இதுவரை காலமும் நடைபெற்ற தேர்தல்களில் பொருளாதாரக் கொள்கை என்பது காகிதங்கள் சிலவற்றுக்குள் அடங்கியிருக்கும் பொருளாக மாத்திரமே அமைந்திருந்ததுடன், வாக்காளர்கள் மத்தியில் அவை தொடர்பில் பெரிதும் கவனம் செலுத்தப்பட்டிருக்கவில்லை.
ஆனாலும், இம்முறை, நாடு பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து, எதிர்வரும் காலங்களில் இன்னும் சவால்களுக்கு முகங்கொடுக்கவுள்ள நிலையில், முக்கியமான காலகட்டத்தில் நடைபெறும் இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவோர் வெளியிடும் பொருளாதாரக் கொள்கை என்பது தொடர்பில் பலரும் முக்கிய கவனம் செலுத்தியிருந்தனர்.
குறிப்பாக, பொருளாதார மீட்சியை நோக்கிய பயணத்தில், சர்வதேச நாணய நிதியத்துடன் தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசு உடன்படிக்கையை ஏற்படுத்தி, அந்த வழிகாட்டல்களின் பிரகாரம் செயற்படும் நிலையில், அந்த உடன்படிக்கைகளின் நிபந்தனைகளின் அடிப்படையில் நாட்டு மக்களுக்கு பல நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க நேரிட்டுள்ளது.
இதனால் தேர்தலில் போட்டியிடும் முக்கிய அபேட்சகர்கள், தாம் பதவிக்கு வந்தவுடன் இந்த உடன்படிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்துவது உள்ளடங்கலாக பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய கருப்பொருளாக இந்த பொருளாதாரக் கொள்கையை முன்வைத்துள்ளனர்.
இவ்வாறு தற்போதைய ஜனாதிபதியும், சுயேட்சை வேட்பாளருமான ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க ஆகியோரின் தேர்தல் விஞ்ஞாபனம் அல்லது பொருளாதாரக் கொள்கையை ஆராய்வதற்கு வாய்ப்புக் கிட்டியிருந்தது.
இந்த பத்தி உண்மையில் பொது மக்களுக்கு, நாட்டின் வாக்காளர்களுக்கு பொருளாதாரக் கொள்கை பற்றிய தெளிவுபடுத்தலையும், எந்தக் கொள்கையில் எவ்வாறான அம்சங்கள் அடங்கியுள்ளன என்பதைப் பற்றிய தகவல்களை தெளிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது.
மாறாக, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் பக்கசார்பானதாக அமைந்திருக்கவில்லை என்பதை தெளிவுபடுத்திக் கொண்டு தொடர விரும்புகின்றேன்.
பொது மக்களுக்கும் தேர்தலில் போட்டியிடுவோருக்கும் இடையில் கைச்சாத்திடப்படாத ஒரு உடன்படிக்கையாக இந்தக் கொள்கை அமைந்துள்ள போதிலும், இதுவரை காலமும் அந்தக் கொள்கை அவ்வாறு பார்க்கப்படவில்லை.
பெருமளவு செலவு செய்யப்பட்டு, இந்த கொள்கை அச்சிடப்பட்டு, அதனை வெளியிடுவதற்கு பல தரப்பினரும் அழைக்கப்பட்டு வைபவம் ஏற்பாடு செய்யபட்டு பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டு வந்த போதிலும், அதிலுள்ள விடயங்கள் தொடர்பில் அந்ததந்த கட்சிகளின் தலைவர்கள் எந்தளவுக்கு விடயங்களை அறிந்து வைத்துள்ளனர் என்பது கேள்விக்குறியே.
ஏனெனில் இந்தக் கொள்கைகளை தயாரிப்பது, அந்ததந்த துறைசார் நிபுணர்கள் குழுவினாலாகும். இந்த நிலை மாற வேண்டும். இவ்வாறு எழுத்து மூலம் வெளியிடப்படும் இந்த கொள்கைப் பிரகடனத்தை ஆதாரமாகக் கொண்டு, அரசியல் தலைவர்களை பொறுப்புக்கூரச் செய்யும் நிலைக்கு தள்ளும் நிலைக்கு நாடு உயர வேண்டும். மேலேத்தேய நாடுகளில் இவ்வாறான ஒரு கலாசாரமே நடைமுறையிலுள்ளது.
தேர்தல் மேடைகளில் ஒரு கட்சியினர் மற்றைய கட்சியினரை தாக்கி, ஏளனப்படுத்தி மக்களை கவரும் வகையில் கருத்துகளை வெளியிடுவதும், அதற்கு பதிலளிப்பது போன்று இதர தரப்பினர் தமது மேடைகளில் கருத்துகளை வெளியிட்டு மக்களின் கரகோஷங்களைப் பெறுவதும், நாட்டின் எதிர்காலத்துக்கு பயனுள்ளதாக அமையாது.
மாறாக, தாம் என்ன செய்யப் போகின்றோம், எவ்வாறு செய்யப்போகின்றோம் என்பதை தெளிவுபடுத்துவதே பிரதானமானதாகும். நாட்டுக்கும், மக்களுக்கும் அவையே பயனுள்ளதாக அமைந்திருக்கும். அதனை உறுதி செய்யும் ஆதாரமாக இந்தக் கொள்கை அமைந்துள்ளது.
போட்டியாளர்களின் ஏனைய கொள்கைகள் அரசியல் ரீதியில் மாறுபட்ட அம்சங்களைக் கொண்டதாக அமைந்திருந்தாலும், பொருளாதாரக் கொள்கை என்பது பெருமளவில் இலக்கங்கள் மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டமைவதால், அவை தெளிவானதாக அமைந்திருக்க வேண்டும்.
பொதுவான கருத்தின் பிரகாரம் ஐக்கிய மக்கள் கூட்டணியின் வசம் பொருளாதாரம் தொடர்பில் அறிவார்ந்த அங்கத்தவர்கள் காணப்படுகின்றனர் எனும் கருத்து நிலவி வந்த நிலையில், அந்தக் கட்சியின் பொருளாதாரக் கொள்கை கடந்த வாரம் வெளியிடப்பட்டிருந்தது.
இந்த கொள்கை தொடர்பில் பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் பெருமளவு எதிர்பார்ப்பும் காணப்பட்டது. இந்தக் கொள்கையில் விஞ்ஞாபனம் சாத்தியப்படுமா என்பதை உறுதி செய்யும் செயற்திட்டம் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது. நாட்டை முன்நோக்கி கொண்டு செல்வதற்கு அவசியமான கருப்பொருட்களை இந்த அணியின் கொள்கை கொண்டுள்ளது.
குறிப்பாக சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவது மிகவும் முக்கியமானதாக அமைந்துள்ளது.
தற்போதைய ஜனாதிபதி இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளமையினால், அது தொடர்பில் பெருமளவில் அவரின் கொள்கையில் விளக்கமளிக்கப்படாமல் இருந்திருக்கலாம் எனும் அனுமானத்துடன், புதிதாக ஆட்சியேறவுள்ள இதர இரு தேர்தல் அபேட்சகர்களின் பொருளாதாரக் கொள்கைகளை ஒப்பீட்டளவில் எடுத்துக் கொண்டால், தேசிய மக்கள் சக்தியின் கொள்கையில் புதிய கடன் நிலைபேறாண்மை மதிப்பாய்வு (DSA) அவசியம் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
அதாவது சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக் கொண்ட உடன்படிக்கையின் அடிப்படையான அம்சம் இந்த கடன் நிலைபேறாண்மை மதிப்பாய்வு (DSA) ஆகும். அவ்வாறு அதில் மாற்றத்தை ஏற்படுத்துவது என்பது, தற்போது ஏற்படுத்தியுள்ள ஒப்பந்தத்தை இரத்துச் செய்து, புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்வதாகும். கடந்த ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொள்வதற்கு சுமார் ஒரு வருட காலம் வரை தேவைப்பட்டதை நாம் அறிவோம்.
எவ்வாறாயினும், புதிய ஒப்பந்தமொன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கும் அது போன்ற காலப்பகுதி தேவைப்படும்பட்சத்தில், நாட்டுக்கு அவசியமான அந்நியச் செலாவணி வரத்தை இந்த ஒரு வருட காலப்பகுதியினுள் எவ்வாறு உறுதி செய்வது என்பது தொடர்பான விளக்கங்கள் தேசிய மக்கள் சக்தியின் கொள்கையில் இல்லை. இது மிகவும் சிக்கலான செயலாகவே பார்க்கப்படுகின்றது.
வெளிநாடுகளில் வதியும் தமது ஆதரவாளர்களின் உதவியைக் கொண்டு, சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை ஒரு வருட காலப்பகுதியில் திரட்டிக் கொள்வது என்பது நடைமுறைச் சாத்தியமற்ற விடயமாகும்.
பிணையம் ஒன்றை உருவாக்கி அவற்றில் முதலிடச் செய்வது எனும் கொள்கையை பின்பற்றினாலும், அது தொடர்பான தெளிவுபடுத்தல்கள் எதுவும் அவர்களின் கொள்கையில் இல்லை. எனவே, இந்தக் கொள்கை அரசியல் ரீதியில் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் அநுரகுமார திசாநாயக்கவின் பின்னாலுள்ள மக்களுக்கு ஒருவித ஏமாற்றத்தை வழங்குவதாகவே அமைந்துள்ளது.
உயர்ந்த மட்ட, தெளிவற்ற பொருளாதாரக் கொள்கை ஒன்றே அவர்கள் வசம் உள்ளது.
மாறாக, ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொள்கையில், இந்த கடன் நிலைபேறாண்மை மதிப்பாய்வு (DSA) என்பதில் மாற்றத்தை ஏற்படுத்தாமல், நீடித்த நிதி வசதி உடன்படிக்கையில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்வது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அதனூடாக, உயர் தொழில்நுட்ப, உயர் திறனை அடிப்படையாகக் கொண்டு, ஏற்றுமதியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதாரத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்காக தற்போது காணப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் நீடித்த நிதி வசதி உடன்படிக்கையில் சில மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டியுள்ளது. அதனை மேற்கொள்வது பற்றியே ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொருளாதாரக் கொள்கையில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் மூலதனம் இன்மை, போதியளவு புத்திஜீவிகள் இன்மை போன்ற சூழலில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது புறக் காரணிகளில் தங்கியிருக்க வேண்டும். அதனை அடிப்படையாகக் கொண்டதாக ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொள்கை அமைந்துள்ளது.
மேலும், சிங்கப்பூரில் காணப்படுவதைப் போன்று, அரசாங்கத்தின் பொறுப்பிலுள்ள நிறுவனங்களை நிர்வகிப்பதற்கு தாய் நிறுவனம் ஒன்றை ஸ்தாபித்து, அரச நிறுவனங்களை அதன் கீழ் கொண்டு வந்து, அரசின் தலையீடின்றி அவற்றை நிர்வகிக்கும் பொறுப்பை பேணுவது போன்ற ஒரு முறைமையைப் பற்றியும் தெளிவுபடுத்தியுள்ளது.
தற்போதைய ஜனாதிபதியின் பொருளாதாரக் கொள்கையை எடுத்துக் கொண்டால் அதில் தெளிவான இலக்குகள் என எதுவும் உள்ளடக்கப்படவில்லை. கடந்த பதினைந்து, இருபது வருட காலப்பகுதியில் வெளியிடப்பட்டிருந்த தேர்தல் விஞ்ஞாபனங்களில் அடங்கியிருந்த அம்சங்களை திரட்டி அதனை உள்ளடக்கியதாகவே ஜனாதிபதியின் கொள்கை அமைந்திருந்தது.
நாட்டை கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் மீட்டு இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளமையால் தம்மை தெரிவு செய்யுமாறு வாக்காளர்களிடம் வேண்டி ஜனாதிபதியினால் எழுதிய கடிதம் மாத்திரமே இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
இவ்வாறு ஐக்கிய மக்கள் கூட்டணியின் பொருளாதாரக் கொள்கை பல நடைமுறைச் சாத்தியமான, செயற்திட்டங்கள் பலதைக் கொண்டுள்ளமை உண்மையில், இதுவரையில் கண்டுற்ற பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் தூர நோக்குடைய ஒரே திட்டமாக அமைந்துள்ளது. குறிப்பாக முக்கிய மூன்று போட்டியாளர்களை சார்ந்த கொள்கைகளில் இது முதன்மை பெற்றுள்ளது என்பது எமது கருத்து.
உண்மையில் இதுபோன்ற கொள்கை தேர்தல் நடைபெறுவதற்கு ஆகக்குறைந்தது இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டிருந்தால், அது தொடர்பில் ஆராய்ந்து, பல தரப்பினரின் கருத்துகளைப் பெற்று, அந்த கொள்கையை மேம்படுத்திக் கொள்வதற்குக்கூட கட்சிகளுக்கு சந்தர்ப்பம் காணப்பட்டிருக்கும்.
ஆனாலும் இந்த விஞ்ஞாபனங்கள் தேர்தலுக்கான திகதி அருகில் தெரியும் சுமார் இரண்டு வாரங்கள் வரையுள்ள நிலையில் வெளியிடப்பட்டுள்ளமையானது, அனைத்து தரப்பினராலும் இவற்றை முழுமையாக வாசித்து, அதிலுள்ள அம்சங்களை தெளிவுபடுத்திக் கொள்ள முடியுமா எனும் கேள்வியும் இல்லாமல் இல்லை.
இருந்தாலும், எமது வாசகர்களுக்கு எம்மாலான தெளிவுபடுத்தலைப் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் இந்த பத்தி அமைந்திருக்கும் என நாம் கருதுகின்றோம்.
இன்னும் ஐந்து வருட காலப்பகுதிக்கு நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் தேர்தலாக இந்த ஜனாதிபதித் தேர்தல் அமைந்திருக்கும்.
மீண்டும் எமக்கு நெருக்கடிகளுக்குள் சென்றுவிட முடியாது. தமக்கு விருப்பமான போட்டியாளருக்கு வாக்களிக்கும் உரிமை சகலருக்கும் உண்டு, வழமை போலல்லாது, இம்முறை யாருக்கு வாக்களிப்பது என்பதை இன்னமும் தீர்மானிக்க முடியாமல் மதில் மேல் பூனை போன்ற நிலையிலிருக்கும் வாக்காளர்கள் எவரேனும் இந்த பத்தியை வாசித்துவிட்டு சாமர்த்தியமான தீர்மானத்தை மேற்கொள்வார்களாயின், நாட்டுக்கு அது வெற்றியாக அமையும் என்பதே எமது எதிர்பார்ப்பு.
இவ்வாறான கொள்கைகள் வெளிப்படுத்துவதுடன் நின்றுவிடாமல், அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை அரசியல் ரீதியான தலையீடுகள் இன்றி செயற்படுத்துவது என்பது மிகவும் முக்கியமானதாகும்.
குறிப்பாக இந்த மூன்று கொள்கைகளிலும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கொள்கையை கொண்டுள்ள ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொள்கை, அந்த கட்சியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆட்சிபீடம் ஏறினால், அவர்கள் இந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட வேண்டும்.