இலங்கை சுமார் 350 வருடங்கள் அந்நியரின் காலனியாதிக்கத்துக்கு உட்பட்டு கிடந்தது. முதலில் போர்த்துக்கீசரின் 61 வருட ஆட்சி (1597 – 1658). பின்னர் ஒல்லாந்தரின் 156 வருட ஆட்சி (1640 – 1796). அதன் பின்னர் இறுதியாக பிரித்தானியரின் 133 வருட ஆட்சி (1815 – 1948).
ஒரு நாட்டைப் பொறுத்தவரை சுதந்திரம் என்பது அந்த நாட்டு மக்களின் தலையாய பொக்கிசமாகும். ஏனெனில் அடிமைகளாக இருக்கும் வரை எந்தவொரு மக்களுக்கும் நிம்மதியான வாழ்வு கிடைக்காது. ஆனால் சுதந்திர இலங்கையின் வரலாறு அவ்வாறான ஒரு நேர் கோட்டில் பயணிக்கவில்லை.
1948இல் பிரித்தானியர்கள் நாட்டின் பெரும்பான்மை இனமான சிங்களவர்களுக்கே சுதந்திரத்தை வழங்கிச் சென்றனர், அதனால் தமிழர்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை எனக் கூறி தமிழ்த் தலைமைகள் அன்றிலிருந்து இன்றுவரை சுதந்திர தினத்தை துக்க தினமாக அனுட்டித்து வருகின்றனர். அதுமாத்திரமின்றி, எந்த பிரித்தானியர் இந்த பிரித்தாளும் கொள்கையை நடைமுறைப்படுத்தினார்களோ, அந்த பிரித்தானியரிடமே எமக்கு உரிமை பெற்றுத் தரும்படி தமிழ் தலைமைகள் காலத்துக்கு காலம் இறைஞ்சியும் வந்திருக்கின்றன.
ஒரு வகையில் இலங்கைக்கு பிரித்தானியர் வழங்கிய சுதந்திரம் முழுமையானதல்ல என்பதும் உண்மைதான். இலங்கையர்களைப் பிரித்தாள்வதற்காக தமது ஆட்சிக்காலத்தில் தமிழ் பிரதேசங்களுக்கு அதிக கல்வி வாய்ப்பையும், அரச உத்தியோகங்களையும் வழங்கி பெரும்பான்மை சிங்கள மக்களைப் புறக்கணித்தார்கள் பிரித்தானியர். அதன் மூலம் தமிழ் – சிங்கள மக்களிடையே முரண்பாட்டை வளர்த்தார்கள். பின்னர் நாட்டை விட்டு வெளியேறும்போது சிங்கள முதலாளித்துவ வர்க்கத்திடம் ஆட்சியை ஒப்படைத்து, தமிழர்களைப் புறக்கணித்து பேரினவாத ஆட்சிக்கு அடித்தளம் இட்டுவிட்டுச் சென்றார்கள்.
பிரித்தானியர்கள் இலங்கையைப் பிளவுபடுத்துவதற்கு இன முரண்பாட்டை மட்டும் விதைத்துவிட்டுச் செல்லவில்லை. பெயரளவிலான சுதந்திரத்தை வழங்கிவிட்டு தமது அரசியல், பொருளாதார, இராணுவ வலிமையைப் பலப்படுத்திவிட்டே சென்றார்கள். ஆட்சிக்கு வந்த சுதந்திர இலங்கையின் முதலாவது ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பிரித்தானியரின் பிடி தொடர்வதை ஏற்றுக்கொண்டே ஆட்சியை நடாத்தியது.
ஆனால் 1956இல் பதவிக்கு வந்த பண்டாரநாயக்கவின் அரசும், அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த அவரது மனைவி சிறீமாவோ பண்டாரநாயக்கவின் அரசுமே பிரித்தானியரின் பிடியை படிப்படியாக அகற்றின. அவர்களது நடவடிக்கைகளுக்கு இடதுசாரிக் கட்சிகள் மட்டுமே உறுதுணையாக நின்றன. பண்டாரநாயக்க பதவிக்கு வந்ததும் முதல் செய்த வேலை திரிகோணமலையில் இருந்த பிரித்தானியரின் கடற்படைத் தளத்தையும், கட்டுநாயக்கவில் இருந்த அவர்களது விமானப்படைத் தளத்தையும் உடனடியாக நாட்டைவிட்டு வெளியற்றியதுதான்.
அதைத் தொடர்ந்து அவரதும், அவரது மனைவியினதும் ஆட்சியில்தான் பிரித்தானியரின் ஆதிக்கத்தில் இருந்த வங்கிகள், துறைமுகம், ஏற்றுமதி – இறக்குமதி, பெற்றோலியம், மலையகப் பெருந்தோட்டங்கள், இன்சூரன்ஸ், போக்குவரத்து, பாடசாலைகள் போன்ற நாட்டின் முக்கியமான துறைகள் தேசவுடமையாக்கப்பட்டன. இந்த நடவடிக்கைகளை ஏகாதிபத்திய சார்பு ஐ.தே.க. மட்டுமின்றி, தமிழ் தலைமைகளும் எதிர்த்தே வாக்களித்து வந்தன. பிரித்தானிய இராணுவத் தளங்களை அகற்றுமாறு பண்டாரநாயக்க உத்தரவிட்ட போது அவற்றை அகற்ற வேண்டாம் என பிரித்தானிய மகாராணி இரண்டாவது எலிசபெத்துக்கு தந்தி அனுப்பியவர்தான் தமிழரசு தலைவர் ‘தந்தை’ செல்வா!
இவ்வாறு ஒருபக்கத்தில் இலங்கையை பிரித்தானிய காலனியாதிக்கத்திலிருந்து விடுவிக்க எடுத்த நடவடிக்கைகளை எதிர்த்துக்கொண்டு, மறுபக்கத்தில் பிரித்தானியர் தமிழர்களுக்கு சுதந்திரம் வழங்கவில்லை என கூப்பாடு போடுவதும், அவர்களிடமே தமிழர்களின் உரிமைகயைப் பெற்றுத் தருமாறு கோருவதும் பித்தலாட்டம் அல்லாமல் வேறு என்ன? அதுமட்டுமல்லாமல் இவர்களது முன்னுக்குப் பின் முரணான செயல்பாடுகளுக்கும் பல உதாரணங்கள் உண்டு.
இலங்கை சுதந்திரம் அடைந்தபொழுது பிரித்தானியரான சோல்பரி பிரபு வரைந்த அரசியல் அமைப்பே நடைமுறையில் இருந்தது. அதை எதி;த்துத்தான் தமிழ் தலைமைகள் துக்க தினம் அனுட்டித்தனர். பின்னர் 1972 சிறீமாவோ பண்டாரநாயக்க அரசு 1972இல் சோல்பரி அரசியல் சட்டத்தை நீக்கிவிட்டு, பிரித்தானிய முடியரசுடன் இருந்த தொடர்பை முறித்துக்கொண்டு, புதிய குடியரசு அரசியல் யாப்பைக் கொண்டு வந்தபோது, இதைவிட சோல்பரி அரசியல் யாப்பில் தமிழர்களுக்கு அதிக பாதுகாப்பு இருந்தது எனச் சொல்லி குடியரசு தினத்தைப் பகிஸ்கரிக்கத் தொடங்கின தமிழ்த் தலைமைகள். ஆனால் 1978இல் ஜே.ஆர்.ஜெயவர்த்தன நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை கொண்ட எதேச்சாதிகார அரசியல் யாப்பைக் கொண்டுவந்த பொழுது அதை மௌனமாக ஏற்றுக் கொண்டனர்.
அதேபோல சுதந்திர தினத்தையும், தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்றவர்கள் இப்பொழுது தமிழிலும் தேசிய கீதம் இசைக்க வேண்டும் என்கின்றனர். அதுமாத்திரமின்றி, ஐ.தே.க. ஆட்சியின் பொது யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஒரு மேதின ஊர்வலத்தில் சம்பந்தன் ரணில் விக்கிரமசிங்கவுடன் சேர்ந்து தேசியக் கொடியை உயர்த்திப் பிடிக்கிறார்.
எனவே தமிழ் தலைமைகளின் சுத்துமாத்து அரசியலுக்கு எடுபடாமல் இலங்கையில் வாழ்கின்ற தமிழ் மக்களும் ஏனைய இன மக்களுடன் சேர்ந்து சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதே நியாயமும் சிறப்பும் ஆகும். அதை விடுத்து இலங்கை அந்நியரிடமிருந்து சுதந்திரம் பெற்ற நாளை பகிஸ்கரித்து துக்கதினம் கொண்டாடிக்கொண்டு, தமிழர்களுக்கு சிங்களவர்களிடமிருந்து சுதந்திரம் வேண்டும் எனக் கோருவது அடிப்படையில் முரண்பாடானது மட்டுமின்றி, சுதந்திரத்தின் அர்த்தம் என்ன என்பதை விளங்கிக் கொள்ளாத செயலுமாகும்.