(கருணாகரன்)
கோடை பிறந்தால் சூரியனுக்குக் கொண்டாட்டம். சூரியனுக்குக் கொண்டாட்டம் என்றால், நமக்குத் திண்டாட்டம். கொழுத்திக் கொண்டிருக்கிறது வெயில். அனலடிக்கிறது வெக்கை. வீட்டில் இருக்க முடியாது வெக்கை. வெளியிலும் திரிய முடியாது வெக்கை. பகலில் மட்டுமல்ல, இரவிலும் படுத்துறங்கவோ, ஒரு இடத்தில் ஆற அமர இருந்து, ஒரு காரியத்தைச் செய்யவோ முடியாது. வியர்த்துக் கொட்டிக்கொண்டேயிருக்கிறது. களைத்துச் சோர்ந்து விடுகிறது உடல். மின்விசிறியில் அல்லது ஏஸியில் தஞ்சமடையவேண்டும் போலிருக்கும். ஆனால், அது எல்லோருக்கும் எப்போதும் சாத்தியமானதா?. நீருக்கடியில் போய் மூழ்கிவிடவேண்டும் போலிருக்கும்.
வேலை செய்யுமிடங்களில், வீதிகளில், கடையில் என எல்லா இடங்களிலும் வெக்கை. யாரைப் பார்த்தாலும் வெயிலைச் சபிக்கிறார்கள். கோடையைத் திட்டுகிறார்கள். சூரியனை வசைக்கிறார்கள்.
“ச்சா என்ன வெயிலப்பா. தாங்கவே முடியல்ல. இன்னும் எத்தனை நாளைக்குத்தான் இப்பிடிக் கொழுத்தப்போகிறதோ” என்று சலித்துக்கொள்கிறார்கள். “ஊ…. என்ன வெக்கையடி…. தண்ணீருக்குள்ளே படுத்துக்கொள்ள வேண்டும் போலிருக்கு” என்கிறாள் தன்னுடைய தோழியிடம் ஒரு பெண். அந்தளவுக்கு வெக்கையும் வெயிலும் அனலாகத்தகித்துக் கொண்டிருக்கிறது.
இந்த வெயிலும் வெக்கையும் என்ன இப்போது, இந்த ஆண்டுதான் இப்படிக் கூடியிருக்கா? இல்லையே! ஒவ்ேவார் ஆண்டும் கோடை வருகிறது. ஒவ்வொரு கோடையிலும் வெயில் கொழுத்தியெறிக்கிறது. அப்போதும் இப்படித்தான் வெயிலையும் வெக்கையையும் மக்கள் சபிக்கிறார்கள். சப்பித்துப்புகிறார்கள்.
இருந்தாலும், இந்தமாதிரி வெயில், முன்னர் இருந்ததில்லை என்ற ஒரு எண்ணம் பலருக்குண்டு. ஏற்கெனவே இருந்ததை விட, வரவர வெயிலும் வெக்கையும் கூடிக் கொண்டிருக்கிறது என்று நம்புகிறார்கள். சனங்கள் இப்படி உணர்ந்து கொள்வதற்குக் காரணங்களும் உண்டு. அந்தக் காரணங்களே இங்கு நாம் கவனிக்கப்படவேண்டியவை.
ஏறக்குறைய முப்பது, முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பாக வந்த கோடைகளை நினைத்துப் பார்த்தால், அந்தக் கோடைகளுக்கும் இப்போதுள்ள கோடைகளுக்கும் இடையிலான வேறுபாடுகள் பெரிதாகத் தெரியும். அந்தக் கோடைகள் இத்தனை கொடியதாக யாரையும் வதைத்ததில்லை.
சரியாகச் சொன்னால், அன்றைய கோடைகளில் யாரும் இப்போதையைப் போல வதைபட்டதில்லை. அந்தக் கோடைகள், இனித்தன என்றே சொல்ல வேண்டும். அந்தக் கோடைகளை யாரும் சபித்துக் கொள்ளவில்லை. பதிலாக, அவற்றை அன்றிருந்தவர்கள் வரவேற்றனர். அதுதான் உண்மையும் கூட.
அப்படியென்றால், இன்றைய கோடை ஏன் கசக்கிறது? ஏன் நெருப்பாகச் சுடுகிறது? எதற்காக நாம் கோடையைத் திட்டிக் கொண்டிருக்கிறோம்?
அப்போதும் இப்போதும் ஒரே சூரியன்தான், ஒரே வானம்தான், ஒரே கோடைதான். அப்போதும் இப்போதும் ஒரே பூமியும் ஒரே பருவகாலமும்தான். ஆனால், அதை வரவேற்கும் நாங்கள்தான் மாறி விட்டோம். நமது வாழ்க்கைமுறை மாறிவிட்டது. நம்முடைய எண்ணங்களும் வாழ்வொழுங்கும் நம்பிக்கைகளும் மாறி விட்டன.
நமது உணவுப் பழக்கங்களும் பாவனைகளும் மாறி விட்டன. சூழலை நாங்கள் வைத்திருக்கும் முறைமை மாறி விட்டது. இதுதான் பிரச்சினையே தவிர, கோடையிலும் பருவ மாறுதல்களிலும் சூரியனிலும் பிழையோ பிரச்சினையோ கிடையாது.
முன்னர், கோடை என்றால் மோர் இருக்கும். அல்லது பழைய சோற்றுத்தண்ணீர் இருந்தது. அநேகமாக எல்லா வீடுகளிலும் கோடைப்பானமாக மோர் குடிக்கும் பழக்கம் இருந்தது. அது, நமது உடல் உணரும் வெக்கையைப் பாதியாகக் குறைத்துக் காட்டியது.
அப்படியே எல்லா வீடுகளிலும் சாப்பாட்டுடன் தயிர் கண்டிப்பாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டது. சில வீடுகளில் மூன்று வேளையும் தயிரைப் பயன்படுத்தினார்கள். கிழக்கு மாகாணத்திலும் வன்னியிலும் பழமும் சீனியும் சேர்த்துத் தயிரைச் சாப்பிடும் வழக்கமும் வேறு உண்டு.
சோற்றைத் தண்ணீர் ஊற்றி ஊறவைத்து, சின்ன வெங்காயத்தை வெட்டிப்போட்டுக் குடித்தார்கள். அந்தப் பழைய சோற்றைக் காலை உணவாக எடுத்துக் கொண்டதும் உண்டு. பனை ஒடியலில் செய்த பண்டங்களை உண்டனர்.
பங்குனி, சித்திரை மாதங்களில், நுங்கு ஒரு சிறந்த உணவாக இருந்தது. வெக்கையைத் தணிக்கும் அருமருந்து என்று நுங்கைச் சொல்லலாம். வெயில் வெக்கையினால் உடலின் தோலில் ஏற்படும் வரட்சியைத் தணிப்பதற்கு, நுங்கு நீரையும் களிம்பையும்தான் பயன்படுத்தினார்கள். அந்த நாட்களில் நுங்கு குடிக்காதவர்களே இல்லை எனலாம்.
குறிப்பாக சிறுவர்களும் பதின்பருவத்தினரும், நுங்கை விரும்பிக் குடித்தனர். பனை எப்பொழுதும் கோடை காலத்தில்தான் நுங்கைத் தரும். அப்படியேதான் பதனீரும் கள்ளும் கோடையில்தான் கிடைக்கும். வெப்ப வலயத்துக்கான இயற்கையின் கொடையாக, இயல்பான உற்பத்தியாக பனை மூலமான இந்தப்பானங்களும் நுங்கும் கிடைக்கும்.
பனங்கள்ளும் அருமையான குளிராகாரமாகப் பயன்படுத்தப்பட்டது. கள்ளை நாம் அருந்தலாமா என்று நீங்கள் கேட்கலாம். கள்ளை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தும்போதே, அது போதை தரும் மதுவாக மாறுகிறது.
நாம் சோடாவை அல்லது பழ ரசத்தைக் குடிப்பதைப்போல, குறிப்பிட்ட அளவோடு கள்ளைக் குடித்தால், அது உடலுக்குக் குளிர்ச்சியாக இருப்பதோடு ஆரோக்கியத்தையும் தரும். கள்ளையும் விட அருமையானதொரு பானம் பதனீர். பதனீரைச் சிறுவர்கள் கூடுதலாக விரும்பிக் குடித்தனர்.
இப்படித்தான் உணவுகளிலும் கோடையின் வெம்மையைத் தணிப்பதற்கேற்றமாதிரி, தேர்வுகளும் ஒழுங்குகளும் இருந்தன. நீர்ப்பூசனி, பூசனி தக்காளி, கீரை வகைகள், கெக்கரி, பீர்க்கு என மரக்கறிகள். விளை, பாலை, திருக்கை என மீன்கள்.
பருவகாலங்களுக்கு ஏற்றமாதிரி, உணவு வகையைப் பகுத்துத் தேர்ந்து கொள்ளும் வழக்கம் அன்றிருந்தது. சூழலில் கூட அந்தந்தப் பருவத்துக்கேற்ற வகையான உணவுப் பொருட்கள் கிடைத்தன. கவனிக்க வேண்டியது என்னவென்றால், அந்தந்தப் பருவத்துக்கு ஏற்ற உணவுகள் அந்தந்தச் சூழலில் கிடைத்தன.
இயற்கை அதற்கான ஒழுங்கமைப்பை உருவாக்கியிருந்தது. கடலில் கூட ஒவ்வொரு பருவத்துக்கும் ஏற்றமாதிரியே மீனினங்கள் பிடிபடும். பழங்களும் காய்கறிகளும் கீரை வகையும் கூட அப்படித்தான்.
பானங்கள், உணவுகளைப் போலவே, கோடைகாலத்துக்குரிய பழங்களும் இருந்தன. வத்தகைப்பழம், வெள்ளரிப்பழம், முலாம்பழம், அன்னாசி, பப்பாளிப்பழம், மாம்பழம், பலாப்பழம், திராட்சை, தோடை, எலுமிச்சை என ஏராளம் பழங்கள். இந்தப் பழங்கள் எல்லாமே கோடையில்தான் அதிகமாகக் கிடைக்கும்.
கோடைக்காகவே உற்பத்தியாகும் பழங்கள் அல்லது கோடைப்பழங்கள் இவை எனலாம். இந்தப் பழங்களின் சிறப்புக் குணம், இவற்றில் உள்ள உயிர்ச்சத்துக்களுக்கு மேலதிகமாக குளிர்மையைத் தரும் என்பதே. இவை உடலில் உள்ள வெப்பைத்தைக் குறைத்து, குளிர்ச்சியை உண்டாக்கும்.
காட்டு மரங்களில் கூட கோடை வரட்சியைத் தணிப்பதற்கான பழங்கள் இருந்தன. இது மனிதர்களுக்கு மட்டுமல்ல, கோடையில் பறவைகளுக்கும் மிருகங்களுக்கும் குளிர்ச்சியை உண்டாக்கிக் கொண்டிருந்தது.
கோடைகாலத்துக்கும் பொருத்தமான முறையிலேயே வீடுகளின் அமைப்பிருந்தது. பனை ஓலை, தென்னங்கிடுகு போன்றவற்றைப் பயன்படுத்தி அமைக்கப்பட்ட வீடுகள் கோடைக்கும் மாரி மழைக்கும் மிகப் பொருத்தமாக, இதமாக இருந்தன. இந்த ஓலை வீடுகளில் ஒரு அம்சமாக தலைவாசல்கள் இருந்தன.
வெளியிலிருந்து வரும் விருந்தினர்களை வரைவேற்பதற்கு மட்டுமல்ல, வீட்டிலுள்ளவர்கள் கோடைகாலத்தில் இருப்பதற்கும் தலைவாசல்களே பெரிதும் உதவின. தவிர, ஓட்டுக்கூரையினால் அமைக்கப்பட்ட கல் வீடுகள் கூட உயரமாகவும் விசாலமாகவும் கோடை வெப்பத்தைத் தணிக்கக்கூடியமாதிரி அமைக்கப்பட்டிருந்தன.
நாற்சார் வீடுகள் இதில் உச்சம். நாற்சார் வீடுகள் அல்லாதவையும் கூட பெரிய விறாந்தைகளைக் கொண்டனவாகவே கட்டப்பட்டிருந்தன.
இந்த விறாந்தைகள், காற்றை வாங்கக்கூடிய வசதியை அளித்தன. ஆனால், இப்போது அமைக்கப்படும் வீடுகள், மின்விசிறியை மட்டுமே நம்பிக்கட்டப்படுகின்றன. மின்சாரம் இல்லை என்றால் இன்றைய வீடுகள் வெறும் கல்லறையே.
உணவு, அருந்துகின்ற பானம், வீடு மட்டுமல்ல, உடைகளிலும் கூட கோடைக்கும் வெப்பத்துக்கும் ஏற்றமாதிரி, அவற்றைத் தாக்குப்பிடிக்கக்கூடிய மாதிரியே பயன்படுத்தப்பட்டன. பருத்தித்துணியாலான உடைகளே பெரிதும் பயன்படுத்தப்பட்டன. இந்த உடைகளின் வடிவமைப்புகளும் கோடையைத் தாக்குப் பிடிக்கக்கூடியவாறே இருந்தன.
இதைத்தவிர, வாழ்கின்ற சூழலில் மரங்களை நாட்டி, அவற்றைப் பராமரித்தனர் அன்றிருந்தோர். ஊரெங்கும் மரங்கள் நின்றன. நிழலில்லாத வீதிகளை அன்று காண்பது கடினம். இப்போது நிழலுள்ள வீதிகளைக் காண்பது அபூர்வம். வீட்டிலும் கூட ஏராளம் மரங்கள் நின்றன. மரங்கள் இல்லாத வீடுகளும் வளவுகளும் இல்லை எனலாம்.
தங்களுக்கு மட்டுமல்ல, தங்களுடைய பிள்ளைகள், பேரப்பிள்ளைகளுக்கும் கூட மரங்களை வைத்துப் பராமரித்தனர் நம்முடைய மூத்தோர்.
இவ்வாறே, வாழ்கின்ற இடங்களைச் சுற்றி நீர் நிலைகளையும் உருவாக்கிப் பராமரித்தனர். குளங்கள் இல்லாத ஊர்கள் அன்றில்லை. நீர் நிலைகளைப் பேணுவது அன்றைய வாழ்க்கையில் முக்கியமானதொரு பண்பாடாகும். ஒவ்வொரு கோடையிலும் அருகிருக்கும் நீர் நிலைகளை – குளங்களை – தூர் வாருவது ஊர் வழக்கமாக இருந்தது.
இப்படி, உணவுப்பழக்கவழக்கங்கள் உடைகள், வாழும் வீடு, சுற்றுச் சூழல் என எல்லாவற்றையும் தமது வாழ்க்கைச் சூழலுக்கு ஏற்றமாதிரியே ஒழுங்கமைத்திருந்தனர் அன்றைய மனிதர்கள். அனுபவ அறிவையும் இயற்கையோடிணைந்த பிடிப்பையும் கொண்டிருந்ததே, இதற்கு அடிப்படைக் காரணமாகும்.
இதனால்தான் வசதிகள் குறைந்த நிலையிலும் உடல் ஆரோக்கியத்தோடும் மன ஆரோக்கியத்தோடும் அவர்களால் வாழ முடிந்தது. இந்த வாழ்க்கையில், மனிதர்கள் மட்டுமல்ல சூழலும் நன்றாக, இயற்கையாக இருந்தது. அப்படி இயல்போடு இருந்த சூழலில் மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகள், பறவைகள், ஊர்வனகூட சிறப்பாக வாழக்கூடியதாக நிலையிருந்தது. இதுதானே இயற்கையின் சங்கிலி அமைப்பாகும். இன்று இந்த நிலை மாறிவிட்டது. இந்த நிலையை மாற்றியது வேறு யாருமல்ல, நாம்தான்.
இதனால் நேரடியாகவே நாம்தான் பாதிக்கப்பட்டிருக்கிறோம். நாங்கள் மட்டுமல்ல, விலங்குகள், பறவைகள், ஊர்வனவும் பாதிக்கப்படைந்துள்ளன. ஒட்டு மொத்தத்தில் இயற்கைச் சூழலும் இயற்கை அமைப்பும் பாதிப்படைந்துள்ளன. இதனால்தான், இன்று வெக்கை என்றும் வெயில் என்றும் வெள்ளம் எனவும் புயல் எனவும் கத்திக் கதறிக் கொண்டிருக்கிறோம். சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்காக ஏராளம் அமைப்புகள் உலகமெங்கும் உருவாக்கப்பட்டுள்ளன.
இதற்காக கோடிக்கணக்கான ரூபாய்களும் டொலர்களும் செலவழிக்கப்படுகிறது. சூழல் பாதுகாப்புத்தொடர்பாக கல்வி கூட புகட்டப்படுகிறது. ஆனால், அதனுடைய அடிப்படைகள் பேணப்படவில்லை. இவ்வளவுக்கும் கல்வி அறிவு குறைந்த நிலையிலிருந்த நம்முன்னோர்கள் இவை பற்றிக் கொண்டிருந்த அறிவும் விழிப்புணர்வும் இன்று கல்வியிலும் உலக அறிவிலும் முன்னணியிலிருக்கும் நமக்கில்லை.
அல்லது இவற்றைப் பற்றிய நேர்மையான, உண்மையான அக்கறையில்லாமல் இருக்கிறோம்.
இதன் நிமித்தமாகவே சூழல் வெப்பமடையத் தொடங்கியிருக்கிறது. நமது உடலும் மனமும் வெப்பமாகி வருகிறது. எதையும் நின்று நிதானமாகச் சிந்திக்க முடியாதவர்களாக மாறியிருக்கிறோம்.
மொத்தத்தில், உலகமே – பூமியே – வெப்பமயமாகி வருகிறது. பனிப்பாறைகள் உருகி வருகின்றன. கடல் நீரின் மட்டம் உயர்வடைந்து கொண்டிருக்கிறது. இது சூழலில் எதிர்பாராத பெரும் அனர்த்தங்களையும் எதிர் விளைவுகளையும் உண்டாக்கும் என, விஞ்ஞானிகளும் சூழலியலாளர்களும், அபாய மணிகளை அடித்துக்கொண்டிருக்கிறார்கள். இருந்தாலும் என்ன? நடக்கிறது நடக்கட்டும்.
நாம் அதற்குள் எப்படியே நம்முடைய காரியங்களைப் பார்த்துவிடுவோம் என்றே ஒவ்வொருவரும் இயங்கிக் கொண்டிருக்கிறோம்.
உலகத்தைப் பாதுகாத்து, நாம் வாழ்கின்ற சூழலைப் பராமரித்து, இயற்கையோடிணைந்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்ற பொதுநோக்கும் பொது விதியும் உருவாக்கப்பட வேண்டும். இதை ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு அரசும், ஒவ்வொரு நாடும், உலக அமைப்புகளும் கொண்டிருப்பது அவசியம். இல்லையென்றால் அபாயக்கத்திகள் எங்கள் கழுத்தில் விழுவது நிச்சயம்.
கொதிப்பு உயர்ந்து வரும்போது, அதன் முன்னே எதுவும் நின்று பிடிக்க முடியாது. இன்று அத்தகைய கொதிப்பு உயர்ந்து வந்திருக்கிறது. அதனுடைய அடையாளத்தையே கோடை எமக்கு உணர்த்துகிறது. கோடையை எதிர்கொள்வது ஒன்றும் கடினமானதல்ல.
அதற்கான முறையை நாம் உருவாக்கிக் கொண்டால், அது நமக்கு இனிக்கும். நாம் சிந்தித்துச் செயற்பட்டால், முறைப்படி காரியங்களைச் செய்தால், இயற்கைச் சமனிலையைப் பேணினால், எந்தக் கொதிப்பும் தணியும்.
என்று தணியும் இந்தக் கோடையும் கொதிப்பும் என்று ஏங்குவதை விட எப்படிக் கோடையை இனிப்பாக்குவது என்று சிந்திப்போம். அதுவே இதமான குளிரை நமக்களிக்கும்.