1959 ஜனவரி 1 கியூபப் புரட்சியின் பின்னர் புரட்சி நாயகர்களின் ஒருவரான சேகுவேரா கியூபாவின் தேசிய வங்கியின் தலைவராகவும் தொழிற்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். புதிய கியூபாவுடன் சர்வதேச நாடுகளின் ராஜதந்திர உறவுகளை பலப்படுத்தும் முகமாக ஃபிடல் காஸ்ட்ரோவால் கியூபாவின் சர்வதேச பிரதிநிதியாகவும் சேகுவேராவே நியமிக்கப்பட்டு இருந்தார்.
1959 ஆகஸ்ட் 7அன்று சேகுவேராவின் இலங்கை விஜயம் நிகழ்கிறது. கியூபாவின் தொழிற்துறை அமைச்சர், கியூபாவின் சர்வதேச பிரதிநிதி என்ற வகையில் இந்தியா உட்பட பல ஆசிய நாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்தின் போதே றப்பர் பயிர் செய்கை முறைகள் பற்றி அறியும் நோக்கில் இலங்கைக்கும் சே விஜயம் செய்திருந்தார்.
ஆகஸ்ட் 08 ஹொரனையில் அமைந்துள்ள 1500 ஏக்கர் பரப்பளவிலான ‘யஹல கலே’ ரப்பர் தோட்டத்தை பார்வையிட சேகுவேரா சென்றுள்ளார். அப்போது அங்கு தோட்டப் பராமரிப்பாளராக பணியாற்றிய டிங்கிரி மஹத்தயா சே குவேராவை சந்தித்த விரல்விட்டு எண்ணக்கூடிய இலங்கையர்களில் உள்ளடங்குகிறார்.
நாளை தோட்டத்தை பார்வையிட முக்கியமான சிலர் வர இருப்பதால் பங்களாவை தயார் செய்து வைக்குமாறு தனக்கு முதலாளியால் கூறப்பட தேவையான எல்லா ஏற்பாடுகளையும் டிங்கிரி மஹத்தையா மேற்கொண்டுள்ளார். அடுத்தநாள் காலை இராணுவ உடைபோன்ற ஒரு உடையணிந்து சுருட்டுப் பற்றவைத்தபடி இருந்த வசீகரமான ஒரு மனிதர் தனது மெய்ப்பாதுகாவலர்கள், இலங்கை பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்போடு தோட்டத்திற்கு வந்ததை டிங்கிரி மஹத்தியாவின் நினைவுகள் சொல்கின்றன.
பங்களாவுக்கு வந்த விருந்தாளிகளுக்கு காலை உணவாக சான்விச், தேநீர், வாழைப்பழங்கள் வழங்கப்பட்டுள்ளன. நம்நாட்டு வாழைப்பழங்களை சேகுவேரா அதிகம் விரும்பி உண்டிருக்கிறார்.
பின்னர் தோட்டத்தை பார்வையிடவும் தோட்ட ஊழியர்களுடன் உரையாடுவதிலும் சில மணி நேரங்களை செலவழித்த சேகுவேரா இறப்பர் உற்பத்தி செய்யப்படும் முறையை மிக ஆர்வத்துடன் பார்வையிட்டுள்ளார். விடைபெறும் போது கியூபா சுருட்டுகள் அடங்கிய பெட்டியொன்று டிங்கிரி மஹத்தியாவுக்கு அன்பளிப்பாய் சேகுவேராவால் வழங்கப்பட்டுள்ளது.
தனது வருகையின் ஞாபகார்த்தமாக புரட்சி நாயகன் சேகுவேராவின் கரங்களால் யஹல கலே இறப்பர் தோட்டத்தில் மஹோகனி மரமொன்றும் நடப்பட்டது.