செல்வியின் வலிந்த மரணம் விட்டுச் சென்ற செய்திகள்

(சாகரன்)

ஈழவிடுதலைப் போராட்டம் மிதவாதத் தலமைகளின் கரங்களினால் உசுப்பேத்தப்பட்ட 1970 – 1980 காலங்களில் புஷ்பராணி அங்கயற்கண்ணி ஊர்மிளா கல்யாணி போன்றவர்கள் தமது அரசியல் வாழ்வை பொதுவெளியில் தமிழ் இளைஞர் பேரவையுடன் இணைந்து செயற்பட்டு வந்தனர். அப்போதெல்லாம் ஆண் ஆதிகம் மேலோங்கி இருந்த எம் சமுதாயம் இந்தப் பெண்களை விநோதமாக பார்த்தாலும் இவர்களின் பாதுகாப்பிற்கும் உயிர் வாழ்தலுக்குமான உறுதிப்பாட்டை பொது மக்களே செய்தே வந்தனர். இன்னும் ஒரு படி மேலே சென்றால் குலம் அக்கா வேதநாயகம் குடும்பம் போன்றவர்களும் கண்ணாட்டியில் வாழந்த பல குடும்பங்களும் இந்தப் பெண் போராளிகளின் பாதுகாப்பை பொது மக்கள் உறுதிப்படுத்தியே இருந்தனர்.

இந்த விடயத்தில் இவர்கள் இந்த பெண் போராளிகளின் சமூகப் பின்னணி பற்றியோ அல்லது பெண்கள் என்ற பால் வேறுபாடுகளை முன்னிறுத்தி இவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருக்கவில்லை மாறாக அரணாகவே இருந்தனர். இவர்களில் புஸ்பராணி கல்யாணி போன்றவர்களின் இன்று வரையிலான உயிர் வாழ்தலுக்கு இவை காரணமாக அமைந்தன. இவர்களின் போராட்ட வாழ்வு தாம் சார்ந்த அல்லது இதற்கு அப்பால் மாற்று கட்சிகளுடன் முரண்பாடுகளுன் கூடிய உடன்பாடுகளுடாக இருந்தன. இவர்களுக்கு மக்கள் வழங்கிய பாதுகாப்பு இந்தப் போராளிகளை சக மனித இனமாக மதித்த மனிதாபிமானத்தின் வெளிப்பாடாக பார்க்க முடியும்.

மாறாக அரச படைகளில் இருந்தவர்கள் இவர்களின் கைதுகளையும் சிறையடைப்புக்களையும் சித்திரை வதைகளையும் பால், சமூகப் பிண்ணணி அடிப்படையில் அணுகினர். யாழ் பொலிஸ் நிலையத்தில் கைதுகளின் பின்பு செய்த சித்தரவதைகள் புஷ்பராணியின் அகாலம் புத்தகத்திலும் வேறு பலரினதும் எழுத்துக்களிலும் வெளிப்பட்டே இருந்தன. இவற்றை மேற் கொண்ட அரச படையினரில் பலரும் தமிழ் இனத்தின் பிறப்பிடமாக கொண்டவர்கள்.

மிதவாத தலமைகளிடம் இருந்து தமிழ் மக்களின் போராட்டம் ஆயுதம் தாங்கிய விடுதலை அமைப்புக்களிடம் கையமாறிய சூழலில் பாசிச செயற்பாடுகள் கூடவே வீரியம் அடைந்தன. இந்த விடுதலை அமைப்புக்கள் தமது அமைப்பிற்குள்ளும் மாற்று அமைப்புக்களிடையேயும் தமது கொலைக் கரங்களை நீட்டியே வந்தனர். இதற்கு விதி விலக்காக அமைந்த விடுதலை அமைப்புக்களும் ஈழ விடுதலைப் போராட்டத்தின் பாடங்கள் ஆகும்.

இந்த பாசிச செயற்பாடுகள் தமது இனம், மதங்களுக்கு அப்பால் ஆரம்பத்தில் நீண்ட கரங்கள் பின்பு தமது இனத்துக்குள்ளேயே மிகக் கொடூரமாக ஆரம்பித்தனர். இந்த செயற்பாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது கரங்களை அகலவே விரித்திருந்தனர். இதில் புளொட் என்ற புலிகளின் தாய் அமைப்பு தமது அமைப்புக்குள்ளேயே உருவாக்கிய தலமைக்கு எதிரான கருத்திற்கு வழங்கிய தேக்கங் காட்டுப் புதைப்புகளும் கொலைகளும் ஈழவிடுதலைப் போராட்டத்தில் பிரசித்தி பெற்றன. ஆனாலும் ஸ்தாபனம் ஒன்றின் கொள்கைகளாக இந்த செயற்பாட்டை வரிந்து கட்டி செயற்பட்டவர்கள் என்றால் அது தமிழீழ விடுதலைப் புலிகளே.

இந்த மரணங்களையும் மாற்றுக் கருத்தாளர்களின் குரல்வளையை நசுக்கும் செயற்பாட்டிற்கு எதிராக விடுதலை அமைப்புக்களைத் தாண்டிய குரல்களை ஒலித்தவர்களில் செல்வியும் ஒருவர். ரமணி, ரஜனி திரணகம போன்ற பெண்களின் செயற்பாடுகளை புலிகள் எந்த வகையிலும் விட்டுவைக்க விரும்பவில்லை. கூடவே மாற்ற விடுதலை அமைப்புகள் பொது அமைப்புக்கள் மீதான புலிகளின் ஜனநாயக மறுப்புடன் கூடிய கொலை வெறிச் செயற்பாடுகள் ஈழவிடுதலைப் போராட்டத்தில் தேசிய விடுதலைப் போராட்டத்திற்காக மட்டும் அல்ல பெண்விடுதலையுடன் கூடிய சமூக விடுதலைக்காக புறப்பட்ட பெண்கள்பலரையும் போராட்ட சூழலிருந்து ஓதுங்க வைத்தது. ஆனாலும் செல்வி போன்றவர்கள் அவ்வாறு செய்யாமல் தொடர்ந்தும் போராட்ட தளத்தில் தம்மை இணைந்தே வைத்திருந்தனர்.

செல்வி தனது ஆரம்ப அரசியல் செயற்பாடுகளை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் இல் தொடர்ந்தவராக இருந்தாலும் ஏனைய விடுதலை அமைப்புக்களுடன் தோழமையுடன் பழகியவர். எனக்கும் இவருடன் நீண்ட கலந்துரையாடல் ஆனுபவங்கள் உண்டு. வவுனியா சேமமடு பகுதியில் பிறந்த இவர் என்னுடன் சகாலத்தில் பல்கலைக் கழகத்தில் பயின்றவர். தான் சார்ந்த அமைப்பின் தவறான செயற்பாடுகளை உட்கட்சிப் போராட்டம் என்ற மட்டத்தில் முன்னெடுத்தவர். இதனால் அந்த அமைப்பின் உயிர் அச்சுறத்தலுக்கு உள்ளாகினார். ஆனாலும் தொடர்ந்தும் தனது அரசியல் செயற்பாட்டை தொடர்ந்தும் முன்னெடுத்தவர். தான் சார்ந்த அமைப்பிலிருந்து வெளியெறி தீப்பொறி என்ற அமைப்பினூடு தனது செயற்பாட்டை முன்னெடுத்தவர்.

பாதுகாப்பு விடயத்தில் அதிக அவதானம் எடுத்துக் கொண்ட இவர் சகோதரப் படுகொலை என்பது மிகச் சாதாரணமாக மேற்கோள்ளும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு பற்றிய விடயத்தில் கடைப்பிடித்த அக்கறையீனம் இவரை மக்கள் பாதுகாப்பு என்ற வட்டதிற்குள் இருந்து புடுங்கி கைது செய்யவும் சித்திரைவதையின் பின்பு காணமல் போதல் என்ற கொலைச் செயலையும் புலிகள் செய்ய ஏதுவாக அமைந்துவிட்டது. புலிகளின் கொலை வெறி பற்றி குறைந்த மதிப்பீடு இவரை மட்டும் அல்ல ரமணி, ரஜனி திரணகம் விமலேஸ்வரன் போன்றவர்களையும் ஏன் கேதீஸ்வரனையும் கொன்றொழித்திருக்கின்றது.

இன்று காணமல் போனவர்கள் என்று எழிலன்வரை குரல் கொடுக்கும் அனந்திகள் அன்று செல்வியின் கடத்தலையும் காணாமல் போதலையும் முள்ளிவாய்கால் அவலத்திற்கு முன்பே கேள்வி எழுப்பியிருந்தால் பல எழிலன் கள் இன்று அனந்திகளை விட்டுச் காணாமல் போனவர்கர் பட்டியலில் இணைந்திருக்க மாட்டார்கள். இந்த வலியும், வேதனையும் எக்காலத்திலும் யாருக்கும் வருகினும் இதற்கான காரண காரியங்களை எதிர்த்து குரல் கொடுக்கும், போராடும் ஒரு சமூக அமைப்பபை உருவாக்க போராடுவதே நாம் செல்விகளுக்கு கொடுக்கும் அஞ்சலியாக இருக்க முடியும்.

(சாகரன்)

தீப்பொறி அமைப்பில் இருந்த நண்பர்கள் பலரும் என்னை அழைத்து கூறிய தகவலை இவ்விடம் பதிவு செய்கின்றேன். செல்வி எந்த காலத்திலும் தீப்பொறி குழுவில் இணைந்து செயற்படவில்லை என்பதை உறுதிப்படுத்தினர். ஆனால் கருத்தியல் ரீதியில் தமக்கிடையே உடன்பாடுகள் இருந்ததாகவும் தமக்கு இருந்த பாதுகாப்பு பிரச்சனைகள் சம்மந்தமாக தம்மை எச்சரித்து புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலிருந்து வெளியேற பணித்ததாகவும் கூறினார்கள். மேலும் இதே மாதிரியான பாதுகாப்பு பிரச்சனை செல்விக்கும் இருப்பதாக தாம் கூறிய போது செல்வி யாழ்பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேறவில்லை என்றும் உறுதி செய்தனர். அவர் தொடர்ந்தும் பல்கலைக் கழக பொது வெளியில் அன்றைய காலகட்ட விடுதலை அமைப்பின் செயற்பாடுகளின் தவறான செயற்பாடுகளை  தனது விமர்சனங்களால் வெளிப்படுத்தி வந்ததாகவும் உறுதிப்படுத்தினர். எனது கட்டுரையில் ஏற்பட்ட தகவல் பிறழ்விற்கு வருந்துகின்றேன். – சாகரன்

(ஆகஸ்ட் 27, 2016)

(Saakaran)