய காலங்களில் இரு தரப்பினராலும் மிக அதிகமாக பேசப்பட்டு வருகின்ற நிலையில் இவை போன்ற விடயங்கள் உண்மையில் ஆரோக்கியமானவை அல்ல.
அதே நேரம் மல்வத்தை தமிழ் பிரதேச சபை கோரிக்கை ஆட்சியாளர்களின் மேலான கவனத்தை ஈர்க்கின்ற காலம் கனிகின்றபோது முஸ்லிம் தரப்புகள் எதிர்ப்பு பண்ணாமல் இருப்பது எதிர்காலத்தில் தமிழ், முஸ்லிம் உறவு செழித்தோங்க வழி வகுக்கும் என்பதில் மாற்று கருத்துக்கு இடம் இருக்காது.