ஜே.வி.பியின் முதலாவது ஆயுதக் கிளர்ச்சியின் பின்னணி என்ன?

அந்தக் கிளர்ச்சியின் அனுபவங்களில் இருந்து பாடம் படிக்காத ஜே.வி.பியினர் 1988 – 89 ஆண்டுக் காலகட்டத்தில் இரண்டாவது ஆயுதக் கிளர்ச்சி ஒன்றில் இறங்கினர். இரண்டாவது கிளர்ச்சி முதல் கிளர்ச்சியை விட மோசமாக அடக்கப்பட்டது. இம்முறை ஜே.வி.பியின் ஸ்தாபகத் தலைவர் ரோகண விஜேவீர உட்பட அதன் மத்திய குழு உறுப்பினர்களில் 90 வீதமானோர் அழிக்கப்பட்டனர்.

இருப்பினும் ஜே.வி.பியினர் அன்றிலிருந்து இன்றுவரை தம்மை மார்க்சியவாதிகள் என்றும், இலங்கையில் வர்க்க பேதமற்ற, இன பேதமற்ற சோசலிச அரசொன்றை நிறுவுவதே தமது நோக்கம் என்றும் சொல்லி வருகின்றனர். ஆனால் அவர்களது அரை நூற்றாணடுகால நடைமுறையை வைத்துப் பார்த்தால் அவர்கள் சொல்வதற்கு எதிரான பாதையிலேயே பயணித்து வந்திருப்பதைக் காண முடியும்.

முதலாவதாக, அவர்கள் 1971 ஏப்ரல் 05ஆம் திகதி தமது முதல் ஆயுதக் கிளர்ச்சியை நடத்திய சூழலை எடுத்துப் பார்ப்போம்.

அப்பொழுது சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி இணைந்த ஐக்கிய முன்னணி அரசு பதவியில் இருந்தது. 1965 முதல் 70 வரை ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான ஏழுகட்சி (தமிழரசு, தமிழ் காங்கிரஸ் கட்சிகளும் உள்ளடங்கிய) கூட்டரசாங்கத்தின் கொள்கைகளில் வெறுப்படைந்த மக்கள் 70ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் சிறீமாவோ அரசுக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை வழங்கியிருந்தனர்.

இந்த சூழ்நிலையில், சிறீமாவோ அரசு மக்களின் அமோக ஆதரவுடன் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கூட ஆகாத நிலையில் ஜே.வி.பி. ஆயுதக் கிளர்ச்சி மூலம் அந்த அரசைத் தூக்கி எறிய முயன்ற செயல் சாதாரணமான பார்வையில் தற்கொலைக்கொப்பான ஒரு செயல் என்றுதான் பார்க்கத் தோன்றும். அப்படியானால் ஏன் ஜே.வி.பியினர் அச்செயலில் இறங்கினர் என்ற கேள்வி எழுகின்றது. அந்தக் கேள்விக்கான பதிலில்தான் அவர்களின் கிளர்ச்சிக்கான சூட்சுமம் என்ன என்ற விடயம் அடங்கியிருக்கிறது.

சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் இடதுசாரிகளையும் உள்ளடக்கிய அரசொன்று ஆட்சிக்கு வந்தது ஏகாதிபத்திய சக்திகளுக்கும் அவர்களது அடிவருடியான ஐ.தே.க. மற்றும் தமிழ் பிற்போக்கு சக்திகளுக்கும் உவப்பில்லாத விடயம். எனவே அவர்கள் சிறீமாவோ தலைமையிலான அரசைக் கவிழ்ப்பதற்கு பல சூழ்ச்சித் திட்டங்களை வகுத்தனர்.

அதில் ஒரு திட்டம் தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ் பிற்போக்கு சக்திகள் மூலம் சிறீமாவோ அரசுக்கு எதிரான தமிழ் தேசியவாதத்தை தீவிரப்படுத்தி, தமிழர்களை தனிநாட்டுப் போராட்டம் ஒன்றை நோக்கித் தள்ளிவிடுவது. பிற்காலத்திய நிகழ்வுகளைத் தொகுத்துப் பார்த்தால் அதன் உண்மை விளங்கும்.

இன்னொரு திட்டம் தென்னிலங்கையில் படித்துவிட்டு வேலையற்று இருக்கும் கிராமப்புற சிங்கள இளைஞர்களைப் பயன்படுத்தி ஆயுதக் கிளர்ச்சி ஒன்றின் மூலம் சிறீமாவோ அரசைத் தூக்கி எறிவது. இந்த முயற்சியை மக்களின் வெறுப்புக்கு உள்ளாகியிருக்கும் ஐ.தே.க. மூலம் நிறைவேற்ற முடியாது. அதேநேரத்தில் கியூப புரட்சியாளர் சே குவேராவின் பெயரால் “சே குவேரா இயக்கம்” என்ற இளைஞர்களைக் கவரும் கவர்ச்சிகரமான பெயரில் இயங்கிக் கொண்டிருந்த ஜே.வி.பி. மூலம் நிறைவேற்ற முயற்சி செய்தால் என்ன என்ற எண்ணம் பிற்போக்கு சக்திகளுக்குத் தோன்றியது. அதற்காக அவர்கள் ஜே.வி.பியை ஆரம்பத்தில் இருந்தே தயார் செய்தார்கள்.

70ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலில் சிறீமாவோ தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெறும் என்பதைக் கணித்த பிற்போக்கு சக்திகள் அத்தேர்தலில் ஜே.வி.பியை சிறீமாவோ அணிக்கு (சுமார் 40 தொகுதிகளில் எனக் கூறப்படுகிறது) ஆதரவாக வேலை செய்ய வைத்தனர். அதன் மூலம் ஐ.தே;கவுக்கு எதிரான கிராமப்புற சிங்கள இளைஞர்களை ஜே.வி.பி. தனது பக்கம் ஈர்க்க வழியேற்படுத்தப்பட்டது.

அதேநேரத்தில் ஐ.தே.கவுக்கு சார்பான இளைஞர்களையும் ஜே.வி.பிக்குள் உள் நுழைப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. முன்னைய டட்லி தலைமையிலான ஐ.தே.க. அரசாங்கம் வேலையற்ற ஆயிரக்கணக்கான சிங்கள – தமிழ் இளைஞர்களைத் திரட்டி ‘விவசாயப்படை’ என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கி நாடு முழுவதும் முகாம்களை அமைத்திருந்தது. அதற்குப் பொறுப்பாக ஐ.தே.கவுக்கு சார்பான ஓய்வுபெற்ற இராணுவ கப்டனான செனவிரத்ன என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த அமைப்பை 70ஆம் ஆண்டுப் பொதுத்தேர்தலுக்கு சற்று முன்பாக அரசு கலைத்துவிட்டது. கலைக்கும் போது அடுத்த பொதுத்தேர்தலில் தென்னிலங்iகையில் ஐ.தே.கவுக்கு சார்பாகவும், வடக்கில் தமிழ் காங்கிரஸ் கட்சிக்கு சார்பாகவும் வேலை செய்யும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்து.

ஜே.வி.பியின் 71 ஏப்ரல் 05ஆம் திகதி ஆயுதக் கிளர்ச்சி நடைபெறுவதற்கு சில மாதங்கள் முன்பதாக விவசாயப்படை முன்னாள் பொறுப்பதிகாரி கப்டன் செனிவிரத்ன, நூற்றுக்கணக்கான முன்னாள் விவசாயப்படை உறுப்பினர்களுடன் ஜே.வி.பியில் இணைந்துகொண்டார். இது ஜே.வி.பியை தமது கட்டுப்பாட்டில் வழிநடத்துவதற்கான ஐ.தே.கவின் திட்டம் எனவே பலராலும் நோக்கப்பட்டது.

இதுதவிர, அப்பொழுது ஐ.தே.க. தலைமைப் பொறுப்பை ஏற்றிருந்த ‘அரசியல் குள்ளநரி’ என வர்ணிக்கப்படும் ஜே.ஆர்.ஜெயவர்த்தன, பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது, “நான் இன்று ஒரு இளைஞனாக இருந்தால் ஜே.வி.பியில்தான் இணைந்திருப்பேன்” எனப் பேசினார். இந்தப் பேச்சை ஜே.ஆரின் குடும்ப பத்திரிகை நிறுவனமான ‘லேக்ஹவுஸ்’ வெளியிடும் ‘டெயிலி நியூஸ்’ பத்திரிகை ஜே.வி.பியின் ஆயுதக் கிளர்ச்சி நடைபெற்ற ஏப்ரல் 05ஆம் திகதிக்கு மூன்று நாட்கள் முன்பாக ஏப்ரல் 02ஆம் திகதி தனது பத்திரிகையில் முன்பக்கச் செய்தியாக வெளியிட்டது. அதுமாத்திரமின்றி, அதே செய்தியை கிளர்ச்சி நடைபெற்ற தினத்துக்கு முன்தினமான ஏப்ரல் 04ஆம் திகதி மீண்டும் மறுபிரசுரம் செய்தது!

இதன் நோக்கம் என்ன? இந்த நடிவடிக்கைகள் உணர்த்தும் செய்தி என்ன? இவைகள் ஜே.வி.பியின் 1971 ஏப்ரல் 05 ஆயுதக் கிளர்ச்சியின் பின்னால் மறைவான சில கரங்கள் இருந்துள்ளதை உணர்த்தவில்iயா?

(ஜே.வி.பி. பற்றிய மேலும் சில கருத்துக்கள் அடுத்த பதிவுகளில் இடம் பெறும்)