“சின்னக் கதைகளைத் தகர்த்தல்”

புலம்பெயர்ந்த பரப்பில் கடந்த 40 வருடங்களுக்கு மேலாக
இயங்கிவரும் சமூக அக்கறை சார்ந்த அமைப்புக்கள் பல இருக்கின்றன.
அவற்றில் சிலவேனும் நமது சமூகத்தின் சாதிய நச்சுப் பரவலாக்கத்திற்
கெதிராகக் கரிசனையுடன் தங்களது செயற்பாடுகளை மிகக் குறைந்தளவிலேனும்
சீர்பெறச் செய்திருப்பார்களேயானால் இந்தக் கட்டுரை எழுத வேண்டிய ஒரு
தேவையும் எனக்கு வந்திருக்க முடியாது.

மிக நீண்ட காலமாக ஈழத்தின் வடபுலத்திலிருந்து வறுத்த மிளகாய்த்
தூளை மட்டுமல்ல தமது கடவுள்களையும் காவிக் கொண்டுவந்த
சமூகம் கூடவே தனது சாதியையும் கையோடு காவிக்கொண்டே
ஐரோப்பாவிற்குள்ளும் கனடாவுக்குள்ளும் நுழைந்தது எனச்
சொல்லிப் பதிவுசெய்தவர்கள் பலர். ஆனால் அவர்களும் அந்தக்
காவிவந்த சாதிய அடையாளம் நாற்பது வருடத்திற்கு மேலாக
இங்குள்ள சூழலிலும் எவ்வாறு நீண்டு வளரும் தன்மையைக்
கொண்டுள்ளது என்றும் எவ்வாறு அது கவனமாகப்
பாதுகாக்கப்படுகிறது என்றும் தெளிவான ஒரு பார்வையைத்
தொடர்ந்து முன் வைத்துத் தேடப் பின்தங்கிப் போயினர்.

ஈழவிடுதலைப் போராட்டம் விடுதலைப் புலிகளின் கையில்
முனைப்புடன் இருந்த காலத்தில் மேன்மை கொள் தமிழர்களாய்
பெருமை கொள் தமிழாய்த் தமிழ்ப் பெருமிதத்தில் திளைத்திருந்த
பலர் அதன் கையறு நிலையில் தமிழர்களின் தொன்மம் தேடுதல்
தமிழர்களின் மரபு தேடுதல் என்றவாறாக இப்போது பல்வேறு
திசைகளில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள்
தேடுகின்ற தொன்மங்களும் அவர்கள் தேடுகின்ற தமிழர் மரபுகளும்
தமிழர்களது சாதிப் பெருமிதங்களில் தான் வந்து இறுதியில்
முடிகிறது என்பதனை ஏன் அவர்களால் அவதானித்துக் கொள்ள
முடியாதிருக்கிறது என்பது எனக்கு தொடர் கேள்வியாகவே இருந்து
வருகிறது. சாதியிலிருந்த தமது மரபுகளையும் தமது
தொன்மங்களையும் “முகிழ்ந்ததாக” அடையாளம் காட்டிக்
கொண்டாடுபவர்கள் இன்னொரு புறம் சாதியற்றதாகவும்
மதமற்றதாகவும் வாழ்ந்திருந்த கீழடி வாழ்வியலை தமது
வாழ்வியலின் தொன்மமாக அடையாளம் காட்டுகிறார்கள்
என்பதுதான் வேடிக்கையானது. விநோதமானது. கூடவே
குழறுபடியானது.

விடுதலைப்புலிகளது ஈழத்தேசியம் குறித்த கதையாடல் நமது தமிழ்
சமூகத்தினிடையே பேரெழுச்சி பெற்றிருந்த காலத்தில் அங்கே அது
சாதியற்ற சமூகமாகவே இருந்தது என்பதாக நெஞ்சு நிறையப் பொய்
சொல்பவர்கள் இன்னமும் நம் மத்தியில் இருக்கிறார்கள். அவ்வாறு
பொய் சொல்பவர்கள் சாதி சார்ந்த வலிகளை உணராதபடி வாழ்ந்த
ஆதிக்க சாதியாகவும் தமது வாழ்காலம் பூராவும் ஆதிக்க சாதி
மனோபாவம் கொண்டலைபவர்களாகவும் விடுதலைப்புலிகளின்
தேசிய நிழலில் சீவியம் நடத்தியவர்களாகவும் இருப்பதனை
அனைவருமே இலகுவில் அடையாளம் கண்டுவிட முடியும். அவர்கள்
சமூகத்தில் நிலவும் அனைத்து முரண்பாடுகளையும் தமிழ்த் தேசியம்
என்ற ஒற்றை வளவுக்குள் சுற்றி அடைத்துவிடும் மனநிலையில்
இருப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

அண்மையில் கனடா வந்து தமிழ்த் தேசியத்திற்கான வழிவரைபடம்
குறித்து உரை நிகழ்த்திய தோழர் ஜோதிலிங்கம் அவர்களை அந்த
வகையில் தான் என்னால் அடையாளம் காணமுடிகிறது. “தமிழர்
மேம்பாட்டுப் பேரவை என்ற அமைப்பினால் ஒழுங்கு செய்யப்பட்ட
கூட்டம் அது. தோழர் யோதிலிங்கம் அவர்கள் தமிழ்மக்களின்
அரசியல் இலக்கும் வழிவரைபடமும் எனும் தலைப்பில்
உரையாற்றினார். அங்கே அந்த உரையினைச் செவிமடுத்த
பலருக்கு அவரை ஒரு தமிழ்த் தேசிய கொள்கலன் கொண்ட நபராக
உணர வைத்திருப்பது பெருத்த அபாயமானது.

யோதிலிங்கம் அவர்களது அந்த உரை எவ்வித புதிய
சிந்தனையையும் எனக்குத் தோற்றுவித்துவிடவில்லை. தன்னை ஒரு
தீவிரத் தமிழ்த் தேசியவாதியாக முன்நிறுத்துகிறார் அவர். ஏற்கனவே
கட்டப்பட்டு இருக்கின்ற தமிழ்த் தேசியம் என்கின்ற ஒரு
கட்டுக்கதைமீது வழி மறித்து நின்ற எந்தக் கதவினையும்
தமிழ்மக்களின் அரசியல் இலக்கும் வழிவரைபடமும் என்ற அவரது
தியறி புதிதாகத் திறந்துவிடவில்லை. இன்று “காணாமல்
ஆக்கப்பட்டோர்” அல்லது இன்று முள்ளிவாய்க்காலின்
முடிவுக்குப்பின் உச்சரிக்கத் தொடங்கியிருக்கும் “வலிந்து
காணாமால் ஆக்கப்பட்டோர்”, “இன அழிப்பு”, மற்றும் கிழக்கு
மாகாணம் குறித்த புரிதல் மற்றும் முஸ்லீம் மக்கள் குறித்த புரிதல்
போன்ற எவை குறித்தும் வெளிப்படையாகவே அந்த உரையில்
தெளிவற்று இருந்தது. அது ஏற்கனவே இருக்கின்ற தமிழ்த்தேசியம்
கட்டமைத்திருந்த மனநிலைக்கு பெரிதாக எந்த மாற்றுக் கருத்து
நிலையையும் கொண்டிருக்கவில்லை. இதுவரை அவர்கள்
பேசியிருந்த தமிழ்த் தேசியத்தைத் திருத்தி கொஞ்சம் மெருகூட்டி
சமாளித்து “தாங்கள் குறிப்பிடும் தமிழர்களுக்கு” ஏற்றாற்போல்
பொருத்திவிடக் கூடியதான மனநிலையையே அது கொண்டிருந்தது.
இன்று இருக்கின்ற தேவை அதுவாக நான் உணரவேயில்லை. (அவரது கட்டுரையின் வடிவத்தை என்னால் பெறமுடியவில்லை முடிந்தால் யாராவது பகிர்ந்து கொள்ளுங்கள்)

அந்த உரை நமது ஈழச் சமூகம் கடந்து வந்த சாதிய வடுக்களை
எள்ளளவும் கணக்கில் எடுக்கவில்லை. இன்னமும் சமபந்தி, சம
போசனம், சம ஆசனம் குறித்த போராட்டத்தை உள்ளுக்குள்ளேயே
நடத்திக்கொண்டிருக்க வேண்டிய தேவை கொண்ட ஒரு சமூகம்,
தன்னை ஒற்றைத்திரளாக தமிழ்த் தேசிய அடையாளத்திற்குள் மூடி
மறைத்து ஒதுங்கிக் கொள்ள நினைக்கும் அந்த மனம் ஏற்றுக்
கொள்ள முடியாதது. அதுகுறித்த அறிவுப்புலம் அவருக்கே
விளங்கவில்லை என்பதே வெளிப்படையானது. திரும்பத் திரும்ப
வெற்றியீட்டப்படும் தமிழ்த் தேசிய விடுதலை என்பதே சாதிய
விடுதலைக்கும் வழிகொடுக்கும் என்கிற ரீதியில் இன்னமும் அறிவு
கெட்டத்தனமாக ஈழச் சாதியமைப்பினை விளங்கி வைத்திருப்பது
அவர்கள் கொண்டு நகர்த்த முனையும் தமிழ்த்தேசியத்திற்கான
விடுதலையையும் நம்பகமற்ற தன்மைக்குக் கொண்டு போய்ச்
சேர்க்கும் என்பதனைக் கூட ஜோதிலிங்கம் அவர்கள் விளங்கிக்
கொள்ளவில்லை. ஒரு சட்ட வல்லுனராக இருக்கும் அவரைப்
போன்ற பலருக்கே சூனியத்தனமாகத்தான் புரிந்து
கொள்ளப்பட்டிருக்கிறது நமது சூழல் என்றால் மற்றவர்கள் குறித்து
நீங்கள் யோசியுங்கள்.

ஈழத்தின் யுத்தகாலத்திலும் சரி பின் யுத்தகாலத்திலும் சரி
தமிழ்ச்சமூகத்திற்குள் அப்பட்டமாக வெளித்தெரிந்து வந்த சாதிய
முரண்பாடுகளையும் அதன் கோர முகங்களையும் தனித்துப் பார்க்க
மறுத்து தாம் பேசுகின்ற தமிழ்த் தேசிய விடுதலை என்பது சாதியற்ற
சமூகத்தை உருவாக்கிக் கொள்ளும் என கதை சொல்வது என்பது
இன்னுமொருமாதிரியான சாதிய அதிகாரச் செயற்பாடுதான்
என்பதனை அவர்கள் இன்னமும் ஏன் உணர்ந்து கொள்ள
மறுக்கிறார்கள் என ஆய்வு செய்வது இன்றுள்ள சூழலில் மிக
முக்கியமானது என நினைக்கிறேன். அந்த ஆய்வின் முடிவில்
ஆணித்தரமாக இவ்வாறு தமிழ்த்தேச விடுதலை எனப் பேசுவோரது
புரிதல்களும் தமிழ்ச் சமூகத்திற்குள் ஊடோடிக் கொண்டிருக்கும் சாதி
வெறிப் பின்புலமும் அப்பட்டமாக வெளிப்பட்டுத் தெரியும் என நான்
நம்புகிறேன்.

நமது ஈழவிடுதலை என்பதும் தமிழீழத்திற்கான போராட்டம்
என்பதும் ஆழ ஊடுருவிய சாதியப் படையணிகளால்
உருவாக்கப்பட்டது என்பதற்கு நமது வாழ் நாளில் பல
உதாரணங்களோடு விளங்கப்படுத்திவிட முடியும். மிக அண்மையில்
அமரத்துவம் எய்திய தோழர் றிச்சாட் அருட்பிராகசம் எனும் அருளர்
ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஒரு முன்னோடி என
அடையாளப்படுத்தப்படுபவர். அத்துடன் ஈழப்புரட்சி அமைப்பின்
ஸ்தாபகர்களில் ஒருவர் என்பதையும் அறிந்திருந்தோம். ஆனால்
அவர் ஈழச்சாதியமைப்பினையும் ஈழத்திற்குள் சககோதர இனங்களது
வாழ்வியலையும் எப்படி விளங்கி வைத்திருந்தார்? என்று அவரது
முகநூற் பதிவுகள் ஊடாகத் தற்போது எமக்குப் பார்க்க
முடிந்திருக்கிறது. சாதியம் குறித்தும் சக இனங்கள் குறித்தும் மிகவும்
பிற்போக்குத்தனமான கருத்தியல்களைக் கடைசிவரையும்
கொண்டிருந்த ஒருவரை நாம் முன்னோடி என அழைப்பது வெட்கக்
கேடு.

மாங்கிளியும் மரங்கொத்தியும் கூடு திரும்பத் தடையில்லை
நாங்க மட்டும் உலகத்தில நாடு திரும்ப முடியல.
என்றும்

கட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து
கவலை மிகுந்தாலும் – வாழ்வு
கெட்டு நடுத்தெரு வோடு கிடந்து
கீழ்நிலை யுற்றாலும் – மன்னர்
தொட்டு வளர்த்த தமிழ்மகளின் துயர்
துடைக்க மறப்பேனா?
என்றும்

மொத்தத் தமிழர்களுக்கான பாடல்களோடு தமிழீழ
உணர்ச்சிக் கவிதை எழுதிய காசி ஆனந்தன் இன்று வந்து நிற்கும்
இடம் இந்துக்களுக்கான தமிழீழம்.இந்துத் தமிழீழம் என்பதுதான்.

“வடகிழக்கில் மிகுந்த பாதிப்பிற்குள்ளானதும் தொடர் துன்பங்களை
அனுபவிப்பவர்களும் இந்துக்களே!” என்றும் “யுத்தத்தால் நாட்டை
விட்டு லட்சக்கணக்கில் இந்துக்கள் வெளியேறினார்கள்.
இந்துக் கோயில்களை அழித்தார்கள். தமிழீழம்
இந்துக்களுக்கான நாடு. தமிழீழம் என்பது இந்துத் தமிழீழம்” என்றும்
பேசிய உரை பற்றி நமது முற்போக்குத் தமிழ்த் தேசியவாதிகள்
மவுனம் காப்பது குறித்து நாம் விழிப்புடன் கவனம் கொள்ள
வேண்டும். ஈழத்தின் அத்தனை பகுதிகளிலும் இந்தியப் பார்ப்பனீய
ஏஜெண்டான மறவன்புலவு சச்சிதானந்தத்தின் வழி இந்துராஷ்டிரம்
உருவாகத் தொடங்கியிருப்பதன் இன்னொரு வழிதான்
காசியானந்தனது உரை என்பதனை இந்தச் சமூகம் விளங்கிக்
கொள்ள வேண்டும்.

ஈழத் தமிழச் சமூகம் , ஈழ விடுதலை என்று இதுவரை பாடி எழுதி
வந்தவர்கள் இன்று இந்துத் தமிழர்கள். இந்துத் தமிழீழம் என்று வந்து
சொல்வது ஆபத்தான வேடிக்கை. இதுவரை இவர்கள் குறிப்பிட்டுப்
பேசிய தமிழீழத்திற்குள் அதன் எல்லைக்குள் மனசார தமிழ் பேசும்
முஸ்லீம் மக்களையோ கிறிஸ்தவ மக்களையோ சாதி ரீதியாக
ஒடுக்கப்பட்ட மக்களையோ அங்கீகரித்திருக்கவில்லை. ஆக
இவர்கள் பேசிய தமிழீழம் என்பது ஆதிக்க சாதி இந்துத் தமிழீழமே.
இந்த ஒன்றுக்காகவே மற்றவர்களது கழுத்திலே அவர்கள் நஞ்சுக்
குப்பியினைக் கட்டிவிட்டார்கள்.
இப்படித்தான் நமது தமிழீழம் என்பது தேசமல்லாது
வெறுங்கதையாகியது.

இது ஒருபுறம் இருக்க,

நாம் பழக்கப்பட்ட சிறுவர்களுக்கான நீதிக் கதைகளிலிருந்தும்
நமக்கிடையே உலாவரும் திரைப்படங்களிலிருந்தும் அதன்
இசைப்பாடல்களிலிருந்தும் துருவி நிற்கும் சாதியப் பெருமைகளும்
சாதிவெறிகளும் எந்தக் கணக்கும் தீர்க்கப்படாது மிகச் சாதாரணமாக
ஏற்றுக்கொள்ளப்பட்டு புகழ்ந்து பேசப்படுகிற சூழலை நாம் தினமும்
கடந்தே வருகிறோம். நமது சமூகத்தில் இருக்கின்ற ஒன்றுதானே
என்கின்ற மனப்போக்கிலிருந்து சமூகமாற்றம் குறித்து முற்போக்கு
பேசும் அதிகமான சமூக அக்கறையாளர்களாலும்
அமைப்புக்களாலும் அது கவனமின்றி கடந்து போகப்பட்டிருக்கிறது
என்பது மிகுந்த கவலைக்குரியது.

சாதிவெறி கொண்ட விளம்பரங்களையும் கட்டுரைகளையும் கவிதைகளையும்
கதைகளையும் பாடல்களையும் பிரித்துணராது பிரசுரித்து வந்த
பத்திரிகைகளோடு நாமும் சேர்ந்து வாழ்ந்து முடிப்பது எவ்விதத்திலும்
ஆரோக்கியானதாக இருக்கமுடியாது.
எவ்வளவு உன்னத இசை நயத்துடன் இளையராஜாவால் மெட்டுப்
போட்டிருந்தாலும் “போற்றிப்பாடடி பெண்ணே… தேவர் காலடி
மண்ணே” என்ற வரிகளுக்குள் இருக்கும் சாதிய அச்சுறுத்தலை
யாரும் கண்டு கொள்ளவே இல்லை. தமிழகத்தில் சிம்புவின் “பீப்”
பாடலுக்கு எழுந்த போர்க்குரலில் ஒரு வீதம் கூட தமிழகத்தில்
இந்தச் சாதி வெறிப்பாடலுக்கு எதிர்ப்பு எழவில்லை என்பது சுய
மதிப்பீடற்று நாம் எவ்வாறு சாதிய சமூகமாக வாழப்
பழகிவிட்டிருக்கிறோம் எனப்புரிந்து கொள்ள உதவிசெய்யும் என
நம்புகிறேன்.
“முக்குலத்துச் சிங்கங்கள் நாங்கதான் நாங்கதான் தேவர் இனத்
தங்கங்கள் நாங்கதான் நாங்கதான்” என்று மேலும் மேலும்
சாதிப்பெருமை எழுதிவிடும் சமூகமாக அது சீரழிந்து போய்க்
கொண்டிருக்கிறது என்பதனை யார் கண்டுணர்ந்தார்கள்?
“மருதமலை மாமணியே முருகையா தேவரின் குலம் காக்கும்
வேலய்யா” என்று கண்ணதாசனே கடவுள் பாட்டை சாதிக்குள்
கொண்டு வந்து இழுத்து வைத்ததை உணராது தயாரிப்பாளருக்கு
மெருகூட்டியதாகப் பெருமை பேசுபவர்கள் இன்னமும்
தமிழ்நாட்டில் வாழ்கிறார்கள்.

நமது சூழலிலோ “ ஆதியிலும் பறையனல்ல. சாதியிலும்
பறையனல்ல. பாதியிலே பறையனாயினேன்.” என அரிச்சந்திர
மயான காண்டத்தின் சாதிவெறி பேசும் காட்சியினை கனடாவில்
கூட கொண்டு வந்து மேடையேற்றிவிடும் நிலைதான் இன்றும்
இருக்கிறது. அந்தச் சுடலைப்பாடலின் அழுகுரல் உணர்ச்சிக்குள்
சாதி வெறி ஒழிந்திருப்பதனை ஏன் யாராலும் உணர்ந்து கொள்ள
முடியாதிருக்கிறது.
அதனைத் தமிழர்களது மரபில் முகிழ்ந்த கலை என்பதாக அந்தச்
சாதிய வசையாடலை அடையாளப்படுத்தியிருப்பது புரிந்துணர்வு
சம்பந்தப்பட்ட விடயமல்ல. இங்கேதான் நான் மேலே குறிப்பிட்ட
நமது மரபு, நமது தொன்மம் என்பதன் முழுமையான அபாயம்
வெளிப்படையாகிறது என்பதுதான்.

மரபு என்பது யாருடைய மரபு? தொன்மம்
என்பது யாருடைய தொன்மம்? இந்த மரபுகளும் தொன்மங்களும்
யாருடைய கைகளில் இருந்து முகிழ்ந்தவை? இதில் இருக்கும்
அவர்களது தெளிவற்ற நிலை நமது எஞ்சியிருக்கும்
எதிர்காலத்தையும் இருள் சூழ் உலகுக்குள் மீளவும் மீளவும்
தள்ளிவிடக் கூடியது.
ஒரு நாள் தோழர் பேராசிரியர் கே. ஏ. குணசேகரன் அவர்கள்
உரையாடிக்கொண்டிருந்தார். ஒரு இடத்தில் ஆதியிலும்
பறையனல்ல. சாதியிலும் பறையனல்ல பாதியிலே
பறையனாயினேன்” என்று பாடுகிறாங்களே. பாதியில்
பறையனாகியதற்கு இவ்வளவு வேதனை இவனுக்கு இருக்கும்
என்றால் சாதியிலே பறையனாயிருப்பவனுக்கு என்ன வலியிருக்கும்
என்று கேட்பார். அந்த வலியின் அடையாளத்தை இவர்கள்
எங்கிருந்து உணருவார்கள்? தங்களுடைய நிகழ்வினைப் பார்க்க
வந்திருக்கும் பார்வையாளர்களையே தமது சாதிப்பின்புலத்திலிருந்து
மட்டும் அடையாளம் காண்பதின் வெளிப்பாடுதான் இது.
இதுகுறித்து இனிவரும் காலங்களில் இவர்கள் பொறுப்புடன்
செயற்படவேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

இவற்றை விட மரபு , தொன்மம் குறித்துச் செயற்படும் இன்னொரு
பகுதியினர் ஈழத்திலுள்ள நமது பாடசாலைகள் உள்ளிட்ட கட்டடக்
கலைகள் அழியாது பாதுகாக்கப்பட வேண்டும் கோயில்களின்
வடிவம் அழியாது பாதுகாக்கப்பட வேண்டும் என மீண்டும்
இப்பொழுது கோசமிடத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள் புதிய
தலைமுறையாக இருப்பதுதான் மிகுந்த கவலையானது.
“போருக்குப் பிந்திய ஈழத்தில் மீள் கட்டுமாணம் என்ற பெயரிலும்
அபிவிருத்தி என்ற பெயரிலும் பாடசாலைகள், கோயில்கள்
போன்றவற்றை இடித்துப் புதிதாகக் கட்டுகின்ற போக்கு
அதிகரித்துவருகின்றது. பெரும்பாலும் இவற்றுக்கான நிதி
புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற பழைய மாணவர் சங்கங்கள்,
ஊர்ச்சங்கங்கள் என்பவற்றின் ஊடாகவே அனுப்பப்படுகின்றது.
இவ்வாறாகக் கட்டடங்கள் இடிக்கப்படும்போது மரபுரிமைகள்
அழிக்கப்படுகின்றன என்கிற பிரக்ஞை இருக்கவேண்டியது மிக
அவசியமானது. யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் பழமைவாய்ந்த
சில கட்டடங்கள் கூட இப்படியாக அபிவிருத்தி என்ற பெயரில்
இடிக்கப்பட்டன என்பதை நாம் இங்கே நினைவுகூரவேண்டும்.
அபிவிருத்தி என்ற பெயரில் மரபுரிமைகளை அழிப்பது ஒரு இனத்தின்
அழிப்பிற்கான அடிப்படைகளில் ஒன்று என்பதை புரிந்துகொண்டு,
மரபுரிமைகளையும் பேணுவதோடு அபிவிருத்தி நடவடிக்கைகளில்
ஈடுபடல் வேண்டும். அதுபோல ஊர்ச்சங்களின் உதவியுடன்
கோயில்கள் இடித்துக் கட்டப்படும்போதும் அந்தக் கோயில்களின்
நிர்மாணத்தில் பின்பற்றப்பட்டிருந்த பாணி, சிறப்பம்சம் போன்றன
பற்றிய கவலையில்லாமல் அவை வெறும் கட்டடடங்களாகக்
கட்டப்பட்டு வருகின்றன. இதுவும் ஒருவிதமான மரபுரிமை அழிப்பு
என்றே சொல்லவேண்டும். எனவே பெரும்பாலும் நிதியுதவி
வழங்குகின்ற புலம்பெயர் அமைப்புகள் மரபுரிமைகளைக் காப்பது
என்ற அக்கறையுடன் மீள் கட்டுமாணம் போன்றவற்றைத் திட்டமிட
வேண்டும்.”(அருண்மொழிவர்மன் கலையரசி-யாழ்
இந்துக்கல்லூரி,கனடா2017) என்கிறார்.

மறுபுறம் “அதேநேரம் ஒரு சமூகத்தின் மரபுரிமையையும்
பண்பாட்டையும் காக்கவேண்டும் என்பதைத் தமது அக்கறையாகக்
காட்டிக்கொள்கின்ற புலம்பெயர் நாடுகளில் இருக்கின்ற
அமைப்புகளும் சங்கங்களும் பிற்போக்குத்தனத்தையும்
ஒடுக்குமுறையையும் சடங்குகள் ஊடாகவும் நடைமுறைகள்
ஊடாகவும் அடுத்த தலைமுறைக்கும் கடத்துகின்ற கருவிகளாக
இருந்துவிடக்கூடாது என்பதிலும் அக்கறையாக
இருக்கவேண்டும்.” என்கிறார்.

நீங்கள் அனைவரும் அவரது கட்டுரையை முழுமையாக வாசிக்க
வேண்டும். (பார்க்க: https://www.facebook.com/amvarman25)
அது இந்த சமூகத்தை எப்படி விளங்கிக் கொண்டுள்ளது
எனவும் அந்த விளக்கம் அவரது கவனக்குவிப்பு எதை நோக்கி
நகர்கிறது எனவும் எப்படி நம்மை மயக்கத்தில் விழுத்தி இந்த
சமூகத்தை மீள ஒடுக்குமுறைச் சகதிக்குள் அப்படியே கொண்டு
நகர்த்த முனைகிறது எனவும் நாம் கண்டுணரமுடியும்.
அப்போதுதான் முலாம் பூசிய சொற்களைக் கொண்டு தாம்
விரும்பிய தமிழ்த் தேசியத்தை முன்நகர்த்த நமக்கு முன்னால் ஒரு
தோழர் ஜோதிலிங்கம் மட்டும் இல்லை என்பதனை நீங்கள்
இலகுவாக உணர்ந்து கொள்வீர்கள்.

புலம் பெயர் சமூகத்தால் ஈழத்தில் மீள் உருவாக்கம் செய்யப்பட்டு
வரும் கோயில்களினது எண்ணிக்கையும் அந்தக் கோயில்களில்
குடியமரும் கடவுள்களது எண்ணிக்கையும் இந்த சமூகத்தை
ஒருபோதும் நிம்மதியாக இருக்கவிடப் போவதில்லை. ஏற்கனவே
இருந்த கோயில்களில் கூட இன்னமும் குறிக்கப்பட்ட மக்களுக்கு
வழிபடும் உரிமையில்லை. இந்த வகைக் கோயில்களது
நிர்மாணத்தில் எந்தப் பாணி பின்பற்றப்பட்டால் என்ன. எந்தச்
சிறப்பம்சம் இருந்தாலென்ன. மரபுரிமை என்ற பெயரில் அதனைக்
காக்க வேண்டும் என்பதற்குள் இருப்பது இன்று தமிழ்த் தேசியம்
என்ற பெயரில் மறைத்து விடத் துடிக்கும் மெதுசாதிய மனோபவமே.

நமது சமூகம் சாதி காப்பாற்றும் சமூகமாக இருக்கும் போது அந்த
சாதி வடிவம் காத்த பாடசாலைக் கட்டடக் கலைகளானாலும் சரி
கோயிற் கட்டடக் கலைகளானாலும் சரி அடையாளம் காட்டும்
தெருவானாலும் சரி அழிந்துபோவதில் என்னதான் நிகழ்ந்து விடப்
போகிறது? எப்படி ஒரு புலம் பெயர்ந்த சாதித் தமிழன் நல்லூர்க்
கந்தனையும் தெல்லிப்பழை அம்மனையும் புலம் பெயர்ந்த தேசத்தில்
முளைக்கவைத்தானோ, அதே போல் புலம் பெயர்ந்த தேசத்திலிருந்து
தன் கைக்ககுக் கிட்டிய ஹரே கிருஷ்ணாவையும் சீரடி
சாய்பாபாவையும் அனுமானையும் தன்னுடைய தேசத்திற்குத்
திரும்பிக் கொண்டு போவான்தானே.

புலம் பெயர்ந்த சூழலிற் கூட புதிய புதிய கோயில்களை உருவாக்கி
வருமானம் ஈட்டியவர்கள் உங்களது தமிழ்தேசிய அமைப்புக்கள்தானே. இன்று
ஊரில் இருக்கின்ற கோயில்களைத் திருத்தி வடிவமைத்து அதே
தமிழ்த் தேசியவாதிகள் தங்களுடைய வருமானத்தை மீளத்
தீர்மானிப்பதில் என்ன வேறுபாடு இருந்து விடப் போகிறது? இன்று
விடுதலைப் புலிகள் இருந்து, அவர்கள் இதே வேலையைச்
செய்திருந்தால் நண்பர் அருண்மொழிவர்மனுக்குக் இந்தக் கேள்வி
இருந்திருக்காது. ஒருபோதும் இருந்திருக்கப் போவதேயில்லை என்பதே எனது
கணிப்பு. அவரும் அவரைப் போன்ற பலரும் தமிழ் என்ற ஒற்றை
அடையாளம் குலைபட்டுப் போகாதிருக்க எவற்றைக்
காணாதிருத்தல் எவை மீது தமது கண்டனங்களைப் பதிவு செய்தல்
என்று அவர்கள் கணக்குப் பிடிக்கும் அளவீடுகளை நாம் தொடர்ந்து
கவனித்து வருவோமானால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும்.

இந்தச் சாதி காப்பாற்றிய சமூகத்தின் அடையாளங்களை
தமிழினத்தின் மரபாக, மரபில் முகிழ்ந்த கலையாகப் பண்பாடாக
அதுவே ஒட்டு மொத்த அடையாளமாகப் பதிவிடுவதனை
நண்பர்களான நீங்கள் இனியாவது நிறுத்த வேண்டும் என நான்
பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த முக்கியமான விடயம்,
புலம் பெயர்ந்த சூழலில் அதுவும் கனடா போன்ற நாடுகளில்
ஊர்ச்சங்கங்கள் மற்றும் பாடசாலைப் பழையமாணவர்கள்
ஒன்றியங்கள் எவ்வாறு இயங்கி வருகின்றன என ஆய்வு
செய்தீர்களானால் மிக விபரமான முறையில் அதற்குள் நிலவும்
சாதிய நச்சுச் சூழலை அனைவராலும் விளங்கிக் கொள்ள முடியும்.
ஈழத்தில் பொதுவாக அனைத்து ஊர்களும் பல்வேறு சாதியச்
சமூகங்களால் நிரவியிருப்பன. அந்த ஊர்களின் பெயரில்
ஒன்றியங்களையும் சங்கங்களையும் இங்கே வைத்திருப்போர் அதில்
அனைத்துச் சாதியினரையும் பெரும்பாலும்
உள்வாங்கியிருப்பதில்லை. அதிலும் ஒன்றியத்தின் அல்லது
சங்கத்தின் நிர்வாக சபையில் ஒருபோதும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச்
சேர்ந்த ஒருவர் நானறிந்தவரையில் ஒருபோதும் தெரிவு
செய்யப்படுவதில்லை. எப்போதும் இந்தச் சங்கங்கள் எனக்குத்
தெரிந்து வெள்ளாளர்களது மேட்டுக் குடிச் சிந்தனைக்கு உட்பட்டே
இருந்து வந்து கொண்டிருக்கிறது. ரொரண்டோவில் கரவெட்டி ஊர்
ஒன்று கூடல் இரண்டாக நடைபெற்று வருவதை என்னைப் போல்
நீங்களும் அறிந்திருப்பீர்கள். இதே நிலைதான் ரொரண்டோவில்
இருக்கின்ற அதிகமாக அத்தனை ஊர்ச் சங்கங்களுக்கும் என்றே
நினைக்கிறேன்.

தனியே வெள்ளாளர்களது ஆதிக்கத்தில் சங்கங்களையும்
ஒன்றியங்களையும் நடத்திக் கொண்டு அதுவே நமது சமூகத்தின்
மரபுகளையும் அதன் பண்பாடுகளையும் புலம் பெயர் சமூகத்திலும்
காக்கும் என்பதாக மக்களை நம்பவைப்பதும் அதற்கு ஒரு முழு
ஊரின் பெயரையே அடையாளப்படுத்தும் போக்கும் உடனடியாக
நிறுத்தப்பட வேண்டும்.இல்லையேல் இந்த வகைச் சங்கங்களது
ஒன்றியத்தினது செயற்பாட்டை நாம் சேர்ந்தே செயலிழக்கச் செய்ய
வேண்டும்.

ஈழத் தமிழ்ச்சமூகம் ஒரு சாதியற்ற சமூகமாக மாற்றம் பெற
சின்னக்கதைகளைத் தகர்க்கத் தொடங்கியே நாம் பெருங்கதையைத்
தகர்க்க முடியும். நம்மைச் சுற்றி நடக்கும் சின்னச்சின்னக் கதைகளை
நாம் தகர்க்கத் தொடங்குவோம். முடிந்தவரை செய்வோம்.