இலங்கையில், வட மாகாணத்தில் ஆயுத முனையில் முஸ்லிம்களின் சொத்துகளை சூறையாடி, கொலைசெய்யபட்டதை திரிபுபடுத்தி, முஸ்லிம்களை உளவாளிகளாக சித்தரித்து எழுதப்பட்ட “ஜெப்னா பேக்கரி” என்ற நூலுக்கு 26.02.2018 அன்று தமிழ் நாட்டில் விருது வழங்கப்படுகிறது.
இது எம்மீதான இன்னொரு இனப்படுகொலை
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் (தமிழ்நாடு), வரும் 26.02 .2018 அன்று தங்களுடைய நிகழ்வில், ‘ஜெப்னா பேக்கரி’ எனும் நூலை எழுதிய வாசு முருகவேலிற்கு விருது வழங்கி மதிப்புச் செய்வதை நாங்கள் மிகுந்த வருத்தத்துடன் கண்டனம் செய்கிறோம்.
.
வாசு முருகவேலால் எழுதப்பட்ட ‘ஜெப்னா பேக்கரி’ நடந்த வரலாற்று உண்மைகளை முற்றாகத் திரித்து முஸ்லீம்களை உளவாளிகளாகவும் காட்டிக்கொடுப்பவர்களாகவும் சித்தரிக்கிறது. அதன் வழியே, இரண்டு மணிநேர அவகாசத்தில் முஸ்லீம்கள் புலிகளால் ஆயுதமுனையில் கொள்ளையிடப்பட்டு, நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டு, அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த நிலத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டு நிகழ்த்தப்பட்ட இனச் சுத்திகரிப்பை இந்நூல் நியாயப்படுத்த முயற்சிக்கிறது.
.
விரட்டப்பட்ட 75ஆயிரம் முஸ்லீம்களிடையேயும் ஓர் ஆயுததாரியோ ஓர் உளவாளியோ இருக்கவில்லை. அந்த மக்கள் நாட்டின் தென்பகுதிகளில் அகதிகளாக வாழ விதிக்கப்பட்டார்கள் என்பதைக் கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.
எனவே, வரலாற்றைத் திரித்து, எந்தவொரு சான்றையும் இதுவரை முன்வைக்காது, முஸ்லீம்கள்மீது பழி சுமத்தவும் அதன்வழியே இஸ்லாமியர்களிற்கும் – தமிழர்களிற்கும இடையேயான முரண்களைக் கூர்மை செய்யவும் திட்டமிட்டு செயற்பட்டுவரும் இந்நுாலாசிரியரிற்கு இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் விருது வழங்குவது, அந்த இயக்கம் எங்கள் மீது நிகழ்த்தப்பட்ட இனச் சுத்திகரிப்பை அங்கீகரிக்கும் செயலாகவே கருதுகிறோம்.
யாழ் முஸ்லிம்களின் விரட்டியடிப்பை புலிகள் மற்றும் புலிகளின் தரப்பைச் சார்ந்தவர்களே பின் நாட்களில் பிழை கண்டது வரலாறு.
.
ஒரு பொய்யான நூலை எழுதியவருக்கு விருது வழங்கி அந்நுாலை அங்கீகாரம் செய்வதையும் அதன் வழியே முஸ்லீம்கள் மீதான இனச் சுத்திகரிப்பையும் இனப்படுகொலையையும் நியாயப்படுத்தவதையும் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென இதன் கீழ் கையொப்பமிட்டிருக்கும் நாங்கள் சகோதரத்துவத்துடன் கேட்டுக்கொள்கிறோம்.