ஜனாதிபதி நாற்காலி ஒரு முள் படுக்கை

அனுரகுமார திசாநாயக்கவின் இந்த புரட்சிகர வெற்றிக்கு நாட்டில் இடம்பெற்ற  ஊழல், மோசடிகள், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல், ராஜபக்‌ஷ குடும்பத்தின் ஆட்சி அவலங்கள், பொருளாதார நெருக்கடி, வாழ்க்கைச் சுமை  அதிகரிப்புக்களுக்கு அப்பால் மக்கள் ஒரு மாற்றத்தை  விரும்பியதுடன் அனுரகுமார திசாநாயக்க என்ற  ஒரு தனிப்பட்ட தலைவர்  மீதும் அவரது ஆக்ரோஷமான உரைகள் மீதும் வைத்த நம்பிக்கையின் வெளிப்பாடும் எதிர்பார்ப்பும் பிரதான காரணங்களாகவுள்ளன.

அதனால் தான் கடந்த 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெறுமனே 418,553 வாக்குகளைப் பெற்று கட்டுப்பணத்தையும் இழந்த அனுரகுமார திசாநாயக்கவுக்குத் தான் இம்முறை பலம் வாய்ந்த ஜனாதிபதி வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச ஆகியோரை பின் தள்ளி 5,634,915 நேரடி வாக்குகளை அளித்து நம்பிக்கை,எதிர்பார்ப்பு அடிப்படையில் ஜனாதிபதியாக்கியுள்ளதுடன், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் அதிரடி ஆட்டத்துக்காக வழிமேல் விழி வைத்துக் காத்திருக்கின்றனர்.

ஆனால் மேடைகளில்,பாராளுமன்றத்தில், ஊடகங்களில் பேசும் ஆக்ரோஷப் பேச்சுக்களை ஜனாதிபதிக்  கதிரையில் அமர்ந்த பின்னர், பேசமுடியாதென்பதையும் முன்னர் வழங்கிய   உறுதிமொழிகளை, விடுக்கும் சூளுரைகளை, சவால்களை  ஜனாதிபதிக்  கதிரையில் அமர்ந்த பின்னர், அவ்வளவு இலகுவாக நிறைவேற்றி விட முடியாதென்பதையும் ஜனாதிபதியாகப் பதவியேற்று இரு வாரங்களுக்குள் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உணரத் தொடங்கியுள்ள நிலையில், அவரிடமிருந்து அதிரடி ஆட்டத்தை எதிர்பார்த்து நம்பிக்கை எதிர்பார்ப்பு வைத்த மக்களிடமிருந்து முணுமுணுப்புக்களும் வெளிக் கிளம்பத் தொடங்கியுள்ளன.

அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியானவுடன் ராஜபக்‌ஷ குடும்பத்தில் சிலர் சிறை செல்வார்கள், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகள் அம்பலப்படுத்தப்பட்டுத் தண்டிக்கப்படுவார்கள், மத்திய வங்கி மோசடியாளர்கள் மடக்கப்படுவார்கள், ஊழல், மோசடி அரசியல்வாதிகள், அரச அதிகாரிகளினால் சிறைகள் நிரம்பும், வாழ்க்கைச் செலவுகள் குறைவடையும், வளமான வாழ்க்கை வாழமுடியும் என நம்பிக்கைவைத்த மக்களின் எதிர்பார்ப்புகளை ஓரளவுக்கேனும் நிறைவேற்றக்கூடிய எந்தவொரு அதிரடி அறிவிப்புக்களும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடமிருந்து இதுவரையில் வெளிவரவில்லை.

 ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் வெளியிடப்பட்ட விவசாயிகள், மீனவர்களுக்கான மானிய அறிவிப்புக்கள் கூட தேர்தல்கள் திணைக்களத்தினால் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதியாகவிருந்த ரணில் விக்ரமசிங்கவினால் சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளைக் கடுமையாக விமர்சித்த, அதை வைத்தே ஆட்சிக் கதிரையைக் கைப்பற்றிய அனுரகுமார திசாநாயக்க சர்வதேச நாணய நிதியம் உள்ளிட்ட சர்வதேச அமைப்புக்களுடன் ரணில் விக்ரமசிங்க செய்து கொண்ட உடன்படிக்கைகளை அச்சுப் பிசகாது  தானும் ஏற்றுக்கொண்டு கையொப்பமிடும் சந்தர்ப்பவாத அரசியல் அனுரகுமார 
மீது மக்கள் வைத்த நம்பிக்கைக்கு எதிர்பார்ப்புக்கு  முதல் வேட்டி  வைத்துள்ளது.

 அதுமட்டுமன்றி, எதிர்க்கட்சியாக அனுரகுமார திசநாயக்கவின் தேசிய  மக்கள் சக்தி இருந்த போது அரசுக்கு எதிராக முன் வைத்த ஆயிரக்கணக்கான  ஊழல்.மோசடிக் குற்றச்சாட்டுக்  கோப்புகளில் ஒன்றைக்கூட ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இதுவரையில் தூசிகூட தட்ட வில்லை. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகளை எமக்குத் தெரியும். நாம் ஆட்சிக்கு  வந்தால் எமது முதல் வேட்டை அவர்கள்தான் என சூளுரைத்த அனுரகுமார திசநாயக்க இன்று அது தொடர்பில் வாயும் திறக்காமலிருப்பதும் மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அத்துடன், ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க பதவியேற்றதுடன், இடம்பெற்ற ஆளுநர்கள் நியமனத்தில் மேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டவர் தொடர்பில் பலவேறு விமர்சனங்களும் எழுந்துள்ள நிலையில், அந்த ஆளுநரை அவர் சார் சமூகத்தினர் கூட கடுமையாக விமர்சிப்பதும் ஜனாதிபதியின்  செயலாளராக நியமிக்கப்பட்டவர் தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களும்  பண முதலைகளுக்கோ தகுதியற்றவர்களுக்கோ அரச நியமனங்கள் வழங்கப்படாது என அனுரகுமார திசாநாயக்க வழங்கிய உறுதி மொழியையும் அதன் மூலம்  மக்கள் அவர்  மீது வைத்த  நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் கேள்விக்குட்படுத்தியுள்ளது.

 இவ்வாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மீது மக்கள் வைத்த நம்பிக்கை, எதிர்பார்ப்பு வலுவிழந்து சென்றுகொண்டிருக்கும் நிலையில், ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள அனுரகுமார திசாநாயக்க, 2 அமைச்சர்களை வைத்துக்கொண்டு எந்த விதமான காத்திரமான நடவடிக்கைகளையும் தற்போது எடுக்க முடியாது. நடைபெறவுள்ள பாராளுமன்றத்திற்கான தேர்தலில் தனித்து ஆட்சியமைக்கும் அதிகாரத்தை, பலத்தை அனுரகுமார திசாநாயக்கவுக்கு கொடுத்தால்தான் அவர் தான் கொடுத்த அத்தனை வாக்குறுதிகளையும் நிறைவேற்றமுடியும். அதனால்தான் அவர் பாராளுமன்றத்  தேர்தல் முடியும் வரை காத்திருக்கின்றார். பாராளுமன்ற பலம் கிடைத்தவுடன், அவரின் ஆட்டம்  ஆரம்பமாகும் என அவரின் கட்சியினர் சாக்குப் போக்கு கூறத் தொடங்கியுள்ளனர்.  

இவர்கள் கேட்டது போல், ஜனாதிபதி பதவியைக் கொடுத்த மக்கள் பாராளுமன்றத்திலும் பெரும்பான்மைப் பலத்தைக் கொடுத்தால் கூட, பெரிதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவினால் எதனையும் சாதித்து விட முடியாது. ஏனெனில், இலங்கை அரசியல் கலாசாரம்  அப்படிப்பட்டது. அரசின் ஊழல், மோசடிகள், தவறுகள் குறைபாடுகள், குற்றங்களை  எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிப்பதும் பின்னர் தாங்கள் ஆட்சிக்கு வரும்போது, முன்னைய அரசு செய்த அதே ஊழல்,மோசடிகள், தவறுகள் குறைபாடுகள், குற்றங்களைச்  செய்வதும் தான் எழுதப்படாத  விதியாகவுள்ளது. 

இந்த விதியை மாற்றுவதென்பது ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவுக்கு கல்லில் நார்  உரிப்பதைப் போன்றுதான் இருக்கும்.
“நான் அமர்ந்திருக்கும்  நாற்காலியின்  நான்கு  கால்களும்  என்னுடையது  இல்லை. ஒரு கால் கூட்டணிக் கட்சிக்காரனுடையது. இரண்டாவது கால் சாதிக்காரனுடையது, மூன்றாவது  கால், நாம்  ஆட்சி நடத்தப் பணம் தருகின்றார்களே, பணக்காரர்கள் அவர்களுடையது. நான்காவது  கால் நம்  தொண்டர்களினது. இதில்  ஒரு கால் போனாலும் நாம்  மண்ணைக் கவ்வ வேண்டியதுதான். இந்தப் பிரச்சினையைத் தீர்க்கக் கூடாது. இதை வைத்து  அரசியல் பண்ண வேண்டும்” என்று முதல்வன் திரைப்படத்தில் முதலமைச்சராகவுள்ள ரகுவரன் பேசும் பேச்சு இலங்கை அரசியலுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் சாலப் பொருந்தும்.

அதே படத்தில்தான்  ஊடகவியலாளரான  அர்ஜுனுக்கு பேட்டி கொடுக்கும் முதலமைச்சரான ரகுவரன் கூறும், “ஒரு நாள் சி.எம்மாக  இருந்து பார்க்கிறியா…? ஒரு நாள் இருந்து பார் அப்போ உனக்கு என் நாற்காலி  ஒரு முள் படுக்கை, என் பதவி  ஒரு முள் கிரீடம் என்பது புரியும். என்ன பண்ண முடியும், என்ன பண்ண முடியாது என்பது உனக்கு பளிச்சென்று புரியும். அதை நீ நாட்டு மக்களுக்கு எடுத்து சொல்லு. எவ்வளவு குறை நிறைகள், எவ்வளவு கண்ணீர், எவ்வளவு மாலைகள், எத்தனை டென்ஷன் என்று  பதவியில்  இருக்கிறவனுக்குத்தான்
 தெரியும்’’ என்பார்.

அதேபோன்று, தான் வெளியிலிருந்து ஆட்சியாளரை ஆக்ரோஷமாக விமர்சித்த அனுரகுமார திசநாயக்கவுக்கு  தற்போது “ஜனாதிபதி நாற்காலி  ஒரு முள் படுக்கை, ஜனாதிபதி  பதவி  ஒரு முள் கிரீடம் என்பதும், என்ன பண்ண முடியும்? 

என்ன பண்ண முடியாது? என்பதும் ஓரளவுக்காவது புரிந்திருக்கும்.  அனுரகுமார திசாநாயக்கவுக்கும் இந்தளவுக்கு  மட்டும் தான்   முடியும் என்பதனை அவர்  மீது பெரு நம்பிக்கை, எதிர்பார்ப்பு வைத்த மக்களும் சிறிது காலத்தில் புரிந்து கொள்வார்கள். ஆக, மக்கள் தன்  மீது வைத்த  நம்பிக்கை, எதிர்பார்ப்புக்களினால் எழுச்சி  பெற்று எட்டமுடியாத  ஜனாதிபதி கதிரையை எட்டிப்பிடித்த அனுரகுமார திசாநாயக்கவுக்கு  மக்களின் அந்த அதீத நம்பிக்கையும் எதிர்பார்ப்புமே வீழ்ச்சியையும் கொடுக்கக்கூடிய அரசியல் கள நிலைவரம் விரைவில் ஏற்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.