சின்னாப்பின்னமாக போகும் சிறுபான்மை பிரநிதித்துவம்

பலமான அரசாங்கமொன்றை அமைப்பதற்கான அதிகாரத்தை தங்களுக்கு தாருங்கள் என ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கோருகின்றது. தங்களால் ஆட்சியமைக்க முடியுமென்றும் அதற்கான அதிகாரத்தை தங்களுக்குத் தாருங்கள் என்று சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியும் அதிகாரத்தை கேட்கிறது.  

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தலைமையிலான புதிய ஜனநாயக முன்னணி, தங்கள் குழுவிலேயே அனுபவமிக்கவர்கள் உள்ளனர். ஆகையால், தங்களுக்கு வாக்களியுங்கள் என கோருகின்றனர். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும், பாராளுமன்ற அதிகாரத்தை தங்களுக்கு கேட்கிறது.

இதற்கிடையே, வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு உள்ளிட்ட ஏனைய பிரதேசங்களில் போட்டியிடும், தமிழ், முஸ்லிம் கட்சிகள் அல்லது கூட்டணிகள். பாராளுமன்றத்தில் சிறுபான்மை இனங்களுக்காக குரல்கொடுப்பதற்காக தங்களுடைய பிரநிதிகளை அனுப்பிவைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

சிறுபான்மை பிரதித்துவம் தொடர்பில் ​பொதுவாக நோக்குமிடத்து, இம்முறை சின்னாப்பின்னமாகும் என்பதில் ஐயமில்லை. போட்டியிடும் பழைய முகங்களில் சில முகங்களை புதிய பாராளுமன்றத்தில் காணமுடியாமல் போகலாம் என்றும் பலரும் கூறுகின்றனர்.

அதிகாரம் கிடைக்கும் போது, மக்களுக்கு சேவைகளை முறையாக செய்து, ஏமாற்றும் வாக்குறுதிகளை வழங்காது, செயற்படுத்தக்கூடிய வாக்குறுதிகளை வழங்கி, அதனை நிறைவேற்றியிருந்தால், மக்கள் மத்தியில் சென்று, தமிழர்களுக்காக அல்லது முஸ்லிம்களுக்காக குரல்​கொடுப்போம். முழுமையாக இல்லாமற் செய்வதற்கான சதி இடம்பெறுகின்றது என்றெல்லாம் புலம்பத்தேவையில்லை.

அதுமட்டுமன்றி, வாக்கு வங்கியை காட்டிக்காத்திருந்தால், பொதுத் தேர்தலுக்கு மட்டுமன்றி, ஏனைய தேர்தல்களுக்கும் அஞ்சவே தேவையில்லை. சிறுபான்மை இன கட்சிகள் போட்டியிடும் மாவட்டங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்களை பார்த்தோமெனில், அங்கு உட்கட்சி பூசல்களும், ஏனைய கட்சிகளில் போட்டியிடும், சிறுபான்மையின வேட்பாளர்களுக்கு வாக்குகள் கிடைத்துவிடக்கூடாது என்பதுமே பிரதான பிரசார ​தொனிப்பொருளாக உள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து, பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. பின்னர் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தப்போவதாக அறிவித்துள்ள அரசாங்கம், விரும்பினால், மாகாண சபைத் தேர்தலையும் நடத்தக்கூடும். எனினும், இந்தத் தேர்தல்களில் எல்லாம் போட்டியிடுவதற்கு, சிறுபான்மை இனக்கட்சிகள் இப்போது இருந்து  தயாரில்லை என்பது, பாராளுமன்றத் தேர்தல் பிரசாரங்களில் புலம்புவதில் இருந்தே அறிந்துகொள்ள முடிகின்றது.

(Tamil Mirror)