தமிழன், தமிழ்தேசியம், பாரம்பரியம் என்றெல்லாம் மிகவும் ஓங்கி ஒலித்தது குரல்கள். ஐ.டி கம்பெனி அம்பி முதல் முக்குலத்து சொந்தம் வரை தமிழ் உணர்வு பீறிட்டு அடித்தது. ஆனால் கடைசியில் காவல்துறையிடம் அடிபட்டு, உடைமைகள் எரிக்கப்பட்டு, தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பவர்கள் சென்னையின் பூர்வகுடிகள் மட்டுமே. தமிழன் ஜாலியாக மாட்டின் வாலை கடிக்க தயராகி கொண்டு இருக்கிறான்.
தோழர்.திருமாவை தவிர ஒருவனும் ரூதர் புரம் காலெணியை எட்டி பார்க்கவில்லை. ஈயம் பித்தளை என்று தொண்டையில் ரத்தம் வருமளவு முழங்கிய சீமான் எங்கே பதுங்கி் இருக்கிறார் என்றே தெரியவில்லை. இந்த போராட்டத்தின் ஆரம்பம் முதலே தலித் செயல்பாட்டாளர்கள் பலரும் இது நமக்கான போராட்டம் இல்லை என்று சொல்லி வந்தனர். எனினும் நமது மக்கள், இளைஞர்கள் இதில் பங்கேற்றனர். செல்பி எடுப்பதற்காக பீச்சுக்கு வந்தவர்கள் போல் இல்லாமல் உணர்வு பூர்வமாக களத்தில் நின்றனர். கடைசியில் போலிஸ் வந்து தாக்கிய போது போராட்டகாரர்களுக்கு ஆதரவாக நின்றனர். அவர்களை தமது வீடுகளுக்குள் மறைத்து பாதுகாத்தனர்.
இறுதியில் இதிலே இழந்தது யார்? நாம் மட்டுமே.வேறு ஒருவரும் இல்லை. இன்று கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள அனைவரும் தலித் மக்கள் மற்றும் மீனவர்களே. பட்டினப்பாக்கம் மீன் மார்கெட் முழுவதும் போலிசால் எரிக்கப்பட்டு விட்டது. கடற்கரையை ஒட்டியுள்ள பல சேரிகள் காவல்துறையால் சூறையாடப்பட்டுள்ளது. வங்கியில் போராடி கடனில் பெற்ற ஆட்டோக்களை இழந்து நடுதெருவில் நிற்கின்றனர் பலர். தமிழர்கள் யாரும் கண்டுகொள்வதாயில்லை.
ஆகவே இந்த பிரச்சினையில் நாம் உணர வேண்டியது. தமிழன், திராவிடன், இந்து, கம்யூனிஸ்ட் என்றெல்லாம் நம்மை உசுப்பி விடுவார்கள். உலகமயமாக்கலை எதிர்க்க வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் நியாயமாக நம்மிடம் சொல்வார்கள், இசுலாமிய தீவிரவாதமே நமது பிரச்சினை என்று ஆர்.எஸ்.எஸ் வந்து சொல்லும், தெலுங்கர்கள் தான் நமது பி்ரச்சினை என்று தமிழ் தீவிரவாதிகள் சொல்வார்கள். ஆனால் இதற்கெல்லாம் நாம் உணர்ச்சிவசப்பட்டு அவர்களின் அரசியலில் பலியாடுகளாக மாற்றப்பட கூடாது.
நமது பி்ரச்சினை தீண்டாமை,தீண்டாமை மட்டுமே. இந்தியாவில் உள்ள மற்ற எல்லா பிரச்சினைகளும் எல்லோருக்கும் பொதுவானவை.அந்த பொது பிரச்சினைக்கு பொது சமூகம் போராடி கொள்ளும். தீண்டாமைக்கு எதிராக நாம் தான் போராட வேண்டும். தீண்டாமையை நீக்குவது நமது கைகளில் மட்டுமே உள்ளது.அதற்கு நாம் தான் ஒரு முடிவு கட்ட வேண்டும்.
ஏன் இந்துக்கள் நம்மை தாழ்வாக கருதுகின்றனர் ? ஏன் அவர்கள் நம்மை தீண்டதகாதவர்களாக நடத்த வேண்டும். இதற்கான காரணம் எளிமையானது. சுருக்கமாக கூறினால் வரலாற்று ரீதியில் நாகர்களான நாம் பகுத்தறிவை போதித்த பௌத்த மதத்தை சார்ந்தோர். அவர்கள் இந்துக்கள். இந்துக்களுக்கும் பௌத்தர்களுக்குமான போரில் அவர்கள் வெற்றி பெற்று நம்மை ஊருக்கு வெளியே தள்ளிவிட்டனர்.
இந்த பிரச்சினையில் நமது மீதுள்ள இழிவை போக்குவதற்கு பாபாசாகேப் எளிமையான தீர்வை நம் முன் வைத்துள்ளார். அது இந்து மதத்திலிருந்து வெளியேறுவதே ஆகும். நமது சொந்த மதமான பௌத்தம் திரும்புவதாகும். நமது கலாச்சாரத்தை மீள் கட்டமைப்பு செய்வதன் மூலம் இந்து தீண்டதகாதோர் எனும் இழிவை துடைத்து பெருமைமிகு பௌத்தர்களாக உயர்வதாகும்.
ஆகவே நன்பர்களே பொது பிரச்சினைக்கு உணர்ச்சிவசப்படுவதை நிறுத்திவிட்டு நம் மீதுள்ள தீண்டாமை இழிவை நீக்குவதை முதன்மையான நோக்கமாக கொள்வோம். இல்லையேல் இலங்கையில் நமது மக்களை மட்டும் மனித வெடிகுண்டுகளாக ஆக்கியது போல அவர்களது அரசியலுக்கு நம்மை பலியாடுகளாக ஆக்கி விடுவார்கள்.
ஜெய் பீம்.