பார்ப்பன ஊடகங்களின் பல்லாண்டுகால விஷமப் பிரச்சாரத்துக்கு பலியாகி, சிந்திக்கும் ஆற்றலையே இழந்துவிட்ட நீங்கள்தான் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள்!எடப்பாடி, ஓ.பி.எஸ்சை விட பெரிய அடிமைகள்!
1950களிலேயே, அதாவது எம்.எல்.ஏ ஆவதற்கு முன்பே காரும், பங்களாவும் வாங்கிய கலைஞரை, அரசியலால் சம்பாதித்தவர் என்றும், போயஸ் தோட்டம் ஜப்திக்கு வந்த சூழலில் அரசியலுக்கு வந்து சாகும்போது மூன்று லட்சம் கோடி பணத்தை வைரமாக மாற்றிய ஜெயலலிதாவை இரும்புப் பெண்மணி, மகாராணி என்றும் அவர்களால் உங்களை நம்ப வைக்க முடியும்.
பிரியாணிக்கடையில் ஒரு பொறுக்கி சோத்துக்காக போட்ட சண்டையை திமுக எனும் இயக்கத்தின் மேல் எழுதி உங்களை எல்லாம் பேச வைத்த அயோக்கியர்கள், பொள்ளாச்சியில் அதிமுக பெயரைச் சொல்லி மாணவிகளை ஆபாசப்படம் எடுத்து குரூரமாக சித்திரவதை செய்த ஆளுங்கட்சி கும்பலைப் பற்றி பேசவே மாட்டார்கள். நீங்களும் ஏதோ பக்கத்து ஊர் செய்தி போல கடந்துபோவீர்கள். ப்ரியாணியில் காட்டிய அக்கறையைக் கூட தமிழ் மாணவிகளின் மேல் காட்டமாட்டீர்கள்.
நீட் தேர்வை விட உதயநிதி கிராமசபை கூட்டத்துக்கு வருவதுதான் நாட்டை நாசமாக்கும் பெரிய பிரச்சினை என அவர்களால் உங்களைப் பேச வைக்க முடியும்.
தூத்துக்குடியில் அத்தனை பேரின் உயிர் சேதத்தை விட ஸ்டாலின் ஒரு பழமொழியை தவறாகச் சொல்வதுதான் மிகப்பெரிய மனித உரிமைப் பிரச்சினை என அவர்களால் உங்களை நம்ப வைக்க முடியும். ஊழலில் தண்டனை பெற்ற லாலு பிரசாத்தான் அயோக்கியர். ஜெ பரிசுத்த ஆத்மா என அவர்களால்தான் உங்களை நம்ப வைக்க முடியும். ரஃபேல் ஊழல் ஏதோ அண்டை நாட்டுப் பிரச்சினை போல, அந்த ஊழல் பற்றிய செய்தி எல்லாம் உங்கள் காதுகளை அண்டாமலேயே செய்துவிட அவர்களால் முடியும்.
அவர்களால் எதுவும் முடியும். உங்களை எப்படியும் ஆட்டுவிக்க முடியும். அட்டையைப் போல் உங்கள் ரத்தத்தை உறிஞ்சிவிட்டு, மேலே இருக்கும் மின்விசிறியைக் காட்டி, உங்கள் ரத்தம் வற்றிப்போக அதுதான் காரணம் எனச் சொன்னாலும் மனதார நம்புவீர்கள். பாவம் நீங்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்!!
நாங்கள் மைனாரிட்டிகள்தான். எங்களுக்கு ஜனநாயகம் என்பது ஒவ்வொருமுறையும் பெரும் போராட்டம்தான். பெரும்பாலும் ஏமாற்றம்தான். 1991லும், 2001யிலும், 2016யிலும் ஏன் திமுகவைத் தோற்கடித்தீர்கள்? பதில் சொல்லுங்களேன். அப்போதைக்கு ஏதாவது பரப்பி இருப்பார்கள். அவர்கள் ஆட்டுவித்தபடி ஆடியிருப்பீர்கள்.
கலைஞர் கட்டிய எல்லாவற்றுக்கும் எம்.ஜி.ஆர் பெயரை வைக்க அதிமுகவினர் துடிக்கிறார்களே. ஏன்? 13 ஆண்டுகால தொடர் ஆட்சிகாலத்தில் எம்.ஜி.ஆர் ஒன்றுமே கட்டவில்லையா? இல்லை! ஒன்றுமே கட்டவில்லை. அதனால்தான் அடுத்தவன் குழந்தைக்கு இனிஷியல் போட்டுத் தனதாக்கத் துடிக்கிறார்கள். ஆனாலும் எவனாவது மேடையில் நின்று, “புரட்சித்தலைவர் ஆட்சி அமைப்பேன்,” என்றால் உடனே கைதட்டுவீர்கள்!! கலைஞர் நல்லாட்சி செய்தார் என அலுவலகத்திலோ, பொது இடங்களிலோ யாராவது பேசினால் சிரிப்பீர்கள். கிண்டல் செய்வீர்கள். ஏன் எம்.ஜி.ஆருக்கு கைதட்டுகிறீகள்? ஏன் கலைஞரைப் புகழ்ந்தால் நக்கல் அடிக்கிறீர்கள்? என்ன கணக்கு அது? உங்களுக்கு எப்படித் தெரியும் பாவம்!! உங்களை அப்படியே பழக்கப்படுத்திவிட்டார்கள்.
நாங்கள் யாரையும் புனிதப்படுத்தவில்லை. நாங்களும், எங்கள் தலைமுறையும் யாரால் நன்றாக இருக்கிறோம் எனப் பார்க்கிறோம். புள்ளிவிவரங்கள், தகவல்கள் கொட்டிக் கிடக்கிறது. யார் எங்கள் தலைவர் என்பதை அதை வைத்து தேர்ந்தெடுக்கிறோம். அன்று அண்ணா, பின்னர் கலைஞர், இன்று ஸ்டாலின். இந்தத் தேர்வு கூட பச்சை சுயநலம்தான். எங்களுக்கு நல்லது நடக்க வேண்டும். எங்கள் தலைமுறை நீட்டுக்கு பலியாகக் கூடாது. மதவெறிக்கு ஆளாகக் கூடாது. கல்வியுரிமையோடு வாழ வேண்டும். தென்னக ரயில்வேயில் இந்திக்காரர்களை பணியமர்த்தி உள்ளார்களே, அது எல்லாம் நம் அண்ணன், தம்பிகளுக்கு, அக்காள், தங்கைகளுக்குப் போக வேண்டிய இடம் தானே! அதை எல்லாம் திரும்பப் பெற வேண்டும். அவ்வளவுதான். இதையெல்லாம் யார் செய்வார்களோ, யார் ஆட்சியில் இதெல்லாம் இல்லாமல் இருந்தது என வரலாறு எங்களுக்கு கைகாட்டுகிறதோ, புள்ளிவிவரங்கள் கைகாட்டுகிறதோ அவர்கள்தான் எங்கள் தலைவர்கள்.
ஆனால், உங்கள் அனைவரையும் முழுதாக மாற்ற முடியுமா, காலம்காலமாக பார்ப்பன விஷம் உங்களின் மேல் திணித்த கருத்துக்களைத் தாண்டி உங்களை சுதந்திரமாக சிந்திக்க வைக்க முடியுமா என்றெல்லாம் தெரியவில்லை. ஆனால் அதற்கானப் போராட்டத்தை நாங்கள் கைவிடப் போவதே இல்லை. கைவிடப் போவதே இல்லை.
-டான் அசோக்
மார்ச் 9, 2019