ராஜபக்ஷர்களை நாட்டின் காவலர்களாகவும் அபிவிருத்தியின் நாயகர்களாகவும் முன்னிறுத்தி, ஆட்சிக்கு கொண்டு வந்தவர்களில் கம்மன்பிலவும் முக்கியமானவர். ஆனால், இன்றைக்கு அவர், ஆயுத மோதல்கள் குறிப்பாக, விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் நாடு எதிர்கொண்ட நெருக்கடியைக் காட்டிலும் ஆபத்தானதொரு நிலை ஏற்பட்டிருப்பதாக குறிப்பிடுகின்றார்.
அத்தோடு, “எரிபொருட்கள், மருந்துப் பொருட்களை என்பவற்றை அத்தியாவசிய தேவையாக முன்னிறுத்தி, அரசாங்கம் இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாறாக, அப்பிள், தோடம்பழங்களை அத்தியாவசியமாகக் கருதி இறக்குமதி செய்ய வேண்டியதில்லை..” என்றும் தெரிவித்திருக்கின்றார்.
கம்மன்பில, மேற்கண்டவாறு கூறிக் கொண்டிருந்த நாளில்தான், கொழும்பு உள்ளிட்ட நாட்டிலுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்னாலும், வாகன வரிசை மணித்தியாலக் கணக்கில் நீண்டிருந்தது. அதுபோல, நாடு ஏழரை மணிநேர மின்வெட்டுக்குள் செல்வதான அறிவிப்பும் அரசாங்கத்தால் விடுக்கப்பட்டது.
நாட்டின் மின்சாரத் தேவையின் பெரும்பகுதி, அனல் மின்நிலையங்கள் மூலமே நிவர்த்தி செய்யப்படுகின்றது. அனல் மின்நிலையங்களை இயக்குவதற்கு டீசல் அவசியமானது. ஆனால், நாட்டில் நான்கு நாள்களுக்குத் தேவையான டீசலே கையிருப்பில் இருப்பதாக, துறைசார்ந்த அமைச்சரான கம்மன்பில கூறியிருக்கின்றார். இவ்வாறான நெருக்கடி நிலை நீடிக்குமாக இருந்தால், நாடு முழுநாளும் மின்வெட்டை சந்திக்க வேண்டியேற்படும்.
வடக்கு – கிழக்கில் ஆயுதப் போராட்டம் நீடித்த காலப்பகுதியில் முழுநேர மின்வெட்டு இருந்தது. அதாவது அரசாங்கம், புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்கு மின்சாரத்தை வழங்குவதை முழுவதுமாகத் தடை செய்திருந்தது. பொருளாதாரத் தடையின் ஒருபகுதியாக, மின்சாரத் தடையும் அமலாக்கப்பட்டது. அதனால், வடக்கு -கிழக்குப் பகுதிகளில் வாழ்ந்த பெருமளவான மக்களுக்கு மின்தடை பழக்கமானது.
ஆனால், தென் இலங்கை மக்களுக்கு இவ்வளவு நீண்ட நேர மின்வெட்டு புதியது. அவர்களால் அதைச் சமாளிக்கவே முடியவில்லை. கடந்த 30 ஆண்டுகளில், இவ்வளவுக்கு நீண்ட மின்வெட்டு அமலாகவில்லை என்று தென் இலங்கை மக்கள் குறைப்படுகிறார்கள்.
ராஜபக்ஷர்கள் நாட்டின் பொருளாதாரத்தை செங்குத்தாகத் தூக்கி நிறுத்துவார்கள் என்கிற தோரணையில், ஊடகங்களில் முழங்கிய கோட்டாவின் ‘வியத்கம’ நிபுணர்களைக் காணவே கிடைக்கவில்லை. அவர்களில் பலரும், நாட்டிலிருந்து வெளியேறிச் சென்றுவிட்டார்கள்.
ஆட்சி, அதிகாரத்தை அடைவதற்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் கருவியாக முன்னெடுக்கும் தரப்புகள், நாட்டை எங்கே கொண்டு சென்று நிறுத்துவார்கள் என்பதற்கு, ராஜபக்ஷர்களும் அவர்களுக்காக ஒத்தூதிய தரப்புகளும் சான்று.
நாடு இன்று எதிர்கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடிகளுக்கு, முன்னைய அரசாங்கங்களின் முறையற்ற பொருளாதாரக் கொள்கைகளும் ஆட்சியுமே காரணம் என்று, ஜனாதிபதி கோட்டா குற்றஞ்சாட்டுகின்றார். அவர் அப்படி குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் போது, அருகில் மஹிந்த அமர்ந்திருக்கின்றார்.
2005 முதல் 2015 வரையான சுமார் பத்து ஆண்டுகளை மஹிந்த தலைமையிலான ராஜபக்ஷர்கள் ஆட்சி செலுத்தினார்கள். அந்த ஆட்சியில் மஹிந்தவுக்கு அடுத்த அதிகார நிலையில் கோட்டா, பாதுகாப்புச் செயலாளர் எனும் பொறுப்பில் இருந்தார். ஒரு கட்டத்தில் நகர திட்டமிடல் அமைச்சையும் அவர் தனக்கு கீழ் கொண்டு வந்தார்.
ராஜபக்ஷர்களின் முதல் ஆட்சிக் காலத்தில், அதிக நிதி ஒதுக்கப்பட்ட துறைகளாக பாதுகாப்பு அமைச்சு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, நகரத் திட்டமிடல் அமைச்சு ஆகிய இருந்தன. இந்த அமைச்சுகளை கோட்டா, பசில் ஆகியோர் கையாண்டார்கள்.
இந்தத் துறைகளிலேயே அதிக ஊழல் இடம்பெற்றதான குற்றச்சாட்டுகளும் உண்டு. ஆனால், அவற்றையெல்லாம் மறந்து நின்று கோட்டா, முன்னைய ஆட்சிகளில் பழியைப்போட்டு தப்பிக்க நினைக்கிறார்.
கோட்டாவின் முன்னைய ஆட்சிகள் மீதான பழிசுமத்தல் குறித்து, கேள்வி எழுப்பியிருக்கிற மனோ கணேசன், “..கப்பல்களே வராத ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தையும் விமானங்களே பறக்காத ஹம்பாந்தோட்டை விமான நிலையத்தையும் போட்டிகளே இடம்பெறாத சர்வதேச கிரிக்கெட் மைதானத்தையும் அமைத்தது யார்? கமிஷன்களுக்காக ராஜபக்ஷர்களே அமைத்தார்கள்…” என்கிறார்.
மனோ கணேசனின் கேள்வியை யாராலும் தட்டிக்கழிக்கவே முடியாது. ராஜபக்ஷ ர்களின் காலத்தில், யானைகள் அதிகம் வசித்த ஹம்பாந்தோட்டைக் காடுகளை அழித்து, அபிவிருத்தி என்கிற போர்வையில் பில்லியன் கணக்கில் நிதியை வீணடித்திருக்கிறார்கள். பொருளாதார அறிவு கிஞ்சித்தேனும் இருந்திருந்தால், ஹம்பாந்தோட்டையில் இவ்வாறான திட்டங்களை யாரும் முன்னெடுத்து இருக்கமாட்டார்கள்.
ஒரு தெளிவுக்காக, ஹம்பாந்தோட்டை விமான நிலையத்தை வெளிநாட்டுப் பயணங்களுக்காக அல்லது பொருட்கள் ஏற்றுமதி – இறக்குமதிக்காக, எந்தப் பகுதி மக்கள் அதிகமாக பயன்படுத்துவார்கள் என்று பார்த்தால், ஹம்பாந்தோட்டை, அம்பாறை உள்ளிட்ட மாவட்ட மக்களைக் கொள்ளலாம்.
நாட்டின் பொருளாதார மத்திய நிலையங்களும் தொழிற்போட்டைகளும் அதிகமுள்ள மேற்கு வலயம், மத்திய வலயம் உள்ளிட்டன எந்தவிதத்திலும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினதோ, விமானநிலையத் தேவைகளையோ பெறத் துணியாது.
ஏனெனில், கொழும்போடு ஒப்பிடுகையில் ஹம்பாந்தோட்டைக்கான போக்குவரத்துச் செலவு அதிகமானது. அதுபோல பயண நேரமும் விரயமாகும். இவற்றையெல்லாம் சிந்திக்காது, ராஜபக்ஷர்களாகிய தங்களின் சொந்த மாவட்டம் என்கிற ஒரே காரணத்துக்காகவும், ஊழல் செய்வதற்காகவுமே ஹம்பாந்தோட்டையில் துறைமுகமும் விமானநிலையமும் அமைக்கப்பட்டிருகின்றன.
முதலீடு என்பது, வருமானம் ஈட்டும் வழிமுறைகளை அடையாளம் கண்டு செய்யப்பட வேண்டியது. இல்லையென்றால், நாட்டு மக்கள் மீது தேவையற்ற பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தும்.
ராஜபக்ஷர்களின் கடந்தகால ஆட்சியில் வீண்விரயம் ஆக்கப்பட்ட இவ்வாறான பல நடவடிக்கைகள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றுக்காக எல்லாமும் சேர்த்து, மக்கள் நெருக்கடியை நாளாந்தம் சந்திக்க வேண்டியிருக்கின்றது.
அபிவிருந்தி அடைந்துவரும் நாடு என்கிற நிலையிலிருந்து, மூன்றாம் நிலையை நோக்கி நாடொன்று சென்று கொண்டிருப்பதற்கான தற்போதையை உதாரணமாக இலங்கையை சொல்லலாம். ஏனெனில், மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு என்கிற காரணங்களால் விவசாயம், மீன்பிடி தொடக்கம் நாட்டின் அனைத்துத் தொழிற்றுறைகளும் முடங்கிப் போயிருக்கின்றன.
இவ்வாறான நிலையில், வேலை நாள்களின் எண்ணிக்கையை நான்கு நாள்களாகவும், அதிலும் காலை 09 மணி தொடக்கம் 03 மணி வரையான ஆறு மணி நேரமாக சுருக்கவும் அரசாங்கத்திடம் மத்திய வங்கி ஆளுநர் கப்ரால் ஆலோசனை வழங்கி இருக்கின்றார்.
உலகத்திலேயே அதிக விடுமுறை உள்ள நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னிலையில் இருக்கின்றது. அப்படியான நிலையில், வேலை நாள்களையும் மணி நேரத்தையும் குறைக்கும் ஆலோசனையை, எவ்வாறான அணுகுமுறையாக எடுத்துக் கொள்வது என்று தெரியவில்லை.
இப்படியான சிந்தனைக்காரர்கள்தான் ராஜபக்ஷர்களைச் சுற்றி இருக்கிறார்கள். இது தொடர்ந்தால் சோமாலியா, எத்தியோப்பியாவின் நிலையை இலங்கை அடைவதற்கு அதிக நாள்கள் எடுக்காது.