(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
போரின் பின்பான அமைதி நிரந்தரமானது என்பதற்கு ஓர் உத்தரவாதமும் இல்லை. போரின் பின்பான அமைதி ஜனநாயகத்தை நோக்கி நகர்வது போல் தோன்றினும் அதன் திசை சர்வாதிகாரத்தை நோக்கியதாகலாம். அமைதியை உருவாக்க வழியமைத்த போர், சர்வாதிகாரக் கூறுகளைத் தன்னுள் மறைத்துள்ளது. போரின் போது போர்ச் செய்திகளே கவனம் பெறுவதால், சர்வாதிகாரச் செயற்பாடுகள் கவனம் பெறுவதில்லை. அமைதி என்பது யாருக்கானது என்ற கேள்வி எழும் போது, சர்வாதிகாரம் பற்றிய கேள்வியும் கூட எழும். சமாதானம் போரினும் கொடியதாகலாம் என வரலாறு எமக்குப் பன்முறை உணர்த்தியுள்ளது. அதன் வெவ்வேறு சான்றுகள் இன்றும் அரங்கேறுகின்றன.
இவ்வாரம் மூன்று நாள் உத்தியோகபூர்வ வருகையில் தஜிகிஸ்தான் ஜனாதிபதி எமோமலி ரஹ்மான் இலங்கை வந்தார். உள்நாட்டுப் போர்களுக்குப் பிந்தைய சமூகங்களான தஜிகிஸ்தானும் இலங்கையும் ஒரேவகைப் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்குகின்றன. அரசியலிலும் அவ்வாறே. 1997 இல் தஜிகிஸ்தானில் போர் முடிந்தது. அதனால் போருக்குப் பிந்திய தஜிக் அனுபவங்கள் இலங்கைக்குப் பயன்படலாம்.
2016 ஆம் ஆண்டு நிறைவை எட்டும் போது, கடந்து போகும் ஆண்டை எவ்வாறு விளங்குது என்ற வினாவுக்குப் பொருத்தமானதொரு பதிலை தஜிகிஸ்தான் அளிக்கலாம். 2016 ஆம் ஆண்டு அங்கு நடந்தவை மூன்றாமுலக நாடுகளின் நிலையையும் குறிப்பாக அமைதி எவ்வாறு பொருள்படுகிறது என்பதையும் விளக்க உதவும். நாடுகளின் அலுவல்கள் முன்னெப்போதிலும் பின்னிப் பிணைந்து உலக அரசியலின் பகுதியாகி இருப்பதை தஜிகிஸ்தானில் நடந்தவை கோடிட்டுக் காட்டுகின்றன.
தெற்கே ஆப்கானிஸ்தான், மேற்கே உஸ்பெக்கிஸ்தான், வடக்கே கிர்கிஸ்தான், கிழக்கே சீனா ஆகிய நாடுகளை எல்லைகளாகக் கொண்ட, நிலம் சூழ்ந்த மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தான், எட்டு மில்லியன் சனத்தொகையை உடையது. அதன் பெரும்பாலானோர் தஜிக் இனக்குழுவினர். அவர்கள் தஜிகிஸ்தானிலும் உஸ்பெகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் உள்ளார்கள்.
கி.மு 330 இல் அலெக்சாண்டரின் படையெடுப்பைத் தொடர்ந்து தஜிகிஸ்தானின் பிரதேசம் முதன்முறையாக அரச நிருவாகக் கட்டுப்பாட்டுள் வந்தது. கிரேக்கர்கள் அப் பகுதியைத் தமது நிர்வாகத்துக்கு உட்பட்டதாகக் குறித்தனர். பின்னர், பட்டு வழிப்பாதை அப்பிரதேசத்தினூடு சென்றது. கி.பி எட்டாம் நூற்றாண்டளவில் மத்திய ஆசியாவில் அராபியர்களின் பரவல் நிகழ்ந்தது. இதனால், பல நாடுகளில் இஸ்லாம் அறிமுகப்படுத்தப்பட்டது. 9 ஆம், 10 ஆம் நூற்றாண்டுகளில் பாரசீகத்தின் சமானிட் சாம்ராஜ்ஜியம், மத்திய ஆசியாவின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர், பக்தாத்தின் கலீபாவுடன் இணைந்து தஜிகிஸ்தானின் புக்ஹார நகரம், இஸ்லாமிய பண்பாட்டின் மையமாக வளர்த்தெடுக்கப்பட்டது. 13 ஆம் நூற்றாண்டில் ஜெங்கிஸ்கான், தஜிகிஸ்தான் உட்பட முழு மத்திய ஆசியாவையும் வெற்றி கொண்டு, மொங்கோலியப் பேரரசின் பகுதியாக்கினார். 19 ஆம் நூற்றாண்டில் சில பகுதிகள் ரஷ்யப் பேரரசின் பகுதியாகி காலப்போக்கில் ரஷ்யப் பேரரசின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
1917 இல் நிகழ்ந்த ரஷ்யப் புரட்சியின் பின் தஜிகிஸ்தான் சோவியத் ரஷ்யக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. தஜிகிஸ்தானில் எதிர்ப் புரட்சிவாதிகள் முன்னெடுத்த ஆயுதக் கிளர்ச்சியை அடக்கிய பின், அது 1924 இல் உஸ்பெகிஸ்தானின் பகுதியாக ‘தஜிக் சுயாட்சிச் சோவியத் சோசலிசக் குடியரசானது’.
1929 இல் தஜிகிஸ்தான் தனித்த குடியரசானது. முஸ்லீம் பெரும்பான்மையைக் கொண்ட தஜிகிஸ்தான் மதச்சார்ப்பற்ற நாடாக இருந்து வருகிறது. சோவியத் ஒன்றியத்தின் பகுதியாக இருந்தபோது, தஜிகிஸ்தான் முக்கியமான பருத்தி உற்பத்திப் பிரதேசமாக வளர்ந்தது. அக்காலத்தில் தொழிலாக்கமும் இடம்பெற்றது. குறிப்பாக அலுமினியத் தொழில்களில் தஜிகிஸ்தான் சிறப்புத் தேர்ச்சியுடன் விளங்கியது. 1980 களில் மிகைல் கொர்பசேவ்வால் அறிமுகப்படுத்திய ‘கிளஸ்நொஸ்ட்’ சீர்திருத்த நடவடிக்கைகள் புதிய அரசியற் கட்சிகளின் உருவாக்கத்துக்கும் தஜித் தேசியவாதத்தின் வளர்ச்சிக்கும் வழிகோலின.
1990 சோவியத் யூனியனின் உடைவின் பின், 1991 இல் தஜிகிஸ்தான் தனிநாடானது. கஹ்ஹர் மஹ்கமவ் அதன் முதல் ஜனாதிபதினார். சோவியத் ஒன்றியத்தின் சீர்திருத்தங்கட்கு எதிரானோர் மிகைல் கொர்பசேவ்வுக்கு மாறாக முன்னெடுத்த ‘ஆகஸ்ட் சதி’யை ஆதரித்ததால் மஹ்கமவ் பதவி விலகினார். அதைத் தொடர்ந்த, ஜனாதிபதித் தேர்தலில் ரஹ்மொன் நபியெவ் ஜனாதிபதியானார். இவருக்கெதிராக அமெரிக்கா ஆர்ப்பாட்டங்களை முடுக்கியது. 1992 இல் நாட்டின் கிழக்கு, மத்திய பகுதிகளில் வாழ்ந்த வஹாபி செல்வாக்குக்குட்பட்ட முஸ்லிம்கள் அவருக்கெதிரான போராட்டங்களில் இறங்கினர். அது உள்நாட்டுப் போராகியது. அதனால் ஜனாதிபதி ரஹ்மொன் நபியேவ் பதவி விலகியதைத் தொடர்ந்து எமோமலி ரஹ்மொன் ஜனாதிபதியானார். 1997 வரை ஐந்து ஆண்டுகள் தொடர்ந்த உள்நாட்டுப் போரில் பத்து இலட்சம் பேரளவில் இறந்தனர்.
1997 இல் ஐக்கிய நாடுகள் சபை நடுவாண்மையால் சமாதான உடன்பாடு ஏற்பட்டது. இருபது ஆண்டுகள் கடந்தும் ஜனாதிபதி எமோமலி ரஹ்மொன் சர்வாதிகார நடைமுறைகளால் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுத்துத் தன்னை வாழ்நாள் ஜனாதிபதிக்கும் செயல்களை முன்னெடுக்கிறார். இது எவ்வாறு இயலுமானது?
அமெரிக்க – சோவியத் கெடுபிடிப் போரின் ஈற்றில் தோன்றிய தஜிகிஸ்தான் குடியரசு அமெரிக்கக் கைப்பொம்மை அரசாயிருக்கவில்லை. எனவே, அமெரிக்கா, சவூதி அரேபிய உதவியுடன் இஸ்லாமிய வகாபியத்தைப் பரப்பி, அரசுக்கெதிரான உள்நாட்டுப் போரை நடாத்தியது. யுத்தம் நடந்த 5 ஆண்டுகளில் தஜிகிஸ்தானின் உட்கட்டமைப்பு வசதிகள் அழிந்தன. நாடு பாரிய பொருளாதாரப் பின்னடைவுக்காளானது. அதனால், போருக்குப் பிந்திய தஜிகிஸ்தான் மேற்குலக உதவியின்றி நிலைக்க இயலாது போனது. போருக்குப் பிந்திய நாட்டைக் கட்டியெழுப்பும் உதவிக்கு உத்தரவாதமளித்த ஐ.நா சபையும் ஐரோப்பாவுக்குப் பாதுகாப்புக்கும் ஒத்துழைப்புக்குமான அமைப்பும் (Organization for Security and Cooperation in Europe – OSCE) கையை விரித்தன. தஜிகிஸ்தான் மேற்குலகத் தேவைகட்கு அடிபணியும் அரசாக மாறியதால் மீறல்கள் எவையும் கவனிப்புக்குள்ளாகவில்லை.
இன்று, தஜிகிஸ்தானில் மோசமான மனித உரிமை மீறல்கள் நிகழ்கின்றன. ஊடகங்கள் அச்சுறுத்தலுக்கும் தணிக்கைக்கும் ஆளாகின்றன. ஆனால், மனித உரிமைக் காவலர்களாகத் தங்களைக் கருதும் மேற்குலக நாடுகள் இவைபற்றி வாய் திறப்பதில்லை. அமெரிக்காவின் இரட்டைக் கோபுரங்களின் மீதான தாக்குதலைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா முன்னெடுத்த போருக்கு தஜிகிஸ்தான் நிபந்தனையற்ற ஆதரவு வழங்கியது. பிரெஞ்சுப் படைகள் தஜிகிஸ்தானில் நிலைகொண்டன.
இவை யாவும், தஜிகிஸ்தானில் இஸ்லாமிய அடிப்படைவாதம் வளரத் துணைசெய்தன. ஆயிரக்கணக்கான தஜிக் இனத்தோர் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸில் இணைந்துள்ளனர். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாய்க், கடந்தாண்டு, தஜிக் அரசு முஸ்லிம்கட்கு எதிராகச் செயற்படுவதாகக் கூறி ஐ.எஸ்.ஐ.எஸ்ஸில் இணைந்த தஜிகிஸ்தான் பொலிஸ் சிறப்புப் படைகளின் தலைவர் கேணல் குல்முரொட் கலிமோவ் பிறரையும் இணைய வேண்டினார். கலிமோவ் அமெரிக்க அரச அனுசரணையிற் பயிற்சி பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இவரது செயல் பலத்த சந்தேகங்களை எழுப்புகிறது.
இன்று மத்திய ஆசியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆட்சேர்ப்புக்கு முக்கிய நிலையமாக தஜிகிஸ்தான் உள்ளது. நாட்டின் அமைதியற்ற சூழல் இதற்கு வாய்ப்பாயுள்ளது. சிரியாவில் நடக்கும் போர் தீர்க்க நிலையை அடைந்துள்ளது. இந்த வருடம் ஐ.எஸ்.ஐ.எஸ் பெருவாரியான கட்டுப்பாட்டுப் பகுதிகளை இழந்து, மத்திய கிழக்கில், அதன் செல்வாக்கு மங்குகிறது. எனவே, தனது தளத்தை மத்திய கிழக்கில் இருந்து அகற்றும் தேவை அதற்கு உள்ளது. மத்திய கிழக்கைப் போல் முஸ்லீம்களைக் கொண்ட ஒரு பிரதேசத்தைத் தன் கட்டுப்பாட்டுக்குள் பேண வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இவ்வாண்டு முழுதும் வழமையான போரில் ஐ.எஸ்.ஐ.எஸ் கண்ட தோல்விகள் எதிர்காலத்தில் வழமையான போரில் தொடர்ந்தும் ஈடுபட வாய்ப்புகள் குறையும் என உணர்த்தியுள்ளன. எனவே, திட்டமிட்ட சில்லறைத் தாக்குதல்கள், குண்டு வெடிப்புகள் போன்றவற்றை மேற்கொண்டு தன்னைத் தக்கவைக்க ஐ.எஸ்.ஐ.எஸ் முயலும்.
இதற்கு வாய்ப்பான பிரதேசமாக முஸ்லீம்கள் பெரும்பான்மையினராக உள்ள மத்திய ஆசியா அமையும். குறிப்பாக, அதன் அயலில் உள்ள, 16 ஆண்டுகால அமெரிக்க ஆக்கிரமிப்பின் விளைவாகச் சீரழிந்த ஆப்கானிஸ்தான் பிரதானமான தளமாகலாம். தலிபான்கள் உடன்படின், ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் இஸ்லாமிய கலீபாத்தின் புதிய தலைமையகமாக ஆப்கானிஸ்தான் மாறும். அவ்வாறு நிகழ அதன் அண்டை நாடுகளில் ஆதரவுத் தளங்கள் அவசியமாகும். ஆப்கானிஸ்தானின் எல்லை நாடான தஜிகிஸ்தான் இதற்குப் பொருந்தும்; எனவே, தஜிகிஸ்தான் முக்கியம் பெறுகிறது.
ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் தலைவர் பக்தாதி இன்னொரு ஒசாமா பின் லேடனாக உருவெடுப்பதன் ஊடே ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் எதிர்காலத்தைத் தக்க வைக்க இயலும் என நன்கறிவார். சிரியாவில் ஏற்பட்டுள்ள போரியல் தோல்விகள் ஐ.எஸ்.ஐ.எஸ் மீது இஸ்லாமியர்கள் கொண்டிருந்த திகைப்பையும் வியப்பையும் முற்றாகச் சீரழிக்க வல்லன. இதனால் ஐ.எஸ்.ஐ.எஸ், அல்கைடா போல் உலகளாவிச் செயற்பட விரும்புகிறது. இதன் ஒரு பகுதியாகவே ஐ.எஸ்.ஐ.எஸ்ஸில் இணைந்த பலர் மீண்டும் அவர்களது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இவ்வாறு, அனுப்பப்பட்டவர்களில் பெரும்பான்மையினர் மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் ‘உறங்கும் செல்களாக’ இயங்கத் தொடங்கியுள்ளனர். இவர்கள் மத்திய ஆசிய நாடுகளில் தங்களுக்கான ஆதரவுத் தளத்தை உருவாக்குவதோடு அங்குள்ள இஸ்லாமிய சமூகங்களை அடிப்படைவாதத்தை நோக்கி நகர்த்திச் செல்கிறார்கள். இதன் மூலம் சமூகங்களில் அசைக்க முடியாத நம்பிக்கைக்குரிய சக்தியாக ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை உருவாக்க முனைகிறார்கள்.
மத்திய ஆசியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் ஊடுருவலையும் நிலைபேறையும் தடுக்கக்கூடிய நிலையில் தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், கசகஸ்தான், துர்மனிஸ்தான் ஆகிய ஐந்து நாடுகளும் தயாராக இல்லை. இவை ஒவ்வொன்றினதும் உள்நாட்டு அரசியல் சமூகச் சூழல் இஸ்லாமிய அடிப்படைவாதம் வளர்வதற்கான களத்தை வழங்கியுள்ளது. இதற்குப் பொருத்தமானதொரு உதாரணம் தஜிகிஸ்தான். அங்குள்ள சமூகப் பொருளாதார நெருக்கடிகள் அடிப்படைவாதம் வளர்வதற்கான வாய்ப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளன.
இவ்வாண்டு தஜிகிஸ்தானின் வரலாற்றில் முக்கியமானது. மத்திய ஆசியாவின் மீது கவனம் குவிகையில், இஸ்லாமியத் தேசியவாதம் நாட்டினுள் ஊட்டப்படுகிறது; பொருளாதார நெருக்கடி இளைஞர்களை வேலையற்றோராக்குகிறது; இதனால் இஸ்லாமிய அடிப்படைவாதக் கருத்துருவாக்கம் வலுப்பெறுகிறது. அடக்குமுறை ஆட்சி மக்களது வெறுப்பைச் சம்பாதிக்கிறது. இவை இளைஞர்களை ஐ.எஸ்.ஐ.எஸ்ஸில் இணையத் தூண்டுகின்றன. இதன் விளைவுகளை எதிர்வரும் ஆண்டில் அவதானிக்கலாம். அடுத்தாண்டு ஐ.எஸ்.ஐ.எஸ் மத்திய ஆசியாவை நோக்கி நகரலாம். அதன் விளைவுகளை ஏனைய ஆசிய நாடுகளும் அனுபவிக்கக் கூடும். நாம் பாதுகாப்பற்ற ஆசியாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். அமெரிக்காவின் ஆசியாவுக்கான ஆவல், பாதுகாப்பின் பேரால் ஆசியாவில் கால்பதிப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தலாம்.
போருக்குப் பிந்திய சமாதானம் ஜனநாயகமாயன்றிச் சர்வாதிகாரமாயமையும் வாய்ப்புகளை இன்றைய உலகச் சூழல் ஏற்படுத்தியுள்ளமைக்கு தஜிகிஸ்தான் நல்ல உதாரணம். இக் கட்டுரையை அச்சேறும்போது இலங்கை ஜனாதிபதியும் தஜிகிஸ்தான் ஜனாதிபதியும் பேசி முடிந்திருக்கும். யார் யாரிடம் எதைக் கற்றார் என இன்னும் சில காலத்தில் தெரியும். தஜிகிஸ்தான் ‘நல்லாட்சிக்குப்’ பெயரலாம் அல்லது இலங்கை ‘சர்வாதிகாரத்துக்குப்’ பெயரலாம். எது நடப்பினும் அது எம் மக்களதும் நன்மைக்கல்ல என உறுதிபடக் கூறலாம்.