வழக்கம் போல், சீன அரசாங்கம் உடனடியாக அனைத்து கட்சிகளையும் வெனிசுவேலா அரசமைப்பின் கட்டமைப்புக்குள் அமைதியான பேச்சுவார்த்தை மூலம் வெனிசுவேலா பிரச்சினையில் ஒரு அரசியல் தீர்வைப் பெற அழைப்பு விட்டிருந்தது. சீனா, தேசிய இறையாண்மை, சுதந்திரம், ஸ்திரத்தன்மை ஆகியவற்றை நிலைநிறுத்த வெனிசுவேலா அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை ஆதரிக்கிறது. ஏனெனில் சீனா எப்போதுமே மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடாத கொள்கைக்கு ஆதரவளிக்கிறது. இதன் காரணமாக, வெனிசுவேலாவின் விவகாரங்களில் சீனா வெளிநாட்டு குறுக்கீட்டை எதிர்க்கிறது என்பதுடன் இந்த சர்வதேச நெருக்கடிக்கு சர்வதேச சமூகம் கூட்டாக சாதகமான சூழ்நிலைகளை உருவாக்க முடியும் என்றும் நம்புகிறது.
இலத்தீன் அமெரிக்காவில் சீனாவின் ஈடுபாடு ஒரு மாறுபாடான முறையில் விரிவடைகிறது. அமெரிக்க அரசியல் அவதானி அரீயல் அர்மானி இந்நிலையை பின்வருமாறு குறிப்பிடுகின்றார், “ஒரு தசாப்த காலத்துக்குள் இலத்தீன் அமெரிக்க நாடுகளில், குறிப்பாக மெர்கோசூர் மாநிலங்களில், தொடர்ச்சியாகவே கணிசமான வர்த்தக பங்காளியாக சீனா இருக்கின்றது” குறிப்பாக, 2010இல், வெனிசுவேலாவின் எரிசக்தி உள்கட்டமைப்பு, வானூர்தி பயிற்சி, எண்ணெய் வழங்கல் உத்தரவாதங்கள், எண்ணெய் ஆய்வுக்கான வெனிசுவேலா-கூட்டு நிறுவனம் ஆகியவற்றுக்கான நிதியுதவியை சீனா வழங்கியிருந்தது. இது, அமெரிக்காவுக்கு மாற்றீடான ஒரு நிகழ்ச்சி நிரலின் வடிவமெனவே அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கெர்ரி டம்பாஹ், மார்க் சல்லிவன் சி.ஆர்.எஸ் அறிக்கை வாதிடுகிறது.
ஆனால், இலத்தீன் அமெரிக்காவிலும் கரீபியினிலும் சீனாவின் ஈடுபாடு மென்போக்கிலான அதன் பொதுவான கொள்கையின் ஒரு பகுதியாக உள்ளது என்பதுடன் அது உலகமயமாக்கலின் ஒரு பெரிய சூழலின் பின்னணியில் புரிந்து கொள்ளப்படவேண்டும். சீனாவின் நடப்பு ஒவ்வொரு பிராந்தியத்திலும், குறித்த நட்பு நாடு, மூலதனம் செய்யக்கூடிய துறை, முன்கூட்டியே மேற்கொள்ளப்பட்ட முன்கணிப்பு ஆகியவற்றால் மாறுபடுகின்றது. மேலும், இலத்தீன் அமெரிக்காவில் சீனாவின் ஈடுபாடு ஆபிரிக்காவில் அது கொண்டுள்ள ஒரு செயற்றிறன், ஆபிரிக்க நாடுகள் விரைவாக வளர்ந்து வரும் நிலையில் இருத்தல், என்பவற்றின் அடிப்படையில் பார்க்கும் போது, ஆபிரிக்காவுடன் ஒப்பிடும் போது இலத்தீன் அமெரிக்காவில் புவிசார் அரசியல் போட்டியில் அமெரிக்காவுடன் ஈடுபடுவதில் சீனா ஆர்வம் காட்டவில்லை என்பதையே காட்டுகின்றது.
வெனிசுவேலா பிரச்சினையில் சீனாவின் நிலைப்பாடு பின்வருமாறு தெரிந்துகொள்ளப்படலாம். முதலில், சீனா வெனிசுவேலாவில் நிச்சயமற்ற நிலைமையைத் தொடர்ந்து கவனிக்கின்றது. கொள்கையளவில், தேசிய இறையாண்மை, சுதந்திரம், ஸ்திரத்தன்மையை நிலைநிறுத்த வெனிசுவேலா அரசாங்கத்தின் முயற்சிகளை சீனா ஆதரிக்க வேண்டும். சீன செய்தித் தொடர்பாளர் வாதிட்டது போல், அனைத்து நாடுகளும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமை எனும் ஐக்கிய நாடுகள் சபையின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும், குறித்த நாட்டின் இறையாண்மை குறித்த குடிமக்களாலேயே நிறுவப்படமுடியும் என்பதுமே சீனாவின் கொள்கையாகும்.
இரண்டாவதாக, ஐக்கிய அமெரிக்கா நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தலையிடுவதை காட்டிலும், வெனிசுவேலாவில் ஸ்திரத்தன்மை, அபிவிருத்தியை ஊக்குவிக்கவும், அதன் மக்கள் நல்வாழ்வை மேம்படுத்தவும் சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் சர்வதேச சட்டத்தையும் அடிப்படை விதிகளையும் கடைபிடிப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதற்கு ஐக்கிய அமெரிக்காவுக்கு சீனா அழைப்பு விடுகிறது. ஆயினும் சீனா நேரடியாக ஐக்கிய அமெரிக்கத் தலையீட்டை தடுக்கவில்லை என்பது ஒரு புறம் இருக்க, மறுபுறம் வெனிசுவேலாவின் பிரச்சினையில் சீனாவும் ரஷ்யாவும் இணைந்து நகர்வது சாத்தியமற்றதாக இருப்பதாக நம்பப்படுகின்றது.
மூன்றாவது, சீனத் தலைவர்கள், வெனிசுவேலாவின் தற்போதைய அரசாங்கத்துக்குகு எதிராக நடவடிக்கை எடுக்க ஐக்கிய அமெரிக்கா உறுதியுடன் இருந்தால், சீனா உண்மையிலேயே மேற்கு அரைக்கோளத்தில் ஒரு மிகச் சிறிய பங்கையே வகிக்க முடியும் என்பதை நன்கு அறிந்துள்ளனர். அடுத்த மூன்று தசாப்தங்களில் சீனாவின் ஒட்டுமொத்த இலக்கின் அடிப்படையில், வெனிசுவேலா சீனாவின் நல்ல, முக்கியமான ஆற்றல் பங்காளியாகும் என்றாலும் கூட, அது சீனாவின் முக்கிய நலன்களுக்குள் இல்லை. எனவே, சீனா இந்த வெளிப்பாடால் ஏமாற்றம் அடைந்தாலும், சீனா ஒருபோதும் ஐக்கிய அமெரிக்கா, அதன் மேலாதிக்கத்தை இலத்தீன் அமெரிக்கா, கரீபியன் நாடுகளில் வெளிப்படையாக சவால் செய்யாது.
நான்காவதாக, ஐக்கிய அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், இலத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து தொடர்ச்சியாக குவைவுக்கு ஆதரவு இருந்தாலும் மதுரோ, அவரது ஆளும் கட்சி ஆகியவை சமமான அளவில் வெனிசுவேலாவில் ஆதிக்கத்தில் உள்ளமை மறுக்கமுடியாத ஒன்றாகும். இந்நிலையில், சர்வதேச சட்டம் மற்றும் இராஜதந்திர விதிமுறைகளை நிலைநிறுத்துவதன் மூலம், மதுரோவையும் அவருடைய அரசாங்கத்தையும் தொடர்ந்து ஆதரிக்க சீனா விரும்புகின்றது. எனினும், சீனாவை பொறுத்தவரை யார் தலைவராக இருந்தாலும் சரி என்னும் மென்பொக்கே கொள்கையளவில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலேயே அண்மைய வெனிசுலா சீன உறவுகள் பார்க்கப்படவேண்டியதாகும்