(ஜனகன் முத்துக்குமார்)
ஐக்கிய அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இவ்வாண்டின் உறவு, ஐ.அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பாகிஸ்தானுக்கு ஐ.அமெரிக்கா வழங்க இருந்த உதவித்தொகையை நிறுத்திவைத்தல், பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு உதவுகின்றது என்ற தொனிப்பொருளிலான ஒரு டுவிட்டர் செய்தியுடன் தொடங்கியிருந்தது.
எது எவ்வாறிருந்த போதிலும், பாகிஸ்தான் – ஐ.அமெரிக்கா இடையிலான உறவானது, 30 ஆண்டுகளுக்கும் மேலானது என்பது ஒருபுறமிருக்க, எல்லாவற்றுக்கும் மேலாக, ஐ.அமெரிக்காவின் இராஜதந்திர நிகழ்ச்சிநிரலை நடைமுறைப்படுத்தல், பிராந்தியத்தில் செல்வாக்கைப் பேணுதல் என்பனவற்றுக்கு, பாகிஸ்தானின் உறவுநிலை என்பது ஐ.அமெரிக்காவுக்கு மிகவும் வேண்டப்பட்டது என்பதும், பயங்கரவாதத்துக்கு எதிரான தாக்குதல், இந்தியாவின் அச்சுறுத்தலுக்கு எதிராக தம்மைத் தயார்செய்தல், போரியல் தளவாடக் கொள்வனவுகளில் ஒரு வல்லாதிக்கமான அரசுடன் ஸ்திரமான நிலையை பேணுதல், ஆப்கான் – ஈராக் கைப்பற்றுதலைத் தொடர்ந்து மாற்றமடைந்திருக்கும் சர்வதேச வல்லாண்மை போட்டியில் மத்திய கிழக்குக்கு மிகவும் அண்மையிலான பூகோளவியல் அரசியலில் முக்கியம் பெரும் மூன்றாவது நாடாக (இஸ்ரேல், சவூதி அரேபியாவுக்கு அடுத்தபடியாக) அமைதல் என்பதில், பாகிஸ்தானுக்கு ஐ.அமெரிக்காவின் உறவுநிலை வேண்டப்பட்டதாகும்.
இந்நிலையிலேயே அண்மையில் ஐ.அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதுவர், ஐ.அமெரிக்காவும் பாகிஸ்தானும், அண்மைக்காலங்களில் ஏற்பட்டுள்ள உள்ளார்ந்த முரண்பாடுகளுக்கு அப்பால், பல விடயங்களில் இணங்கிப்போதல் இரு நாடுகளுக்கும் அவசியமானது எனத் தெரிவித்திருந்தார். தூதுவரின் இக்கருத்தானது, ஐ.அமெரிக்க ஜனாதிபதியின் பாகிஸ்தானுக்கு எதிரான செய்தி, பாகிஸ்தான் ஐ.அமெரிக்காவுக்கு பயங்கரவாதம் தொடர்பாக தொடர்ச்சியாக வழங்கிவந்த (பேணிவந்த) உளவுப் பரிமாற்றத்தை நிறுத்தியமை, பாகிஸ்தானில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லாடனின் இருப்பிடம் பற்றி ஐ.அமெரிக்க உளவுத்துறைக்கு தகவல் வழங்கியதாகச் சந்தேகிக்கப்படும் மருத்துவர் ஷாஹில் அப்ரிடிக்கு பாகிஸ்தான் நீதிமன்றத்தால் தேசத்துரோகக் குற்றத்துக்காக மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, அவரை ஐ.அமெரிக்காவுக்கு நாடுகடத்துதல் தொடர்பில் ஐ.அமெரிக்காவின் வேண்டுகோளும் அதற்கு பாகிஸ்தான் எதிர்த்தமை ஆகியவை மத்தியிலேயே வந்துள்ளமை கவனிக்கத்தக்கது.
வரலாற்றுரீதியில், ஐ.அமெரிக்காவின் இராணுவ, நிதி உதவியானது, பாகிஸ்தானுக்கு ஆப்கானில் அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடாத்திய ஆப்கான் முஜாஹீனுக்குப் பயிற்சியளிப்பதற்காக 1970களின் பிற்பகுதியில் ஆரம்பமான இவ்வுறவானது, 1990களில் ஆப்கானிஸ்தான் – சோவியத் போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து அடுத்த கட்டத்தை அடைந்திருந்தது. குறித்த போரின் முடிவில் ஐ.அமெரிக்கா, குறித்த அப்பிராந்தியத்திலிருந்து இராணுவ ரீதியாகப் பின்வாங்கிய பொழுதிலும், தனது நிழல் யுத்த முனைப்பாட்டைக் கைவிடவில்லை. மாறாக, 1990 களின் ஆரம்பத்தில் பாகிஸ்தானின் அணுசக்தி, அணுவாயுத உற்பத்தி வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மீது பொருளாதாரத் தடைகளையும் முற்றுகைகளையும் ஐ.அமெரிக்கா சுமத்திய போதிலும், ஐ.அமெரிக்க – பாகிஸ்தான் உறவு, தொடர்ச்சியாக ஒரு நிலையானதாகவே இருந்தது.
சோவியத் ஒன்றியத்தினதும் இந்தியாவினதும் இணக்கமான போக்கும், இந்தியாவின் அணுவாயுதப் பரிசோதனையின் வெற்றியும், ஒருபுறத்தில் ஐ.அமெரிக்காவுக்கு, பிராந்தியத்தில் அதன் நீண்டகால நிலைமைக்கு அச்சுறுத்தலாக அமையும் எனக் கருதிய ஐ.அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களுக்கு, பாகிஸ்தானின் நிலையான நட்பு மிகவும் அவசியமானதாகவே இருந்தது.
2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர் ஏற்பட்ட மாற்றமானது, பாகிஸ்தான் – ஐ.அமெரிக்க உறவில் மூன்றாவது படிநிலை மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தது. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தின் மீதான உலகளாவிய போரில் (GWOT) பங்குபற்ற, ஐ.அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுத்த பின்னர், பாகிஸ்தானுக்குச் சாதகமான நிலைகளைக் கருத்திற்கொள்ளாத ஐ.அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள், ஐ.அமெரிக்கா ‘எங்களுக்கு எங்களுடன் அல்லது எங்களுக்கு எதிராக’ என்ற இரண்டில் ஒன்றான கொள்கைகளில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக ஐ.அமெரிக்காவுக்குச் சார்பாக இயங்கும் என எண்ணியிருந்தார்.
அதனைப்போலவே பாகிஸ்தானும், பயங்கரவாதத்தின் மீதான உலகளாவிய போரில் ஐ.அமெரிக்காவுடன் கைகோர்த்து, இராணுவ, பாதுகாப்பு உதவிகளை ஐ.அமெரிக்காவுக்குத் தொடர்ச்சியாக வழங்கியிருந்தது. குறித்த ஐ.அமெரிக்க தலைமையிலான பயங்கரவாதத்தின் மீதான போருக்கு, பாகிஸ்தான் ஒரு மிகப்பெரிய இழப்பை கொடுக்க வேண்டியிருந்தமை ஒரு புறமிருக்க, பாகிஸ்தான் உள்நாட்டிலேயே அது 2000ஆம் ஆண்டின் நடுவில் தலிபான் கிளர்ச்சிக்கு எதிராக மிகவும் கடுமையாகப் போராடவேண்டி இருந்தது. இது, பாகிஸ்தானை தனது சொந்த நலன்களுக்கு அப்பால், ஐ.அமெரிக்காவின் நட்பு நிலையைப் பேணும் பொருட்டு மேற்கொண்ட ஒரு கொள்கை ரீதியான தன்னழிப்புச் செயற்பாடாகவே ஏனைய இஸ்லாமிய நாடுகளின் கொள்கை வகுப்பாளர்களால் கருதப்பட்டது. அவ்வாறு கருத்தப்பட்டமையில், கொள்கைரீதியான பிழை ஏதும் இருக்கவுமில்லை.
எது எவ்வாறிருந்த போதிலும், பாகிஸ்தான் – ஐ.அமெரிக்க உறவானது, ஒபாமா நிர்வாகத்தின் மேலதிகமாக வீழ்ச்சியுற்றிருந்தது. இதற்கு பாகிஸ்தான் இராணுவமானது, தொடர்ச்சியாக தலிபானுடன் இணைந்த ஹக்கானி வலையமைப்புக்குப் புலனாய்வு உதவி செய்வதாகவும், நிதி மற்றும் ஆயுத உதவிகள் செய்வதாகவும், ஐ.அமெரிக்காவின் உளவுத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தமை, அத்தோடு அதன் காரணமாக பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டிருந்த உதவித்தொகையை திறைசேரியில் இருந்து விடுவிப்பதற்கு ஒபாமா அரசாங்கம் மறுத்திருந்தமையே காரணமாகும். ஐ.அமெரிக்காவின் இக்குற்றச்சாட்டுக்குச் சாவி கொடுப்பது போலவே, ஒசாமா பின்லாடன், பாகிஸ்தானில் மறைந்து இருந்தமை ஐ.அமெரிக்காவால் பார்க்கப்பட்டது.
மறுபுறத்தில், ஐ.அமெரிக்கா தனது நீண்டகால நட்பு நாடான பாகிஸ்தானை நம்பாமல், பாகிஸ்தானுக்குள்ளேயே இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு ஒசாமா பின்லாடனை கொலைசெய்தமையை, பாகிஸ்தான் வெகுவாகவே கண்டித்திருந்தது. இது மேலதிகமாக ஐ.அமெரிக்கா – பாகிஸ்தானின் உறவில் மேலதிக விரிசலை ஏற்படுத்தியிருந்தது.
தற்போதைய சூழ்நிலையில், ட்ரம்ப் அரசாங்கம், ஒபாமா நிர்வாகத்தின் கொள்கைகளையே தொடர்ச்சியாக இன்னும் கூடுதலான முனைப்புடன் பேண முயல்கிறது.
இதன் அடிப்படையிலேயே அண்மைக்காலத்தில் பாகிஸ்தானின் வெளிவிவகாரக் கொள்கைகளில் ஐ.அமெரிக்காவைத் தாண்டி, சீனா மிகவும் நெருக்கமான நாடாகக் கருதப்படுகின்றது.
இந்நிலையிலேயே ஐ.அமெரிக்காவின் மத்திய ஆசியாவுக்கான துணை இராஜாங்க செயலாளர், பாகிஸ்தானுக்கு கடந்த மாதம் மேற்கொண்ட விஜயம் அவசியமானது. அவ்விஜயத்தின் போது குறித்த துணை இராஜாங்க செயலாளர் பின்வருமாறு கருத்து வெளியிட்டிருந்தார்: “பாகிஸ்தானின் எதிரிகள், எப்போதுமே ஐ.அமெரிக்காவின் எதிரிகளாவர். அவ்வாறே ஐ.அமெரிக்காவின் எதிரிகளும் பாகிஸ்தானுக்கு எதிரானவர்களே”. எது எவ்வாறு இருந்தபோதிலும், ஐ.அமெரிக்கா பாகிஸ்தானுடனான உறவினை புதுப்பித்துக் கொள்ளாத பட்சத்தில், ஐ.அமெரிக்கா அதன் மூலமாக இராஜதந்திர மற்றும் மூலோபாய மட்டத்தில் இழப்பதே அதிகமானதாக இருக்கும். அது, ஆப்கானில் ஒரு நிலையான (மேற்கத்தேய சார்பு) அரசு அமைப்பதில் இருந்து நீண்ட காலத்தில் ரஷ்யாவுக்கு எதிராக ஐ.அமெரிக்கா எதும் ஒரு நிலையில் தீர்மானம் மேற்கொள்ளவேண்டி இருப்பின், அத்தீர்மானத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் வரையிலான எல்லாவிதமான செயற்பாடுகளுக்கும், பாகிஸ்தானின் நட்புரிமை ஐ.அமெரிக்காவுக்கு இன்றியமையாதது.