ஐக்கிய தேசியக் கட்சிக்குள், தான்தான் வேட்பாளராகப் போட்டியிடப் போவதாக, அக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ அறிவித்துக்கொண்டு, அக்கட்சியின் பின்வரிசை எம்.பிக்களின் ஆதரவுடனும் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் கணிசமான ஆதரவுடனும், தன் பாணியின் ஊடாகத் தேர்தல் பிரசார வலத்தை ஆரம்பித்துள்ளார்.
ஆனால், ஐ.தே.கவில் கரு ஜயசூரிய, ரணில் விக்கிரமசிங்க சார்பாக, ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்ன போன்றவர்கள் சஜித்துக்கு முரணாகச் செயற்படும் வேளையில், அக்கட்சியின் கடந்தகால ஜனாதிபதி வேட்பாளரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தனது எதிர்ப்பையும் சூசகமாகத் தெரிவித்துள்ளதோடு கோட்டாபய சார்பான கருத்துகளையும் வெளிப்படுத்தி இருப்பது, பல்வேறு ஐயப்பாடுகளை, வினாக்களை ஏற்படுத்தி இருக்கின்றன.
இந்நிலைமைகளில், ஐ.தே.கவுக்குள் நடைபெறும் குத்து வெட்டுகள், மஹாபாரதத்தில் கர்ணனைக் கொல்வதற்கு கிருஷ்ண பரமாத்மா எவ்வாறு பல்வேறு சூட்சுமங்களைக் கையாண்டாரோ, அது போல் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக சஜித்தை நிறுத்துவதாக இருந்தால், அவர் மூன்று காரியங்களைச் செய்யவேண்டுமென ரணில் தரப்பால் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த நிபந்தனைகள்:
- ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை ரணிலிடமே இருக்க வேண்டும்.
- ரணிலே தொடர்ந்து பிரதமராக இருக்க வேண்டும்.
3 கூட்டு முன்னணியின் தலைமைப்பதவி கரு ஜயசூரியவுக்குக் கொடுக்கப்பட வேண்டும்.
இந்த நிபந்தனைகளின் பின்னர், சஜித் ஜனாதிபதியாகலாம். ஆனால், சக்தி அற்றவராக இருப்பார்; இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்கள். இதற்கு, அரசியல் தவிர்ந்த சமூகக் காரணங்களும் சாதி அடிப்படைவாதங்களும் கூடக் காரணமாக இருக்கலாம். இந்தப் பின்புலத்தில், ஜனாதிபதி வேட்பாளராக ஏன் சஜித்தை நிறுத்த முடியாது என்பதைப் பகிரங்கமாகக் கூறாமல், “கோட்டாபய ராஜபக்ஷ, பொருத்தமான ஜனாதிபதி வேட்பாளர்” என, மஹிந்த தரப்புக்கு ஆதரவாக, சரத் பொன்சேகா கருத்துத் தெரிவித்திருப்பது அரசியலுக்கு அப்பால், அவர் பற்றிப் பல்வேறு கருத்தாடல்களைத் தோற்றுவித்துள்ளது.
அந்த வகையில், மஹிந்த தரப்பால் மிக மோசமான முறையில் பீல்ட் மார்ஷல் பதவி பறிக்கப்பட்டு, சிறைவாசம் அனுபவித்த சரத் பொன்சேகா, ஏன் தனக்கு நடத்த அநியாயங்களை, அநீதிகளை மறந்தார்? அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை சரியானது என்பதை இக்கருத்து மூலம் ஒப்புக் கொள்கிறாரா?
பாதுகாப்பு அமைச்சுப் பதவியை, அது தொடர்பான பொறுப்புகளைத் தற்போதைய ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கமும் ஏன் அவருக்குக் கொடுக்கவில்லை? இவற்றின் அடிப்படையில் இந்த நாட்டின் பாதுகாப்புத் தொடர்பில் சரத் பொன்சேகா பொருத்தமற்ற நபரா?
போன்ற வினாக்கள் மக்கள் மத்தியில் எழுந்துள்ளன. மேலும், சரத் பொன்சேகாவின் கருத்து, மறைமுகமாக சஜித் பிரேமதாஸவின் ஆதரவுப் பலத்தை, மறைமுகமாகச் சிதைக்கும் முயற்சியாக எழுந்துள்ளது என்பதுடன், தனது கருத்துத் தன்னை இவ்வளவு தூரம் பாதிக்கும் என்பதை, அவர் புரிந்து கொள்ளவில்லை.
இதேவேளை, மக்கள் விடுதலை முன்னணி என்றுமில்லாத அளவுக்கு, ஜனாதிபதி வேட்பாளர் பிரகடனத்தை சனத்திரள் அலைக்குள் நிகழ்த்திக் காட்டியுள்ளது.
இந்த நிலைவரங்கள் எதிர்வரும் தேர்தலில், மும்முனைப் போட்டிக்கான பலப்பரீட்சை ஒன்றுக்கான கட்டியமாக அமைகின்ற போதிலும் ஐ.தே.க வேட்பாளராக, சஜித் நிறுத்தப்படுமிடத்து தற்போதைய நிலைவரங்களில், சிறுபான்மைச் சமூகங்களின் ஆதரவு சிறுபான்மைக் கட்சிகள் இல்லாமலேயே இயல்பாகக் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் நிறையவே அவருக்குண்டு என்பதைத் தற்போதைய கள நிலைவரங்கள் வெளிக்காட்டுகின்றன.
ஆனால், அவரது பிரதிநிதித்துவம் கிடையாதவிடத்து, தமிழ்ச் சமூகத்தின் வாக்குகள் பெரும்பாலும் மக்கள் விடுதலை முன்னணியின் (தேசிய மக்கள் சக்தி) அநுர குமாரவுக்கே திரும்பக்கூடியதான நிலைவரம் உள்ளது. காரணம், மக்கள் பிரச்சினைகளைக் களத்தில் நின்று போராடும் சக்தியாகும். மாறிமாறி ஆட்சி செய்த கட்சி, அவரது கட்சியல்ல; எனவே, மாற்றத்துக்கான ஒரு வாய்ப்பாக அமையலாம்.
மேலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மௌனமானது, சஜித்தை ஆதரிப்பதற்கான அறிகுறியே அன்றி வேறெதுவுமில்லை. ஏனெனில், மைத்திரிபாலவுக்கு இதை விட்டால் அவருடைய அரசியல் எதிர்காலம் பூச்சியமாகிவிடும் என்பதே யதார்த்தமானது.
இந்த வகையில், சஜித்தின் நடவடிக்கைகள் தந்தையின் பாணியில், எளிய முறைமை, மக்கள் விரும்பும் திட்டங்கள் என்ற அடிப்படையில் செயல் வீரனாக அவர் வலம் வருவது, மக்கள் மத்தியில் அவரை நம்பிக்கை நட்சத்திரமாகக் காட்டுவதுடன், இதுவரை அவர் பிரதமராகவோ, ஜனாதிபதியாகவோ இருந்து ஏமாற்றாத புதுமுகம் என்பது முக்கியமாகும்.
ஆனால், மஹிந்த தரப்பு என்பது, குடும்ப ஆதிக்கம், யுத்தக் குற்றச்சாட்டு, கொலை அச்சுறுத்தல், வெளியுறவுக் கொள்கைகள் என்ற அடிப்படையில் கடந்த கால அனுபவங்கள், சிறுபான்மை மக்களிடம் இருந்து, அவர்களை அந்நியப்படுத்திவிட்டது.
இந்நிலைமைகளில், முஸ்லிம் கட்சிகளில் பெரும்பாலானவை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், சஜித் சார்பான நிலைப்பாட்டை விரும்பியோ விரும்பாமலோ எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் சிறுபான்மைச் சமூகம் அவர் பக்கமேயுள்ளது என்பது வெளிப்படை.
ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்ந்த ஏனைய மக்கள் ஆதரவற்ற அணியினர், கோட்டாபயவுக்கு ஆதரவு அளிக்க வந்திருப்பதோடு, அவருக்காகக் கூலிக்கு மாரடித்துப் பட்டாசும் கொழுத்தினர். அது மட்டுமல்லாமல், வடகிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர், “கோட்டாவைத் தமிழ் மக்கள் மன்னிக்க வேண்டும்” எனக் கோரியிருப்பது, தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல, அனைத்து இன மக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உண்மையில், மன்னிப்புக் கேட்க வேண்டியவர்கள் தமிழர்கள் அல்ல; தமிழரைக் கொத்துக் கொத்தாக, கிராமம் கிராமமாக அழித்தவர்கள்; இன்னுமின்னும் பல கொடுமைகளைச் செய்தவர்களை, மன்னிக்கும்படி கேட்பதற்கு, வரதர் யார், என்பதே மக்களிடம் உள்ள வினா?
1989இல் தமிழீழ பிரகடனம் செய்து, வீடு வீடாகப் பிள்ளைகள் பிடித்து, தொண்டர் படை அமைத்துவிட்டு, தப்பியோடிய பின், தமிழர்கள் பட்ட அவலங்களை நேரடியாக அனுபவிக்காமல், மூன்று தசாப்தங்களின் பின், நாட்டுக்கு வந்து, கோட்டாவை மன்னிக்கும் படி கேட்பது, எந்த அடிவருடித்தனம் என்பதை மக்களுக்கு, வரதர் தெளிவுபடுத்த வேண்டும்.
அதேவேளை, வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் கூறுவதுபோல், “சிறுபான்மையினரில் ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவது, சர்வதேசத்துக்கு சிறுபான்மையினரின் ஒருமித்த குரலை வெளிக்காட்டும்” என்பது, புளித்துப்போன பழங்கதை.
இலங்கையில் சிறுபான்மை இனம், ஜனாதிபதியாக வருவதாக இருந்தால் அவர் பௌத்தராக இருத்தல் வேண்டும் என்பதை ஐயா மறந்துவிட்டார் போலும்; ஏன் எதிர்க்கட்சித் தலைவராகக் கூட, ஒரு தமிழர் இருப்பதை இந்நாடு ஜீரணித்துக் கொள்ளாது என்பதை, அண்மைக் காலத்தில் நடந்த சம்பவங்கள், தெட்டத் தௌிவாக வெளிப்படுத்தி இருந்தன.
ஐயாவின் மொழியில் சொல்வதாக இருந்தால், ‘சர்வதேசத்தில் நாம் பல முறை, பல வடிவங்களில் சொல்லிக் காட்டிப் போட்டோம்; செய்தும் காட்டிப்போட்டோம். ஆனால், சர்வதேசம் தன்னுடைய நாட்டு நலனில் தான் அக்கறையாக இருக்கும். எனவே, நாம் காட்டிய நாடகங்கள் காணும்; புதிதாக ஏதும் யோசிப்போம்” என மக்கள் பகிரங்கமாகக் கருத்துக் கூறும் அளவுக்கு, எமது கட்சிகளின் அரசியல் ஞானமும் வியூகங்களும் இருக்கின்றன.
இந்த வகையில், இலங்கையின் அரசியல் கட்சிகள் என்னதான் சொன்னாலும், மகா சனங்கள் இம்முறை தெளிவாக இருக்கிறார்கள் என்பது உண்மை. ஏனெனில், வரலாறு கற்றுத்தந்த பாடம் ஆகும். ஜனாதிபதித் தேர்தல் என்ற குழம்பிய குட்டையில் ஊறும் கட்சி மட்டைகள் என்ன செய்யும் என்பது வாக்காளப் பெருமக்களுக்கு நன்கு தெரியும்.
ஆதலால், இவை மக்களைப் பொறுத்தவரையில் செவிடன் காதில் ஊதிய சங்கே. வக்கற்றவர்களின் இந்த அரசியல் வார்த்தைகள் இவை என்பதை, இந்த அரசியல் கட்சிகள் புரிந்து கொள்ளட்டும்.