7௦ களின் ஆரம்பத்தில் நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் வீட்டில் கால் பதித்த பல ஆரம்பகால தமிழர் உரிமைப்போராட்ட போராளிகளில் தங்க மகேந்திரன் அண்ணாவும் ஒருவர். அதிகமாக வேஷ்டியே கட்டியிருப்பார். Trouser எப்போவாவது அணிவார். எத்தனை பேர் மத்தியில் இருந்தாலும் தங்க மகேந்திரன் அண்ணாவின் குரலும் கம்பீர சிரிப்பொலியும் எல்லோரையும் விஞ்சி நிற்கும். ஆஜானுபாகுவான தோற்றமும் இவருக்கே உரித்தானது. அக்கால இளைஞர்கள் பலரில் உடற்பயிற்சியில் ஆர்வம் உள்ளவர்களாக இருந்தவர்களில் இவரும் ஒருவர்.
திருகோணமலையை பிறப்பிடமாக கொண்டாலும் தனது இளமைக்கால பருவத்தை அனேகமாக யாழ்ப்பாணத்திலேயே கழித்தார். தமிழ் இளைஞர் பேரவையில் தனது தமிழர் உரிமைப்போராட்ட வாழ்க்கையை ஆரம்பித்த தங்க மகேந்திரன் அண்ணா பின்னர் அதிலிருந்து பிரிந்து சென்ற புஷ்பராஜா, பிரான்சிஸ், வரதராஜபெருமாள், சந்திரமோகன், முத்துக்குமார், தவராஜா, நித்தியானந்தன், பத்மநாபா மற்றும் பலரோடு தமிழீழ விடுதலை இயக்கம் (இன்றைய டெலோ அமைப்பு அல்ல) என்ற குடையின் கீழ் ஒன்றுபட்டு ஒரு அமைப்பாக செயற்பட்டனர். இந்த அமைப்பின் முக்கிய முன்னணி இளைஞர்களாக புஷ்பராஜா, வரதராஜபெருமாள், பிரான்சிஸ், முத்துக்குமாரசாமி போன்றோர் செயற்பட்டனர். இந்த காலகட்டத்தில் (1975) பல இளைஞர்கள் பல பகுதிகளிலும் இருந்து ஆர்வத்தோடு இவ்வமைப்போடு இணைந்து செயற்பட்டனர். அதில் தங்க மகேந்திரன் அவர்களோடு மன்னாரிலிருந்து கமிலஸ் (முருங்கனில் இருந்து ஆரம்பகால இளைஞர்களில் ஒருவரான ஜெயராஜா அவர்கள் இளைஞர் பேரவையோடு இருந்துவிட்டார். ஆனால் இவ்வமைப்பினரோடு தொடர்பில் இருந்தார்) திருகோணமலையிலிருந்து தங்க மகேந்திரன் அவர்களை போல பத்தாம் கட்டையிலிருந்து ராசமணி போன்றவர்களும் மற்றும் யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை ஜெயம், கொட்டடி நித்தி (பின்னாளில் சாமியார்) ஹென்ஸ் மோகன், ஜெயக்கொடி, நல்லையா, பரயோகசிங்கம் (பரா) போன்ற இன்னும் பலரும் மற்றும் பெண்களில் குறிப்பிடத்தக்கவர்களாக புஷ்பராஜா அண்ணாவுடைய சகோதரி புஸ்பராணியும் மற்றும் அங்கையற்கண்ணி, கல்யாணி போன்றவர்களும் இணைந்து செயற்பட்டனர்.
1975 இன் ஆரம்பத்தில் இவ்வமைப்பினர் ஒரு மிகப்பெரிய மௌன ஊர்வலம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பல இளைஞர் யுவதிகள் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர். இதில் தங்க மகேந்திரன் அண்ணாவும் முக்கியமானவராக கலந்து கொண்டிருந்தார். 1975 இல் யாழ் மேயர் துரையப்பா அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோது பல இளைஞர்கள் ஏற்கனவே போலிஸ் பட்டியலில் இருந்த பெயர்களின் அடிப்படையில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களில் இவ்வமைப்பின் முக்கியமானவர்கள் புஷ்பராஜா, வரதராஜபெருமாள், நித்தியானந்தன், முத்துக்குமாரசாமி போன்றோர் கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தார்கள். இவர்கள் சிறையில் இருந்த காலத்திலேயே ஏனையவர்கள் திட்டப்படி புலோலி வங்கி இவ்வமைப்பினரால் கொள்ளையிடப்பட்டது. வங்கி கொள்ளையின் பின்னர் சிறிது காலத்துக்குள்ளேயே இவ்வமைப்பினரில் பலரும் கொள்ளையிடப்பட்ட பொருள் பணத்தோடு பொலிசாரினால் கைது செய்யப்பட்டனர். இவ்வங்கி கொள்ளை வழக்கில் முதல் மூன்று எதிரிகளாக தங்க மகேந்திரன், ஜெயக்கொடி, நல்லையா ஆகியோர் அறிவிக்கப்பட்டு மூவருக்கும் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதில் பொலிசாரினால் தங்க மகேந்திரன் அவர்களும் ஜெயக்கொடி அவர்களும் பிடிபட்டு வழக்கின் தண்டனை காலத்தை கழிப்பதற்காக வெலிக்கடை சிறையில் அடைக்கப்பட்டார்கள். நல்லையா அவர்களும் வங்கி கொள்ளையின் போது கார் ஓட்டியாக சென்ற பரயோகசிங்கம் ஆகியோர் போலிஸ் கண்ணில் படாமல் இந்தியா சென்றுவிட்டனர். இதே வழக்கில் வங்கி கொள்ளைக்கு உதவியதாக புஷ்பராணி அவர்களும் கல்யாணி அவர்களும் பொலிசாரினால் பிடிபட்டு கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் பெண்கள் பிரிவில் அடைக்கப்பட்டிருந்தனர். தங்க மகேந்திரன், ஜெயக்கொடி, புஷ்பராணி, கல்யாணி ஆகியோர் பிடிபட்டிருந்த காலத்தில் பொலிசாரினால் கடும் சித்திரவதைக்கு ஆளானார்கள்.
பின்னர் 83 இல் வெலிக்கடை சிறைச்சாலை படுகொலையில் தப்பிய தங்க மகேந்திரன் அவர்கள் பின்னர் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டு அங்கிருந்து சிறையுடைப்பின் போது தப்பி இந்தியா சென்றார். மதுரையில் இவர் திருமணமாகி இருந்த காலத்தில் மீண்டும் தோழர் பத்மநாபா தலைமையினாலான ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியோடு இணைந்து செயற்பட்டார். 84 ஆம் ஆண்டு பரந்தன் ராஜன் குழுவினர் அப்போது PLOT அமைப்பிலிருந்து பிரிந்த பின்னர் மதுரை அண்ணா நகரில் ஒருவீட்டில் வந்திருந்தனர். தோழர் பத்மநாபா அவர்களின் பணிப்பில் அவர்களை சென்று சந்திப்பதற்காக தங்க மகேந்திரன் சென்ற வேளையில் அவரோடு நானும் சைக்கிளில் சென்றதுவே தங்க மகேந்திரன் அண்ணாவை நான் இறுதியாக சந்தித்தது. சிலவருடங்களுக்கு முன்னர் அவரது மகன் ஓர் விபத்தில் சென்னையில் காலமானார். சென்னையில் குடும்பத்தோடு இருந்தபொழுதிலும் பழைய நண்பர்களோடும் பத்மநாபா EPRLF இனருடனும் தொடர்பில் இருந்தார். தங்க மகேந்திரன் அவர்களுடைய சகோதரி சாந்தி அவர்களும் EPRLF அமைப்பின் பெண்கள் பிரிவில் செயற்பட்டார். திருகோணமலையை தலைநகராக கொண்டு இயங்கிய வடக்கு கிழக்கு மாகாணசபை காலத்தில் அந்த மாகாண சபை உறுப்பினராகவும் சாந்தி அவர்கள் செயற்பட்டார். இந்திய அமைதிப்படை வெளியேற்றத்தோடு புலிகள் பிரேமதாசா கூட்டில் மீண்டும் திருகோணமலை இலங்கை இராணுவம் மற்றும் புலிகள் கூட்டின் கீழ் வந்த பின்னர் சாந்தி அவர்கள் இலங்கை இராணுவத்தால் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு பின்னர் கொல்லப்பட்டார். அவரது உடல் கூட உறவினர்களுக்கு வழங்கப்படவில்லை. திருகோணமலையின் EPRLF பொறுப்பாளர் ஜோர்ஜ் அவர்கள் சாந்தியை திருமணம் செய்திருந்தார். மாகாண சபை காலத்தில் ஜோர்ஜ் அவர்களும் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
தங்க மகேந்திரன் அண்ணாவும் சாந்தி அவர்களும் தமிழர் உரிமை போராட்ட வரலாற்றில் மறக்கப்பட முடியாதவர்கள். தங்க மகேந்திரன் அண்ணா நினைவுகள் அவர் பழகிய உறவுகளோடு என்றும் நிறைந்திருக்கும். அவர் ஆத்மா சாந்தியடைவதாக!
(போல்)