நாற்பது ஆண்டுகளுக்கு முன்னரை விட இன்று, வாழ்க்கையின் ஒவ்வோர் அசைவையும் கட்டுப்படுத்தும் ஆற்றல்மிக்கதாக மின்சாரம் மாறியுள்ளது. அக்காலத்தில், நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கிணறுகள், ஆறுகள், வாவிகளில் இருந்தே மக்கள் நீரைப் பெற்றுக் கொண்டனர்.
கொழும்பு போன்ற நகரங்களிலும் பல இடங்களில் கிணறுகள் இருந்தன. இன்று கிராமங்களிலும் குழாய் மூலமே குடிநீர் வழங்கப்படுகிறது. எனவே, மின்சாரம் தடைப்பட்டால் குடிநீரும் இல்லாமல் போகும் ஆபத்தே நிலவுகிறது.
அக்காலத்தில், நாட்டில் பெரும்பாலான விடுகளில் மண்ணெண்ணெய் விளக்குகளே பாவனையில் இருந்தன. ஆனால், இன்று மின்குமிழிகள் இல்லாத வீடுகளே இல்லை. தொலைக்காட்சிப் பெட்டிகள், வானொலிப் பெட்டிகள் மட்டுமன்றி, அலைப்பேசியும் ஏழைக் குடும்பங்களிலும் அத்தியாவசியப் பொருட்களாகியுள்ளன. இவையும் மின்சக்தி மூலமே இயங்குகின்றன.
தற்போது, நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது. அத்தோடு மண்ணெண்ணெய்க்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. அதற்குப் பரிகாரமாகப் பலரும் மின்சார உபகரணங்களையே பாவிக்க முற்பட்டனர். எனவே, ஒரு வாரம் மின்சாரம் இல்லாமல் போனால், மனித செயற்பாடுகள் ஸ்தம்பித்துவிடும் என்றே கூறவேண்டும். அவ்வாறான நிலை ஏற்பட்டால், மக்கள் என்ன செய்வார்கள் என்பதை, சிறிதும் எண்ணிப் பார்க்க முடியாது.
ஆனால், தற்போதைய நிலையில் இவ்வாறானதொரு நிலை ஏற்படாது என்பதற்கு, எவ்வித உத்தரவாதமும் இல்லை. ஏனெனில், அரசாங்கம் பெரும் வெளிநாட்டு செலாவணிப் பிரச்சினையை எதிர்நோக்கியுள்ளது.
கடந்த பல தசாப்தங்களாக, வெளிநாடுகளில் இருந்து பெற்ற கடனைச் செலுத்துவதே, பெரும்பாடாக இருக்கிறது. அரசாங்கத்துக்கு உள்நாட்டு நாணய நோட்டுகளைப் போல், டொலர் நோட்டுகளை அச்சிட முடியாது.
இது போன்றதொரு மோசமான வெளிநாட்டு செலாவணிப் பிரச்சினையை, இலங்கை 50 ஆண்டுகளுக்கு முன்னர் எதிர்நோக்கியது. அப்போது, சிறிமாவோ பண்டாரநாயக்கவே பிரதமராக இருந்தார். அக்காலத்தில், ஜனாதிபதி பதவியானது பெயரளவிலான பதவியாகவே இருந்தது.
அந்தப் பெருளாதார நெருக்கடியின் போது, அரசாங்கம் அதைச் சமாளிக்க மேற்கொண்ட நடவடிக்கைகள், தற்போதைய இளம் தலைமுறையினருக்குத் தெரியாது. அக்காலத்தில் தேயிலை, இறப்பர், தெங்குப் பொருட்களே நாட்டின் பிரதான வெளிநாட்டு வருமானத்தைச் சம்பாதித்துக் கொடுத்த பொருட்களாக இருந்தன.
வெளிநாட்டுத் தொழில்கள், ஆடைத் தொழிற்றுறை என்பன அதற்குப் பின்னரே ஆரம்பிக்கப்பட்டன. அக்காலத்தில், உல்லாசப் பிரயாணத்துறையானது பொருட்படுத்தக் கூடிய அளவில் வளர்ச்சியடைந்து இருக்கவில்லை. எனவே, வெளிநாட்டு செலாவணி மூலமான வருமானம் வளர்ச்சியடையாது, தேங்கிய நிலையில் தான் இருந்தது.
நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து நாட்டின் தேவைகள் வருடாவருடம் பெருகி வந்த போதிலும், அதற்கு அமைய நாட்டின் அபிவிருத்தி இடம்பெறவில்லை. எனவே, பெரும்பாலான பொருட்கள், வெளிநாடுகளில் இருந்தே பெறவேண்டிய நிலை ஏற்பட்டு இருந்தது. எனவே, வருடாவருடம் வெளிநாட்டு வருமானம் குறைந்து வந்து, 1970ஆம் ஆண்டளவில் அது உச்சக்கட்டத்தை அடைந்தது.
சிறிமாவோவின் அரசாங்கம் செய்வதறியாது தவித்தது. அப்போது, அரசாங்கததின் முக்கிய அமைச்சர் பதவிகளை இடதுசாரித் தலைவர்களான என். எம். பெரேரா, கொல்வின் ஆர்.டி.சில்வா, லெஸ்லி குணவர்தன போன்றவர்களே வகித்தனர். 1970ஆம் ஆண்டு முதல் 1975ஆம் ஆண்டு வரை, என்.எம். பெரேராவே நிதி அமைச்சராக இருந்தார்.
அவர்கள், பிரச்சினைக்குத் தீர்வாக கடும் இறக்குமதி கட்டுப்பாடுகளை பரிந்துரைத்தனர். அவை, கடுமையாக அமலாக்கப்பட்டன. இதன் காரணமாக, நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்காகப் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது; கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது.
எனவே, பெரும்பாலான உணவுப் பொருட்கள், கூப்பன் (ரேஷன்) அட்டைகள் மூலமே வழங்கப்பட்டன. தற்போதைய தலைமுறையினருக்கு ‘ரேஷன்’ அட்டை என்றால் என்ன என்று தெரியாது. 1960 களில் இருந்தே, அரிசிக்காக ‘ரேஷன்’ அட்டை முறை அமலில் இருந்தது. மஞ்சள் நிறத்தில், புத்தக வடிவில் மடித்து இருந்தமையால், அது ‘கூப்பன் புத்தகம்’ எனறு அழைக்கப்பட்டது. கூட்டுறவு கடைகளில் மட்டுமே அதற்கு பொருட்களை கொள்வனவு செய்ய முடியும் என்பதால் கூட்டுறவு கடையையும் அக்காலததில் பலர் ‘ரேஷன் கடை’ என்றழைத்தனர்.
குடும்பத்தில் ஒவ்வொரு நபருக்கும் ஒரு புத்தகம் வீதம் வழங்கப்பட்டு இருந்தது. அதில் 52 சிறிய பெட்டிகள் அச்சிடப்பட்டு இருக்கும். அவை, வருடத்தில் 52 வாரங்களை குறிக்கும் வகையில் 1 முதல் 52 வரையிலான எண்கள் குறிப்பிடப்பட்டு இருந்தன. ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை கூட்டுறவு சங்கக் கடைக்குச் சென்று, புத்தகத்தைக் கொடுத்தால், அதன் முகாமையாளர் அந்தப் பெட்டிகளில் ஒன்றைக் கத்தரித்து எடுத்துவிட்டு, சலுகை விலையில் இரண்டு கொத்து அரிசியை வழங்குவார்.
குடும்பத்தில் ஐந்து பேர் இருந்தால், அந்த வாரத்துக்கு அந்தக் குடும்பத்துக்கு பத்து கொத்து அரிசி கிடைக்கும். வருடத்தில் 52 வாரங்களில் 52 பெட்டிகளும் வெட்டி எடுக்கப்பட்டதன் பின்னர் புதிதாக ‘கூப்பன் புத்தகம்’ வழங்கப்படும்.
1965 முதல் 1970ஆம் ஆண்டுவரை பிரதமராக இருந்த டட்லி சேனாநாயக்கவின் காலத்தில், சலுகை விலையில் அரிசி வழங்க முடியாததால் அரசாங்கம் ஒரு கொத்து அரிசியை, இலவசமாக வழங்கி மற்றைய ஒரு கொத்து அரிசியை சந்தை விலைக்குக் குறைந்த ஆனால், அதிக விலைக்கு விற்றது. மக்கள் இதை விரும்பவில்லை.
எனவேதான், 1970ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது, சிறிமாவோ அம்மையார் “சந்திர மண்டலத்தில் இருந்தேனும் பறிக்கப்பட்ட இரண்டு கொத்து அரிசியை, சலுகை விலைக்கு வழங்குவேன்” என்ற வாக்குறுதியை அளித்து பதவிக்கு வந்தார். ஆனால், அவர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. மாறாக, அவரது காலத்தில் உணவுக்குப் பெரும் பஞ்சம் ஏற்பட்டது. அதனைத்தான் மேலே குறிப்பிட்டோம்.
அவரது காலத்தில் மாசி, சீனி, மா, பருப்பு போன்ற வேறு சில பொருட்களின் தட்டுப்பாட்டின் காரணமாக, அவை வெள்ளை நிற அட்டை ஒன்றின் மூலம் விநியோகிக்கப்பட்டன. அரிசி கூப்பன் புத்தகத்தைப் போலன்றி, இது குடும்பத்துக்கு ஒரு அட்டை வீதம் வழங்கப்பட்டது. அதற்கு மாதமொரு முறையே பொருட்கள் வழங்கப்பட்டன. குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கைப்படி ஒவ்வொரு குடும்பத்துக்குமான பொருட்களின் அளவு அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
‘ரேஷன்’ முறைப்பபடி விநியோகிக்கப்பட்ட பொருட்கள், எவ்வகையிலும் போதுமானதாக இருக்கவில்லை. எனவே கடும் பஞ்ச நிலை உருவாகியது.
சில பொருட்களின் விலை, 1971ஆம் ஆண்டின் இறுதியிலிருந்து 1973ஆம் ஆண்டு ஆரம்பம் வரையிலான ஒரு வருட காலத்தில், பத்து மடங்காக உயர்ந்தது. ஐந்து சதத்துக்கு விற்கப்பட்ட பனிஸின் விலை 50 சதமாகியது.
ஐந்து சதத்துக்கு விற்கப்பட்ட தேநீர் 40 சதமாகியது. அரிசி மற்றும் மா ஆகியவற்றின் தட்டுப்பாட்டின் காரணமாக, மக்கள் வாழ்க்கையில் ஒருபோதும் உண்ணாதவற்றையும் அக்காலத்தில் உண்டனர். சிலர் வாழை மரத்தின் கிழங்கையும் அவித்துச் சாப்பிட்டனர். சிலர் வெறும் கீரை வகைகளை அவித்து உண்டனர்.
கிராமப் புறங்களில் இவ்வாறாவது மக்கள் வாழ்ந்தாலும், நகரப் புறங்களிலும் பெருந்தோட்டத்துறையிலும் மக்களின் நிலை பல மடங்கு மோசமாகியது. தோட்டப்புற மக்கள் வேலை தேடி, கிராமங்களுக்குச் செல்ல முற்பட்டனர். அவர்களது கடும் வறுமையைக் கிராமப்புற செல்வந்தர்கள் மிக மோசமாகத் துஷ்பிரயோகம் செய்தனர்.
பாண் சுகபோகப் பொருளாக இருந்தது. ஒரு இறாத்தல் பாணுக்காக பல மணித்தியாலங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்தது. ரேஷனுக்கு விநியோகிக்கப்படும் சினியின் விலை, இறாத்தல் 72 சதமாக இருந்தது. ஆனால், வெளிச்சந்தையில் அதன் விலை 7 ரூபாய் 50 சதமாகும். எனவே, ஏழைகள் ரேஷனுக்கு வழங்கப்படும் சீனியை, வெளிக்கடைகளுக்கு விற்று, வீட்டுக்குத் தேவையான ஏனைய உணவுப் பொருட்களை விலைக்கு வாங்கினர்.
சீனித் தட்டுப்பாட்டின் காரணமாக, உறவினர்கள் வீட்டுக்கு வந்த போதும் சீனி இல்லாமல் தேநீர் வழங்க மக்கள் பழகினர். தேநீர் அருந்தும் போது, சீனிக்குப் பதிலாக சில குடும்பங்கள், தேங்காய்ச் சொட்டுகளைப் பாவித்தன.
வர்த்தகர்கள் அரிசி, மிளகாய் ஆகிய பொருட்களைப் பதுக்குவதைத் தடுப்பதற்காக, இப்பொருட்களில் இரண்டு இறாத்தலுக்கு மேல் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்துக்கு எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டது. அதைக் கண்காணிக்க, மாவட்ட எல்லைகளில் மரக்கட்டைகளால் தடை போடப்பட்டு, பொலிஸார் காவலில் இருந்தனர்.
மக்கள் இவற்றை, ‘அரிசிப் பொல்லு’, ‘மிளகாய்ப் பொல்லு’ என்று அழைத்தனர். இந்த இடங்களில் பஸ்களில் பயணிக்கும் பிரயாணிகள் இறக்கப்பட்டு, பஸ்கள் சோதனையிடப்பட்டன.
அக்காலத்தில் நடைமுறையில் இருந்தவற்றை, இது போன்றதோர் சிறிய கட்டுரையில் விளக்க முடியாது. இப்போதும் நாம் அவ்வாறானதொரு நிலையை நோக்கிப் போகிறோமோ என்ற அச்சம் ஏற்படுகிறது.