(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
போரின்றி அமைதியும் அமைதியின்றிப் போரும் பொருளற்றன. அமைதியின் தேவை பெரும்பாலும் காலங்கடந்தே உணரப்படுகிறது. உணரும்போது தாமதம் மிகுந்து அமைதியின் அனைத்துக் கதவுகளும் இறுகச் சாத்திக் கிடக்கலாம். அமைதி இலகுவில் இயலுவதில்லை; அவ்வாறு இயல்வது வெகுகாலம் நிலைப்பதில்லை. எனவேதான், கடவுளைக் கண்டாலும் அமைதியைக் காணவியலாது என்று சொல்வதுண்டு. அமைதியின் விலை மதிக்கவியலாதது. அது நிலைக்கும் போது உருவாகும் சூழலுக்கும் மகிழ்ச்சிக்கும் ஈடில்லை.
சின்னஞ்சிறிய நாடான சைப்ரஸ் உலகில் இன்னும் உயிர்ப்புடன் இருக்கும் பழைய முரண்பாடுகளில் பிரதானமானதைத் தன்னகத்தே கொண்டது. அந் நெருக்கடியைத் தீர்க்க, முரண்படுகின்ற இரு தரப்புத் தலைவர்களும் இப்போது சுவிற்ஸலாந்தில் பேசுகிறார்கள்.
இரண்டு ஆண்டுகளாகத் தொடரும் இப்பேச்சுகளில் இப்போது இரு தரப்பினரும் இணங்கிப் பாரிய முன்னேற்றம் கண்டிருக்கிறார்கள். எனவே, நிலையான அமைதி மீண்டும் வருவதற்கு வாய்ப்புள்ளது. சைப்ரஸில் அமைதியை எட்டின், மத்திய கிழக்கையும் ஐரோப்பாவையும் ஒருங்கே பிரதிநிதித்துவப்படுத்தும் நாடென்கிற வகையில் அது அடையாள ரீதியாக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
இந்தவாரம், கிழக்கு மேற்கான நீண்ட எல்லையால் பிரிந்த இரு தரப்பினரும் அமைதி வேண்டி, ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். அதேவேளை, இரு தரப்பினருக்கும் யுத்தம் மூளா வண்ணம் ஜக்கிய நாடுகள் சபையின் அமைதிகாக்கும் படைகள் சைபிரஸில் நிலைகொண்டுள்ளன. நாட்டின் இரு தரப்பினரையும் இணையாமல் தடுக்கும் சக்திகள் எவை என்ற கேள்வியை இது எழுப்புகிறது.
சைப்ரஸ், கிழக்கு மத்திய தரைக்கடலின் மூன்றாவது பெரிய தீவாகும். கிரேக்கம், துருக்கி, சிரியா, லெபனான், இஸ் ரேல், பாலஸ்தீனம், எகிப்து ஆகியவற்றை அண்டை நாடுகளாகக் கொண்ட சைப்ரஸ் குடியரசு, பூகோள ரீதியாக மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்தது.
மத்திய கிழக்கையும் ஐரோப்பாவையும் இணைக்கும் கடலில், அதன் அமைவின் பயனாக, இந்த நாடு வரலாறு நெடுகிலும் உலகை ஆண்ட பெரிய சக்திகள் அனைத்தினதும் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருந்தது. முதலில் எகிப்தியரதும் பாரசீகர்களதும் கட்டுப்பாட்டில் இருந்த இப்பகுதி, கி.மு 333 இல் மாவீரன் அலெக்சாண்டரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அடுத்து ரோமப் பேரரசு, அராபியர் எனப் பலரதும் கைகளுக்குள் சென்று, 16 ஆம் நூற்றாண்டில் துருக்கிய ஓட்டோமன் பேரரசின் கீழ் வந்தது. ஓட்டோமன் பேரரசின் வீழ்ச்சியோடு அதன் மூன்று நூற்றாண்டு கால ஆட்சி முடிவடைந்தது.
1878 ஆம் ஆண்டு துருக்கியுடன் பிரித்தானியர் எட்டிய உடன்படிக்கையின்படி, பிரித்தானியர் வசமான சைப்ரஸ் 1914 இல் பிரித்தானியாவின் பகுதியானது. சைப்ரஸின் சனத்தொகையில் 18 சதவீதமானோர் துருக்கியர்கள், 78 சதவீதமானோர் கிரேக்கர்கள்.
துருக்கியர்கள் சுன்னி முஸ்லிம்கள்; கிரேக்கர்கள் சம்பிரதாய கிறிஸ்தவர்கள். பிற கிறிஸ்தவ சிறுபான்மையினர், ஜிப்ஸிகள், ஆர்மேனியர்கள் ஆகியோரும் சைப்ரஸில் வாழ்கிறார்கள்.
பிரதான சிறுபான்மையினரான சைப்ரஸ் துருக்கியர்கள், சைப்ரஸ் ஜனாதிபதி மக்காரியோஸ் பாதிரியாரின் கடும்போக்காலும் சைப்ரஸைக் கிரேக்கத்துடன் இணைக்கும் திட்டத்தாலும் அதிருப்தியோடிருந்தனர். இந்நிலையில் 1963 இல் தொடங்கிய இனக்கலவரத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் ஐ.நா அமைதிகாக்கும் படைகள் 1964 இல் சைப்ரஸில் நிலைகொண்டன. எனினும், இனக்கலவரம் 11 ஆண்டுகள் தொடர்ந்தது.
துருக்கிய கிரேக்கர்களுக்கு ஆதரவாக கிரேக்க ஆட்சியும் சைப்ரஸ் துருக்கியர்களுக்கு ஆதரவாக துருக்கியின் ஆட்சியும் இருந்து இனப்பகையை வளர்த்தன. இதன் விளைவாக 25,000 சைப்ரஸ் துருக்கியர்கள் இடம்பெயர்ந்தார்கள்.
கிரேக்கத்தில் இராணுவ ஆட்சிக் காலத்தின் பிற்பகுதியில் சைப்ரஸ் ஜனாதிபதியாக இருந்த மக்காரியொஸ் பாதிரியார், சைப்ரஸைக் கிரேக்கத்துடன் இணைக்கப்போவதாக அறிவித்தபோது, துருக்கிய சிறுபான்மையினரிடையே அது அச்சத்தை ஏற்படுத்தியது. 1974 இல் கிரேக்க இராணுவ ஆட்சியின் தூண்டுதலில் சைப்ரஸில் நடந்த இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு, நீண்டகாலமாக சைப்ரஸைப் பிரிக்கக் காத்திருந்த துருக்கிக்கு வாய்ப்பானது.
இச்சூழ்நிலையைப் பயன்படுத்தி, 1974 ஆம் ஆண்டு, துருக்கியப் படைகள் சைப்ரஸ் தீவினுள் நுழைந்தன. துருக்கியர் பெரும்பான்மையாக வாழுகிற வடசைப்பிரஸ் துருக்கிய படைகளின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட பகுதியாயிற்று. இந்த ஆக்கிரமிப்புக்கான வசதியாக சைப்பிரஸ் நாட்டின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதற்கு 1960 இல் செய்யப்பட்ட உடன்படிக்கைகளுக்கு துருக்கியும் ஒரு பங்காளியாக இருந்தமை பயன்பட்டது.
கிரேக்க இராணுவ சர்வாதிகாரத்தின் நோக்கம் மக்காரியொஸின் நோக்கத்துக்கு உடன்பாடாக இருந்ததால் சைப்பிரஸின் சுதந்திரத்தைக் காப்பது என்ற வாதம் நியாயமாகத் தெரிய வாய்ப்பு இருந்தது. இச்சூழலில், விரைவாகவே சைப்ரஸ் இராணுவச் சதி தோற்றது. அதையடுத்து ஏழு வருட கிரேக்க இராணுவ ஆட்சியும் போனது.
துருக்கியின் சர்வாதிகார ஆட்சி, சைப்ரஸில் தன் இருப்பைத் தொடரும் நோக்கத்துடனேயே இருந்தது. கிரேக்க இராணுவ ஆட்சி போய், சைப்பிரஸை கிரேக்கத்துடன் இணைக்கும் பேச்சு ஓய்ந்த பின்பும் துருக்கியப் படைகள் தொடர்ந்தும் அங்கு இருந்தமை அதை உறுதிப்படுத்தியது. 1983 ஆம் ஆண்டு ‘வட சைப்ரஸ் துருக்கிய குடியரசு’ அறிவிக்கப்பட்டது. இது துருக்கிய ஆக்கிரமிப்பைத் தொடர உதவியது. இதன் மூலம், சுதந்திர நாடென்றின் பாதுகாப்புக்காக அதன் அரசாங்கத்துடன் செய்த உடன்படிக்கைப்படியே துருக்கியப் படைகள் அங்கு இருப்பதாகக் கூறமுடிந்தது. எனினும், இன்றுவரை, துருக்கி மட்டுமே இக்குடியரசை அங்கிகரித்துள்ளது.
கெடுபிடிப் போரின் முடிவு, ஜேர்மனியை இணைத்தது போல, சைப்ரஸையும் இணைக்கும் என்ற எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் தோற்றம், இம்முரண்பாட்டுக்கு மேலுமொரு பரிமாணத்தைக் கொடுத்தது. ஒரு வலுவான கூட்டமைப்பாக ஐரோப்பிய ஒன்றியம் வளர்ந்ததால், அதில் இணைவது பயனுள்ளது என்ற கருத்து வலுத்தது.
சைப்ரஸும் கிரேக்கமும் துருக்கியும் ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கத்துவம் கோரின. இதை வாய்ப்பாக்கி ஐ.நா செயலாளர் நாயகம் கொபி அனான், 2003 இல் ஒரு தீர்வுத் திட்டத்தை முன்மொழிந்தார். திட்டத்தை ஏற்குமிடத்து, சைப்ரஸ் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணையலாம் எனப்பட்டது. ஆனால், ஐ.நா முன்வைத்த தீர்வுத்திட்டம் சர்வசன வாக்கெடுப்பில் தோற்றது. எனினும், 2004 இல் சைப்ரஸ் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்தது.
இன்று, இச்சிக்கல் மீண்டும் உலகின் கவனத்துக்குட்பட்டிருக்கிறது. 1.1 மில்லியன் மக்கள் தொகையை உடைய சைப்ரஸ் தீவின் பிரச்சினையை, இதுவரை ஏன் தீர்க்கவியவில்லை என்பது ஒரு புதிர் தான். இருமைய உலகின் தேய்வில் தொடங்கிய நெருக்கடி, ஒருமைய உலகின் உருவாக்கத்தின் பின்பும் தொடர்ந்தது.
இன்று, பல மைய உலகிலும் உயிர்ப்புடன் இருக்கும் இந்நெருக்கடியின் சிக்கலான தன்மையையும் அதையொட்டிய முரண்படும் நலன்களையும் எடுத்துக்காட்டுகின்றது.
அமெரிக்காவோ, ஐரோப்பிய நாடுகளோ இதில் எதுவும் செய்ய இயலாதவாறு துருக்கியும் கிரேக்கமும் ‘நேற்றோ’ இராணுவக் கூட்டமைப்பில் உள்ளன. அதைவிட, துருக்கி நீண்ட காலமாக அமெரிக்காவின் மிக நெருங்கிய கூட்டாளியாகவும் உள்ளது. இராணுவ ஆட்சிக்குப் பிந்திய ஜனநாயக கிரேக்கம், பாலஸ்தீனம் உட்படப் பல விடயங்களில் அமெரிக்காவுக்கு முரணான நிலைப்பாடுகளை எடுத்து வந்துள்ளது.
கிரேக்கமும் சைப்ரஸூம் இன்று ஐரோப்பிய ஒன்றியத்திலுள்ளன. துருக்கி சீர்திருந்திய நவீன இஸ்லாமிய நாடாகி, அதாவது ஐரோப்பிய நாடுகளின் விழுமியங்கள் பலவற்றை உள்வாங்கிய நாடாகி, ஐரோப்பாவின் ஒரு பகுதி போல, அதன் சர்வதேச அரசியல் செயற்பாடுகள் அமைந்தாலும், அதன் முஸ்லிம் பெரும்பான்மை பற்றியும் இஸ்லாமிய அரசியல் எழுச்சி வாய்ப்புப் பற்றியும் பல ஐரோப்பிய ஆட்சியாளர்கள் அஞ்சுகின்றமை ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கி இணையத் தடையாயுள்ளது.
அதைவிட, 19 ஆம் நூற்றாண்டில் மேற்கு ஆசியாவிலும் ஐரோப்பாவின் தென் கிழக்கிலும் துருக்கிய ஆதிக்கத்தின் நினைவுகளும் துருக்கியை இணைப்பதற்குத் தடையாக உள்ளன. எனினும், குர்தியர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களும் நாட்டின் அடக்குமுறை ஆட்சியின் பிற மனித உரிமை மீறல்களும் பற்றிய குற்றச்சாட்டுகளே துருக்கியை இணைக்கத் தடையான காரணங்களாகக் கூறப்படுகின்றன. எனவே, துருக்கி ஓர் அவசியமான இராணுவக் கூட்டாளியாகவும் தவிர்க்க வேண்டிய ஒரு சமூகப் பொருளாதாரப் பங்காளியாகவும் உள்ளது.
துருக்கியின் பின்தங்கிய பொருளாதாரம் காரணமாக மேற்கு ஐரோப்பாவில், குறிப்பாக ஜேர்மனியில், ‘விருந்தாளி உழைப்பாளராக’ உள்ள அயல்நாட்டோரில் துருக்கியரே பெரும்பான்மையினராவர். அங்கும், ஒருபுறம் அவர்களது மலிவான உழைப்பு அவசியம். ஆனால், அவர்களை தங்களுக்குள் ஒரு பகுதியினராக ஏற்க இயலாது என்ற இரண்டக நிலையே உள்ளது.
துருக்கி வட சைப்ரஸில் தனது படைகளை வைத்திருப்பதன் மூலம், தன்னைப் பிராந்திய வல்லரசாகக் காட்ட முனைகிறது. மத்திய கிழக்கில் முடிவில்லாத ஒரு போரில் சிக்கித் தவிக்கும் அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளியாகச் செயற்படும் துருக்கியின் அரசியல் நிலவரம் சிக்கலுக்குட்பட்டுள்ளது.
அண்மையில் தோற்ற இராணுவப் புரட்சி ஜனாதிபதி எர்டோகன் மீதான நம்பிக்கையீனத்தை வெளிப்படுத்துவதால், துருக்கி, இப்போது சைப்ரஸில் நடப்பன பற்றிப் பொறுமை காக்கும் கட்டாயத்திலுள்ளது. மறுபுறம், முடிவில்லாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் கிரேக்கம், சைப்ரஸில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில் இல்லை. அதைவிட, சைப்ரஸ் துருக்கியர்கள், துருக்கிய படைகளின் இருப்பையோ துருக்கிய ஆதிக்கத்தையோ விரும்புவோரல்ல. இவை தீர்வை நோக்கிய நகர்வுக்கு வாய்ப்பானவை.
இன்னும் சில முக்கிய நலன்களும் பேச்சுவார்த்தைகளை முன்தள்ளுகின்றன. அவற்றில் முதன்மையானது, அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவினுடையது. பதவியேற்ற ஆண்டிலேயே சமாதான நோபல் பரிசை வென்ற அவர், தனது பதவிக்காலத்தில் ஓரிடத்திலும் சமாதானத்தை ஏற்படுத்தவில்லை. எனவே, சைப்ரஸில் தீர்வு ஏற்படுமாயின் அதைச் சமாதானத்துக்கான தனது பங்களிப்பாக்கலாம் என்பது அவரது எதிர்பார்ப்பு.
இப்போது நடக்கும் பேச்சுக்களை விடாமுயற்சியுடன் முன்தள்ளுபவர், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன். ஓபாமாவைப் போன்று, இவரும் தனது பதவிக்காலத்தில் சமாதானத்துக்குப் பங்களியாதவர்; கொலம்பிய அரசாங்கமும் ‘பார்க்’ போராளிகளும் எட்டிய உடன்பாட்டைத் தனது வெற்றியாகக் கொண்டாட, எதிர்பார்த்தவரை அதை மறுதலித்த சர்வசன வாக்கெடுப்பு ஏய்த்தது. பதவிக்காலம் முடியும் தறுவாயில் சைப்ரஸ் மட்டுமே அவரது நம்பிக்கை.
‘பிரெக்ஸிட்’டைத் தொடர்ந்து பிற ஐரோப்பிய நாடுகளிலும் ஒன்றியத்திலிருந்து வெளியேறும் கோரிக்கைகள் தோன்றியுள்ளதால் எதிர்காலத் தேவைப்பாடுடைய, பொருத்தமான ஒன்றியமாக ஐரோப்பிய ஒன்றியத்தைத் தக்க வைக்க ஐரோப்பிய ஒன்றியம் போராடுகிறது. இந்நிலையில் ஒன்றியத்துக்குள்ளேயே உள்ள ஒரு நெருக்கடியைத் தீர்க்க இயலுமாவது அதன் நம்பகத்தை அதிகரிக்கும்.
சுவிற்ஸலாந்து தன்னை மீண்டுமொரு முக்கிய அமைதித் தேசமாக உருவகிக்க விரும்புகிறது. அவ்வகையில் தனது ‘அதிகாரப் பகிர்வு’ முறை, ஜனநாயகமான, நியாயமான, ஏற்கக்கூடிய முறை என்பதை சுவிற்ஸலாந்துக்கு வெளியே செயற்படுத்தி வெல்வது அவசியம். எனவே, அது முன்மொழியும் தீர்வு மாதிரிக்கான சோதனைக் களமாக சைப்ரஸ் அமைகிறது.
பல்வேறு நலன்கள் சைப்ரஸை அமைதி நோக்கி நகர்த்தினும் தீர்வை எட்டுவது எளிதல்ல. நிலப்பங்கீடு, இடம்பெயர்ந்தோரை மீள் குடியமர்த்தல், அவர்களது சொத்துக்கள், சைப்ரஸ் துருக்கியர்களுக்கு நட்டஈடு, துருக்கிய இராணுவ பிரசன்னத்தை நீக்கல் என்பன முக்கியமானவை. இவை அனைத்தும் எளிதில் உடன்படக்கூடியனவல்ல.
அமைதி பற்றிப் பேசலாம்; அமைதி பற்றிப் பேசியவாறே போருக்கு ஆயத்தமாகலாம்; அமைதியின் பேரால் போரை நடாத்தலாம். ஏனெனில், அமைதி வேண்டியவாறு விளங்க இயலுமானது. ஆனால், நின்று நிலைக்கக்கூடிய அமைதி எளிதில் அமைவதல்ல என்பதை சைப்ரஸ் மீண்டும் உணர்த்தும்.