என் அன்புக்குரிய தோழர் எழுத்தாளர் ஓவியர் இயக்குநர் இளவேனில் ஆண்டுகள் முன்பு தமிழ் ஹிந்துவில் எழுதிய
சொல்லோவியத்திலிருந்து .
விஜயா கார்டனில் ஷூட்டிங்.
ஒரு தெலுகு பத்திரிகை நிருபர்
” ஒரே ஒரு கேள்வி?”
“கேளுங்க…” என்கிறார் சில்க்.
“கதாநாயகர்கள்கூட உங்கள் தேதிக்காகக் காத்திருக்கிறார்கள் என்கிற அளவுக்கு உயர்ந்துவிட்டீர்கள். உங்களுக்கு நிறைவேறாத ஆசை என்று ஏதாவது ஒன்றிருக்கிறதா?”
“ஒரு நக்ஸலைட் ஆகவேண்டும்!”
“என்னது!!!!???”
“ஒரு நக்ஸலைட் ஆகவேண்டும்!”
‘நக்ஸலைட் ஆக வேண்டுமென்றா
ஆசைப்பட்டீர்கள்…?’’
“ஆமாம். இன்னும் அந்த ஆசை நெருப்பாய்
உள்ளுக்குள் எரிந்துகொண்டிருக்கிறது !”
‘‘நக்ஸலைட் என்றால் என்ன தெரியுமா மேடம் ?
அவர்கள் யார் என்று உங்களுக்குத் தெரியுமா, மேடம் ?’’
பதைபதைத்த நிருபரைப் பார்த்தார் அமைதியாக.
விளங்கவில்லைபோலும் என்று நினைத்த நிருபர், தானே விளக்க முற்பட்டார் :
“நக்ஸலைட் என்றால் அரசாங்கம் தேடும் குற்றவாளி என்று அர்த்தம்!”
பெருமூச்சுடன் சில்க் மறுமொழிந்தார் :
“‘‘அரசாங்கத்தால் வாழ அனுமதிக்கப்பட்டிருக்கும்
நம்மைவிட, தேடப்படும் குற்றவாளிகள்
சுதந்தரமானவர்கள் என்று நினைக்கிறேன்…”
நிருபர் அதிர்ந்து பார்க்க, அருகே அமர்ந்திருந்த தோழர் இளவேனிலை சுட்டிக்காட்டிய சில்க் சொன்னார் :
“இவர் சொல்வார், பலவீனமானவர்கள்தான்
சர்வாதிகாரிகளை உருவாக்குகிறார்கள்.
சர்வாதிகாரிகள்தான் அப்பாவிகளைக்கூட
ஆயுதம் தூக்க வைக்கிறார்கள் என்று! “
“நீங்கள் சொன்னதையெல்லாம் அப்படியே பத்திரிகையில் பிரசுரிக்கலாமா?”
“உங்கள் சுதந்தரம் அனுமதிக்கும்வரை!”
மறுநாள் அவரது பெரிய ‘கவர்ச்சிப்படத்துடன்’
அந்த பேட்டி வெளியானது.
அதன் தலைப்பு என்ன தெரியுமா?
‘நக்ஸலைட் ஆகப்போகிறேன்.
சில்க் ஸ்மிதா சொன்ன
வேடிக்கைக் கதை !’
சில்க் ஸ்மிதா என்கிற
தோழர் விஜயலக்ஷ்மிக்கு அஞ்சலி!