கோவிட் 19 உலகளாவிய நெருக்கடிக்கு இலங்கையும் விதி விலக்கல்ல. மனித குலம் ஒன்றிணைந்து போராடும் விவகாரம். நோய்த்தடுப்பு மருந்துகளை பெற்றுக் கொள்வதில் வறிய மூன்றாம் உலக மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டு வருவதாக உலக சுகாதார தாபனம் சுட்டிக்காட்டியுள்ளது. இலங்கை கோவிட் 19 சவாலை எதிர் கொள்வதில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றத்தை கண்ட நாடு எனினும் சமூக பொருளாதார சவால்களை எதிர்கொள்ளமுடியாத போது திசைதிருப்பல் வேலையாக இனமதவாதத்தை கருவியாக பாவிப்பது நாகரிகம் கலாச்சாரம் சமூக பொருளாதார வளர்ச்சிபற்றி பேசும் நாட்டிற்கு பொருத்தமானதல்ல இலங்கை சுதந்திம்பெற்றதாக கூறப்படும் இத்தினத்தில் இலங்கையின் சமூகங்களின் மானசீகமானதும் பௌதிக ரீதியானதுமான ஒற்றுமையின் அவசியம் பற்றிய பிரக்ஞை வேண்டும். அது இல்லாமல் இந்த நாடு உருப்படாது என்பது புரிய வேண்டும்.
கடந்த காலத்தை பற்றி பாரபட்சமற்ற மீள் மதிப்பீடு தேவை :
சமூகங்கள் ஒன்றின் மேல் ஒன்று மேலாண்மை செய்வதற்கான நிலைமைகள் சகிக்க முடியாதவை
மலையக தோட்டத் தொழிலாளர்கள் ஊதியம் உள்ளிட்ட ஜீவாதார நலன்கள்
இஸ்லாமிய மக்களின் மத நம்பிக்கைகள் உணர்வுகளை பொருளாயாத நடவடிகைகளை காயப்படுத்தாமல் இருப்பது . அந்நியப்படுத்தாமல் இருப்பது
தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் இனங்களின் வெற்றி தோல்வி பற்றிய சின்னங்களை திணிப்பது.
தொல்லியல் சம்பந்தமாக விஞ்ஞான பூர்வமற்ற மதமேலாதிக்கவாத சக்திகளிடம் தாரைவார்க்காமல் இருப்பது. நிலங்களை ஆக்கிரமிக்காமல் இருப்பது.
அதிகார பகிர்வ அடிப்படை கட்டமைப்பை பாதுகாப்பது மேம்படுத்துவது
நாடளாவிய அளவில் இனமதபால் சாதி பேதமற்ற சமூக பொருளாதார அபிவிருத்திக்கு ஒருங்கிணைந்து முயல்வது காலத்தின் தேவை.
அடிப்படை மனித உரிமைகள் இனசமூக நல்லெண்ணங்கள் இந்தநாடு எழுச்சிபெற அவசியமாவை.கடந்த காலத்தை பற்றி பாரபட்சமற்ற மீள் மதிப்பீடு தேவை. சமூகங்கள் நெருங்கி வருவதற்கு என்ன செய்யலாம் என்பது முக்கியமானது.
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை:
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை ஒருரயில் பாதையும் பிரமாணடமான வீதியும் அமைக்க இந்திய – இலங்கை ஒப்பந்தம் வடக்கு கிழக்கு மாகாணசபை காலத்திலேயே 1987,1988 இல் திட்டமிடப்பட்டது. ஆனால், இன்றைய யாத்திரையின் பிரதானிகள் அன்று வடக்கு-கிழக்கு இணைப்பு திருமலை தலைநகரம் இந்த பாதை எல்லாவற்றிற்கும் எதிரான பயங்கரவாதத்தின் பின்னால் நின்றர்கள்.
இன்று பொத்துவிலில் இருந்து தமிழ் பேசும் மக்களுக்காக யாத்திரை நடத்துவதென்பது கிழக்கில் கால போக விவசாயத்தையும், போதிய வளமில்லாத மீன்பிடித்தொழிலையும் சார்ந்துவாழும் மக்களை பாவித்து புலம்பெயர்தமிழ் யாழ்மையவாத கனவான்களின் கடைக்கண் கடாட்சத்தையும், தட்சணையையும் பெறுவது. இழந்த செல்வாக்கை மக்களின் அப்பாவித்தனத்தின் மீது மீள நிமிர்த்துவதற்கான எத்தனிப்பே.
கொஞ்ச நஞ்ச காலம் அல்ல. வரலாறு ழுமுவதும் 70 ஆண்டுகள் ஏமாற்று. ஆனால் 2010 வரையிலான இறுதி 3 தசாப்தங்களில் இரண்டு தலைமுறை அழிந்தது. ஆனால் அவர்கள் அலுங்காமல் நலுங்காமல் அதே வழமை போல மோசடி அரசியல் தங்கள் தனிப்பட்ட நலன்களை பாதுகாப்பதற்காக தெற்கின் ஆளும் வர்க்கத்துடன் அந்நியோன்னயமாக வைத்துக் கொண்டு சாதாரணமக்களின் வாழ்வை காலம்காலமாக காயடிக்கிறர்கள்.
துரத்தப்பட்ட முஸ்லிம்மக்கள் வடக்கில் மீள குடியேறட்டும் என்று பகிரங்கமாக சொல்லட்டும் பார்ப்பம்:
மலையக மக்களுக்கு இவர்களின் பிதாமகர்கள் செய்த வரலாற்று துரோகம், உடுத்ததுணியுடன் இசுலாமியர்கள் ஊரை விட்டு துரத்தப்பட்ட போது அதற்கு இன்றளவில் நியாயம் சொல்லும் வகையறாக்கள். எங்கே துரத்தப்பட்ட முஸ்லிம்மக்கள் வடக்கில் மீள குடியேறட்டும் என்று பகிரங்கமாக சொல்லட்டுபார்ப்பம்.
இந்த செப்படி வித்தைகள் வினோத உடை போட்டிகள் பற்றி மக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். மார்ச் ஜெனிவா மாநாடு முடிய அவர்கள் இதெல்லாம் சகசமப்பா என்று வழமைக்கு திரும்பி விடுவர்கள்.
ஆனால் இதில் பகடையாக உருட்டப்படும் கிழக்கு வடக்கு வறியமக்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. “பஞ்சமும் நோயும் நின் மெய்யடியார்க்கோ” என்பது போல் தான். தமிழர்களின் துரதிஸ்டம் மீண்டும் மீண்டும் சமூக பொருளாதார கரிசனையற்ற தலைமைத்துவங்கள்.
சமூகங்கள் ஒன்றின் மேல் ஒன்று மேலாண்மை செய்வதற்கான நிலைமைகள் சகிக்க முடியாதவை:
ஆனால் நாட்டில் ஜனநாயகம் மனித உரிமை சமூக பொருளதார உரிமைகள் பாதுகாப்பு சிங்கள தமிழ் முஸ்லீம் மலையக சமூகங்கள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான வரலாற்று அவசியம் எழுந்துள்ளது
சமூகங்கள் ஒன்றின் மேல் ஒன்று மேலாண்மை செய்வதற்கான நிலைமைகள் சகிக்க முடியாதவை. தமிழ் சிங்கள அதிகார ஆளும்வர்க்க சக்திகள் “அனுகூல சத்துருக்களாக” செயற்படுவது நாட்டை பாசிசத்தை நோக்கியும் இனவன்முறைகளை நோக்கியும் வழிநடத்துவதாகவே அமையும். திரும்ப திரும்ப இந்த விச சுழலில் மக்களை அகப்படுத்தி பேரழிவில் தள்ளாமல் சகிப்புதன்மை சமாதான சகவாழ்விற்கு முயலவேண்டும் இந்த கோவிட் 19 காலத்திலும் திருத்தம் வராவிட்டால் எப்போதும் திருந்த முடியாது.