தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டு சர்ச்சை இன்னும் முழுமையான தீரவில்லை. யாழ்ப்பாண மாநகரசபை முதல்வர் வேட்பாளர் சிக்கல் நீடித்துவரும் நிலையில், சங்கானை பிரதேசசபையிலும் சர்ச்சை தோன்றியது. சங்கானை பிரதேசசபையின் முதல் இரண்டு வருடமும் புளொட்டும், அடுத்த இரண்டு வருடமும் தமிழரசுக்கட்சியும் என முடிவானது. இந்த தீர்மானத்தை தமிழரசுக்கட்சி எம்.பி சரவணபவன் எதிர்த்தார். அவரது வட்டுக்கோட்டை தொகுதிக்குள் சங்கானை பகுதி வருவதால், புளொட் அங்கு நிர்வாகம் செய்வதை அவர் விரும்பவில்லை. அது தனது எதிர்கால தேர்தல் வெற்றிக்கும் பாதிப்பை ஏற்படுத்துமென நினைக்கிறார்.
இதனால், மாவை சேனாதிராசாவை தொடர்பு கொண்டு, ‘சங்கானையை தமிழரசுக்கட்சிக்கு முழுமையாக ஒதுக்காவிட்டால், எனது பேப்பர் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக செயற்படும்’ என மிரட்டல் விடுத்தார். இதையடுத்து மாவை சேனாதிராசா, சீ.வீ.கே.சிவஞானம் ஆகியோர் சித்தார்த்தனிடம் பேச்சு நடத்தினர். எனினும், சித்தார்த்தன் அதற்கு சம்மதிக்கவில்லை.
வடக்கு கிழக்கில் ஒரேயொரு சபைதான் தமக்கு வழங்கப்பட்டுள்ளது, கூட்டமைப்பைவிட்டு வெளியேறுகிறோம் என மிரட்டல் விடுத்தால்தான், அதிக சபை தருவீர்களா? ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தை மீறி சரவணபவன் மிரட்டுகிறார் என்பதற்காக எம்மிடமுள்ள ஒருசபையையும் எப்படி தர முடியும்? நான் யாழ்ப்பாணம் வந்த பின்னரே இதை பற்றி முடிவெடுப்பேன்’ என கூறிவிட்டார் சித்தார்த்தன்.
எனினும், இன்றைய உதயன் பத்திரிகை அந்த செய்தியை திரித்து வெளியிட்டுள்ளது. சங்கானை தமிழரசுக்கட்சிக்கு கிடைத்துவிட்டதாக தவறான செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, யாழ் மாநாகரசபை முதல்வர் வேட்பாளராக சீ.வீ.கே.சிவஞானத்தை களமிறங்குமாறு நேற்று மாவை சேனாதிராசா கேட்டுக்கொண்டார். என்றாலும் சிவஞானம் அதை மறுத்துவிட்டார். புதியவர்கள், இளையவர்களிற்கு அந்த வாய்ப்பை வழங்கலாமென கட்சிக்கு கூறிவிட்டார். வித்தியாதரனின் நியமனத்தில் சரவணபவனின் எதிர்ப்பு நிலவுவதால், ஆனோல்ட்டை களமிறக்கலாமென சுமந்திரன் எம்.பி நேற்று தலைமைக்கு சிபாரிசு செய்திருக்கிறார்.
இதேவேளை, கூட்டமைப்பின் ஆசனப்பங்கீட்டு இணக்கத்தின்படி சாவகச்சேரி நகரசபை வேட்பாளர் தெரிவில் அருந்தவபாலன் செயற்படவில்லை. ரெலோ, புளொட் கட்சிகளின் வேட்பாளர்களை உள்ளீர்க்க அவர் மறுத்துவிட்டார். ஏற்கனவே தான் பதினொரு பேரை தேர்வுசெய்துவிட்டேன் என பதிலளித்துள்ளார். இதையடுத்து, மாவை சேனாதிராசா இந்த விடயத்தில் தலையிட்டுள்ளார். அங்கத்துவ கட்சிகளின் வேட்பாளர்களை தான் இணைப்பதாக உறுதியளித்துள்ளார்.
இதேவேளை, தன்னை மாநகரசபை முதல்வராக்குமாறு ஜெயசேகரம் வலியுறுத்தி வருகிறார். இதன் ஒரு கட்டமாக யாழ் வணிகர்களையும் களமிறக்குகிறார். ஜெயசேகரத்தின் பின்னணியில் யாழ் வணிகர்கள் மாவை சேனாதிராசாவிற்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளனர். அதில் ஜெயசேகரத்தை முதல்வராக்குமாறு கோரப்பட்டுள்ளது. இன்றையதினம் மாவை சேனாதிராசாவும், யாழ் வணிகர்களும் சந்திக்கிறார்கள்.
(The Page Tamil)