சென்னைக்கு உதவுவது ஈழத்தமிழரின் கடமை

சென்னையில் பிரளயம் நிகழ்ந்திருக்கிறது. தண்ணீர் ஊழித்தாண்டவம் ஆடியிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் தண்ணீர் இன்றி உணவின்றி தவித்தார்கள். சமானிய மக்கள் வாழ்நாள் பூராவும் தேடியவை எல்லாம் அழிந்து போயின. சேவைத்துறைகள் யாவும் ஸ்தம்பிதமடைந்தன.
வாழ்வும் -வாழ்வாதாரங்களும் தலைகீழாகப் புரட்டிப் போடப்பட்டது.
இந்த இடர் மிகுந்த நிலையில் மக்கள் இளையதலைமுறையினர் பிரமாண்டமான சமூகஅபிமானத்தை நல்லிதயத்தை வெளிப்படுத்தினார்கள். சகமாநிலங்கள் உதவிக்கு விரைந்தன. மக்கள் தன்னியல்பாக உதவ முன்வந்தார்கள். 2004 சுனாமி வந்த போது சகமனிதர்கள்- சக சமூகத்தவர்கள் -எமது அண்டை நாடு ஓடோடி வந்து உதவிய கணங்களை ஞாபகத்தில் கொள்வோம்.


கடந்த 30 ஆண்டுகளில் நாம் துன்புற்ற போதெல்லாம் சென்னை -தமிழக மக்கள் -உணவும் புகலிடமும் -உறைவிடமும் தந்தவர்கள்.
இன்றுவரை ஈழத்தமிழர்கள் அங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இங்குள்ள மக்கள் துன்புற்ற போதெல்லாம் ஏற்றத்தாழ்வுகள் கடந்து சகல மக்களும் ஒன்றாக நின்று உதவியவர்கள்.

அரசியல் கட்சி பேதங்களைக்கடந்து ஒன்றிணைந்து உதவவேண்டும்.
நமது நட்பை -நமது உணர்வை -இதயத்தை நாம் பகிர்ந்து கொள்வோம்.
தமிழக சென்னை மக்களின் துயரத்தையிட்டு ஈழத்தமிழ் தலைமைகள் மௌனமாக இருப்பது சமூக இழிவும்- அவமானமுமாகும்.
பாராளுமன்றத்தில்- கிழக்கு வடக்கு மாகாண சபைகள் இது பற்றிய கரிசனையைச் செலுத்த வேண்டும்.

உலகளாவிய ஈழத் தமிழர்கள் தம்மால் இயன்றதைச் செய்ய வேண்டும்.
அண்மையில் உள்ள வரலாற்று பெருமை மிகு சென்னை மாநகரின்-தமிழகத்தில் நிகழ்ந்த பேரழிவைப் பற்றிய பிரக்ஞையில்லாமல் நாம் இருந்து விடமுடியாது .

அமெரிக்காவை கதரினா புயல் தாக்கிய போது வைத்தயர்களை அனுப்பவா என்று கியூபா கேட்டது. மேற்காபிரிக்காவில எபோலா வந்த போது கியூபா சுகதாரத் துறையினர் விரைந்தார்கள்.
நாம் உலகம் முழுதும் வாழ்ந்தென்ன. எமது சகோதரத்துவ உணர்வு பலவீனமானது. எமக்கும் தமிழகத்திற்கும் இடையிலான மரபார்ந்த வரலாற்று மொழிகலாச்சார பண்பாட்டு உறவு பிரத்தியேகமானது.
நாம் மாத்திரம் தான் துன்புற்றவர்கள் என்ற சுயபச்சாத்தாப-குறுஞ்சிந்தனையுடன் மாத்திரம் வாழ்ந்து கொண்டிருக்கமுடியாது.

சுகு-ஸ்ரீதரன்