சிறீலங்கா உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் தமிழ்ப் பெண்களும் – பகுதி 4

(ஏற்கனவே பதிவான பகுதிகள் 1 , 2 – பெண்களுக்கான இடஒதுக்கீடு , 3 – பெண்பிரதிநிதிகள் நேர்காணல் விமர்சனம்)

வேட்பாளருக்குத் தேவையான தகுதி தராதரங்கள்

பெண் வேட்பாளரின் 25% நியமன அவசியம் காரணமாக அதிகம் கல்வி கற்காத பெண்களும், கடந்த போர்க்கால அனுபவத்தைத் தவிர்ந்து, தற்போதைய உள்நாட்டுத் தேவைகளை முன்னெடுக்க முடியாதவர்களும் கூட போட்டியிட வருகிறார்கள் என்று தமிழ் பிரதேசத்தில் ஒரு சிலர் முறையிடுவதாக அறிகிறேன். இது நியாயமானதா என்று சற்று உற்று நோக்க வேண்டியுள்ளது. நானும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவள் என்பதாலும், மெதடிஸ்ட் மிஷனரிமார் நிர்மாணித்த பாடசாலையில் கற்றவள் ஆதலாலும், இது போன்ற முறையீடுகள் அதிகமாக பிரித்தானிய காலனித்துவத்திலும், அதிலிருந்து முற்றிலும் விடுபட முடியாதவர்களிலிருந்து வெளிப்படுவதாகவும், அதன் தொடர்ச்சியாகவே சிறீலங்கா அரசியல் வழமை இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களிடமும் இருந்து தான் வரும் என்பதையும், அநேகமாக வடபிரதேசத்தில் யாழ் வளைகுடாவிலிருந்தே வரும் என்பதையும் உணர்கிறேன். இதற்கு அடிப்படைக் காரணம் இந்தப் பகுதியில் வாழ்ந்தவர்கள் என்றும் கல்வி வளத்தில் குன்றியவர் அல்ல, எந்த இக்கட்டான நேரத்திலும் கல்வி மறுக்கப்பட்டவரோ, இடை நிறுத்தப்பட்டவரோ அல்ல.

என்னுடைய திடமான நம்பிக்கை, எந்தவொரு சாராரையும் கல்வி சார்ந்தோ, தொழில் சார்ந்தோ அல்லது வேறோர் துறை சார்ந்தோ உயர்த்திவிட முடியாவிடின், அது கற்பிப்பவரின் இயலாமையே என்பதேயாகும். இதை எனது தந்தை இவ்வாறு கூறியதாகக் கேட்டறிந்தேன் “கடைசி வாங்கிலில் இருக்கும் மாணவனை முன் வாங்கிற்கு கொண்டு வருபவர்தான் உண்மையான ஆசிரியர்”. போர்க்கால சூழலின் பின் இருக்கும் தமிழ் பிரதேச அமைப்பு, முற்றிலும் வேறுபட்டது. போர்க்காலத்தின் முன்னிருந்த சூழலில் இருந்தவர்களால் தற்போதைய சூழலை நிச்சயமாக சமாளிக்க முடியாது. அதற்காக முன்பிருந்த சூழலையே கொண்டுவர வேண்டும் என எண்ணுவதும், அது உடனே நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதும், அது நடக்காத பட்சத்தில், குறுகிய நேரத்தில் மாற்றுவழிகளால் நடைமுறைப்படுத்த எண்ணுவதும் தவிர்க்கப்பட வேண்டியவை.

போர்க்கால சூழலில் ஒன்றாக வாழ்ந்தவர்க்குத்தான், அந்த வாழ்க்கையின் அனுபவமும், தேவையும், அதை அணுகுவது எப்படி என்பதும் தெரியும். நான் கூறுவது ஆயுதம் தாங்கிய அணுகுமுறையல்ல. மனோரீதியான, சகோதரத்துவமான, புரிந்துணர்வான அணுகுமுறை. அந்தச் சூழலில் வாழ்ந்து பார்க்காத எந்த கற்றவர்க்கும் அந்த அனுபவத்தை பெற்றுவிட முடியாது. ஆகவே இங்கு அனுபவமே பாடமாக இருந்ததனால், அதை எவ்வாறு பயனபடுத்தப் போகிறோம் என்பதே நோக்காக இருக்க வேண்டும். கல்வி இல்லையே என்று ஒதுக்குவதல்ல.

ஒரு கட்சியின் வேட்பாளர்களின் தேர்தல் பிரச்சார அட்டைகளில், அவர்கள் கல்வி தராதரங்களை வட்டம் போட்டுக் காட்டியிருந்ததை முகநூலில் கண்டேன். இது நான் மேற்கூறியபடி பழைய சூழலில் வாழ்ந்தவரின் அல்லது அச்சூழலிலேயே வாழ விரும்புவர்களின் வாக்குகளைக் கவர்வதற்கான ஒரு வழி என எண்ணுகிறேன். அது அவசியமா என்பதும் அதற்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுப்பதும், அதைச் சார்ந்தே வேட்பாளரை தெரிவு செய்வதும் தற்போதைய சூழலில் மக்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்துவதுடன், எடுக்கவிருக்கும் முன்னேற்ற பாதையை இன்னும் பல வருடங்கள் பின் தள்ளும் என நினைக்கிறேன்.

தமிழ்ப்பிரதேசங்களில் இன்றைய அதிமுக்கிய தேவைகள் பல. அண்மைக்கால பாரளுமன்ற பேச்சுகள் பல இன்றைய தேவைகளை வலியுறுத்தின. இவற்றைப் பூர்த்தி செய்ய சகல மட்டங்களிலும், அதைப்புரிந்து கொண்டவர் மட்டுமல்ல, இணைந்து வேலை செய்யக்கூடிய பல தரப்பட்டவர்களுடைய சேவையும் அவசியம். அதற்காக அத்தனை பேரும் வேட்பாளராகப் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட வேண்டியதல்ல. உதாரணமாக யாழ் மேயர் பதவிக்கு சட்டத்தரணி ஆண்கள் போட்டியிடுகின்றனர். இன்றைய தமிழ்ப்பிரதேச பிரச்சனைகள் அதிகம் பெண்கள் சார்ந்ததாகக் காணப்படுகையில், அவற்றை நன்கு புரிந்து, அணுகி, செயற்படக்கூடிய பெண்தலைவர்களும், அவர்களுடன் ஒத்து இயங்கங்கூடிய ஆதரவான சக அங்கத்தவருமே அவசியம். இவர்கள் ஏனைய தேவைகளைப் பூர்த்தி செய்ய நல்லதொரு சட்டத்தரணியை வேலைக்கமர்த்திக் கொள்ளலாம். ஒரு கட்சியில் பெண் வேட்பாளர் ஒருவர் மாதர் சங்கத் தலைவியாக அனுபவம் பெற்றவர். எனது பார்வையில் அவரது அனுபவம் மக்களுக்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாயின், அவரே இக்காலகட்டத்திற்கு உகந்த பிரதநிதி. பெண்கள் கல்வியில் பின்தங்கி நிற்பது பற்றி இன்னோர் கட்டுரையில் எழுதுவேன்.

பெண்கள் பலருக்கு ஆளுமைத்திறமையும், சிக்கல்களை தீர்க்கும் ஆற்றலும், பிரச்சனையை மிகைப்படுத்த விடாமல் சமரசம் பேசும் ஆற்றலும் உண்டு. ஆகவே கல்வி தராதரங்களை மட்டும் அளவுகோலாகப் பயன்படுத்தாமல், தகுந்த திறமையான பெண் வேட்பாளரை தெரிவு செய்வதே இன்றைய காலகட்டத்திற்கு உகந்தது.

நன்றி

பகுதி 5 – தேர்தல் விஞ்ஞாபனம் பற்றியதாகும்

ஜானகி கார்த்திகேசன் பாலகிருஷ்ணன் – யாழ்ப்பாணத்தில் பிறந்து, கல்வி கற்று, 1981 வரை சிறீ லங்கா நீர்வழங்கல் வடிகால் சபையில் சேவையாற்றியவர். கடந்த 35 வருடங்களுக்கு மேலாக கனடாவில் வாழ்ந்து மின்பொறியியலாளராகப் பல வருடங்களாக பணியாற்றி வருபவர். இவர் கனடாவின் புதிய ஜனநாயகக் கட்சி சார்பில் சிறீ லங்காவிலிருந்து குடிபெயர்ந்த முதற் தமிழ் பெண்மணியாக டொன்மில்ஸ் பகுதியில் ஒன்ராறியோ மாநில சட்டசபைக்கான தேர்தலிலும், கட்சி சார்பற்று மாநகரசபைத் தேர்தலிலும் 1990 நடுப்பகுதியிலிருந்து 2000 தொடக்கம் வரை போட்டியிட்டவர். ஜானகி அமரர் கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் எனும் முந்நாள் அர்ப்பணிப்பான இடதுசாரி அரசியல்வாதியின் புதல்விகளில் ஒருவருமாவார்.