சமூகங்களுக்கு இடையிலான முரண்பாடுகளை, மதமுரண்பாடுகளாக மாற்றி, அதிலிருந்து பலன் அடையலாம் எனக் கனவு கண்டவர்கள் இருக்கிறார்கள். கல்முனையில் பௌத்த, இந்து ஒற்றுமை பற்றிப் பேசப்பட்டபோது, அதைச் சிலாகித்துப் போற்றியவர்கள் இருக்கிறார்கள்.
இன்னொரு சிறுபான்மைச் சமூகத்துக்கு எதிராகப் பெரும்பான்மை சமூகத்துடன் கூட்டுச் சேரும் சிறுபான்மைக்கு, என்ன நிகழும் என்பதைக் கன்னியாவின் சுடு தேநீர் காட்டி நிற்கிறது.
இலங்கையில் இன்னமும் உயிரோடு இருக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான வழிகளை நோக்கி நகர வேண்டும். ஈஸ்டர் தாக்குதல்கள், இலங்கையின் இனப்பிரச்சினையை இன்னும் சிக்கலான திசை வழியே நகர்த்தி உள்ளன; அதை மறுக்க இயலாது.
ஆனால், இலங்கை பல்லின பலமொழி பேசுகிற மக்கள் வாழுகின்ற நாடு என்பதை மறுதலிக்க இயலாதபடி, ஏற்றுக்கொள்ளச் செய்யப் போராடியேயாக வேண்டும். அதற்கான பரந்த தளத்திலான போராட்டம் தவிர்க்க இயலாதது.
பரந்துபட்ட ஒற்றுமையின் அடிப்படையில் அமைந்த போராட்டத்தை உருவாக்க இயலாமல், பல்வேறு தேசியவாத, மதவாத சக்திகள் போருக்கு பிந்தைய கடந்த பத்தாண்டுகளில் பாரிய தடைகளையும் திசைதிருப்பல் களையும் ஏற்படுத்தியுள்ளன. இதன் தொடர்ச்சியாகவே, கல்முனையில் கோரப்பட்ட பௌத்த, இந்து ஒற்றுமையையும் கன்னியா நிகழ்வுகளையும் நீராவியடிப் பிள்ளையாரையும் நோக்க வேண்டியுள்ளது.
ஒரு சமயப் பெரியவரின் மீது, சுடுதேநீர் ஊற்றப்பட்டமையானது, கண்டிக்கப்பட வேண்டியது. இதை யார் கண்டித்தாலும் கண்டிக்கா விட்டாலும் மதத் தலைவர்கள் என்று சொல்பவர்கள் கண்டித்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறான எந்த ஒரு குரலும் இங்கு எழவில்லை.
இலங்கையில் இந்துக்களின் உரிமைகள் பற்றிப் பேசுகிற யாரும் வாயே திறக்கவில்லை. கல்முனையில் பௌத்த, இந்து ஒற்றுமையைக் கோரிய குரல்கள் மௌனித்து இருக்கின்றன. மத நல்லிணக்கம் பற்றிப் பேசுகின்ற அமைப்புகள் அமைதி காக்கின்றன. இது இன்னொரு வகையான செய்தியையும் சொல்லிச் செல்கிறது.
கன்னியா விவகாரம் இப்பொழுது இந்து சமய விவகாரமாக மாற்றம் காண்கிறது; இது ஆபத்தானது. சம்பவத்தைத் தொடர்ந்து, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஒழுங்கமைப்பாளர்கள், இலங்கையில் இந்துசமய உயர்பீடம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்திருப்பதாகக் கூறினார்கள்.
தமிழ் மக்களது உரிமைப் பிரச்சினை, இந்துசமயப் பிரச்சினையாக வரும், இந்து சமய உயர் பீடம் ஒன்றை உருவாக்குவதன் தேவையை உணர்த்துவது போன்றதொரு மாயை கட்டமைக்கப்படுகிறது.
கல்முனையிலும் கன்னியாவிலும் நீராவியடியிலும் நடந்து வரும் நிகழ்வுகள், தமிழ் மக்களுக்கு எதிரான நிகழ்வுகள். அவற்றுக்கு மதச் சாயத்தைப் பூசி, குறுக்கித் தங்கள் நலன்களை நிறைவேற்றச் சிலர் முண்டியடிக்கிறார்கள். இதன் ஆபத்துகளை மக்கள் உணர்ந்திருப்பது அவசியம்.
உலக வரலாற்றில் மதம் முற்போக்கான திசைவழி செயற்பட்டதற்கான சான்றுகள் மிகக் குறைவு. மதமும் தேசியவாதமும் இணைந்த கலவையானது இவ்வளவு மோசமாகச் செயற்படும் என்பதைச் சிங்கள, பௌத்த பேரினவாதம் கடந்த நான்கு தசாப்தங்களாக எமக்கு அழகாக உணர்த்தியுள்ளது.
கறுப்பு ஜூலையின் கரிய நினைவுகளில் நாம் எமது வரலாற்றைத் தேடிப் படித்தாக வேண்டும். ‘எதிரிக்கு எதிரி நண்பன்’ என்ற சூத்திரத்தின் அபத்தத்தை இப்போதாவது நாம் விளங்க வேண்டும்.
பரந்துபட்ட மக்கள் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதன் மூலமே, தேசியவாத, மதவாத சக்திகளை ஓரம் கட்டமுடியும். இதன் மூலமே மக்களை ஒன்றிணைத்து, உரிமைகளை வென்றெடுப்பதற்கான திசையில் பயணிக்க முடியும். இதை இன்னொரு முறை, கன்னியாவில் ஊற்றப்பட்ட சுடு தேநீர் எமக்குக் கட்டமிட்டுக் காட்டியுள்ளது. ஒருவகையில் இந்தச் சுடு தேநீர் தந்த பாடம் கூட, ‘சுடலை ஞானம்’ தான்.
(Tamil Mirror)