‘டெஸ்ட்’ போட்டிகளில் 800 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றி, முரளி சாதனை படைத்தமையால் இந்தப் படத்துக்கு, அதன் தயாரிப்பாளர்கள் ‘800’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். மஹிந்த ராஜபக்ஷவும் கோட்டாபய ராஜபக்ஷவும் தலைமை தாங்கும் அரசாங்கத்தை, முரளி ஆதரித்தார், ஆதரிக்கிறார் என்ற அடிப்படையிலேயே இந்தத் திரைப்படத்துக்கு எதிர்ப்புகள் தெரிவிக்கப்படுவதாகத் தெரிகிறது. ஆனால், இந்த எதிர்ப்பு வேறு பல முரண்பாடுகளைப் பற்றியும், எம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.
முத்தையா முரளிதரன் என்ற கிரிக்கெட் வீரருக்கு எதிராக, தமிழகத்தில் சிலர் தெரிவிக்கும் எதிர்ப்பு, எந்தளவுக்கு என்றால், திரைப்படத்தில் முரளிதரனாக நடிக்கவிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி மீதும் அவர்களது கோபம் திரும்பியிருக்கிறது. முரளியாக நடிக்க முன்வந்த விஜய் சேதுபதி தமிழரா என்று, சிலர் கேள்வி எழுப்பும் அளவுக்கு இந்தச் சர்ச்சை விஸ்வரூபம் எடுத்துள்ளது.
ஆரம்பத்தில், தமிழக அரசியல்வாதிகள் இடையே ஆரம்பித்த இந்த எதிர்ப்பு, பின்னர் தமிழகத் திரைப்படக் கலைஞர்களிடமும் பரவியுள்ளது. “ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, முரளிதரன் ஆதரவாக இருந்தமையால், உலகெங்கும் தமிழர்களால் ‘தமிழினத்தை காட்டிக் கொடுத்த ஒருவராக’ அடையாளபபடுத்தப்பட்டு உள்ளார்” என்று, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் இந்திய மேலவை உறுப்பினரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவாளருமான வைகோ கூறியிருக்கிறார்.
போரின் போது காணாமலாக்கப்பட்டவர்களைத் தேடித் தருமாறு கோரி, அவர்களின் தாய்மார்களும் உறவினர்களும் உண்ணாவிரதம் இருந்த போது, முரளிதரன் அதை “நாடகம்” எனக் குறிப்பிட்டதாகவும் குற்றஞ்சாட்டிய வைகோ, ‘காட்டிக் கொடுத்தோனின்’ பாத்திரத்தை ஏற்று நடிப்பதிலிருந்து தவிர்த்துக் கொள்ளுமாறு, நடிகர் விஜய் சேதுபதியிடமும் கேட்டுக் கொண்டுள்ளார்.
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டொக்டர் ராம்தாஸூம் முரளியைக் காட்டிக் கொடுப்பவனாகவே குறிப்பிட்டுள்ளார். “சேதுபதி இந்தப் படத்தில் நடிப்பதை அறிந்து, அதிர்ச்சியடைந்தேன். தமிழக நடிகர், ஒரு காட்டிக்கொடுத்தல் வரலாற்றை ஆதரிக்கக் கூடாது” என்றும் அவர் மேலும் கூறியிருக்கிறார்.
நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமானும் இதே போன்ற வார்த்தைகளால் முரளியைச் சாடியிருக்கிறார்.
“சேதுபதி, இந்தப் படத்தில் நடிப்பதிலிருந்து விலகிக் கொண்டால், தமிழ் மக்கள் அவரை எப்போதும் நன்றியுடன் நினைவுகூர்வர். தமிழினம் காட்டிக் கொடுப்போரை ஒரு போதும் மன்னிக்கப் போவதில்லை” என்று இயக்குநர் பாரதிராஜா கூறியிருக்கிறார்.
சமூக வலைத்தளங்களில், இவை போன்ற பல விமர்சனங்கள் வலம்வருகின்றன.
‘800’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களான Dar Motion Pictures, இவற்றுக்குப் பதிலளித்து புதன்கிழமை (14) ஓர் அறிக்கையை வெளியிட்டது. ‘இது, வெளிநாட்டு தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த ஒருவரின் வாழ்க்கைப் பயணத்தைச் சித்திரிப்பதை நோக்கமாகக் கொண்ட, ஒரு விளையாட்டு வீரனின் வாழ்க்கை வரலாறு மட்டுமே’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்தத் திரைப்படம், எந்தவொரு சமூகத்துக்கும் ஆதரவாக, எந்தவோர் அரசியல் கருத்தையும் கொண்டதல்ல; இது, தமது பயணத்தின் போது சந்திக்கும் இடையூறுகளைப் பொருட்படுத்தாது, இளைய தலைமுறையினர் தமது கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்கான தூண்டுதலாகும். ஈழத் தமிழர்களின் போராட்டங்களைக் கொச்சைப்படுத்தும் எந்தவொரு காட்சியும் இதில் உள்ளடங்காது என்றும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இத்தகைய எதிர்ப்புகளை அடுத்து, முரளிதரனும் ஓர் அறிக்கையை வெளியிட்டு இருந்தார். ‘நான், 2009ஆம் ஆண்டுதான், என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள் என்று, 2019ஆம் ஆண்டு கூறியதை, தமிழர்களைக் கொன்று குவித்த நாள்தான் முத்தையா முரளிதரனின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் எனத் திரித்து எழுதுகிறார்கள். ….
போர் சூழ்நிலையிலேயே இருந்த ஒரு நாட்டில், வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள், வீடு திரும்பினால்தான் நிஜம் என்ற சூழ்நிலையில், போர் முடிவுற்றமையைப் பாதுகாப்பாக உணர்வது மட்டுமல்லாது போர் நிறைவடைந்ததால், கடந்த 10 வருடங்களாக உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் இருப்பதை மனதில் வைத்தே, 2009ஆம் ஆண்டு எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்கிற கருத்தில் தெரிவித்தேன்’ என்று, அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
“2009ஆம் ஆண்டு தான், என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள்” என்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘வியத் மக’ கூட்டமொன்றிலேயே முரளி கூறியிருக்கிறார். அந்த ‘வீடியோ’வையும் சமூக வலைத்தளங்களில் சிலர் இணைத்திருந்தார்கள்.
தாம் கூறியதைப் பற்றி, முரளி தரும் விளக்கம் சரியாக இருக்கலாம். ஆனால், அந்தக் கருத்தை அவர், தெரிவித்த மேடையின் காரணமாக, அக் கருத்துக்கு வேறு வியாக்கியானங்கள் வழங்கப்படுவதும் தவிர்க்க முடியாது.
இந்த அறிக்கையில் முரளி, தாம் தமது மலையகத் தமிழர்களுக்குச் செய்த உதவிகளை விட, ஈழ மக்களுக்குச் செய்த உதவிகளே அதிகம் எனக் குறிப்பிட்டு இருக்கிறார். அவ்வாறு வடக்கு, கிழக்கு மக்களை, ‘ஈழத் தமிழர்’ என்று அழைத்தமை, சிங்கள மக்கள் மத்தியிலும் எதிர்ப்பை உருவாக்கலாம்.
இந்தக் குற்றச்சாட்டுகளை, முரளி ஏற்றுக் கொள்வது ஒரு புறமிருக்க, போர் இடம்பெற்ற மண்ணில் வாழும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களா என்ற சந்தேகமும் எழுகிறது. ஏனெனில், இலங்கைத் தமிழர் எவரும், முரளியைக் குறைகூறியதாக இதுவரை தெரியவில்லை. அவர்கள், தமிழக அரசியல்வாதிகள், கலைஞர்களின் குற்றச்சாட்டுகளை ஆதரித்தும், இதுவரை எதையும் கூறியதாகத் தெரியவில்லை. மாறாக, தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், முரளியின் அரசியலைச் சாடுவதோடு, இந்தத் திரைப் பட முயற்சியை ஆதரித்து, முகநூலில் கருத்து வெளியிட்டு இருக்கிறார்.
‘மஹிந்த, கோட்டாபய ஆகியோரின் பொதுஜன பெரமுனவின் சார்பில், கடந்த பொதுத் தேர்தலின் போது, பிரசாரக் களத்தில் முரளி இறங்கியிருந்தார். அப்போது அவர், எமக்கு வாக்களிக்க வேண்டாம் எனக் கூறியிருந்தார்’ எனவும் அதே பதிவில் மனோ கணேசன் குறிப்பிட்டிருக்கிறார்.
முரளியின் கருத்து, கொல்லப்பட்ட தமிழர்களுக்கு எதிரானது என வியாக்கியானம் தான் செய்ய முடியும். ஆனால், போர் மிகவும் மோசமாக நடைபெற்ற நாள்களில், தமிழகத் தலைவர்கள் போர் காலக் கொலைகளைத் தெளிவான வார்த்தைகளால் நியாயப்படுத்தினார்கள். புலிகளிடம் இருந்த கிளிநொச்சி நகரம், 2009ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இராணுவத்திடம் வீழ்ந்தமை, புலிகளின் தோல்வியைக் கோடிட்டுக் காட்டியது. அதிலிருந்து மே மாதம் வரை, வன்னி மக்கள் அனைவரும் முள்ளிவாய்க்காலில் சிக்கிக் கொண்டனர்.
ஜனவரி மாதம் 17ஆம் திகதி, வடக்கில் அகோர போர் நடைபெறும் நிலையில், அப்போதைய தமிழக எதிர்க்கட்சித் தலைவி ஜெயலலிதா, இலங்கை இராணுவத்தின் செயற்பாடுகளை நியாயப்படுத்தினார். “இலங்கை இராணுவத்தின் நோக்கம், தமிழர்களைக் கொல்வது அல்ல; புலிகள் தமது கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து வெளியேறப் பொது மக்களுக்கு இடமளித்தால், கொலைகளைத் தவிர்க்க முடியும். போரின் போது, அப்பாவி மக்கள் கொல்லப்படுவது தவிர்க்க முடியாதது; இது எந்த நாட்டுக்கும் பொருத்தமானது” என்றும் அவர் கூறினார்.
இரண்டு வாரங்களுக்குப் பின்னர், அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியும் இதேதொனியில் கருத்துத் தெரிவித்து இருந்தார். 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மூன்றாம் திகதி நடைபெற்ற தி.மு.க நிறைவேற்றுக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், “தமிழீழத்தில் ஒரு சர்வாதிகார ஆட்சியை நிறுவப் போவதாக, புலிகளின் தலைவர் பிரபாகரன் கூறியதை அடுத்து, 1987ஆம் ஆண்டிலேயே புலிகள் அமைப்பு, தி.மு.கவின் ஆதரவை இழந்ததாகவும், தாம் புலிகளை வெறுப்பதாகவும் கூறியிருந்தார்.
இவை, புலிகள் அமைப்பு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த காலத்தில் கூறப்பட்டவை. இவை அனைத்தும் ஊடகங்களில் பல முறை வெளிவந்த செய்திகள். முரளி, இதை விட மோசமாக எதையும் கூறிவிட்டாரா?
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் திறமை, அச்சமின்மை, தந்திரோபாயங்கள், தியாகம் இல்லாவிட்டால், அரச படைகள் போரில் வெற்றியடைந்திருக்காது என, போர் முடிவடைந்தவுடன், கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருந்தார். போர் முடிவடைந்து, ஒரு வருடம் கூடச் செல்வதற்கு முன் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், தமிழ்த் தலைவர்களின் ஆலோசனைப்படி, போர் முனையில் வாழ்ந்த தமிழ் மக்கள், சரத் பொன்சேகாவுக்கே வாக்களித்தனர். தமிழகத் தலைவர் எவரும் அதை விமர்சித்ததாகத் தெரியவில்லை.
மனோ கணேசன், தமது முகநூல் பதிவில் இவ்வாறு கூறுகிறார். ‘அவரது திரைப்படம், அவரது பொறுப்பற்ற அரசியலை நியாயப்படுத்தாத வரை வந்து போகட்டும்..! ஒரு தமிழரின், ஓர் இலங்கையரின், வாழ்க்கைப் போராட்டம், திரைப் படமாக வரட்டும்..!’