சுரேஷ் பிரேமச்சந்திரனும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பும்

(அபிமன்யு)
“தமிழரசுக் கட்சியுடன் இனியும் சேர்ந்து இயங்க முடியாது; அவர்கள் சின்னத்தில் போட்டியிட முடியாது” என்று ஈபிஆர்எல்எவ் கட்சியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் மிகவும் காட்டமாகத் தெரிவித்துள்ளார். தனது முடிவிற்குக் காரணமாக “புதிய அரசியல் சாசனம் தொடர்பில் வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி போன்ற விடயங்களில் தமிழரசுக் கட்சி எடுத்த முடிவு தவறானது; அதனால், தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுக்க புதிய முன்னணியில், புதிய தலைமை தேவை” என்று கூறியிருக்கின்றார்.

அவரின் நிலைப்பாடுகளும், அவர் கூறும் காரணங்களும், பேச்சுக்களும், அறிக்கைகளும், “தேர்தல்களில் எப்படியாவதுமக்களை உசுப்பேற்றி வெற்றிகளை எய்திட வேண்டும்; மக்கள் நலன் எனப் பேசுவதெல்லாம் அதற்காக அவர் அணிந்து கொள்ளும் முகமூடியே. இத்தகையமுகமூடிகள் அவருக்கு ஒன்றும் புதிதல்ல”என்று பொதுவாக உதாசீனம் செய்து விட வேண்டியவை.

எனினும், அவற்றிற்குப் பின்னால் தமிழ் அரசியல் தகிடுதத்தங்களும், தமிழர்களின் இன்னல்கள் தீராது மேலும் அவல நிலைகளுக்குத் தள்ளப்படும் சாத்தியக்கூறுகளுமே காணக்கூடியவையாக இருப்பதனால், அதனைப் பற்றிச் சிந்திப்பது அவசியமாகிறது.
“புதிய முன்னணியில், புதிய தலைமைதேவை”என்கிறார்.—-‘புதிய முன்னணி’என அவரைப் போலவே நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களைப் பேசியே அரசியல் நடாத்தும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மற்றும் ‘அரச படையினரை யாழ்ப்பாணத்திலிருந்து திரும்பப் பெற பல்லாயிரம் சவப்பெட்டிகளை அனுப்புங்கள்’ என்று பாராளுமன்றத்தில் ‘வீரம்’கக்கிய ‘குதிரை’ கஜேந்திரன் போன்றோரைக் கொண்ட ‘புதிய முன்னணி’யைக் குறிப்பிடுகின்றாரா?‘புதிய தலைமை’என சுயபடோடபமாகத் தன்னையும் சேர்த்து, வடக்கு மாகாண முதலைமைச்சராக மக்களால் அமோகமான எதிர்பார்ப்புகளுடன் தேர்ந்தெடுக்கப்பட்டும், எது வித காத்திரமான பலன்களையும் அளிக்காத, எதுவித இன்னல்களையும் நீக்காத, நிர்வாகத் திறமையற்ற, வடமகாண சபையை வினைத்திறனற்றதும், ஊழல்கள் நிறைந்ததுமாக நடாத்தும் ‘பெருமை’ வாய்ந்த, பதவிப் போதை கொண்டுள்ள முதலமைச்சர் சிவி விக்னேஸ்வரனின் ‘புதிய தலைமை’யைக் குறிப்பிடுகின்றாரா?

‘புதிய அரசியல் சாசனம் தொடர்பில் தமிழரசுக் கட்சி எடுத்த முடிவுதமிழரசுக் கட்சியின் கருத்துக்கள்’என்று அவர் கூறுவதிலேயே ஒரு அடிப்படைத் தவறு இருக்கின்றது. புதிய அரசியல் சாசனம் பற்றிய பேச்சுவார்த்தைகளில் இரா. சம்பந்தன், சுமந்திரன் ஆகியோரின் பங்களிப்புகள், தமிழரசிக்கட்சியின் தலைவர்கள் என்ற கோதாவில் அல்ல;அவர்களைத் தமது பிரதிநிதிகளாகத்தமிழ்மக்கள் பாராளுமன்றத்திற்கு அனுப்பியது, தமிழரசுக் கட்சியின் சார்பாக அல்ல. புளொட், ரெலோ, அவரது ஈபிஆர்எல்எவ் மற்றும் தமிழரசுக் கட்சி ஆகிய தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து ‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு(ரிஎன்ஏ)’ என்ற அமைப்பின் பெயரில்தான் போட்டியிட்டுப்பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்கள். எனவே அவர்களது முடிவும், கருத்துக்களும்தமிழரசுக் கட்சியினது மட்டுமே எனக் கொள்ள முடியாது; அவை ரிஎன்ஏ இனதாகும். இதுவரை புளொட்டும், ரெலோவும் அந்த முடிவுகளும், கருத்துக்களும் தங்களுக்கு ஏற்புடையதல்ல எனக் கூறவில்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.

இரா. சம்பந்தன், சுமந்திரன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோரிடான சுரேஷ் பிரேமச்சந்தரனின் நெருடல்கள் இப்பொழுதான்ப  புதிய அரசியல் சாசனம் பற்றிய அவர்களது கருத்துக்கள் வெளிவந்த பின்னர்தான்—ஆரம்பமாகவில்லை. அவர் சென்ற பாராளுமன்றத் தேர்தலில் தோற்றுத் தனது பாராளுமன்றப் பதவியை இழந்தபோதே, அத்தேர்தலில் சுமந்திரன் வெற்றி பெற்றபொழுதே, ஆரம்பமாகி விட்டது. ரிஎன்ஏயில் மற்றைய கட்சித் தலைவர்களை விட, இரா. சம்பந்தனுக்கு அடுத்ததாக தானே முக்கியத்துவம் கொண்டவர் என எண்ணிக் கொண்டிருந்த அவருக்கு, இரா சம்பந்தனால் சுமந்திரன் முக்கியப்படுத்தப்பட்டமையைச் சகித்துக் கொள்ள முடியவில்லை.

ஆனால், சுமந்திரன்‘தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளிலும் பேசும் வல்லமை கொண்டவர்’;‘சிங்களமக்களின் தலைவர்களுடனும் உரையாடக்கூடியவர்;‘இப்போதைய அரசியல், சர்வதேச யதார்த்தங்களை விளங்கிச் செயற்படக்கூடியவர்’என்ற வகையில் தகுதியானவர் எனக் கருதி, தன்னை விடுத்து சம்பந்தன் அவர்கள் சுமந்திரனை முன்னிலைப்படுத்தியதும் சுரேஷ் பிரேமச்சந்திரனின் கோபத்தை அதிகரித்தது.‘இரா. சம்பந்தனுக்கு வயதாகி விட்டது, அவர் மரணமடைய நேரிட்டால் அந்தப் பதவி தனக்குக் கிடைக்க வேண்டும்’ என்ற நோக்கத்தில் காய்களை நகர்த்தி வந்தவருக்கு இது பெரிய ஏமாற்றமாகி விட்டது;. சம்பந்தன் தலைமையின்மீதான அவரது கோபாவேசம், அவருக்கு எதிரான பல அறிக்கைகளை வெளியிட வைத்தது.

‘பரவாயில்லை! பிரேமச்சந்திரன் வெளியில் சென்று உள்ளுக்குள் அசிங்கம் செய்வதை விட, உள்ளுக்குள் இருந்தே தனது அசிங்கங்களைச் செய்து விட்டுப் போகட்டும்’ என்ற பாணியில் அவரின் எரிச்சலூட்டும் நடவடிக்கைகள் பற்றி சம்பந்தன் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. தனது கரைச்சல்களைத் தாங்க முடியாமல், சம்பந்தன் கீழிறங்கி வருவார்;. தனக்கு முன்னிலை வழங்குவார் என்ற சுரேஷ் பிரேமச்சந்திரனின் கணக்கு எடுபடவில்லை. ஆனால், ‘இனிப் போதும் இந்தத் தொல்லை’ என்று தன்னை ரிஎன்ஏயிலிருந்து கழட்ட முற்படும் முயற்களை உணர்ந்த பிரேமச்சந்திரன், ‘நான் கழட்டப்படும் முன்னர் நானே கழன்று விடுவோம்’ என நினைத்துக் கொண்டு விட்டார். அத்துடன், தனது முடிவிற்குக் காரணம் அரசியல் சாசனம் சம்பந்தமானதுதான் என்றால் தமிழ் மக்கள் நம்பிவிடுவார்கள், தேர்தலில் வாக்குகளைப் பெற வசதியாக இருக்கும் என்றும் அவர் எண்ணியதுதான் ரிஎன்ஏயிலிருந்து அவர் விலகுவதற்கான காரணங்கள்.

‘தமிழ் ஈழந்தான் தமிழர்களுக்கான விடிவு’என்ற நோக்கிலிருந்து விலகி, அன்றைய யதார்த்தங்களை மனதில் கொண்டசரியான முடிவான இந்தியா- சிறீலங்கா ஒப்பந்தத்தின் அடிப்படையிலான, இலங்கையின் ஒற்றை ஆட்சியின் கீழான 13ம்திருத்தத்தை ஒரு ஆரம்பமாக ஏற்றவர்சுரேஷ் பிரேமச்சந்திரன்.;.இப்பொழுது, சமஷ்டி அடிப்படையில் இல்லாத புதிய அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறுவது வேடிக்கையானதும், பொய்மையானதும், பாசாங்குத்தனமானதுமானதும் ஆகும்.

சுரேஷ் பிரேமச்சந்திரன் அவர்கள், இப்பொழுது அவர் வெறுக்கும் தமிழரசுக் கட்சியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட தமிழர் தேசியக் கூட்டமைப்பில் பல ஆண்டுகளைகத் தன்னை இணைத்துக் கொண்டவர்; தனது தன்னிகரில்லாத் தலைவர் பத்மநாபாவையும், அவரது தோழர்களையும் இந்தியாவிலும், கணக்கற்ற ஈபிஆர்எல்எவ் போராளிகளையும், ஆதரவாளர்களையும் இலங்கையிலும் படுகொலை செய்த புலிகளின் வால்களில் தொங்கிக் கொண்டுதனது பிழைப்பை நடாத்தியவர்; ஈபிஆர்எல்எவ்இன் அடிப்படைக் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் உதறித் தள்ளி, கடந்த தேர்தல்வரை பாராளுமன்றச் சுகபோகங்களை அனுபவித்தவர். தனது தேர்தல் வெற்றிகளை உறுதி செய்து கொண்டு பாராளுமன்றச் சுகபோகங்களையும், வருமானங்களையும் அவர் அனுபவித்ததைத் தவிர—வெற்றுக்கோஷங்களையும், வாய்ச்சவடால்களையும், அவ்வப்போது விடும் அறிக்கைகளையும் தவிர–தமிழ்மக்களுக்கு எதுவித பலன்களையும் பெற்றத்தராதவர்;. தனது பதவி வேட்கைக்காக தமிழர்களை உபயோகிப்பவர்.இவரா?, இனியா பெற்றுத்தரப்போகின்றார்? எங்கள் அரசியல் அபிலாஷைகளை என்பது தமிழ் மக்களின் முன் நிற்கும் நியாயமான கேள்வியாகும்.

‘வடக்கு கிழக்கு இணைப்பு, சமஷ்டி, சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை உள்ளடக்காகாத புதிய அரசியல் சாசனைத்தை நிராகரிக்க வேண்டும்’ என்று கூறுபவர்களிடம் தமிழ் மக்கள் இக்கால கட்டத்தில் எழுப்ப வேண்டிய இன்னொரு முக்கியகேள்வி, “நல்லது!, மிகவும் நல்லது!!- சரி!, அவற்றை இன்றைய சர்வதேச மற்றும் இலங்கை அரசியல் யாதார்த்தங்களுக்கு மத்தியில் எங்ஙனம் எமக்கு அவற்றைப் பெற்றத் தரப் போகின்றீர்கள்?” என்பதாகும்.

சமஷ்டி மட்டும் ஏன், வடக்கு- கிழக்கு இணைந்த ஒரு தனிநாடு கிடைக்குமானால், அதனை வேண்டாம் என்றா தமிழ் மக்களில் அதிகப் பெரும்பான்மையோர் சொல்லப் போகின்றார்கள்?.. அதற்காகவே ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தை அவர்கள் ஆதரித்தவர்கள் என்பது உண்மைதான். . ஆனால், காலம் மாறி விட்டது. விருப்பு என்பது வேறு, யதார்த்தம் என்பது வேறு; உணர்வு என்பது வேறு, அறிவு என்பது வேறு.

‘தமிழீழம் என்ற தனிநாட்டிற்கான போராட்டம் சிதறுண்டு போனது, தமிழ் மக்கள் எதிர்பார்ப்பது, ஏற்றுக்கொள்வது, நிராகரிப்பது’, ஆகியவை சம்பந்தமான வாதப்பிரதிவாதங்களைச் சற்று விட்டுவிட்டு, நிலைமையை அறிவுபூர்வமாக அணுக வேண்டியது, காலத்தின் அவசியத் தேவையாகும். பிரச்னைகளைப் பற்றியே பேசிக் கொண்டிராமல், அவற்றிற்கான தீர்வுகளை அலசி, ஆராய்ந்து நடைமுறைச் சாத்தியமான—மக்களை மேலும் படுகுழிகளுக்கும், பாரிய அவலங்களுக்கும் இட்டுச் செல்லாத—பாதைகளைத் தேர்ந்தெடுத்து, தம்மை அர்ப்பணித்து, அவற்றிற்குத் தலைமை தாங்கி அவற்றை நோக்கி மக்களை ஈடுபடுத்தியும் வழிநடாத்தியும் செல்வதுதான் உண்மையான, நேர்மையான தலைவர்களின் இலட்சணம்.

ஜனநாயக ரீதியாக, புதிய அரசியல் சாசனத்தில் உள்ளடக்கப்பட்ட எந்த முன்மொழிவுகளும், சிங்கள மக்களின் பெரும்பான்மையோரால் ஏற்றுக் கொள்ளப்பட்டால்தான் அவை நடைமுறைக்கு வர முடியும். –இதுதான் இன்றைய யதார்த்தம்.‘சமஷ்டி’ என்றால், ‘இணைந்த வடக்கு-கிழக்கு’ என்றால், அது இலங்கை பிளவுபடுவதற்கான ஆரம்பமே என்ற தவறான எண்ணம் சிங்கள மக்கள் மத்தியில் நிலை பெற்று விட்டது.அவர்களின் எண்ணங்களை மாற்றாமல், அவற்றிற்கான எதுவித செயற்பாடுகளையும் மேற்கொள்ளாமல், இனமுரண்பாடுகளை முன்னிறுத்தியே அரசியல் அதிகாரங்களையும், பதவிகளையும் எய்தும் நோக்கில் செயற்படும் இக்கால கட்டத்தில் அவைசாத்தியமானவை அல்ல.

திருகோணமலையை தலைநகராகக் கொண்ட வடக்கு- கிழக்கு இணைந்த மாகாண சபை, 1987ம் ஆண்டு இந்திய –இலங்கை ஒப்பந்தத்தின் கீழ் ஏற்பட்டதுதான்; அதற்கு அக்காலகட்டத்தில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் தலைவர்களின் அனுசரணையும், ஆதரவும் இருந்ததுதான். இப்பொழுது அதுவல்ல நிலைமை. முஸ்லிம் மக்களின் ஆதரவில்லாமல் வடக்கு-கிழக்கு இணைப்பைப் பேசுவது வெற்றுப் பேச்சன்றி, வேறொன்றுமில்லை!. வெற்றுப் பேச்சுக்களுக்கான நேரமல்ல இது?

இந்த நிலமையில், ‘சமஷ்டியும், வடக்கு-கிழக்கு இணைப்பும் வேண்டும், அவற்றை உள்ளடக்காத புதிய அரசியல் வேண்டாம்’ என்பவர்களிடம், அவற்றைத் தமிழ்மக்கள் அடைய, அவற்றைத் தமிழ்மக்களுக்கப் பெற்றுத்தர, குறிப்பாகவும், திட்டவட்டமாகவும் என்ன வழிகள்? என்று தெரிவுக்கும்படி தமிழ் மக்கள் அவர்களை நேரடியாகக் கேட்க வேண்டும். அவர்களைத் தேர்தல்களில் வெற்றி பெற வைத்துவிட்டால் அவற்றை நாம் எய்திட முடியும் என யாராவது நம்பினால் அது மதி கெட்டமையின் வெளிப்பாடு என்றுதான் கொள்ள வேண்டும். அவர்கள், ஏற்கனவே மிகவும் தாழ்ந்து போயுள்ள நிலைமையில் உள்ள தமிழ்ச் சமூகத்தை இன்னும் இழிநிலைக்குச் செல்லவே வழி கோலுகின்றார்கள் என்பது திண்ணம்!

சிங்கள, முஸ்லிம் மக்களின் நம்பிகையீனம் கொண்ட மனங்கள் மாறாத வரையில், மாற்றப்படாத வரையில், அந்த நிலையை அடையாத வரையில், நாம் “விஸ்வநாதன்! வேண்டும், வேண்டும், வேலை வேண்டும்!” என்ற நகைச்சுவைக் கோஷம்போல், வீம்புக்கு “வேண்டும், வேண்டும் சமஷ்டி வேண்டும்!”;“வேண்டும், வேண்டும் இணைந்த வடக்கு-கிழக்குவேண்டும்!”வேண்டும், வேண்டும் சுயநிர்ணய உரிமை வேண்டும்!”என்று கவைக்குதவாத கோஷங்களும் கூச்சல்கள் போட்டுக் கொண்டிருக்கலாம்; அதனால் பாதிக்கப்படப்போவது ஏழைத் தமிழ் மக்களே;தொடர்ந்து வெற்றி ஈட்டப்போவது சிங்களப் பேரின வாதிகளே!