(எம்.எஸ்.எம். ஐயூப்)
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராம் கடந்த ஐந்தாம் திகதி மரணமடைந்ததை அடுத்து, தமிழக அரசியலில் ஒருவித நிலையற்ற தன்மை தென்படுகிறது. புதிய முதலமைச்சராக ஜெயலலிதாவின் நெருங்கிய சகாக்களில் ஒருவரான ஓ. பன்னீர்செல்வம் நியமிக்கப்பட்டாலும், ஜெயலலிதா வகித்த அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் பதவிக்கு யார் நியமிக்கப்படப் போகிறார் என்பதைத் தமிழகத்தில், சகல அரசியல் கட்சிகளும் கூர்ந்து கவனித்து வருகின்றன.ஏனெனில், அக்கட்சியின் யாப்பின் பிரகாரம், அப்பதவி மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கிறது. அந்தப் பதவியை வகிப்பவர் கட்சித் தலைவர் என்று கூறும் அளவுக்கு, அது அதிகாரங்கள் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. அந்தப் பதவியைக் கைப்பற்றிக் கொள்ள ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சசிகலா நடராஜன் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்றும் அந்த முயற்சி பெரும்பாலும் வெற்றியடையும் நிலையிலேயே இருக்கிறது என்றும் தமிழகச் செய்திகள் கூறுகின்றன.சட்டப்படி, இம்மாதம் 31 ஆம் திகதிக்கு முன்னர் அந்தப் பதவிக்கான வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் எனக் கூறப்படுகிறது.
ஆனால், சசிகலாவுக்கு எதிர்ப்பு இல்லாமல் இல்லை. அவருக்கு எதிராகப் பல இடங்களில் சுவரொட்டி எதிர்ப்பு போன்றவை இடம்பெற்றுள்ளன. இந்த நிலையில் இலங்கையின் அரசியல் தலைவர்களும் தமிழகத்தின் புதிய நிலைமைகள் எவ்வாறு இலங்கையைப் பாதிக்கும் என்று கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.
அதிலும், ஜாதிக்க ஹெல உருமய கட்சியின் தேசிய அமைப்பாளரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்ஹ சற்று வித்தியாசமான, ஆனால் ஒரு வகையில் நேர்மையான உணர்வுகளை வெளிப்படுத்தியிருக்கிறார். இலங்கைக்கு பல்வேறு விதமாக தொந்தரவுகளைக் கொடுத்த ஜெயலலிதா இறந்ததையிட்டு தாம் மகிழ்ச்சியடைவதாகவும் ஆறுதல் அடைவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
ஒருவர் இறந்தால் சிலர் மகிழ்ச்சியடையும் சந்தர்ப்பங்கள் இல்லாமல் இல்லை. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, மக்கள் விடுதலை முன்னணியின் ஸ்தாபகத் தலைவர் ரோஹண விஜேவீர மற்றும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஆகியோர் இறந்தபோது, இந்நாட்டில் பலர் பட்டாசு கொழுத்தி மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டதை நாம் கண்டோம்.
அதைத் தவிரப் பொதுவாகத் தமது பரம எதிரியே தான் இறந்தாலும், எவரும் பகிரங்கமாக மகிழ்ச்சியைத் தெரிவிப்பதில்லை. எனவேதான், ஜெயலலிதாவின் மறைவையொட்டி வர்ணசிங்ஹ மகிழ்ச்சியைத் தெரிவித்தமை வித்தியாசமாகத் தெரிகிறது. ஆனால், உண்மையிலேயே ஜெயலலிதாவின் மறைவினால் இலங்கை நன்மையடையுமா? தமிழகத் தலைவர்களால் இலங்கை அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நெருக்குவாரங்கள் இல்லாமல் போய் விடுமா? அல்லது குறைந்துவிடுமா என்பதை எவருக்கும் உறுதியாகக் கூற முடியாது.
ஏனெனில், இலங்கை அரசாங்கத்துக்கு அந்தத் ‘தொல்லைகளை’ கொடுக்கும் நிலைக்கு தமிழக அரசியலே ஜெயலலிதாவைத் தள்ளியது. அதேவேளை, அதற்காக ஜெயலலிதாவுக்கு இலங்கை அரசாங்கமே அதற்கான ‘ஆயுதங்களை’ வழங்கியது. இதற்கு முன்னர் 1987 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம், அ.தி.மு.க ஸ்தாபகத் தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான எம். ஜி. ராமச்சந்திரன் இறந்த போதும் இலங்கையில் சிலர் இனித் தொல்லைகள் முடிந்துவிட்டனவென நினைத்தனர்.
ஏனெனில், எம்.ஜி.ஆரும் இலங்கை அரசாங்கத்தின் எதிரிகளான தமிழ் இயக்கங்களுக்குக் குறிப்பாகப் புலிகளுக்கு பெருமளவில் பண உதவியும் வேறு உதவிகளையும் செய்து வந்தார். 1987 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் அரசாங்க நிதியத்திலிருந்து புலிகளுக்கு இந்திய பணத்தில் நான்கு கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கியதாகச் செய்திகள் பரவின. ஆனால், அது நான்கு கோடி அல்ல, ஆறு கோடி எனப் புலிகளின் ஆலோசகராகவிருந்த கலாநிதி அன்டன் பாலசிங்கம், 2004 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கூறியிருந்தார்.
அக்காலத்திலேயேதான், இந்திய மத்திய அரசாங்கமும் இலங்கைத் தமிழ் இயக்கங்களுக்கு ஆயுதம், பணம், ஆயுதப் பயிற்சி ஆகியவற்றை வழங்கியிருந்தது. எனவே, எம்.ஜி.ஆரும் இலங்கையின் பல தலைவர்களது வெறுப்புக்கு ஆளானார். இந்த நிலையில் அவரது மரணமும் இங்கு பலருக்குப் பெரும் ஆறுதலாக அமைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால், அவர்களது மகிழ்ச்சிக்கு அவ்வளவு ஆயுள் இருக்கவில்லை.
ஜெயலலிதா அதற்குப் பின்னர் அ.தி.மு.கவின் தலைமையைக் கைப்பற்றிக் கொண்டார். பின்னர், அவரும் 1991 ஆம் ஆண்டு மே மாதம் முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜிவ் காந்தி, புலிகளால் கொல்லப்படும் வரை புலிகளை ஆதரித்தார்.
அக்காலத்தில் இலங்கைத் தமிழ் இயக்கங்களுக்கு ஆதரவு தெரிவிப்பதில் தமிழகத்தின் இரு பிரதான கட்சிகளான தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகியவற்றுக்கிடையே கடும் போட்டி நிலவியது. அ.தி.மு.க புலிகளை ஆதரித்தது. தி.மு.க, சிறி சபாரத்தினத்தின் தலைமையிலான ரெலோ என்றழைக்கப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தை ஆதரித்தது. பின்னர் இந்த நிலைமை மாறி, தி.மு.க தலைவரும் புலிகளை ஆதரிக்கத் தொடங்கினார்.
அது எந்தளவுக்கு என்றால், புலிகள் சுதந்திரமாகத் தமிழகத்தில் கொலைகளைச் செய்துவிட்டுத் தப்பிச் செல்ல வாய்ப்பளிக்கப்பட்டது. அக் காலத்தில்தான், அதாவது 1990 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் திகதி சென்னை அருகே கோடம்பாக்கத்தில் ஒரு வீட்டில் கலந்துரையாடிக் கொண்டிருந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் கே. பத்மநாபா உள்ளிட்ட அக்கட்சியின் தலைவர்கள் 14 பேர் புலிகளால் கொல்லப்பட்டனர்.
இதுபோன்ற சம்பவங்கள் மட்டுமன்றி, இலங்கைத் தமிழ் இயக்கங்களுக்கு ஆதரவாகத் தமிழகத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களே இலங்கைத் தலைவர்களுக்குப் பெரும் தலையிடியாக அமைந்தன, இப்போதும் அமைந்துள்ளன. ஏனெனில், அந்த ஆர்ப்பாட்டங்களின் காரணமாகத் தமிழக மக்களின் ஆதரவைத் தாம் இழந்து விடுவோமோ என இந்திய மத்திய அரசாங்கம் அஞ்சுகிறது.
அதன் காரணமாக, அவ்வாறான போராட்டங்கள் நடைபெறும் போதெல்லாம் மத்திய அரசாங்கம், இலங்கை அரசாங்கம் மீது பல்வேறுபட்ட நெருக்குதல்களை உபயோகிக்கிறது. சிலவேளைகளில் அந்த நெருக்குவாரம் கோரிக்கை வடிவத்திலும், மிரட்டல் வடிவத்திலும் எச்சரிக்கை வடிவத்திலும் பலாத்காரம் வடிவத்திலும் இராணுவத் தலையீடாகவும் வந்துள்ளன.
எம்.ஜி.ஆர், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோர் ஆரம்ப காலத்தில் தமிழ் ஆயுதக் குழுக்களுக்கு உதவி வழங்கும்போது, மத்திய அரசாங்கமும் கண்டும் காணாததைப் போல இருந்தது. அது, இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கிய எச்சரிக்கையாகும். 1987 ஆம் ஆண்டு, இலங்கை – இந்திய ஒப்பந்தம் பலாத்காரமாகக் கைச்சாத்திடப்பட்டது. அதற்கு முன்னர், 1987 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய கடற்படையும் விமானப் படையும் இலங்கையின் எல்லைக்குள் அத்து மீறி வந்து, சென்றமை இராணுவத் தலையீடாகும்.
ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில், அதாவது 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் போர் நிறுத்தம் ஒன்றைக் கோரி முதலமைச்சர் கருணாநிதி ‘சாகும் வரை’ உண்ணாவிரதம் ஒன்றை ஆரம்பித்தார். தள்ளாடும் வயதில், அவருக்கு ஏதும் நடந்தால் தமிழ்நாட்டில் கொந்தளிப்பு ஏற்படும் என அஞ்சிய மத்திய அரசாங்கம், ஏதாவது செய்யுமாறு இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டது.
போர்களத்தில் கனரக ஆயுதங்களை பாவிப்பதில்லை என அப்போது இலங்கை அரசாங்கம் அறிவித்தது. ஏனெனில், போர்க் களத்தில் சாதாரண மக்கள் இலட்சக் கணக்கில் சிக்கி இருந்தனர். அதனைச் சுட்டிக் காட்டி, கருணாநிதி ‘சாகும் வரை’ உண்ணாவிரதத்தைக் கைவிட்டார். இது இந்திய மத்திய அரசாங்கம் கோரிக்கை மூலமும் இலங்கை அரசாங்கத்துக்கு நெருக்குதல் கொடுத்தமைக்கு உதாரணமாகும்.
மறுபுறத்தில், தமிழக மக்களின் ஆதரவைப் பற்றிய மத்திய அரசாங்கத்தின் இந்தக் கவலையைத் தமிழக அரசியல்வாதிகள் தமது அரசியலுக்காகப் பாவிக்கிறார்கள். ஜெயலலிதாவும் அந்த நிலைமையை மிகத் தீவிரமாக பாவித்தார். இந்திய மீனவர்கள் விடயத்தில் அவர் இந்தியப் பிரதமர்களுக்கு அடிக்கடி அனுப்பி வந்த கடிதங்கள் அதற்குச் சான்றாகும்.
அதேவேளை, அவர்கள் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு வலியுறுத்தியும் அடிக்கடி தமிழகத்தில் ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்துகிறார்கள். இது இலங்கைத் தலைவர்களுக்கு பெரும் தொல்லையாக அமைந்துள்ளது.
ஜெயலலிதாவின் இறுதி ஆட்சிக் காலத்தில், நிலைமை மேலும் ஒரு படி சென்று, இலங்கையிலிருந்து தமிழகத்துக்குச் செல்வோரைத் தாக்கி இம்சிக்கும் நிலையும் ஏற்பட்டது. ஜெயலலிதா அத்தாக்குதலை நிறுத்த எதனையும் செய்யவில்லை. இதனைச் சுட்டிக் காட்டித்தான் வர்ணசிங்ஹ ஜெயலலிதா இறந்ததையிட்டுத் தாம் மகிழ்ச்சியடைவதாகக் கூறியிருந்தார்.
2011 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம், சென்னையில் அமைந்துள்ள மகாபோதி சமாஜத்தின் அலுவலகம் நாம் தமிழர் கட்சிக் காரர்களால் தாக்கப்பட்டது. 2010 ஆம் ஆண்டு ஜனவரி 10 ஆம் திகதி அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் உறவினரான திருகுமாரன் நடேசன் இராமேஸ்வரத்தில் கோயில் ஒன்றில் இருந்து வெளியே வரும்போது, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் கும்பலொன்றினால் தாக்கப்பட்டார்.
2012 ஆம் ஆண்டு, செப்டெம்பர் மாதம் தமிழகத்தில் அன்னை வேளாங்கண்ணி மற்றும் பூண்டி மாதா தேவாலயங்களுக்கு யாத்திரை சென்ற 184 பேர் கொண்ட இலங்கை யாத்திரிகர் குழுவொன்று, தாக்கப்பட்டு விசேட மிஹின் லங்கா விமானமொன்றின் மூலம் தமிழகத்தில் இருந்து வெளியேற்றிக் கொள்ள நேரிட்டது.
2013 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் சென்னையில் ஸ்ரீ லங்கன் அலுவலகம், கும்பலொன்றினால் தாக்கப்பட்டது. அதற்கு அடுத்த மாதத்தில் மதுரையில் அமைந்துள்ள மிஹின் லங்கா விற்பனை அலுவலகம், நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்களால் தாக்கப்பட்டது.
அதேமாதத்தில் அதற்குச் சில தினங்களுக்குப் பின்னர், இந்திய தொல்பொருள் ஆராய்ச்சிக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவரான பௌத்த பிக்கு ஒருவர் தஞ்சாவூரில் கோயில் ஒன்றுக்குச் சென்றிருந்த வேளை தாக்கப்பட்டார். அதற்கு இரண்டு தினங்களுக்குப் பின்னர் சென்னை மத்திய ரயில் நிலையத்தில் வைத்து மற்றொரு பிக்கு ஓட ஓடத் தாக்கப்பட்டார்.
இதேகால கட்டத்தில், இலங்கையிலிருந்து தமிழகத்துக்குச் சென்ற விளையாட்டுக் குழுவொன்று மிரட்டப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டது. பாதுகாப்புக் காரணங்களுக்காக சென்னையில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டாம் என இலங்கை கிரிக்கெட் சபை, இலங்கை கிரிக்கெட் வீரர்களுக்கு அறிவித்தது. எனவே, அக்காலத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, இலங்கை அரசாங்கத்தினதும் சிங்கள மக்களினதும் சில தமிழர்களினதும் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டார்.
ஆனால், தமிழகத் தலைவர்கள் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை தமது அரசியல் நலனுக்காகப் பாவிப்பதாக வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வட மாகண சபைத் தேர்தல் காலத்தில் ‘இந்து’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியொன்றில் கூறியிருந்தார்.
தமிழகத் தலைவர்கள் தமது பிரச்சினையைப் பந்தாடுவதாகவும் அவர்கள் அங்கு பந்துக்கு அடிக்கும் ஒவ்வொரு அடியும் தம்மை வந்து தாக்குவதாகவும் தமிழகத் தலைவர்கள் இலங்கையின் பிரிவினையைப் பற்றிப் பேசும் போது, சிங்கள மக்கள் தம்மை சந்தேகிப்பதாகவும் கூறிய அவர், “நாம் சண்டைப் பிடிப்போம், மீண்டும் ஒன்று சேர்வோம், இதில் அயல் வீட்டுக்காரர் தலையிட்டுப் பிரிந்து விடுங்கள், பிரிந்து விடுங்கள் என்று கூறத் தேவையில்லை, அது அவர்களுக்குரிய வேலையல்ல” என்றும் கூறினார்.
விக்னேஸ்வரன் கூறுவது உண்மைதான். சென்னையில் குண்டர்கள் பிக்குகளைத் தாக்கும் போது, தமிழகத் தலைவர்கள் இலங்கையில் வாழும் தமிழர்களைப் பற்றிச் சிந்திக்கவில்லை. போர் வெற்றிக் களிப்பில் இருந்த சிங்கள மக்கள், இந்தத் தாக்குதல்களுக்கு பதில் தாக்குதல் நடத்த முற்பட்டிருந்தால் நிலைமை என்னவாக இருக்கும்?
இப்போது ஜெயலலிதா இறந்துவிட்டாலும், தமிழக அரசில்வாதிகள் இலங்கைப் பிரச்சினையைத் தமது அரசியலுக்குப் பாவிக்கும் நிலைமை மாறப் போவதில்லை.
உண்மையிலேயே அந்த நிலைமை அதிகரித்தாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை. ஏனெனில், எதிர் காலத்தில் தமிழகத் தலைவர்களிடையே பதவிச் சண்டை மேலும் அதிகரிக்கலாம். அப்போது தமது இன உணர்வைக் காட்டி, மக்கள் ஆதரவைப் பெற அவர்கள் அனைவரும் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளை மென்மேலும் பாவிக்கலாம்.
இப்போது அ.தி.மு.கவில் தலைமைப் போட்டி எவ்வாறான நிலைமையை தோற்றுவிக்கும் எனக் கூற முடியாது. முன்னர் கூறியது போல், சசிகலா அக்கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றிக் கொண்டாலும், மேலும் சில காலம் வரை உட்கட்சிப் பூசல் தொடரலாம். ஏற்கெனவே தமது ஜனரஞ்சகத் தன்மையை வளர்த்துக் கொள்வதற்காக, சசிகலா இலங்கையுடனான உறவைப் பாவிக்கத் தொடங்கியிருக்கிறார்.
உத்தியோகபூர்வமாக எந்த அதிகாரம் இல்லாமலேயே, அவர் கச்சதீவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட, புனித அந்தோனியார் தேவாலய அபிஷேக வைபவத்தில் கலந்து கொள்ள தமிழகத்திலிருந்து நூறு பேருக்கு அனுமதி வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அனுமதி கோரியிருக்கிறார்.
ஜனாதிபதியும் ஜெயலலிதாவின் மறைவையொட்டிய தமது அனுதாபச் செய்தியை, அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மூலம் சசிகலாவிடமே அனுப்பியிருக்கிறார் என ‘ரைம்ஸ் ஒப் இந்தியா’ பத்திரிகை தெரிவித்தது.
அமைச்சர் தொண்டமான் அந்தச் செய்தியை எடுத்துக் கொண்டு சசிகலாவைச் சந்திக்க, ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்துக்குச் சென்ற போதே, சசிகலா தேவாலய விழாவைப் பற்றிய தமது கோரிக்கையை அமைச்சர் தொண்டமான் மூலம் அனுப்பியிருக்கிறார்.
இதற்கான ஜனாதிபதியின் அனுமதி முதலமைச்சர் பன்னீர்செல்வத்தின் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டாலும் அது சசிகலாவின் பெயருக்கே எழுதப்பட்டு இருந்ததாக ‘ரைம்ஸ் ஒப் இந்தியா’ கூறுகிறது. இது சசிகலாவுக்குக் கிடைத்த முதலாவது சர்வதேச அங்கிகாரமாகும்.
ஜெயலலிதாவின் தலைமைக்குச் சவால் விடுக்கத் தைரியம் இல்லாதிருந்தோருக்கும் சசிகலாவுக்குச் சவால் விடுக்கத் தைரியம் வரலாம். பட்டம், பதவி, ஆசை காரணமாக அவ்வாறு பலர் சவால் விடுக்கக் கூடும். அரசியல் கட்சியொன்றின் பலம் வாய்ந்த தலைவர் ஒருவர் தமக்குப் பின்னர் தலைமையை ஏற்க, இரண்டாம் நிலைத் தலைவர் ஒருவரை, வளர்க்காது மரணித்துவிட்டாலோ அல்லது அரசியலில் இருந்து விலகிவிட்டாலோ இந்த நிலைமை ஏற்படுவது சகஜம்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழீழ விடுதலை புலிகள், ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய கட்சி மற்றும் அமைப்புக்களில் இது போன்ற நிலைமை இதற்கு முன்னர் ஏற்பட்டது.
தி.மு.கவின் நிலைமையும் இதே போலாகும் என ஊகிக்கலாம். கருணாநிதிக்கு இப்போது 92 வயதாகிறது. அவருக்குப் பின் அக்கட்சியிலும் சவாலின்றித் தலைமை தாங்கும் நிலைக்கு எவரும் இல்லை என்றே கூற வேண்டும். இவ்வாறு தமிழகத்தில் கட்சிகளுக்கிடையே மட்டுமல்லாது பிரதான கட்சிகளுக்குள்ளும் அதிகாரப் போட்டி அதிகரிக்கும் போது, போட்டியாளர்கள் எல்லோரும் மக்கள் ஆதரவைப் பெறுவதற்காக குறுக்கு வழிகளைத் தேட முற்படுவர்.
இனவாதம் போன்றவற்றை பாவிப்பர். தமிழகத்தைப் பொறுத்தவரை போட்டியாளர்கள் எல்லோரும் இலங்கைத் தமிழர் பிரச்சினையையும் மீனவர்களின் பிரச்சினைகளையும் தூக்கிப் பிடிப்பர். எனவே, எதிர் காலத்தில் இலங்கை மீது மேலும் பகையுணர்வு கொண்ட தமிழகம் ஒன்று உருவாகும் சாத்தியம் அதிகம்.