(மொஹமட் பாதுஷா)
இலங்கை முஸ்லிம் சமூகம், 16 வருடங்களுக்கு முன்னர் இது போன்றதொரு நாளில் தமது கனவை இழந்துபோனது. தென்கிழக்கே ஒரு கிராமத்தில் உதித்த, ஆயிரம் விளக்குகளை விட பிரகாசமான ஓர் ஆதவன், மத்திய மலைநாட்டின் ஊரகந்த மலைத்தொடரில் அஸ்தமனமாகிப் போனது.
அமெரிக்காவில் செப்டெம்பர் 11 ஆம் திகதி இடம்பெற்ற தாக்குதலில் இரட்டைக் கோபுரங்கள் நொருங்கி விழுந்ததைப் போல, முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் மரணச் செய்தி கேட்டு, ஒட்டுமொத்த முஸ்லிம்களும் நொருங்கிச் சுக்குநூறாகிப் போயினர். அன்று நொருங்கி விழுந்த சமூகம்தான் இன்று வரை சரியாக எழுந்திருக்கவேயில்லை.
2000ஆம் ஆண்டு செப்டெம்பர் 16ஆம் திகதி அந்த துரதிர்ஷ்டம் நேர்ந்தது. தலைவர் அஷ்ரப் உள்ளிட்ட குழுவினர் பம்பலப்பிட்டியில் இருந்து அம்பாறை மாவட்டத்தை நோக்கி ஹெலிகொப்டரில் புறப்பட்டனர். அவர்கள் பயணம் செய்த ஹெலிகொப்டர் அரநாயக்க, ஊரகந்தை மலைத்தொடரில் மோதி விபத்துக்குள்ளானது. அவ்வாறுதான் இன்றுவரையும் நம்பிக் கொண்டிருக்கின்றோம். இச்சம்பவத்தில் தலைவர் அஷ்ரப் உட்பட 13 பேர் பரிதாபகரமாக உயிழந்தனர்.
ஒரு யுகாந்திர கனவுகளைச் சுமந்து வந்த மக்கள் தலைவனின் கதை அங்கேயே முடிந்துபோனது. முஸ்லிம்களின் ஒளிக்கீற்று ஒரு மலைத்தொடரில் தொலைந்து போனது. செப்டெம்பர் 11 தாக்குதல் அமெரிக்காவில் ஏற்படுத்திய அதிர்வுகளை விட செப்டம்பர் 16 இல் இடம்பெற்ற இவ்வனர்த்தம் முஸ்லிம்களிடையே ஏற்படுத்திய அதிர்வும் அதிர்ச்சியும் அதிகமானது எனக் கூறலாம்.
அஷ்ரப் மிகப் பிரமாண்டமானதொரு ஆச்சரியக்குறி! தனது ஆதரவாளர்களாலும் சிஷ்யர்களாலும் மட்டுமன்றி ஒருபொது எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளாலும் பிற்காலத்தில் சிலாகித்துப் பேசப்பட்டவர். அவரிலும் சில குறைகளை காணலாம். என்றாலும், இன்றிருக்கின்ற தலைவர்களுடன் ஒப்பிடக்கூட முடியாத உயர்ந்த அந்தஸ்துக்குரிய பண்புகளை அவர் கொண்டிருந்தார். ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்குரிய வரைவிலக்கணமாக அவர் கொள்ளப்படுகின்றார். முஸ்லிம்களுக்காக ஒரு தூரநோக்குடைய அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தமை, முஸ்லிம்களின் தலைமைத்துவத்தை கிழக்கிற்கு நகர்த்தியமை ஆகியவையே அவர் செய்த புரட்சிகர மாற்றங்களில் முதன்மையானவை.
இந்த நாட்டில் சிங்களப் பெருந்தேசியவாதம் சிறுபான்மை மக்களை கொள்கை ரீதியாக அடக்க முற்பட்ட அன்றைய காலகட்டத்திலும் பல முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பான்மைக் கட்சிகளில் அங்கம் வகித்தனர்; சேவைகளை செய்தனர். ஆனால் அத்தோடு தமது கடமை முடிந்தது என்று அவர்கள் இருந்தனரேயொழிய, நமக்கென்று ஓர் அரசியல் இயக்கம் வேண்டுமென்ற ஒரு வேட்கை அவர்களுக்கு இருக்கவில்லை. அவர்களது சிந்தனையின் மூக்கணாங்கயிறு ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் சுதந்திரக் கட்சியின் கைகளிலேயே இருந்தது. அவ்வேளையில் அஷ்ரப், தமிழரசுக் கட்சியுடன் இணைந்து அரசியல் செய்து கொண்டிருந்தார். ஆனால். உலகில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ஏனைய போராட்டங்களைப் போலவே தமிழர் விடுதலைப் போராட்டம் என்பது ஆயுதங்களின் துணைகொண்டு பயணிக்கத் தொடங்கியபோது, அஷ்ரப் தமிழரசுக் கட்சியில் இருந்து விலகி தனியொரு வழியில் பயணிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார் எனலாம்.
ஆயுதப் போராட்டத்தின் காந்தப்புலனை நோக்கி முஸ்லிம் இளைஞர்கள் செல்வதைக் கட்டுப்படுத்தி, அவர்களை ஏதோ ஓர் அடிப்படையில், கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என நினைத்தே அஷ்ரப் தனது தோழர்களுடன் சேர்ந்து முஸ்லிம் காங்கிரஸ் என்ற அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார். இது பின்னர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்யப்பட்டு, வடக்கு கிழக்கிற்கு வெளியே இடம்பெற்ற மாகாண சபை தேர்தலிலும் இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபை தேர்தலிலும் அதிக உறுப்பினர்களைப் பெற்றுக் கொண்டு, பிரதிநிதித்துவ அரசியலுக்குள் நுழைந்தது முஸ்லிம் காங்கிரஸ்!
அஷ்ரப்பிடம் சில விசேட குணாதிசயங்கள் இருந்ததை அவருடன் நெருக்கமாக இருந்த பலரும் கண்டிருக்கின்றார்கள். பெரும் ஞாபகசக்தி உடையவராக அவர் இருந்திருக்கின்றார். 10 நிமிடங்களுக்குள் குறட்டை விட்டு உறங்கி சரியாக 11 ஆவது நிமிடத்தில் அலாரம் வைத்து எழுப்பியது போல் எழும்பி விடுவாராம். பெரிய மக்கள் கூட்டத்தின் கடைசியில் நிற்பவனைக் கூட அடையாளம் காணும் ஆற்றல் அவருக்கு இருந்தது. அவன் கட்சிக்காரனா அல்லது எதிர்க்கட்சி ஆதரவாளனா என்பதைத் துல்லியமாக அறிந்து கொள்வாராம். ஒரு கடைநிலை தொண்டனையும் கட்சி கவனிக்க வேண்டும் என்று நினைத்தவர் அவர். தேர்தல்கால கூட்டங்களில் கடலை விற்கும் ஒருவரது கடலைப் பக்கற்றுகளை மேடைக்கு கொண்டுவந்து தலைவரே விற்பனை செய்தமை உள்ளடங்கலாக, மக்களின் மனங்களை கொள்ளை கொண்ட எத்தனையோ சம்பவங்கள் உள்ளன.
அஷ்ரப்பிற்கு முன்னர், கிழக்கில் அரசியல்வாதிகள் இருந்தனரே தவிர குறிப்பிட்டுச் சொல்லும்படி தேசிய அரசியலில் ஜொலித்த ‘முஸ்லிம் தலைமைகள்’ உருவாகவில்லை என்றே சொல்ல வேண்டும். இந்த நிலைமையைத் தலைகீழாக புரட்டிப் போட்டார் அஷ்ரப். கொழும்பில் மையங்கொண்டிருந்த முஸ்லிம்களின் தலைமைத்துவத்தை தென்கிழக்கு கரையோரத்திற்கு கொண்டு வந்தார். அப்போதிருந்த சந்திரிக்கா அம்மையாரின் ஆட்சியும் இதற்கு பெரும் வாய்ப்பாக அமைந்தது. அஷ்ரப்பை விடுத்து முஸ்லிம்கள் தொடர்பான எந்தத் தீர்மானத்தையும் அரசாங்கத்தால் எடுக்க இயலாது போனது. காலகாலமாக பெருந்தேசிய கட்சிகளில் மேட்டுக்குடி அரசியல் நடத்திக் கொண்டு, நாட்டில் உள்ள முஸ்லிம்கள் எல்லோருக்கும் பொதுவான அரசியல்வாதிகள் தாமே என்று நினைத்துக் கொண்டிருந்த சிலருக்கு இது வயிற்றில் புளியை கரைத்தது. சமயம் பார்த்து சிண்டுமுடிவதிலும் அஷ்ரப்பை போட்டுக் கொடுப்பதிலும் சில முஸ்லிம் அரசியல்வாதிகளே ஈடுபட்டதாக பின்வந்த நாட்களில் தகவல்கள் கசிந்தன. அந்தளவுக்கு பொறாமைப்படத்தக்க ஓர் இடத்தில் அன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் இருந்தார்.
அஷ்ரப், சுமார் ஆறு வருடங்கள் எதிர்க்கட்சியில் இருந்த வேளையில்தான் விகிதாசார தேர்தல் முறைமையின் வெட்டுப்புள்ளியை ஐந்து வீதமாக குறைத்தார். பின்னர் அமைச்சுப் பதவியில் இருந்தது வெறும் ஆறு வருடங்கள் மட்டுமே. இந்தக் குறுகிய காலப்பகுதிக்குள் அவர் செய்த சேவைகளை இன்று பார்த்தால் திகைப்பாக இருக்கின்றது. அவருக்குப் பின்வந்த தலைவரினாலோ அல்லது நாடாளுமன்றத்தில் இருக்கின்ற 20 இற்கு மேற்பட்ட முஸ்லிம் எம்.பி.க்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்தோ இதுபோன்ற பாரிய பணிகளை மேற்கொள்ள முடியவில்லை எனும் போது, அவரின் கனதியும் இன்றிருப்பவர்களின் இயலாமையும் தௌ்ளத்தெளிவாகின்றது.
‘கனவு காணுங்கள்’ என்று சொன்னவரே அஷ்ரப்தான். இன்றிருக்கும் அரசியல்வாதிகளைப் போல் பிற்போக்குத்தனமாக செயற்பட்டுவிட்டு அதனை சாணக்கியம் என்று சொல்கின்ற பத்தோடு பதினோராவது ஆளுமையல்ல அவர். சோரம் போகும் அரசியலை அவர் ஒருபோதும் பேரம்பேசும் அரசியல் என்று சொன்னதில்லை. அபிவிருத்தி அரசியலையும் உரிமை அரசியலையும் சமகாலத்தில் முன்னெடுத்துச் சென்றவர் என்ற பெருமை வேறு எந்த முஸ்லிம் தலைமைக்கும் கிடைக்குமா என்பது நிச்சயமில்லை.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மக்களின் விருப்பத்தைப் பெறாமல் இணைக்கப்பட்டதை பகிரங்கமாக எதிர்த்தார். புலிகளின் படுகொலைப் பட்டியில் பெயர் இருக்கின்றது என்று சொல்லப்பட்ட காலத்திலும், இணைந்த வடகிழக்கில் நிலத்தொடர்பற்ற முஸ்லிம் அலகை கோரினார். ஆயுதக் கலாசாரத்திற்கு எதிராக ஜனநாயக போராட்டங்களை மேற்கொண்டார்.
இவற்றையெல்லாம் செய்து கொண்டே தென்கிழக்கு பல்கலைக்கழகத்தையும் ஒலுவில் வெளிச்சவீட்டையும் நிறுவினார். துறைமுகத்திற்கு அடித்தளமிட்டார். ஏகப்பட்ட தொழில்களை வழங்கியதுடன் மேலும் பல திட்டங்களை வகுத்தார். உண்மையில் அஷ்ரப் கூட ஓர் அரசியல்வாதியே என்றாலும் அவர் அரசியலை அரசியலாக செய்தார்.
2000.09.16 ஆம் திகதி காலை வேளையில் அவர் பயணித்த எம்ஐ.17 ரக ஹெலிகொப்டர் விபத்தில் சிக்கி அதில் பயணித்த எல்லோரும் உயிரிழந்த செய்தியை விட, இலங்கை முஸ்லிம்களைக் கவலை கொள்ளச் செய்த செய்தி வேறு எதுவாகவும் இருக்க முடியாது. அப்போது உடனடியாக செய்ய வேண்டிய இரண்டு முக்கிய பணிகள் முஸ்லிம் காங்கிரஸின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு இருந்தது. முதலாவது, தலைவரின் மரணத்தில் இருந்த மர்மத்தை துலக்குவது. இரண்டாவது, தலைவர் விட்ட இடத்தில் இருந்து கட்சியை முன்னோக்கி கொண்டு செல்வது. இவ்விரண்டு விடயங்களையும் இரண்டாம்நிலை தலைவர்கள் சரியாக மேற்கொள்ளவில்லை என்பதை சொல்லாமல் விட முடியாது.
அஷ்ரபின் மரணத்தை, இயற்கையாக காலன் நிகழ்த்தியிருக்கலாம். அல்லது செயற்கையாக சதித்திட்டம் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம். இயற்கையான விபத்து மரணம் என்று இது சொல்லப்பட்ட போதும் அது பற்றிய சந்தேகம் இன்னும் கட்சிப் போராளிகள் மத்தியில் இருக்கவே செய்கின்றது. எனவே, இதில் இருக்கின்ற மர்மத்தை ஆதாரபூர்வமாக துலக்காதிருக்கின்றமை தமது அரசியல் குருவுக்கு அவருடைய சிஷ்யர்கள் செய்த பெரும் துரோகம் எனலாம். அப்போது, அந்த ஹெலியில் அஷ்ரபுடன் பயணித்து உயிரிழந்த கதிர்காமத்தம்பி மீது ஒரு சந்தேகப்பார்வை ஏற்பட்டது. புலிகள் அவரைத் தற்கொலைக் குண்டுதாரியாக அனுப்பினார்களா என்ற சந்தேகம் நிலவியது.
இதேவேளை, வடக்கு கிழக்கில் இருந்து ஒரு முஸ்லிம் தலைமை உருவாகி அவர் தேசிய அரங்கில் முக்கியம் பெறுவதை பொறுக்கமாட்டாத சிங்கள பெருந்தேசியவாதிகள் சதித்திட்டம் ஒன்றை தீட்டினார்களா என்ற கோணத்திலும் இவ்விபத்து பார்க்கப்பட்டது. சந்திரிகாவுடன் மிக நெருக்கமாக இருந்தாலும், மரணிப்பதற்கு சில நாட்கள் முன்னதாக அஷ்ரப் காட்டமான அறிக்கை ஒன்றை விடுத்திருந்தார். அதற்கும் இவ் விபத்திற்கும் இடையில் ஏதாவது சம்பந்தம் இருக்குமோ என்றும் பலர் கதைத்துக் கொண்டனர். இதனைவிட முக்கியமாக, அப்போது அஷ்ரப்புடன் விவாதம் நடாத்தி பின்வாங்கியிருந்த இனவாதிகள் ஏதாவது சதி வேலையை செய்திருக்கலாமோ என்ற ஐயப்பாடும் இருந்தது.
இவற்றையெல்லாம் விசாரித்து, உண்மை என்ன என்பதை வெளிச்சத்திற்கு கொண்டுவருவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி கடுமையாக முயற்சிக்கும் என்று மக்கள் திடமாக நம்பினர். ஆனால் அது நடக்கவில்லை. மாறாக எரிகின்ற வீட்டில் எதையாவது பிடுங்கிக் கொள்வோம் என்ற தோரணையில் பதவிக்காக ஆளுக்காள் அடித்துக் கொண்டனர். அஷ்ரப்பின் மரணத்தை பற்றிய விசாரணை அறிக்கை அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரிடம் கையளிக்கப்பட்டதாக சொல்லப்பட்டது. ஆனால் அதில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தது என்பது இன்று வரைக்கும் அஷ்ரப்பை நேசித்த இலட்சக்கணக்கான முஸ்லிம், தமிழ் மக்களுக்குத் தெரியாது. அந்த மர்மம் என்னவென்று கண்டறிந்து கூறுவதற்கு, அவருக்குப் பின் தலைவரான ரவூப் ஹக்கீமோ, அவரது சிஷ்யர்களென மார்தட்டிக் கொள்ளும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஸாட் பதியுதீனோ, தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லாவோ, ஏனையவர்களோ அல்லது அவரது மனைவியோ கூட முன்னிற்கவில்லை என்பதை விட மிகப் பெரிய கைசேதம் வேறெதுவும் இருக்க முடியுமா?
சரி, அஷ்ரப்பின் மரணம் இயற்கையானதாகவோ செயற்கையானதாகவோ நிகழ்ந்து விட்டது. விசாரணை அறிக்கையும் எப்படியோ அமைந்துவிட்டது என வைத்துக் கொள்வோம். அவரது பாசறையில் வளர்ந்தவர்கள் அவரது கொள்கையை, வழிகாட்டலை, அறிவுரைகளை எல்லாவற்றையும் அல்லவா குழிதோண்டிப் புதைத்துவிட்டார்கள்! ‘கருத்து வேறுபாடு என்னும் காளான்கள் வந்து உங்கள் ஒற்றுமையைக் குலைத்துவிடும். கவனமாக இருங்கள்’ என்று தலைவர் கூறியிருந்த போதிலும், பல கட்சிகளாக பிரிந்து செயற்பட ஆரம்பித்தமை, முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தனது கவனத்தை வேறு விடயங்களில் குவிவடையச் செய்தமை, அஷ்ரப்பின் பாதையில் இருந்து விலகி முதலாளித்துவ இயல்போடு செயற்பட ஆரம்பித்தமை, மக்களை மறந்த அரசியல் என எத்தனையோ விடயங்களில் அஷ்ரப்பின் கொள்கைகள் அன்றாடம் குழிதோண்டி புதைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
எந்தெந்த விடயங்களில் அஷ்ரப்பின் கனவு உயிர்ப்பிக்கப்பட வேண்டுமோ அந்தந்த விடயங்களில் அஷ்ரப்பின் வழிகாட்டுதலை புறமொதுக்கிவிட்டு, எவ்வாறான நேரங்களில் அவர் நினைவுக்கு வரவேண்டுமோ அப்போதெல்லாம் மறந்து விட்டு, தேர்தல் காலங்களில் பிரசாரத்திற்காக அவர் நினைவு கூரப்படுகின்றார். செப்டெம்பர் 16ஆம் திகதி அவருக்காக கத்தமுல் குர்ஆனும் விசேட நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன. 16 வருடத்திற்கு பிறகாவது இந்த நிலைமை மாறி, அஷ்ரப்பின் கொள்கைகளை பின்பற்ற வேண்டும்.
மேற்சொன்ன காரியங்கள் எதையுமே செய்யாது, வருடத்திற்கு ஒரு தடவை அவரை நினைவு கூருவதும், அமெரிக்கர்கள் செப்டெம்பர் 11ஆம் திகதி இரட்டைக் கோபுர வளாகத்தில் மொழுகுவர்த்தி ஏற்றுவதற்கும் பெரிதாக என்ன வித்தியாசம் இருக்கின்றது என்று விளங்கவில்லை.