2001-ம் ஆண்டு அரசு புள்ளிவிவரத்தின்படி இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 13.4%. இந்த விகிதாச்சாரத்தின்படி நாடாளுமன்ற மக்களவையில் அவர்களுக்கு 74 உறுப்பினர்கள் இருக்க வேண்டும். ஆனால், இதுவரை ஒருபோதும் இந்த எண்ணிக்கையை எட்டியதில்லை. 1952 முதல் இதுவரை 16 மக்களவைகள் அமைந்துள்ளன. இவற்றில், அதிக அளவில் 9.26% முஸ்லிம்கள் இடம்பெற்றது 1980-ல் மட்டுமே. அப்போது முஸ்லிம்களின் எண்ணிக்கை 11.75% என்றிருந்தது.
வாய்ப்பு மறுக்கப்படுகிறது
2009 மக்களவைத் தேர்தலில் ஏதேனும் ஒரு அரசியல் கட்சி சார்பிலோ அல்லது சுயேச்சையாகவோ நாடு முழுவதிலும் 819 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அந்தத் தேர்தலில் 28 முஸ்லிம்களால் (5.52%) மட்டுமே வெற்றிபெற முடிந்தது. 2014-ல் 882 முஸ்லிம்கள் போட்டியிட்டதில் 23 பேருக்கு மட்டுமே வெற்றி கிடைத்தது. இதுவரை இல்லாத வகையில் இந்த வெற்றி விகிதம் 4.23%-ஆகக் குறைந்தது. இதற்கு, தேசத்தின் பெரும்பான்மை மதத்தைச் சேர்ந்த வாக்காளர்களைக் குறிவைத்து இங்கே நடந்த பிரச்சாரமும் ஒரு காரணம். அதேவேளையில், மதச்சார்பற்றக் கட்சிகளிலும் முஸ்லிம் அல்லாதோருக்கே பெருமளவில் வாய்ப்பு தரப்படுகிறது.
2014-ல் தேசிய ஜனநாய முன்ணனியின் கூட்டணிக்குத் தலைமை வகித்த பாஜகவில் ஒரு முஸ்லிம் எம்.பி.கூட இல்லை. இந்தியாவில் அதிகமான முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட உத்தர பிரதேசத்தில் ஒரு முஸ்லிம் வேட்பாளரைக்கூட பாஜக நிறுத்தவில்லை. ஜம்மு-காஷ்மீர், வங்கத்தில் ஆறு முஸ்லிம்களை வேட்பாளர்களாக்கியது பாஜக. இவர்களில் ஒருவரால்கூட வெற்றிபெற முடியாமல்போனது. குஜராத்தில் 1984-க்குப் பின் மக்களவையில் உறுப்பினர்கூட இல்லை. அங்கு காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் முஸ்லிம்களாலும் வெற்றிபெற முடியவில்லை.
சிதறும் வாக்குகள்
தேசியக் கட்சிகளின் இந்தச் செயல்பாடுகளால், முஸ்லிம்கள் மாநிலக் கட்சிகளுக்கு வாக்களிப்பதும் அதிகமாகிவருகிறது. இதனால், முஸ்லிம் வாக்குகள் பிரிந்து அதன் பலனைத் தேசியக் கட்சிகள் பெற முடியாமலும் போகிறது. உத்தர பிரதேசம், மகராஷ்டிரம், டெல்லி, பிஹார், வங்காளம் போன்ற மாநிலங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட மதச்சார்பற்ற கட்சிகள் இருப்பதும் அதற்கு ஒரு காரணம்.
உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகியோர் உள்ளனர். பிஹாரில் பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளமும், காங்கிரஸும் உள்ளனர். வங்கத்தில் மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிக் கட்சிகள் முஸ்லிம் வாக்குகளால் பலன்பெறுபவை.
மகராஷ்டிராவில் காங்கிரஸ் மற்றும் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸுக்கு முஸ்லிம் வாக்குகள் கிடைக்கின்றன. டெல்லியில் முஸ்லிம்களின் வாக்குகள் காங்கிரஸ் கட்சிக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே பிரிகின்றன. இந்தக் கட்சிகள் அனைத்துமே முஸ்லிம் வாக்குகளைக் குறிவைத்து அம்மதத்தினரையே வேட்பாளர்களாக நிறுத்துவார்கள்.
தமிழகத்தில் தமுமுக, ஒரே தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களாகத் தாம் போட்டியிடக் கூடாது என அரசியல் கட்சிகளில் இருந்த முஸ்லிம்களிடம் கூறிவந்தது. ஆனால், அவர்களின் ஒரு பிரிவாக மனிதநேய மக்கள் கட்சி தொடங்கப்பட்ட பின் அவர்களாலேயே அந்த நிலைப்பாட்டைத் தொடர முடியவில்லை. அதனால், வாக்குகள் சிதறுவது தொடர்ந்துகொண்டிருக்கிறது.
சாதுர்ய வாக்களிப்பு
தங்களது வாக்குகள் சிதறுவதைத் தவிர்ப்பதற்காக முஸ்லிம்கள் தற்போது பாஜகவைத் தோற்கடிக்கும் வேட்பாளர்களுக்கு ‘சாதுர்ய வாக்களிப்பு’ முறையைப் பயன்படுத்துகிறார்கள். இது உத்தர பிரதேசத்தில் மட்டும் கடந்த சில தேர்தல்களாகத் தொடர்ந்துவருகிறது.
இந்த உத்தியைக் கண்டுகொண்ட காங்கிரஸ், நடக்கவிருக்கும் தேர்தலில் முஸ்லிம்கள் அதிகமுள்ள உத்தர பிரதேசத்தில் ஓரிரு தொகுதிகளில் மட்டும் முஸ்லிம்களை நிறுத்தியுள்ளது. ஏப்ரல் 17-ல் நடைபெறவிருக்கும் முதல்கட்ட தேர்தலின் எட்டு தொகுதிகளில் இரண்டில் மட்டுமே முஸ்லிம்களுக்கு இடையிலான போட்டி உள்ளது.
உத்தர பிரதேசத்தில் மாயாவதியின் பகுஜன் சமாஜ், அகிலேஷ்சிங் யாதவின் சமாஜ்வாதி மற்றும் அஜித்சிங்கின் ராஷ்டிரிய லோக் தளம் இணைந்து மெகா கூட்டணி அமைத்துள்ளன. இக்கூட்டணியின் சார்பில் பெரும்பாலான தொகுதிகளில் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளரே போட்டியிடும் சூழல் உள்ளது. முஸ்லிம்கள் முடிவுசெய்யும் தொகுதிகளான முசாபர்நகர் மற்றும் பாக்பத்தில் அஜித்சிங் மற்றும் அவரது மகன் ஜெயந்த் சவுத்ரி ஆகியோருக்கு எதிராக காங்கிரஸ் தன் வேட்பாளர்களை நிறுத்தவில்லை. எதிர்க்கட்சிகளின் இந்த முயற்சிக்கு நல்ல வரவேற்பு தெரிகிறது.
- ஆர்.ஷபிமுன்னா,