ஜனவரி 10 : மலையகத் தியாகிகள் தினமாகப் பிரகடனம்

பேரினவாதிகள் தோட்ட நிலங்களை கூறுபோட முற்பட்டதை எதிர்த்து களமாடி நெஞ்சை நிமிர்த்தி துப்பாக்கி சன்னங்களை தனது மார்பங்களில் தாங்கி டெவோன் தோட்டத்திலே மாண்டுபோன ‘மாவீரன்’ ‘மலையக தியாகி’ சிவனு லெட்சுமணனின் கல்லறையில் நாளை (15.12.2019) காலை 10 மணிக்கு மலையகத்துக்கான தமது இன்னுயிரை நீர்த்த மலையக தியாகிகளை நினைவுக்கூறும் தினத்தை பிரகடனப்படுத்தவுள்ளோம்.

1940ஆம் ஆண்டு முல்லோயா தோட்டத்தில் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்கு (40 சதம்) போராடி உயிர்நீத்த மலையக தியாகியாகிய முல்லோயா கோவிந்தனின் நினைவுதினம் எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதி அனுஸ்டிக்கப்படவுள்ளது. அதன் நிமித்தமே நாளைய நிகழ்வு டெவோன் தோட்டத்தில் சிவனு லெட்சுமணனின் கல்லறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முல்லோயா கோவிந்தனின் நினைவுதினமான ஜனவரி 10ஆம் திகதியை ‘மலையக தியாகிகள்’ தினமாக நாளை பிரகடனப்படுத்தி அதனை ஒவ்வொரு ஆண்டும் அனுஷ்டிக்க உள்ளோம்.
இந்த புரட்சிகரமான நிகழ்வில் மலையக இளைஞர்களை கலந்துகொள்ளுமாறு அழைப்பு விடுப்பதுடன்,
மலையக உரிமைக் குரலின் தலைவர் ஆர்.சனத் ராமசந்திரனின் பாரிய முயற்சியால் இந்த வரலாற்று நாள் உதயமாகியுள்ளதென்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்……….
ஊடகவியாளர் ஆர்.சனத் இன் கட்டுரை கீழ் இணைக்கப்பட்டுள்ளது……………

உண்மை என்றுமே மரணிக்காது. என்றாவது ஒரு நாள் தனக்கே உரிய பாணியில் அது வீறுகொண்டெழும். அப்போது போலிகளெல்லாம் புறமுதுகு காட்டி தலைதெறிக்க ஓடும். அந்த கண்கொள்ளா காட்சியே கால மாற்றமென விளிக்கப்படுகின்றது.
அதேபோல்தான் மக்களையும் எந்நாளும் ஏமாற்றி அடக்கி ஆள முடியாது. என்றாவது ஒருநாள் அநீதிக்கு எதிராக பொங்கியெழுந்து – நீதிக்காகவும், உரிமைக்காகவும் ஓரணியில் திரண்டு விண்ணதிர கோஷம் எழுப்புவார்கள். இதுவே சமூக மாற்றத்துக்கான ஆரம்பப் புள்ளியாக பார்க்கப்படுகின்றது.
இதன்படி எமது மலை மண்ணிலும் மக்கள் எழுச்சிக்கான அறிகுறிகள் பிரகாசமாகத் தென்படுகின்றன. வெகு விரைவிலேயே அது வெற்றிநடைபோடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. அது சமூக விடுதலைக்கான பயணமாகவும் அமையலாம்.
இன்று மட்டுமல்ல இதற்கு முன்னரும் மலையக மக்களின் விடுதலைக்காக – விடிவுக்காக போராடுவதற்கு பலரும் முன்வந்தார்கள். ஆனால், சிற்றின்ப அரசியலுக்காக, திட்டமிட்ட அடிப்படையில் போராளிகள் திசைதிருப்பட்டனர்.
ஏன்…! மலையக மக்களின் உரிமைகளுக்காக போராடி உயர்நீத்தவர்களைக்கூட இன்று எவரும் நினைவு கூருவதில்லை. மலையகப் போராளிகளில் ஓரிருவரைக்கூட பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.
இன்று காணி உரிமை தொடர்பில் பிரமாண்டமான அறிவிப்புகள் விடுக்கப்பட்டுவருகின்றன. ஆனால், காணி உரிமைக்காக போராடி வீரமரணடைந்த சிவனு லெட்சுமணனை உங்களில் எத்தனைப் பேருக்கு தெரியும்?
தேயிலை நிலங்கள் சுவீகரிப்பு – 1977
1977 ஆம் ஆண்டில் மலைநாட்டில் தேயிலை நிலங்களை சுவீகரித்து, சிங்களக் குடியேற்றங்களை அரங்கேற்றுவதற்கு அப்போதைய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிள்ளையார் சுழிபோட்டது.
1974 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சம் உட்பட மேலும் சில காரணங்களால் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிமீது நாட்டு மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் 1977 ஆம் ஆண்டு ஜுலை 21 ஆம் திகதி பொதுத்தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
எனவே, தேர்தலுக்கு முன்னர் காணிகளை சுவீகரிப்பதில் சுதந்திரக்கட்சி அரசு, கங்கணம் கட்டி செயற்பட்டது. இதற்கமையவே 1977 இல் மஸ்கெலிய தேர்தல் தொகுதியில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் காணி சுவீகரிப்பதற்கு திட்டமிடப்பட்டது. அளவீட்டுப் பணியும் ஆரம்பமானது.
குறித்த பகுதியில் புதிய குடியேற்றங்கள் உருவாகினால் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு வேலைபறிபோகும் அபாயம் ஏற்பட்டது. எனவே, இதற்கு எதிராக தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்தனர். மக்களை ஓரணியில் திரட்டி போராட்டத்துக்கான தலைமைத்துவத்தை தொழிலாளர் தேசிய சங்கம் வழங்கியது.
ஆனாலும், இது விடயத்தில் முன்வைத்த காலை பின்வாங்குவதற்கு சு.க. அரசு, ஆரம்பத்தில் மறுத்தது. தொழிலாளர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் காணி சுவீகரிப்பு வேட்டையில் தீவிரமாக இறங்கினர் காணி சீர்திருத்த ஆணைக்குழு அதிகாரிகள். நுவரெலியா மாவட்டத்தில் பிரதான தோட்டங்கள்மீது அவர்களின் பார்வை திரும்பியது.
இதனால், மே முதலாம் திகதி முதல் நுவரெலிய மாவட்டத்தில் பல இடங்களிலும் தொழிலாளர் புரட்சி வெடித்தது. தொழிற்சங்கங்களும் பக்கபலமாக இருந்தன.
விரைவில் பொதுத்தேர்தல் நடக்கவிருப்பதால் இப்பிரச்சினையானது சுதந்திரக்கட்சி அரசுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது. வேறுவழியின்றி, தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு அடிபணிந்து மே 11 ஆம் திகதி தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சு நடத்துவதற்கு சு.க. அரசு தீர்மானித்திருந்தது.
சிவனு லெட்சுமண்
குறித்த சந்திப்பில் தொழில் ஆணையாளர், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகள், தொழில்சங்கப் பிரதிநிதிகள் என முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர். தேயிலைக் காணிகளை சுவீகரிப்பதைக் கைவிடுவதற்கு அரசாங்கம் பச்சைக்கொடி காட்டியது.
சந்திப்பு முடிவடைந்ததும், மகிழ்ச்சிகரமான செய்தியை தொழிலாளர்களுக்கு அறிவிப்பதற்காக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் புறப்பட்டனர்.
அரச பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடைபெறும் தினத்தில், காணி சுவீகரிப்பு கைவிடப்படும் என்ற செய்தியை காணி சுவீகரிப்பு அதிகாரிகள் அறிந்து வைத்திருக்காததால், வழமைபோல் மே 11 ஆம் திகதி காலை பத்தனை, டெவன் தோட்டத்தில் காணியை சுவீகரிக்கச் சென்றனர்.
இதற்கு தொழிலாளர்கள் இடமளிக்கவில்லை. தொடர்ந்தும் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து பொலிஸார் களமிறக்கப்பட்டனர்.
டெவன் தோட்டத்தில் ஏதோ குழப்பம், தொழிலாளர்களுக்கு பிரச்சினை என்பதை அறிந்த வட்டகொடை தோட்ட மக்கள், பத்தனையை நோக்கி நடையைக்கட்டினர். சம்பவ இடத்துக்கு வந்து தொழிலாளர் பலத்துக்கு வலுசேர்த்தனர் . இதையடுத்து பொலிஸாருக்கும், மக்களுக்குமிடையில் சொற்போர் மூண்டது.
மோதல் உச்சம்தொட, தொழிலாளர்கள்மீது சூடு நடத்துவதற்கு பத்தனை பொலிஸார் முற்பட்டனர். அதை கண்ணுற்ற லெட்சுமணன், முன்னே பாய்ந்து – தொழிலாளர்களை நோக்கி பாய்ந்த துப்பாக்கி சின்னங்களை தன் மார்பில் வாங்கி மலையக தியாகினார்.

  1. 1942 இல் முல்லோயா தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த கோவிந்தன் 2. 1942 இல் புப்புரஸ்ஸ கந்தா தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த வேலாயுதம், வீரசாமி ஆகியோர் 3. 1950 மார்ச் 02 ஆம் திகதி டெவன் தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த வைத்திலிங்கம் 4. 1953 இல் என்சாவெல தெபுவான தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த எட்லின் நோனா 5. 1953 இல் நெபொட லேங்டேல் தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த தேவன் 6. 1953 நவம்பரில் கல்தோணி தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த பீ.வெள்ளையன் 7. 1956 இல் மஸ்கெலியா நல்லதண்ணி தோட்ட போராட்டத்தில் உயிர் நீத்த காருமலை 8. 1956 மே 08 ஆம் திகதி டயகம தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த அல்விஸ் அப்புஹாமி ஆப்ரஹாம் சிங்கோ 9. 1957 ஜுலை 15 ஆம் திகதி உடபுஸ்ஸலாவை போராட்டத்தில் உயிர் நீத்த எனிக் தோட்டத்தை சேர்ந்த பொன்னையன் மற்றும் கொம்பாடி ஆகியோர். 10. 1958 இல் இரத்தினபுரி ஹேய்ஸ் தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த நடேசன். 11. 1958 மார்ச் 30 ஆம் திகதி பொகவந்தலாவை பேராட்டத்தில் உயிர் நீத்த பிரான்சிஸ், ஐயாவு ஆகியோர் 12. எட்டியாந்தொட்ட வெற்றிலையூர் பம்பேசும தோட்ட போராட்டத்தில், உயிர் நீத்த மாமுண்டு 13. 1959 இல் மாத்தளை மாதென்ன தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த கே.முத்துசாமி 14. 1960 இல் ரக்வானை மூக்களாந்சேனை தோட்டப் போராட்டத்தில் உயிர்நீத்த தங்கவேலு 15. 1960 இல் நிட்டம்புவ மல்வான தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த சிதம்பரம் 16. 1961 நவம்பரில் நாலப்பிட்டி மொண்டிசிரஸ்டோ (லெட்சுமி தோட்டம்) தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த ஆராயி, நடேசன், செல்லையா, மாரியப்பன் ஆகியோர். 17. 1964 மே 28 ஆம் திகதி மாத்தளை கந்தநுவர தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த அழகர், ரெங்கசாமி ஆகியோர் 18. 1967 நவம்பர் 08 ஆம் திகதி மடுல்கெல சின்ன கிளாப்போக்கு தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த சோனை 19. 1968 ஒக்டோபர் 27 ஆம் திகதி இரத்தினபுரி மயிலிட்டியா தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த சின்னப்பன் அந்தோனிசாமி 20. 1970 செப்டெம்பரில் பதுளை சீனாகொல தோட்டப் போராட்டத்தில் உயிர்நீத்த அழகர்சாமி, ராமையா ஆகியோர். 21. 1970 டிசம்பர் 31 ஆம் திகதி மாத்தளை கருங்காலி தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த பார்வதி, கந்தையா, ஆறுமுகம், ராமசாமி ஆகியோர் 22. 1977 மே 11 ஆம் திகதி தலவாக்கலை டெவன் தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த சிவனு லட்சுமணன் 23. 1980 இல் கண்டி பள்ளேகல தோட்டப் போராட்டத்தில் உயிர் நீத்த பழனிவேல்
    -நிசாந்தன்