சிலுவை சுமக்கக் கடமைப்பட்டவர்கள் யார்?

(எஸ்.கருணாகரன்)

தமிழ் அரசியல் கைதிகளை, அரசாங்கம் விடுவிக்க வேண்டும்” என்ற கோரிக்கையை முன்வைத்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள், தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்குக் காரணமாக இருந்த தூண்டல், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருக்கும் மதியரசன் கிருஷாந்தி என்பவர், பகிரங்கமாக எழுதிய ஒரு கடிதமாகும். தன்னுடைய சகோதரர் ஒருவர், அரசியல் கைதியாக அநுராதபுரம் சிறைச்சாலையில், வழக்கு விசாரணையை எதிர்கொள்வதில் சந்தித்து வரும் நெருக்கடிகளை வெளிப்படுத்தி, அந்தக் கடிதத்தை, மதியரசன் கிருஷாந்தி எழுதியிருந்தார்.

மிகவும் உணர்வு பூர்வமாக எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தில், தமிழ் அரசியல் கைதி ஒருவர் சந்தித்து வரும் நெருக்கடிகளையும் அநீதிகளையும் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், இது போன்றிருக்கும் ஏனைய அரசியல் கைதிகளின் நிலையையும், அவர்களுடைய குடும்பங்களின் கதியையும் விளங்கிக் கொண்டு, ஆதரவளிக்குமாறு கேட்டிருந்தார்.

இது, சகமாணவர்களிடேயே உணர்ச்சிக் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்த விவகாரத்துக்கு ஒரு நீதியான தீர்வு கிட்டும்வரையில், தாம் போராடுவதாக மாணவர்கள் அறிவித்துப் போராட்டத்தில் குதித்துள்ளனர். இது, இப்பொழுது மாணவர்களுடைய கற்றல் செயற்பாடுகளை முற்றாகவே பாதித்துள்ளது.

“இவை தவறான முடிவுகளாகும்”. இப்படிச் சொல்லும்போது, போராடுகின்ற மாணவர்களின் உணர்வையும் அவர்களுடைய சமூகப் பொறுப்பையும் அர்ப்பணிப்போடு நடத்துகின்ற போராட்டத்தையும் சரியாகப் புரிந்து கொள்ளாமல், மதிக்காமல் இப்படிச் சொல்கிறேன் என நீங்கள் எண்ணக்கூடும்.

போராடுகின்ற மாணவர்களின் உணர்வையும் சமூக அக்கறையையும் மிகமிக மதிக்கிறேன். மாணவர்களுடைய சமூக உணர்வுகள் பாராட்டுதலுக்குரியதே. அத்துடன், பாதிக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகளுக்கும் குடும்பங்களுக்கும் ஆதரவாகவே நாம் செயற்பட வேண்டும் என்ற கடப்பாட்டையும் வலியுறுத்துகிறேன்.

ஆனால், இந்தப் போராட்டத்தை மாணவர்கள் கையில் எடுக்க வேண்டியதில்லை; இது அவர்களுக்குரியதுமல்ல; இந்தப் போராட்டத்தை நடத்த வேண்டியது இந்த மாணவர்களல்ல. அதாவது, அவர்கள் இந்தப் பெரிய பாரத்தைச் சுமக்க வேண்டியதில்லை.

அவர்கள் இந்தப் போராட்டத்துக்கான ஆதரவை வழங்குவதே சரியானது. அத்தகைய ஆதரவை, அவர்கள் வழங்கியிருக்கிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு மட்டுமல்ல, இதற்கு முன்னரும் பல்வேறு போராட்டங்களை, மாணவர்கள் நடத்தியிருக்கிறார்கள். அதனால், பல நெருக்கடிகளையும் அபாயநிலைகளையும் அவர்கள் சந்தித்ததும் உண்டு.

எந்தப் பிரச்சினை தொடர்பாகவும் எந்தத் தரப்பும் போராடலாம். அது அவர்களுடைய உரிமையும் மாண்புமாகும். ஆனால், ஒரு போராட்டத்தை யார் பொறுப்பேற்பது என்பது முக்கியமானது. அந்தப் போராட்டத்தின் மூலம், எந்தத் தரப்புக்குக் கூடுதலான பாதிப்பு ஏற்படும் என்பது, அதையும் விட முக்கியமானது. அதைப்போல, போராட்டத்தை வெற்றியை நோக்கி முன்னெடுப்பதும் முக்கியமான ஒன்றே.

போராடும் தரப்புக்குப் பாதிப்பை உண்டாக்கும் விதமாக நடத்தப்படும் போராட்டங்கள், போராடுகின்ற தரப்பில் குழப்பங்களையும் பின்வாங்குதல்களையுமே உருவாக்கும். இதுதான், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் போராட்டங்களிலும் இன்று உருவாகியுள்ள நிலையாகும்.

இதனாலேயே, முழுமையான அளவில் மாணவர்களை ஒருங்கிணைத்துத் திரட்ட முடியாமலுள்ளது. ஒரு குறிப்பிட்டளவானவர்கள், தீவிரமாகப் போராட்டத்தில் ஈடுபடும்போது, இன்னொரு சாரார், அதை விட்டு விலகி நிற்கின்றனர். இந்த நிலைமை, இருசாராருக்கும் இடையில் முரண்பாடுகளையும் பகைமை உணர்வையும் ஏற்படுத்தும்.

தற்போதைய சூழலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவர்களையும் ஒருங்கிணைப்பதில் ஏற்பட்டிருக்கின்ற சிக்கல்களும் இவ்வாறான நிலைமைகளின் விளைவே. அத்துடன், இந்தப் போராட்டத்தை, பல்கலைக்கழகத்துக்கு வெளியே சமூகத்தோடும், பிற பல்கலைக்கழகங்களோடும் இணைத்து, விரிவாக்க முடியாதிருப்பதும் இதன் விளைவாகும்.

ஆகவே, முன்னெடுக்கப்படுகின்ற போராட்டத்தை, அதனுடைய சாதக, பாதக நிலைகளையும் மாணவர்களுடைய பங்கேற்பு, பங்களிப்பு, அவர்களுடைய வீச்செல்லை போன்றவற்றையும் மதிப்பீடு செய்து, முன்னெடுப்பது அவசியமானது.

இதற்குச் சரியான வழிகாட்டல்கள் அவசியம். இந்த வழிகாட்டல்களை, சமூகத்தின் பல்வேறு மட்டத்தினரும் செய்வது அவசியம். சில பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள், மாணவர்களோடு சேர்ந்து போராட்டங்களை முன்னெடுத்திருக்கிறார்கள்; போராட்டங்களுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள்; வழிகாட்டிகளாகச் செயற்பட்டிருக்கிறார்கள்.ஆனால், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அத்தகைய பாரம்பரியம் இல்லை.

தற்போதைய போராட்டம் மாணவர்களினால், அரசாங்கத்துக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது. இதில் கூடுதலான பாதிப்பு மாணவர்களுக்கே தவிர, அரசாங்கத்துக்கல்ல. இன்னொரு வகையில் சொன்னால், இது அரசாங்கத்துக்கு உள்ளூர மகிழ்ச்சியையே உண்டாக்கும்.

ஏனெனில், இந்தப் போராட்டத்தினால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும்போது, அவர்கள் தங்களுடைய படிப்பை முடித்து வெளியேறும் காலம் மேலும் தாமதிக்கப்படுகிறது. இதனால், படித்து முடித்தபிறகு, வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற நிலையில் இருக்கும் அழுத்தம் அரசாங்கத்துக்கு குறைகிறது.

இதொன்றும் மக்கள் நலனோம்பும் அரசாங்கம் கிடையாது. மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டால், அது இந்த நாட்டுக்கு ஏற்படும் பேரிழப்பு என்று சிந்திக்கக்கூடிய மாண்புடையவர்கள், இந்த நாட்டின் தலைமையிலும் இல்லை; பொறுப்புகளிலும் இல்லை.
ஆகவே, மாணவர்களுடைய கல்வி பாதிப்படைவதையிட்டோ, நாட்டுக்கு ஏற்படும் அறிவுத்துறை, ஆற்றல் வெளிப்பாட்டு வீழ்ச்சியைப் பற்றியோ அரசாங்கத்துக்குக் கவலைகள் கிடையாது. எனவேதான், போராடும் தரப்பினர் தங்களைக் கவனமாகக் கையாள வேண்டிய நிலையில் உள்ளனர்.

இதேவேளை, தமது ஆற்றலை வெளிப்படுத்தி, வினைதிறனுடன் செயற்பட வேண்டிய இளமைக்காலத்தின் ஒரு பகுதியை, இந்த மாணவர்கள் இழக்கின்றனர். இதனால், இந்த மாணவர்களுக்கு மட்டுமல்ல; சமூகத்துக்கும் இழப்புண்டாகிறது. இளைய தலைமுறையின் ஆற்றலை இழப்பதென்பது ஒரு சமூகத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும்.
கடந்த காலத்தில், போராட்டமும் போரும் நாட்டை விட்டு புலம்பெயர்வும் தமிழ்ச் சமூகத்தில் இளைய தலைமுறையின் ஆற்றலின் பங்களிப்பை மிகக் குறைவடையச் செய்திருந்தது.

ஆகவே இனியும் இளைய சமூகத்தின் ஆற்றலையும் வினைதிறனையும் மூளைப் பயன்பாட்டையும் தமிழ்ச்சமூகம் இழக்கக்கூடாது. அதிலும் பல்கலைக்கழக மாணவர்கள், உயர்கல்வியின் மூலமாக மேலும் பலவகையில் சமூகப் பயன்பாட்டுக்குரியவாறு செயற்பட வேண்டியவர்கள். அவர்களைப் பந்தயக் குதிரைகளாக்குவதோ பலியாடுகளாக்குவதோ பொருத்தமானதல்ல; அனுமதிக்ககூடியதுமல்ல.

இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டியவர்கள் அரசியலாளர்களே. அவர்களுக்கே முதன்மைப்பொறுப்புண்டு. ஒன்று, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இதை முன்னெடுத்திருக்க வேண்டும். அதற்கே மக்கள் வாக்களித்து, அதிகாரமளித்து, சபையேற்றியுள்ளனர்.

குறைந்த பட்சம், இந்தக் கைதிகளின் வழக்குகளை, விரைவாக விசாரணை செய்து முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஏற்பாட்டைச் செய்திருக்க வேண்டும். அடுத்தது, கைதிகளின் நியாயமான கோரிக்கையை ஏற்று, அநுராதபுரத்திலிருந்து, வவுனியா நீதிமன்றுக்கு விசாரணையை இடம்மாற்றி உதவியிருக்க வேண்டும்.

அரசாங்கத்தின் பாராமுகத்துக்கு நிகரான, கவனியாப் புறக்கணிப்பை எதற்காகக் கூட்டமைப்பு செய்துள்ளது என்று தெரியவில்லை.

அரசியல் கைதிகளின் விடுதலையோ, வழக்கு விசாரணைகளை வவுனியாவுக்கு இடமாற்றுவதோ சாத்தியமில்லை என்றால், கூட்டமைப்பு அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்களை நடத்தியிருக்க வேண்டும்.

அது தன்னுடைய ஆதரவாளர்களையும் தொண்டர்களையும் (உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், மாவட்ட, பிரதேச அமைப்பாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள்) சேர்த்துக் கொண்டு களத்திலிறங்கியிருப்பது அவசியம்.

தலைவர் சம்மந்தன் முதற்காலடியை வைத்து, முன்மாதிரியாக நடந்திருக்க வேண்டும். காந்தி தன்னுடைய முதிய வயதிலே, போராடும் மக்களுடன் நடந்தார். மக்களுக்காகச் சிறைகளிலே அடைக்கப்பட்டார்; மண்டேலாவும் அப்படித்தான்.

போராடிக் கொண்டிருக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் தமது போராட்டத்துக்கு ஆதரவளிக்குமாறு பகிரங்கமாகவே அழைப்பு விடுத்திருந்தனர். இந்த அழைப்பை ஏற்று பல அரசியற்கட்சிகளின் தலைவர்களும் மாணவர்களைச் சென்று சந்தித்து, தங்களுடைய ஆதரவைத் தெரிவித்திருந்தனர். உண்மையில், இந்தத் தலைவர்களே இந்தப் போராட்டத்தை முன்னெடுத்திருக்க வேண்டியவர்கள். அப்படி இவர்கள் போராட்டத்தை முன்னெடுக்கும்போது, இந்த மாணவர்கள் இவர்களுக்கான ஆதரவை வழங்கியிருக்க வேண்டும். இங்கே இது மாறியே நடந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ இதைக்கூடச் செய்யாமல், மாணவர்களின் அழைப்பைப் புறக்கணித்ததுடன், அதேநேரத்தில் எதிர்வரவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்த கூட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடத்தியுள்ளது. ரோம் எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்துக் கொண்டிருந்ததையும் விட மோசமான செயல் இது. மாணவர்களே சிலுவை சுமக்கக் கடமைப்பட்டவர்கள் என்று கருதிக் கொண்டு, போராட்டத்தை அவர்களின் மடியில் இறக்கி விட்டுத் தாமுண்டு, தம் வாழ்வுண்டு என்று இருப்பது நல்லதல்ல; அல்லது ஒரு நாள் ஹர்த்தால் போதும் என்று கருதிக் கொண்டிருக்கவும் முடியாது.

இந்தப் போராட்டத்தை அரசியல் கட்சிகள், அரசியல் ஆய்வாளர்கள், மக்கள் அமைப்புகள், அரச, அரச சார்பற்ற நிர்வாகத்தினர், அதிகாரிகள், புத்திஜீவிகள், மக்கள், மதத்தலைவர்கள் எனப் பலருமே இணைந்து முன்னெடுக்க வேண்டும். அதற்கு மாணவர்களின் ஆதரவைப் பெறலாம். அதுவே சரியானது.

மாணவர்கள் இந்தப் போராட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டியதில்லை. இதைக் கைமாற்றி உங்கள் தந்தையிடமும் தாயிடமும் ஆசிரியர்களிடத்திலும் உங்கள் தலைவர்களிடத்திலும் ஒப்படையுங்கள்; அவர்களுக்கு நீங்கள் ஆதரவாகச் செயற்படுங்கள்; அவர்களுக்குப் பலம் சேருங்கள். இந்த நாட்டின் விடுதலைக்கான ஆன்மாவாக இருங்கள். இது நீங்கள் அரசியலையும் போராட்டத்தையும் அறிந்து கொள்வதற்கு, வாய்த்திருக்கும் ஒரு நல்ல சந்தர்ப்பம்.