சிறையில் அடைக்கப்பட்ட சிறுவர்களும் தொழிலாளப் பெண்களும்

இதற்கு முன் முற்றிலும் ஆளுநரிடமும் படைத் தளபதிகளிடமும் ஆளுநரால் நியமிக்கப்பட்ட அதிகாரிகளின் கரங்களிலும் இருந்த அரசியல் அதிகாரங்கள் இப்போது மக்கள் பிரதிநிதிகளிடமும் செல்ல ஆரம்பித்தன. எனினும் பணம் படைத்தவர்கள் , கல்வி கற்றவர்கள், இன ரீதியிலான பிரதிநிதித்துவம் என நிபந்தனைகள் ஏற்படுத்தப் பட்டிருந்தன.

இதன்படி கொழும்பில் வசித்த பணம் படைத்த படித்த இலங்கையர்களுக்கும் இனரீதியாக இந்திய வம்சாவழியினருக்கும் மற்றும் முஸ்லிம்களுக்கும் அரசாங்க சபையியல் அதிகாரத்துவ நியமனங்கள் வழங்கப்பட்டன.

ஆரம்பத்தில் 1832 ஆம் ஆண்டில் கோல்புறூக் — கெமரன் அரசியல் நிர்வாக சீர்திருத்தத்துக்குப்பின் ஆளுநரின் தனி அதிகாரம் குறைக்கப்பட்டு கூட்டுப்பொறுப்பு ஆட்சி முறை உருவாக்கப்பட்டது . பின் நாடு ஐந்து மாகாணங்களாக பிரிக்கப்பட்டு பிரித்தானிய அரச அதிபர்களின் பரிபாலனத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. ஆளுநருக்கு ஆலோசனை வழங்க அரச நிறைவேற்று சபை மற்றும் 19 அங்கத்தவர்களைக் கொண்ட ஒரு சட்ட சபை ஆகியன ஏற்படுத்தப்பட்டன .

முன்பு சட்டசபையின் உத்தியோகப்பற்றற்ற அங்கத்தவர்களாக தோட்டத் துரைமார்கள் சமூகத்தை சேர்ந்த ஆங்கிலேயர்களே நியமிக்கப்பட்ட போதும் பின்னர் படித்த ஆங்கிலேய மோகம் கொண்ட மேட்டுக்க்குடி வர்த்தகர்களும் நியமிக்கப்பட்டனர் . இவ்விதம் நியமிக்கப்பட்டவர்கள் ஆரம்பத்தில் ஒரு சிங்களவர் , ஒரு தமிழர் , ஒரு பரங்கியர் என்று இடம் பெற்றனர்.

இக்காலத்தில்தான் ( 1833 ) டொக்டர் கிறிஸ்தோபர் எலியட் ( Dr.Christofer Elliot ) அவர்களின் தலைமையில் உள்ளூர் மக்களை பிரதிநிதித்துவப்படுத்த ‘ தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் ‘ தேவை என்ற கோரிக்கை பலமாக முன்வைக்கப்பட்டது. இவர் ஒரு எழுத்தாளராகவும் மருத்துவராகவும் இருந்ததுடன் “இலங்கையின் நண்பர்கள் ” என்ற இயக்கத்தையும் உருவாக்கியிருந்தார்.

இக்காலத்தில் சிங்கள தமிழ் முஸ்லிம் இனத்தவர் இடையில் நெருக்கமான ஒற்றுமை நிலவியது . இதனைத் தொடர்ந்து வாக்காளர்களை பதிவு செய்வதற்காக அவர்களுக்கென என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும் என்ற விதிகள் பிரகடனப்படுத்தப்பட்டது. வாக்காளராக பதிவு 21 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல், படித்தவராக இருத்தல், சொத்து ரூபா 6 ஆயிரத்துக்கும் மேல் கொண்டிருத்தல் அல்லது வருடாந்த வருமானமாக ரூபாய் 1500/= க்கும் மேல் கொண்டிருத்தல் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதனால் எல்லா இந்திய வம்சாவழியினராலும் தன்மை வாக்காளராக பதிவு செய்து கொள்ள முடியாமல் போனது. பின் வந்த காலத்தில் (1924 ) இலங்கையில் மொத்த இந்திய தமிழரின் சனத் தொகை ஒரு லட்சத்து 86 ஆயிரம் ஆகவும் தோட்டத் தொழிலாளர்களின் தொகை 6 லட்சமாகவும் இருந்த போதும் இவர்களில் வாக்காளர்களாக பதிவு செய்ய 12 901 பேர் மட்டுமே தகுதி பெற்றிருந்தனர்.

கொழும்பில் வாழ்ந்த வர்த்தகர்களும் , தோட்டத்துக் கங்காணிகளும் , தோட்ட உத்தியோகத்தர்களும் வாக்காளர்களாக பதிவு செய்து கொண்டனர் . எந்த தோட்டத் தொழிலாளியும் வாக்களிக்க தகுதி பெறவில்லை . இதன் பிரகாரம் 1924 ஆம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் இந்திய வம்சாவளியினர் சார்பில் 6 வேட்பாளர்கள் போட்டியிட்டனர் . அவர்கள் ஐ.எக்ஸ். பெரேரா , முகமட் சுல்தான் , கோ . நடே சய்யர் , எஸ். பி. ஷண்ட்ஸ் , ஐ . டேவிட் , ஆர். ஈஸ்வரமூர்த்தி ஆகியோராவர்.

இவர்களிலிருந்து ஐ. எக்ஸ் .பெரேரா முதலாவதாகவும் முகமட் சுல்தான் இரண்டாவதாகவும் சட்டசபைக்கு தெரிவாகினர் . எனினும் இதற்கு அடுத்த ஆண்டில் 1925 இல் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் கோ . நடேசய்யரும் தெளிவாக்கினார் . கோ . நடேசய்யர் கொழும்பு வாழ் இந்திய வர்த்தகர்கள் சார்பில் சட்டசபை அங்கத்தினராக தெரிவு செய்யப்பட்ட போதும் அவர் பெரும்பாலும் மலையகத்தில் தேயிலைத் தோட்டங்களில் துன்பப்படும் தொழிலாளர்கள் பற்றியும் அவர்கள் மீதான அடக்கு முறைகள் பற்றியும் அதிகமாக குரல் கொடுப்பவராக காணப்பட்டார் . கோ. நடேசய்யர் 1930ஆம் ஆண்டு வரை சட்ட சபையில் அங்கத்துவம் வகித்தார். அதன்பின் சட்ட சபை என்ற அமைப்பு அரசசபையாக மாற்றப்பட்டது.

1924 முதல் 1937 வரை இலங்கையின் அரசியல் வரலாற்றில் புதிய பல எழுச்சிகள் ஏற்பட்டன . பிரித்தானியாவில் தொழிற்கட்சியின் முன்னேற்றம் , மகாத்மா காந்தியை முதன்மையாகக் கொண்டு இந்தியாவில் எழுச்சி பெற்ற “சுதேசி ” இயக்கம், ரஷ்யாவில் ஏற்பட்ட 1917ம் ஆண்டின் அக்டோபர் சோசலிசப் புரட்சியை தொடர்ந்து எழுந்த சோஷலிச கம்யூனிச கருத்து முதல் வாதம் போன்றன இலங்கையின் அரசியல் போக்கிலும் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தின.

சேர். பொன் . ராமநாதன் , பொன் . அருணாசலம் சகோதரர்கள் , ஜி , எச். இசட் . பெர்ணான்டோ , டி. பி . ஜயதிலக்க , ஜோர்ஜ் . ஆர் .டி சில்வா , டி சொய்சா , Dr.லிசோபோ பின்டோ , ஐ . எக்ஸ். பெரேரா, ஜேம்ஸ் பீரிஸ் , விக்டர் கொரியா முதலானவர்கள் இக்காலத்தில் சமூக அரசியல் ரீதியில் அமைக்கப்பட்டிருந்த அமைப்புகள் , இயக்கங்கள் , தொழிற்சங்கங்கள் என்பவற்றுக்கு தலைமை தாங்கினார்கள் .

இவர்கள் புரட்சிகர தீவிரவாத சிந்தனையாளர்களாக மக்கள் மத்தியில் இடம் பிடித்திருந்தார்கள் . பல அரசியல் மற்றும் தொழிற்சங்க உரிமைகளை தமது போராட்டங்கள் மூலம் காலனித்துவ அரசாங்கத்திடமிருந்து வென்றெடுப்பதில் வெற்றி கண்டார்கள்.

எனினும் இந்த காலத்தில் இலங்கையில் அதிக செறிவான தொழிலாளர் தொகையைக் கொண்டிருந்த பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் குறிப்பிடத்தக்க பெரிய நன்மைகள் எதனையும் பெறவில்லை . இக்காலத்தில் இவர்களின் மீதான அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுப்பவர்களாக சேர். பொன் . அருணாசலமும் நடேசய்யருமாகவே இருந்தார்கள்.