ஏத்தனை போராளிகள் எத்தனை கல்வியாளர்கள் அரசியல் தலைவர்கள் சாமானிய மனிதர்கள் விடுதலையின் பேரால் கொல்லப்பட்டார்கள் அதில் பால்வேறுபாடு சிறியோர் பெரியோர் என்றபேதம் இருக்கவில்லை. ஏத்தனை பெரிய வளம் ஆற்றல் நிர்மூலம் செய்யப்பட்டது.
சகோதர சமூகங்களை சேர்ந்த சாதாரண மனிதர்கள் தலைவர்கள்- மாபெரும் ஜனநாயக நாட்டின் தலைவரை ஆத்திரமூட்டல் அதன் பிரதிவிளைவு மக்கள் மேல் இறங்கட்டும் என்று நிகழ்த்திய தாக்குதல்கள் சகோதர சமூகங்கள் உடுத்ததுணியுடன் தலைமுறை தலைமுறையாக வாழந்த மண்ணில் இருந்து துரத்தப்பட்ட அவலம். சக இயக்கங்கள் சகசமூகங்கள் தொடர்பாக உடல் மீதியின்றி அழிக்கும் விரோதம் மாத்திரம் தான் பராமரிக்கப்பட்டது.
புலிகள் இயக்கத்தின் போராளிகளுக்கும் எந்த ஜனநாய இடைவெளியும் இருக்கவில்லை.
அவர்கள் றோபோக்களாக வார்க்கப்பட்டார்கள் சிறுவர்களாகவே குரோதமும் வன்மமும் வளர்க்கபட்டது. போராடி செத்துமடிவதற்கு மாத்திரம் தான் அவர்கள் பயிற்றப்பட்டார்கள்.
வாழ்க்கை இங்கு கொண்டாடப்படவில்லை. மரணம் வழிபடப்பட்டது.
இன்றுவரை இதுபற்றிய சுயவிசாரணை இந்த சமூகத்தில் இல்லை!?
மனித உரிமைபற்றி பேசுவதற்கான குறைந்தபட்ச தகுதி ஜோக்கியதை எமது சமூகத்திற்கு வேண்டாமா?
ரெலோ போராளிகளும் தலைவர் ஸ்ரீசபாரட்ணமும் கொல்லப்பட்டவிதம்
கூட்டம் கூட்டமாக ரெலோ போராளிகள் கொல்லப்பட்டதன் தொடர்ச்சியாக வஞ்சகமாக சபாரடணம் படுகொலை செய்யப்பட்டார். ஈழப்போராட்டம் முடிவடைந்த காலத்தை 2009 என்பார்கள் ஆனால் அது 1986 ஏப்பிரலில் முடிவடைந்து விட்டது. ஆனாலும் இலங்கையில் மனிதர்களை கூட்டம் கூட்டமாக கொல்வதற்கான மனிநிலை இன்றும் ஓய்ந்துவிடவில்லை. அது இன்னொரு சிதை வியக்கப் பரிமாணத்தை அடைந்துள்ளது.
வரலாற்றில் இழைக்கப்பட்ட மாபெரும் தவறுகளில் இருந்துகற்காவிட்டால் அவற்றை சரிசெய்யாவிட்டால் திரும்பவும் திரும்பவும் விபரீதங்கள் ஏற்பட்டுகொண்டிருக்கும்.
வடக்குகிழக்கு தமிழ் சமூகத்தில் இந்த சுய விசாரணை பற்றிய அலட்சியம் காணப்படுகிறது.
3 தசாப்தங்களுக்குமேல் நீடித்த போராட்டத்தில் நிலவிய அற விழுமியங்கள் என்ன என்பது பற்றிய கேள்வி இன்றுவரை அலட்சியம் செய்யப்படுகிறது. உள்ளிருந்து கொல்லும் வியாதியால் தமிழர்களும் சக சமூகங்களும் எதையெல்லாம் இழந்தார்கள் என்ற கேள்விக்கு திறந்த மனதுடனான தேடல் இல்லாததால் தமிழ் சமூதாயத்தில் “நெஞ்சில் உரமும் நேர்மைதிறனு மற்ற வஞ்சக பேர்வழிகள”ஆதிக்கம் பெற்றிருக்கிறார்கள்.
ரெலோ போராளிகளதும் சபாரட்ணம் அவர்களதும் படுகொலைகள் இன்றுவரை ஈழ தமிழ் சமுதாயத்தில் ஜனநாயக பண்பு கலாச்சாரம் பற்றிய கேள்விகளை எழுப்புகின்றன.
இந்த படுகொலைகளால் பாதிக்கப்பட்ட இயக்கங்கள் கூட இது பற்றி பேசவிரும்பாத அவலம்!?
உண்மைகளை தரிசிப்பதற்கு ஒரு சத்தியசோதனைக்கு சுய விசாரணைக்கு தயாரில்லாதவரை விமோசனம் நெடுந்தொலைவாகிவிடும்.
சமூகம் அயோக்கியர்களும் திருடர்களும் ஆதிக்கம் பெற்ற அராஜக கூடாரமாகிவிடும். அதுதான் இன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்த தவறானபாதைக்கு புலம் பெயர் சமூகமும் தெரிந்தோ தெரியாமலோ பாரியபங்களிப்பை பலஆண்டுகளாக வழங்கிவந்திருக்கிறது.
இன்று தமிழ் சமூகத்தின் கையறுநிலைக்கு இந்த சகோதரப்படு கொலைபெரும் பங்களிப்பு செய்திருக்கிறது.
பாரிய தவறுகள் எங்கே இழைக்கப்பட்டன . இவற்றை பிரக்ஞைபூர்வமாக புரிந்துகொள்வதில் தான் மீட்சிக்கான பாதையை கண்டடையமுடியும். படுகெலை செய்யப்பட்ட ரெலோபோராளிகளையும் தோழர் சிறிசபாரட்ணம் அவர்களையும் என்றென்றும் நினைவு கூருவோம்.
சுகலவிதமான வன்முறைகளும் இராணுவவாதங்களும் பயங்கரவாதங்களும் உலகத்தாரால் வெறுத்தொதுக்கபடும் காலமொன்றில் பிரவேசித்திருக்கிறோம் என்பதைமனதில் இருத்துவோம்.