முன்பு எல்லாம் பிரிக்க முடியாதது எது என்று கேட்டால் நகமும் சதையும் என்று சொல்வார்கள். இப்பொழுது அப்படி இல்லை. யாரிடமாவது அந்தக் கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். மெகா தொடர்களும், பெண்களும் என்றுதான் சொல்வார்கள். அந்த அளவிற்கு இன்றைய தமிழ்ப் பெண்களில் பலர், தொலைக்காட்சித் தொடர்களுக்கு அடிமைகளாக மாறி வருகிறார்கள். எல்லாப் பெண்களையும் சொல்லவில்லை. ஒரு சில பெண்களுக்குப் பைத்தியமே பிடித்து விடும் அளவுக்கு நிலைமை மோசமாகிக் கொண்டு வருகிறது.
நம் எண்ணம், பேச்சு, செயல், பழக்கம், ஒழுக்கம், வாழ்க்கை இப்படி எல்லாவற்றையும் சிதைக்கும் பணியைச் சின்னத்திரைகள் செய்து கொண்டிருக்கின்றன என்பதை நாம் உணர வேண்டும். அவர்கள் ஒளிப்பரப்புவதால்தான் நாங்கள் பார்க்கிறோம் என்று நொண்டிச் சாக்கு சொல்வதை விடுத்து ஆக்கபூர்வமான வழியில் நமது நேரத்தைச் செலவிட வேண்டும்.
எப்போது வீட்டிற்குள் நுழைந்தாலும் அழுகுரல்களில் சத்தம் காதை அடைக்கிறது. இல்லையென்றால் மிக மட்டமாக ஆண் பெண் பேதமின்றி, வயது வித்தியாசமின்றி யாராவது யாரையாவது திட்டிக் கொண்டிருப்பார்கள். காது கொடுத்து கேட்க முடியாது. எவன் குடியை எப்படி கெடுக்கலாம், யார் முன்னேற்றத்தை எப்படி தடுக்கலாம், எப்படி திருடுவது என்பதாகத்தான் காட்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கும். பெண்கள் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகள், மனைவிக்கு துரோகமிழைக்கும் கணவன்மார்கள், பெற்றோர்களை ஏமாற்றும் பிள்ளைகள் என பெரும்பாலான சின்னத்திரைகள் எதிர்மறையான விசயங்களையே காட்டிக் கொண்டிருக்கின்றன.
அத்தோடு பெண்களை வில்லிகளாக திரிபுபடுத்தி, பெண்களுக்கு பெண்களே எதிரியென காட்டி, ஒற்றுமையாக இருக்கும் குடும்பங்களைப் பிரிக்கின்றன. அதுமட்டுமல்லாது, தாயிடம் இருந்து மகனைப் பிரிக்கின்றன. அப்பா மகள் உறவு முறையைப் பிளவு படுத்துகின்றன. கணவன் மனைவி உறவைக் கொச்சைப் படுத்துகின்றன. சொந்த பந்தங்களைக் கொலை செய்யத் தூண்டுகின்றன. கள்ள உறவிற்கு வழிகாட்டுகின்றன. இரட்டை அர்த்த வசனங்களை அள்ளித் தெளித்து, ஒட்டு மொத்த இளம் சமுதாயத்தையே குட்டிச் சுவராக்கி வருகின்றன.
பொதுவாகவே பெண்கள் என்றால் இரக்கம் உள்ள வர்கள் என்பார்கள். ஆனால், இந்த மெகாத் தொடர்கள், நம் பெண்களின் அந் நல்ல இரக்கச் சிந்தனையை கொஞ்சம் கொஞ்சமாய் மழுங்கடித்து விடுகின்றன.
ஒரு தொடர் முடிந்த பிறகு, யாராவது சிரித்தபடி சந்தோஷமாக வீட்டு வேலையைப் பார்க்கப் போகிறார்களா?
நாளைக்கு என்ன நடக்குமோ என்கிற ஒருவித எதிர்பார்ப்பு. சீரியலை பார்க்கும் எத்தனை குடும்பப் பெண்கள் மற்ற குடும்பத்தை கெடுக்கும் நடவடிக்கையில் இறங்குகிறார்கள்? எத்தனை பெண்கள் சண்டைக்கு போகிறார்கள்? இவ்வாறான பெண் விரோத செயற்பாடுகளின் ஊற்றாக உருவெடுக்கும் கதைகள் ஒரு படி மேலே போய் ஒட்டுமொத்த பெண்களையே பொல்லாதவர்களாக காட்டும் நிலைக்கு இச் சின்னத்திரை தொடர்கள் மாறியுள்ளன.
தொலைக்காட்சி என்பது ஒரு பொழுது போக்குச் சாதனம். அதில் வரும் நிகழ்ச்சிகள் மக்களின் மன அழுத்தங்களைக் குறைக்க வேண்டும். ஒரு மனநிறைவான மனநிலையையும் உருவாக்க வேண்டும். ஆனால், இன்றைய காலத்தில் ஒளிபரப்பாகி வரும் தமிழ்த் தொடர்கள் நன்றாகப் போய்க் கொண்டு இருக்கும் குடும்ப உறவுகளில் விரிசல்களைத் தான் ஏற்படுத்துகின்றன.
இப்போதெல்லாம் மாலை 5.00 மணி தொடங்கி இரவு 10.00 மணி வரை யார் வீட்டிற்கும் நான் செல்வதில்லை என்று கூட சிலர் சொல்கிற அளவுக்கு சின்னத்திரை தொடர்கள் நம்மை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றன.
நம் நாட்டில் பெரும்பாலான சின்னத்திரை தொடர்கள் மாலை நேரத்தில் தான் ஒளிப்பரப்பாகின்றன. மாலை நேரம் எவ்வளவு முக்கியமானது. வீட்டில் இருப்பவர்கள் அந்நேரத்தில் உடற்பயிற்சி செய்யலாம். பிள்ளைகளை அழைத்துக் கொண்டு விளையாட்டுப் பூங்காவிற்குச் செல்லலாம். காலை பள்ளி முடிந்து வந்த பிள்ளைகள் ஓய்வெடுத்தப்பின் வீட்டுப்பாடங்கள் செய்ய உதவலாம். காலையில் சமைத்த சோறு கறியையும் இரவும் சாப்பிடுவதைத் தவிர்த்து சத்தான வேறு உணவுகள் தயாரிக்கலாம். மாலை பள்ளி முடிந்து வரும் பிள்ளைகளோடு இணைந்து செய்வதற்கு ஏராளமான கடமைகள் காத்துக் கிடக்கின்றன.
ஆனால், இதையெல்லாம் தவிர்த்து விட்டு 5 மணிக்கு தொடங்குகின்ற சின்னத்திரை தொடர்கள் இரவு 10 மணி வரை நீள்கிற அவலம் பல குடும்பங்களில் நிகழ்ந்தபடியே இருக்கிறது. பாடசாலை முடிந்து வரும் பிள்ளைகளையும் கணவர்மார்களையும் கவனிப்பது கூட பலருக்குச் சுமையாகப் போய்விட்டது. இதில் உச்சக்கட்ட கொடுமை என்னவென்றால் வேலை முடிந்து கணவன்மார்களும் பிள்ளைகளும் கூட இரவு வரை சின்னத்திரை தொடர்களில் மூழ்கி விடுகின்றனர். தொடர்கள் முடிந்த பிறகுதான் சாப்பாடு, தூக்கம், வீட்டுப்பாடம் எல்லாம்.
பாடசாலை மாணவர்கள் ஒன்று சேர்ந்து பேசுகிற கதைகளில் இப்போது சின்னத்திரையும் இடம்பெற்று விட்டது. பல குடும்பங்களில் உறவுகளுக்கிடையில் விரிசல்கள் ஏற்படுவதற்கும் இந்த சின்னத்திரைகள் காரணமாகின்றன. நாள்தோரும் பல மணி நேரங்கள் அதைத்தானே பார்க்கிறோம்.
நம் வாழ்க்கையைத் தீர்மானிப்பது நம் செயல்களைவிட நம் எண்ணங்கள்தான் என சான்றோர்கள் கூறுகின்றனர். அதுதானே உண்மை. எண்ணம்போல் தானே வாழ்வும் அமைகிறது. சின்னத்திரைகள் மக்களின் சிந்தனையை நாசப்படுத்தும் வேலையையே செய்கின்றன.
நாம் பார்க்காமல் தவிர்க்கும் பட்சத்தில் காலவோட்டத்தில் சின்னத்திரை தொடர்கள் ஒளிபரப்புவது நிறுத்தப்படும் என்பதையும் நாம் உணர வேண்டும். எந்த வீட்டில் தொலைக்காட்சி தொடர்களை தடை செய்கின்றார்களோ அந்த வீடு நல்லதொரு பல்கலைக்கழகமாக உருமாறும். சின்னத்திரை தொடர்களைப் போல் உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தி உறவுகளையும் அறிவையும் கெடுக்கும் செயன்முறையை அடியோடு ஒழிப்போம்!