மெய்யர்த்தத்தில், ‘சிங்களவர்களால் மட்டுமே’ என்பது, மிகைப்படுத்தல் எனினும், யதார்த்தத்தில் சிறுபான்மையின வாக்குகளின் ஆதரவின்றியே, கோட்டா வெற்றிபெற்றிருக்கிறார் என்பது வௌ்ளிடைமலை.
இது, சில மாதங்களுக்கு முன்னர், சிறுபான்மையினரே வெற்றியைத் தீர்மானிக்கிறார்கள் என்ற மாயை தொடர்பில், நான் எழுதியிருந்ததை நிரூபிப்பதாக அமைந்திருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு, நான் எழுதியிருந்த பத்தியில், ‘2015 ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து, சிறுபான்மை வாக்குவங்கியின் பலம் பற்றி அதீதமான, அடிப்படையற்ற நம்பிக்கைகள் உருவாகத் தொடங்கின. பெரும்பான்மை வாக்குவங்கியானது, சிறுபான்மை வாக்கு வங்கியின் பலம் பற்றிய அதீதமான, யதார்த்தத்துக்கு அப்பாற்பட்டு நம்பிக்கையைக் கொண்டிருப்பது ஒரு புறமிருக்க, சிறுபான்மை வாக்குவங்கி, தன்னுடைய பலத்தைத் தானே உயர்வாக எண்ணத்தொடங்கியது என்பது, அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல; எப்போதும் ஒரு விடயத்தை, நாம் மறந்துவிடக்கூடாது; இலங்கை வாக்குவங்கியின் ஏறத்தாழ 75சதவீதமான வாக்குவங்கி, ‘சிங்கள’ வாக்குவங்கி என்பதோடு, ஏறத்தாழ 70சதவீதமான வாக்குவங்கி, ‘சிங்கள-பௌத்த’ வாக்குவங்கியாகும். ஆகவே, சிறுபான்மை வாக்குவங்கி என்பதுதான் வெற்றியைத் தீர்மானிக்கும் வாக்குவங்கி என்பது ஒரு மாயை. ஆனால் அந்த மாயை உருவாகக் காரணம் என்ன? இரண்டு நிலைமைகள், ஒருசேர நிலவும்போது, சிறுபான்மை வாக்குவங்கி தீர்மானிக்கும் பலத்தைக் கொண்டுள்ளதான தோற்றப்பாடு எற்படுகிறது. சிங்கள வாக்குவங்கி, கட்சி ரீதியில் இருகூறாகவோ, அதிகமாகவோ பிரிந்து நிற்கும் போது, எந்தவொரு தரப்புக்கும் அறுதிப் பெரும்பான்மையை வழங்க முடியாத நிலை சிங்கள வாக்குவங்கிக்கு ஏற்படுகிறது. அந்தச் சூழ்நிலையில், சிறுபான்மை வாக்குவங்கி என்பது, பெருமளவுக்கு ஒன்றுசேர்ந்து நின்று, ஒரு தரப்புக்கு ஆதரவளிக்கும் போது, சிங்கள வாக்குவங்கியால் மட்டும் அறுதிப்பெரும்பான்மையைப் பெறமுடியாத ஒரு தரப்பு, பெருமளவுக்கு ஒன்றுபட்டு நிற்கும் சிறுபான்மை வாக்குவங்கியின் ஆதரவால் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெறுகிறது. இது வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தி, சிறுபான்மையினருக்கே உண்டு என்ற மாயத் தோற்றத்தை உருவாக்கி விடுகிறது. பெரும்பான்மையின வாக்குவங்கி பிரிந்திருக்கும் போதுதான், சிறுபான்மையின வாக்கு வங்கி தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறது என்பதைச் சிறுபான்மையினர் புரிந்துகொள்வது அவசியம். ஏனென்றால், சிங்கள-பௌத்த பேரினவாத அரசியல்சக்தி, இதை நன்கே புரிந்துகொண்டுள்ளது. அதனால்தான், இன்று அதன் முயற்சிகள், சிங்கள-பௌத்த வாக்கு வங்கியை, ‘சிங்கள-பௌத்த’ தேசியவாதத்தின் கீழ் ஒன்றிணைக்கும் பாதையில் வலுவாகப் பயணித்துக் கொண்டிருப்பதுடன், ஒன்றுபட்டிருக்கும் சிறுபான்மை வாக்குவங்கிகளைச் சிதறடிப்பதிலும் கவனமாக உள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதுதான் இன்று நிதர்சனமாகி இருக்கிறது. சிங்கள-பௌத்த வாக்குவங்கி, கோட்டாபயவுக்கு அறுதிப்பெரும்பான்மையை வழங்கியிருக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில், சிறுபான்மை வாக்குகள் ஒன்றிணைந்து நின்றும், அதில் எந்தப் பயனும் தீர்மானிக்கும் சக்தியும் கூட இல்லாது போயுள்ளது.
இந்தத் தேர்தல், தமிழர் தரப்புக்குக் குறிப்பாகத் தமிழ்த் தலைமைகளுக்கு, இன்னொரு பாடத்தையும் சுட்டிக்காட்டி நிற்கிறது. தலைமைகள் சொற்கேட்டு நடக்கும் மந்தைக்கூட்டமாக, தமிழ் மக்கள் ஒருபோதும் இருக்கப்போவதில்லை. தமக்கான தெரிவு தொடர்பில், தமிழ் மக்கள் மிகத் தௌிவாகவே இருக்கிறார்கள்; குறிப்பாக, தமிழ்த் தேசியத்தைத் தாம் குத்தகைக்கு எடுத்துக்கொண்டுள்ளதாகக் கருதிக்கொண்டிருக்கும் தலைமைகள், தமிழ்த் தேசியத்தின் பெயரால் கேட்டுக்கொண்ட புறக்கணிப்புக் கோரிக்கையைத் தொடர்ந்து, தமிழ் மக்கள் நிராகரித்திருக்கிறார்கள் என்பதை, இந்தத் தேர்தலும் உறுதிசெய்திருக்கிறது.
இது, தமிழ்த் தேசிய பதாகையைத் தாங்கி நிற்கும், தம்மைத் தமிழ்த் தேசியத்தின் ‘ஏக குரலாக’க் காட்டிக்கொள்ளும் அரசியல் கட்சிகள், கவனமாக இருக்கவேண்டியதையும் உணர்த்தி நிற்கிறது.
ஏனென்றால், தமிழ் மக்கள் இந்தத் தமிழ்த் தேசியக் கட்சிகளின் கோரிக்கைகளை நிராகரிக்கும் ஒவ்வொரு தடவையும் அவர்கள் தமிழ்த் தேசியத்தையும் நிராகரிக்கிறார்கள் என்ற பொருள்கோடலைச் சந்தர்ப்பவாத பேரினவாதச் சக்திகள் முன்வைக்க வழிவகுக்கும்.
தமிழ் மக்கள், தமிழ்த் தேசியத்தின் மீது, பற்றுடையவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால், அந்தத் தமிழ்த் தேசியமானது, பட்டுவேட்டி பற்றிய கனவில் இருக்கும் போது, கட்டியிருந்த சிறுதுணியும் இழக்கப்படும் நிலையாக ஆகிவிடக்கூடாது என்பதில், மிகவும் தௌிவாகவே இருக்கிறார்கள் என்பதும் ஐயத்துக்கு இடமின்றி ,மீண்டும் மீண்டும் உறுதியாகியுள்ளது.
ஆகவே, தமிழ்த் தேசியத்தைக் கோமாளிக்கூத்தாக, சிறுபிள்ளை வேளாண்மையாக மாற்றிவிடக்கூடாது என்பதை, தமிழ்த் தேசியத்தை முன்னிறுத்தும் அரசியல் கட்சிகளும், தலைமைகளும் இனியாவது புரிந்துகொள்ள வேண்டும்.
கோட்டாபய ராஜபக்ஷ, ஜனாதிபதியாகி உள்ளமையானது, மீண்டும் ராஜபக்ஷ யுகத்துக்கான ஆரம்பமாக அமைந்துள்ளது. 2015ஆம் ஆண்டில் ஏற்பட்ட மாற்றத்துக்குப் பிறகு, ராஜபக்ஷக்கள் மீண்டும் வருவதற்கு யார் காரணம் என்ற ஆய்வு, தற்போது பயனற்றது. அதற்கான பொறுப்பை, அதன் பின்னரான நல்லாட்சியில் அதிகாரம் வகித்திருந்த அனைவரும் கூட்டாகத்தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
மறுபுறத்தில், இந்த நாட்டின் சிறுபான்மையினரான தமிழர்களும் முஸ்லிம்களும், ராஜபக்ஷக்களின் மீள் அதிகாரப் பிரவேசம் பற்றிய இயல்பான அச்சத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் வௌ்ளிடைமலை. ஆகவே, இந்தச் சூழலை, எவ்வாறு எதிர்கொள்வது என்பது இங்கு முக்கியமானது.
நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள், ராஜபக்ஷக்களை ஆதரித்திருக்கிறார்கள்; ஆதரிக்கிறார்கள். இந்த யதார்த்தத்தை நாம் மறுத்துவிட முடியாது. ஆகவே, இந்த யதார்த்தத்துக்குள், சிறுபான்மையினர் தம்முடைய நலன்களை எவ்வாறு பாதுகாத்துக்கொள்வது என்பதைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய சூழல்நிலை, தற்போது உருவாகியுள்ளது.
சிலர் முழுமையான எதிர்ப்பு, சர்வதேச அழுத்தம், அதன் மூலம் சிறுபான்மையினர் தமது நலன்களை நிறைவேற்றிக்கொள்ளுதல் என்பவற்றை முன்மொழியலாம். ஆனால், இந்தப் பூகோள அரசியல் தந்திரோபாயம் என்பது, கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும், இதற்கு இரண்டு பக்கங்களுண்டு.
இதே, பூகோள அரசியல் தந்திரோபாயத்தை, ராஜபக்ஷக்கள் சிறப்பாகக் கையாண்டால், சிறுபான்மையினரால் இதன் மூலம் கூட, எதையும் சாதிக்க முடியாது போய்விடும் என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், சர்வதேசம் நேரடியாகத் தலையிட வேண்டிய எந்த அத்தியாவசிய அரசியல் சூழலும், இலங்கையில் தற்போது இல்லை; நிச்சயமாக, அத்தகைய சூழலொன்று எழுவதற்கு, ராஜபக்ஷக்கள் கூட இடமளிக்கமாட்டார்கள் என்று நம்பலாம்.
ஆகவே, அமெரிக்கா வரும், இந்தியா வரும் என்று பூகோள அரசியல் கதாப்பிரசங்கங்கள் கேட்பதற்கு நன்றாக இருந்தாலும், யதார்த்தத்தில் சாத்தியப்படாது என்பதுதான் உண்மை.
இனப்பிரச்சினைத் தீர்வு, அதிகாரப் பகிர்வு என்பது, தமிழர்களின் அடிப்படை அரசியல் கோரிக்கைகளில் முதன்மையானது. ஆனால், அர்த்தபூர்வமான இனப்பிரச்சினைக்கான தீர்வும், நடைமுறைச்சாத்தியமுள்ள அதிகாரப் பகிர்வும் இலங்கை அரசாங்கத்திடமிருந்துதான் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமேயன்றி, வேறோர் இரட்சகரும் எமக்கு, அதனை வழங்க முடியாது என்பது வரலாறு எமக்குக் கற்றுக்கொடுத்துள்ள பாடமாகும்.
ஆகவே, அதிகாரத்தில் இருக்கும் இலங்கை அரசாங்கத்துடன், அரசியல் ரீதியாகச் செயற்பட வேண்டிய கட்டாயம், தமிழ் மக்களுக்கும், தமிழ்த்தலைமைகளுக்கும் உண்டு. ராஜபக்ஷக்களை, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளத்தேவையில்லை; அதற்கான அவசியமும் இல்லை. தமிழ் மக்களின் ஆதரவையும் மனதையும் வெல்லவேண்டியது ராஜபக்ஷக்களின் கடமை. அது அவர்களிலேயே தங்கியுள்ளது. ஆனால், ராஜபக்ஷக்களை முழுமையாக நிராகரிப்பதன் மூலமும் கண்மூடித்தனமாக எதிர்ப்பதன் மூலமும் தமிழ் மக்களோ, எந்தச் சிறுபான்மையினமோ எந்த நன்மையையும் பெற்றுக்கொள்ளப் போவதில்லை.
மாறாக, அவர்களுடன் அர்த்தபூர்வமான அரசியலை, முறையான தந்திரோபாயத்தின் அடிப்படையில் கையாண்டால், நல்லாட்சி அரசாங்கத்திடம் பெற்றுக்கொள்ள முடியாத அரசியல் பெறுபேறுகளை, ராஜபக்ஷக்களிடம் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இதற்கான முக்கிய காரணம், ஒப்பீட்டளவில் ராஜபக்ஷக்கள் வழங்கும் எந்த அரசியல் தீர்வையும் அரசியல் சமரசத்தையும் சிங்கள-பௌத்த தேசியவாதம் பெருமளவுக்குக் கேள்வியெழுப்பாது. அதற்கான அரசியல் மூலதனம், ராஜபக்ஷக்களிடம் இருக்கிறது.
இன்று தமிழர்கள் முன்னிருக்கும் சவால், ராஜபக்ஷக்களின் அந்தப் பலமான அரசியல் மூலதனத்தைத் தமிழ்மக்கள், எவ்வாறு தமக்குச் சாதகமாக்கிக் கொள்வது என்பதுதான்.
தமிழர்கள் மத்தியில், அர்த்தமின்றி அடிக்கடி பயன்படுத்தப்படும் ‘சாணக்கியம்’ என்பதன் பொருள் இதுதான். ராஜபக்ஷக்களின் அரசியல் மூலதனத்தைத் தமிழர்கள், தமக்கு ஓரளவேனும் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள முடியுமானால், அதுதான் ‘சாணக்கியம்’. மறுபுறத்தில், இது ராஜபக்ஷக்களுக்கும் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினரின் ஆதரவை வளர்த்துக்கொள்ள இன்னொரு சந்தர்ப்பத்தை வழங்கியிருக்கிறது.
ராஜபக்ஷக்கள் மீதான அச்சமும் ஐயமும் சிறுபான்மையினருக்கு உண்டு. அந்த அச்சத்தையும் ஐயத்தையும் ராஜபக்ஷக்களால் மட்டுமே களைய முடியும். 2015ஆம் ஆண்டு ஜனவரி எட்டாம் திகதிக்குப் பிறகு, இந்தநாட்டின் மக்கள், குறிப்பாக சிறுபான்மை மக்கள், அச்சமற்று வாழக்கூடிய ஒரு சூழலை அனுபவித்தார்கள். ஆட்கடத்தல், காணாமல்போதல், மனித உரிமை மீறல்கள் என்பனவெல்லாம் இல்லாத நிலை இருந்தது. இன்று குறிப்பாக, சிறுபான்மை மக்களுக்கு இருக்கும் அச்சம், இந்தச் சுதந்திரக் காற்று, சூறையாடப்பட்டுவிடுமோ, தாம் மீண்டும், இருண்டகாலத்துக்குள் செல்லவேண்டி வருமோ போன்ற அச்சங்கள்தான் காணப்படுகின்றன.
ராஜபக்ஷக்கள், இந்த அச்சத்தைக் களைந்து, சிறுபான்மையினர் துன்பப்படுத்தப்படாத, பழிவாங்கப்படுத்தப்படாத, சிறுபான்மையினரின் அபிலாசைகளை மதிக்கும், ஆட்சியை முன்னெடுப்பார்களானால் அவர்களாலும் நீண்டகாலத்தில் தமிழர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினங்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியும்.
1983 – ‘கறுப்பு ஜூலை’யை நடத்திய ஐக்கிய தேசியக் கட்சிக்கு,கறுப்பு ஜூலையின் பின்னணியில் உள்ளவராகக் கருதப்படும் ஒரு தலைவரின் மகனுக்கு, இன்று 36 வருடங்களுக்குப் பிறகு, தமிழ் மக்கள் ஆதரவளிக்கும் சூழல் உருவாகியிருப்பது சாத்தியமானால், ராஜபக்ஷக்களைத் தமிழர்கள் ஆதரிக்கும் காலமும் சாத்தியமே.