ஆனாலும், எப்படி தமது நாட்டின் சர்வாதிகாரி ஹிட்லர் பல இலட்சம் மக்களை ஈவிரக்கமின்றி சித்திரவதை முகாம்களில் அடைத்து வைத்து கொடுமைப்படுத்திப் பின்னர் கொன்றொழித்தது சம்பந்தமாக இன்றைய ஜெர்மானிய சமூகம் வெட்கமும் துக்கமும் படுகின்றதோ, அந்த அளவுக்கு எமது இலங்கைத் தமிழ் சமூகம் தமது புலிகள் இயக்கம் செய்த மிலேச்சத்தனமான நடவடிக்கைகள் குறித்தும், படுகொலைகள் குறித்தும் வெட்கமோ துக்கமோ படாமல் இன்றும் அவர்களையும் அவர்களது நடவடிக்கைகளையும் புகழ்ந்து கொண்டிருப்பதுதான் இந்தச் சமூகத்தின் மீது வெறுப்பையும் அவநம்பிக்கையையும் ஏற்படுத்துகின்றது.
நான் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் புத்தக நிலையம் ஒன்றை நடத்தி வந்த காரணத்தால், பெரும்பாலும் அந்தப் பல்கலைக்கழகத்தில் கடமையாற்றிய விரிவுரையாளர்கள், கல்வி கற்ற மாணவர்கள், அங்கு பணியாற்றிய ஊழியர்கள் என்பவர்கள் என அநேகமாக எல்லோரையும் அறிந்திருந்ததுடன், அவர்களில் பெரும்பாலோனோருடன் தொடர்பும் கொண்டிருந்தேன். அப்படியானவர்களில் ஒருவர்தான் செல்வி.
அத்துடன், அங்கு கல்வி கற்ற முற்போக்கான மாணவர்களில் ஒருவராகவும் செல்வி இருந்ததினால், அவருடன் சற்று அந்நியோன்யமான உறவும் இருந்தது எனலாம். அவரைப் பற்றி எழுதுவதானால் நிறைய எழுதலாம். (‘தேனீ’ இணையத்தளத்தில் புலிகளின் வதை முகாம்களில் எனது அனுபவம் பற்றிய சுமார் 1000 பக்கங்கள் அடங்கிய எனது கட்டுரைத் தொடரில் செல்வி பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன்) தற்போதைய இந்த எழுத்தில் செல்வியுடனான எனது இறுதிச் சந்திப்பு பற்றி மட்டும் சுருக்கமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.
செல்வி புலிகளால் கடத்திச் செல்லப்பட்டது ஒரு மாலை நேரம் என நினைவில் உள்ளது. அன்றைய தினம் செல்வி மிகுந்த பதட்டத்துடன் யாழ் பல்கலைக்கழக பெண்கள் விடுதிக்கு முன்னால் இருந்த எனது கடைக்கு வந்தார். (பல்கலைக்கழக முன் நுழைவாசலுக்கு முன்னால் இருந்த எனது கடையை இந்திய அமைதிப்படை பீரங்கித் தாக்குதல் நடத்தி 1987 ஒக்ரோபர் 10ஆம் திகதி தகர்த்துவிட்டதால் நான் பெண்கள் விடுதிக்கு முன்னால் ஒரு கட்டிடத்துக்கு எனது கடையை இடம் மாற்றியிருந்தேன்)
என்னிடம் வந்த செல்வி, அப்போது கடையில் ஒருவரும் இருக்காத காரணத்தால், தனது துவிச்சக்கர வண்டியை ஒருபக்கம் நிறுத்திவிட்டு, ‘மணியண்ணை ஒரு விசயம் நடந்து போச்சு’ என பதட்டத்துடன் கதையை ஆரம்பித்தார். நான் அவரை ஆச்சரியத்துடனும் கேள்விக்குறியுடனும் நோக்கியதுடன், ‘என்ன நடந்தது?’ என வினவினேன்.
‘தில்லையை கம்பசுக்குப் பின்னாலை வைச்சு புலிகள் பிடித்துக் கொண்டுபோய் விட்டாங்கள்’ எனச் சொன்னார். அத்துடன் ‘என்னையும் பிகடிக்க வருவாங்களோ எண்டு பயமாயிருக்கு’ என்றும் சொன்னார்.
எனக்குத் திகைப்பாய் போய்விட்டது. ‘தில்லை’ என்றழைக்கப்படும் தில்லைநாதன் யாழ் பல்கலைக்கழத்தில் பட்டப்படிப்பை முடித்த பின்னர், வவுனியா பாவற்குளம் நாலாம் யூனிற்றில் உள்ள ஒரு பாடசாலையில் படிப்பித்துக் கொண்டிருந்தார். அவர் செல்வி போன்றவர்களின் நெருங்கிய தோழராக இருந்ததுடன், எனது தோழராகவும் இருந்தார். எனவே எனது மனம் அவரது நிலையை எண்ணி துக்கத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்ந்தது.
‘நீங்கள் இப்பொழுது என்ன செய்யப் போகிறீர்கள்?’ என செல்வியிடம் கேட்டேன்.
‘நான் என்ரை றூமிலை போய் இருக்கப் போறன். என்னைப் பிடிக்க வந்தால் அங்குள்ள சனங்கள் விடாது’ என செல்வி நம்பிக்கையுடன் கூறினார்.
‘நீங்கள் உங்கள் அறைக்குப் போகாதையுங்கோ. அவங்கள் சனங்களை வெருட்டிப்போட்டு உங்களைப் பிடித்துக் கொண்டுபோகப் பாப்பாங்கள். கொஞ்ச நாளைக்கு வேறை எங்கையாவது மாறி நில்லுங்கோ’ என செல்வியிடம் கூறினேன்.
ஆனால் செல்வி எதுவும் கூறாமல் தனது அறைக்குச் சென்றுவிட்டார். அவர் பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில் மிகவும் ஒடுக்கப்பட்ட மக்கள் வசக்கும் ஆத்திசூடி வீதிப் பகுதியில் உள்ள ஒரு வீட்டில்தான் அறை எடுத்து தங்கியிருந்தார் எனக் கேள்விப்பட்டிருந்தேன்.
அவர் என்னுடன் உரையாடிச் சென்ற சில மணி நேரங்களில் புலிகள் செல்வியின் இருப்பிடத்துக்கு வந்து அயலிலுள்ள மக்களை மிரட்டிவிட்டு அவரைப் பலவந்தமாக பிடித்துச் சென்றதாகப் பின்னர் அறிந்தேன்.
அதன் பின்னர் 1991 டிசம்பர் 26ஆம் திகதி புலிகள் என்னையும் பிடித்துச் சென்று ஒன்றை ஆண்டுகள் தமது வதை முகாம்களில் வைத்து சித்திரவதை செய்த பின்னர் 1993 யூன் 6ஆம் திகதி விடுவித்தனர். இந்தக் காலகட்டத்தில் ஏற்கெனவே புலிகளால் பிடித்துச் செல்லப்பட்டிருந்த என்.எல்.எப்.ரி. மற்றும் பி.எல்.எப்.ரி. அன்ரன் (விவேகானந்தன்) மற்றும் தில்லை ஆகியோரை ஒரேயொரு தடவை நான் இருந்த வதை முகாம்களில் பார்க்க முடிந்தது. ஆனால் செல்வி பெண் புலிகளின் சித்திரவதை முகாம்களில் வைக்கப்பட்டிருந்ததால் பார்க்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை.
சமூக விடுதலைக்காகவும், மனித உரிமைகளுக்காகவும், இன விடுதலைக்காகவும் போராடிய இந்த மானிடப் பிறவிகளை தமிழ் சமூகம் இன்றுவரை நினைவு கூராமல் இருப்பதுதான் வேதனை அளிக்கும் விடயம். ஆயுதம் ஏந்திய தமது பிள்ளைகளுக்காக ‘காணாமல் போனோர் சங்கம்’ அமைத்துத்துப் போராடும் மக்கள், தெட்டத்தெளிவான முறையில் புலிகளால் கொல்லப்பட்டுவிட்ட இத்தகைய மனிதர்களுக்காகவும் போராடினால்தான் அவர்களது போராட்டத்தில் ஒரு தார்மீக நியாயம் இருக்க முடியும்.