– ஜீவா.
இலங்கை தமிழ் சமூகம் குறிப்பாக யாழ்பாண சமூகத்தின் விழுமியங்கள் ‘கழுதை தேய்ந்து கட்டெறும்பாகி’ அதுவும் தேய்ந்து சூனியமாகியிருக்கிறது.
ஒருவருடைய கருத்தை என்ன? அபிப்பிராயத்தைக் கூட செவிமடுக்கமுடியாத முண்டங்களாகிவிட்டது. அப்படியிருந்தும் மாற்று வழிகளில் ஏதாவது ஒரு விடயம் முகிழ்புப் பெறுமாயின் அதனை கருக்கிவிடுவதில் தமிழ் சமூகத்துக்கு ஈடு இணை எதுவும் இல்லை.
இவ்வாறான வன்முறையான செயற்பாடுகளை கண்டுகொள்ளாமல் விடுவதுமட்டுமல்ல இருட்டடிப்புச் செய்து கருக்கிவிடும் – வக்காலத்து வாங்கும் யாழ்பாணிய ஊடகங்களின் பத்திரிகா தர்மத்துக்கு எவ்வளவு கொடுத்தாலும் தகும்.
மேலும் தமிழ் தேசியப் பால் குடிக்கும் மாற்று, முற்போக்கு சிந்தனையாளர்கள் என்று பறைசாற்றும் ஜாம்பவான்கள் இதற்கெல்லாம் பொங்கி எழுமாட்டார்கள். அதேவேளை இனவாத இலங்கை அரசாங்கம் இதே செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தால் எப்படி பொங்கியிருப்பார்கள்?
யாழ்ப்பாணத்தில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாவில் யூட் ரட்ணம் இயக்கிய டீமன்ஸ் இன் பரடைஸ் திரையிடப்படும் என அறிவித்தல்கள் வெளியாகிய நிலையில் சமூகத்தின் அழுத்தம் காரணமாக இத் திரைப்படம் திரையிடப்பட மாட்டாது என இத் திரைப்பட விழாவுக்கு பொறுப்பாக இருப்பவரிடம் இருந்து அறிவித்தல் வெளியாகிறிருக்கிறது.
தங்களை ‘சமூகம்’ என்று அடையாளப்படுத்திய ஒரு கும்பலின் அழுத்தம் காரணமாக “சொர்க்கத்தில் சாத்தான்கள்” திரைப்படம் திரையிடப்படமாட்டாது என அதற்கு பொறுப்பான அதுவும் தென்னிலங்கை சார்ந்த சகோதரர்களால் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சமூகம் என்பது கடல், சமுத்திரம். ஆழமும் பரந்து விரிந்த பார்வையும் உள்ளது. அதற்குள் ஆயிரமாயிரம் கருத்துக்களையும் அர்த்தங்களையும் என்றுமே சலனமற்ற தன்மையையும் காணலாம். அது உணர்சிகளின்றி உணர்வுகளால் ஆனது. அதன் பெறுமதி தெரியாத சில சருகுகள் இணைந்து இத் திரைப்படத்தை திரையிடாது தடுத்தது காலத்தின் கேவலம். அதற்கு யாழ்பாணிய பத்தரிகைகள் சான்று.
கருத்தை கருதுக்களால் மோத தகுதியற்ற சமூகம் குறைந்த பட்சம் கருத்தை அபிப்பிராயங்களால் கூட மோத தகுதியற்ற சமூகம் வன்முறை சார்ந்த, வன்முறையான சமூகமாகவே என்னென்றும் நிலைக்கும்.
இது வெளிப்படையாகவே தெரிந்த ஒன்றுதான். முள்ளிவாய்காலில் சாகடிக்கப்பட்ட சாத்தானை காலத்துக்கும் காவித்திரிவதுதான் தமிழ் சமூகத்துக்குக் கிடைத்த சாபக்கேடு.
காலத்துக்குக் காலம் சாத்தானை காவித்திரியும் சாபக்கேடுளை முகம் கொடுக்க முடியாத முண்டமாவும் பிண்டமாகவும் சீரழிந்த வாழ்கையில் உளலும் மனங்களோடு மனங்களாக!
நமது காலாசாரம், நமது தேசம் இவை காட்டுகின்ற விசயங்கள் மட்டுமே சரியானவையாக இருக்கும் என நினைப்பது தவறு. அப்படி இருக்கும் போது தனிமனித வழிபாட்டில் சுய இன்பம் காணும் சமூக விழுமியங்களில் ஒரு சிறு புல்லையேனும் வளர்க்க முடியாது.