இந்தியாவின் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஜெயராமின் நெருங்கிய தோழியான சசிகலா நடராஜன், தனது தோழி ஜெயலலிதா இறப்பதற்கு முன்பதாகவே, ஆட்சிக்கான அடுத்த கட்ட ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்ததாக, தங்களது பெயரை வெளிப்படுத்த விரும்பாத அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் (அ.இ.அ.தி.மு.க) முக்கியஸ்தர்களை மேற்கோள்காட்டி, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்மூலம், நள்ளிரவு நேரத்தில், திரைப்படம் போலவே அனைத்தும் இடம்பெற்று முடிந்துள்ளதாக அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜெயலலிதாவுடன் பல தசாப்தங்களாகக் கொண்டிருந்த நட்பைத் தொடர்ந்து, அ.இ.அ.தி.மு.கவில் பொறுப்புகள் பலவற்றை வகித்த சசிகலா, 2011ஆம் ஆண்டு, கட்சியிலிருந்து தடாலடியாக வெளியேற்றப்பட்டிருந்தார். அத்தோடு, போயஸ் கார்டன் இல்லத்திலிருந்தும் வெளியேற்றப்பட்டார். ஆனால் பின்னர், தனக்கு எதிராகச் செயற்பட்டனர் என ஜெயலலிதாவால் சந்தேகிக்கப்பட்ட சசிகலாவின் குடும்பத்தினருடனான தொடர்பை இல்லாது செய்வதாக சசிகலா உறுதியளித்ததைத் தொடர்ந்து, ஜெயலலிதாவுடன் மீண்டும் இணைந்து கொண்டார்.
எனினும், கட்சிக்குள் சசிகலாவுக்கு எந்தவிதமான உத்தியோகபூர்வ பதவியும் கிடையாது. ஆனால், ஜெயலலிதாவின் இறுதித் தருணங்களில் அவரோடு காணப்பட்ட வெகுசிலரில், சசிகலாவும் ஒருவராவார். இந்நிலையிலேயே, ஜெயலலிதாவிடமிருந்து ஆட்சியை மாற்றியதில், சசிகலாவே முக்கிய பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (04) இரவு 7 மணிக்கு, மீள முடியாதிருந்த இதய நிறுத்தம் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்டுள்ளது. இதிலிருந்து, மூன்று மணித்தியாலங்களுக்குப் பின்னர், சிறிய வைத்திய நடவடிக்கையொன்றின் கீழ் ஜெயலலிதா இருப்பதாக, தற்போதைய முதலைமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கூறப்பட்டுள்ளது.
பின்னர், திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு, சத்திரசிகிச்சைக்குப் பின்னரான கவனிப்பளிக்கப்படும் அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு ஜெயலலிதா கொண்டு செல்லப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. எவ்வாறெனினும், ஜெயலிதா மீதான எந்தப் பார்வையும் படாதவாறு சிறப்புத் திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. சசிகலாவும் ஷீலா பாலகிருஷ்ணன் போன்ற முக்கிய ஆலோசகர்களும் மட்டுமே ஜெயலலிதாவுக்கு அருகில் நின்றுள்ளனர்.
பின்னர், ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் வைத்தியசாலையின் கீழ்த் தளத்தில் கூட்டமொன்றுக்காக அனைத்து அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் திங்கட்கிழமை காலை அழைக்கப்பட்டுள்ளனர். அதில், அவரவர் பெயரிடப்பட்டிருந்த நான்கு ஏ4 வெற்றுத் தாள்களில் கையொப்பமிடுமாறு சசிகலாவால் உத்தரவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஒவ்வொருவரும் தங்களது பெயர்களின் கீழ் கையொப்பமிட்டிருந்த நிலையில், என்ன காரணத்துக்காக கையொப்பங்கள் பயன்படுத்தப்படும் தெரிவித்திருக்கப்பட்டிருக்கவில்லை. இதேவேளை, கட்சிக் கூட்டம் நடைபெற்றதாகக் கூறப்படும் ஆவணமொன்றில் கையொப்பமிடுமாறும் கூறப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், திங்கட்கிழமை மாலை 6 மணிக்கு, கட்சி அலுவலகத்தில் சந்திக்குமாறு சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கூறப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர்கள் அங்கே சென்ற நிலையில், தற்போதைய முதலமைச்சர் பன்னீர்செல்வம் உட்பட சிரேஷ்ட அமைச்சர்கள் ஐவர் இருக்கவில்லை. அவர்கள் ஐவருடன் சசிகலா பேச்சுவார்த்தை நடத்துவதாக, சட்டமன்ற உறுப்பினர்கள் நினைத்துள்ளனர்.
இதேவேளை, ஜெயலலிதா இறந்து விட்டதாக அன்று மாலை ஐந்து மணியளவில் ஊடகங்கள் தவறுதலாகத் தெரிவித்தபோதும், வைத்தியசாலை அதை உறுதிப்படுத்தியிருக்கவில்லை. எவ்வாறெனினும், கட்சி அலுவலகத்திலிருந்து வெளியேறி வைத்தியசாலைக்கு செல்ல சட்டமன்ற உறுப்பினர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், இரவு 11 மணிக்குப் பின்னர் சிரேஷ்ட அமைச்சர்கள் ஐவரும், இறுகிய முகத்துடன் வருகை தந்துள்ளனர். அப்போது, அடுத்த முதலமைச்சராக பன்னீர்செல்வம் இருப்பார் என்ற ஒருவரி அறிக்கையை வாசித்துள்ளார்.
பின்னர், அமைச்சர்கள் பஸ் ஒன்றில் ஏற்றப்பட்டு ஆளுநர் அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அங்கு, புதிய அரசாங்கம் பதவியேற்பதற்கான முழு ஏற்பாடுகளும் தயாராக இருந்துள்ளன. இந்நிலையில், அவர்கள் அங்கு சென்று, 30 நிமிடங்கள் பிற்பாடே, அவர்கள் அவ்வலுவகத்தில் ஜெயலலிதா இறந்தமை அறிவிக்கப்பட்டுள்ளது என அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்தத் தகவல்களை மறுத்த அ.இ.அ.தி.மு.கவின் முக்கியஸ்தரொருவர், தங்களுடைய கட்சியென்பது, நம்பிக்கையின்பால் கட்டியெழுப்பப்பட்ட ஒன்று எனவும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, இந்து பிராமணிய குடும்பத்தைச் சேர்ந்த ஜெயலலிதா, அவர்களுடைய சமுதாயத்தின் வழக்கப்படி எரிக்கப்படாமல், புதைக்கப்பட்டமை தொடர்பாகவும் சந்தேகங்கள் காணப்படுகின்றன. திராவிட அரசியலின் தலைவர்களாக இருந்த அண்ணா, எம்.ஜி.ஆர், பெரியார் போன்றோர், புதைக்கப்பட்டாலும், ஜெயலலிதா, எதற்காக இவ்வாறு புதைக்கப்பட்டார் என்பது கேள்வியாகவே உள்ளது. ஜெயலலிதாவுக்கு முன்னரிருந்த தலைவர்களின் மரபைப் பின்பற்றும் விதமாகவே அவர் இவ்வாறு புதைக்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால், பிராமணிய முறைப்படி அவரை எரிக்க முயன்றிருந்தால், ஜெயலலிதாவின் இரத்த உறவினர்களை இறுதிச் சடங்குக்கு அழைக்க வேண்டியிருக்கும் என்பதால், அதைத் தடுப்பதற்காக, சசிகலாவே இந்தத் தெரிவை மேற்கொண்டிருக்கலாம் என, சிலர் தெரிவிக்கின்றனர். இந்த இரு விடயங்கள் தொடர்பாகவும், இதுவரையிலும் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எவையும் வழங்கப்படவில்லை.