ஏனெனில் ஈஸ்டர் தாக்குதல்கள் நடந்தது நீர்கொழும்பு, கொழும்பு மற்றும் மட்டக்களப்பில். ஆனால் வவுனியாவுக்கு வடக்கேதான் சோதனை நடவடிக்கைகள் உச்சம் பெற்றுள்ளன. வவுனியாவுக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையில் ஏறக்குறைய எட்டுச் சோதனைச் சாவடிகளில் பொதுமக்கள் இறங்கி ஏற வேண்டும். இதை விட பாடசாலைகள், பள்ளிவாசல்கள், தேவாலயங்கள், உள்ளுர்ச் சந்திகள், தெருக்கள் என எல்லா இடங்களிலும் பாதுகாப்புப் படையினர் முழு உஷாரில் நிற்கின்றனர்.
“தாக்குதலும் பாதிப்பும் ஏற்பட்ட கொழும்பு உட்பட்ட தென்பகுதியிலேயே இந்தளவுக்குக் கெடுபிடிகளும் சோதனைகளுமில்லை. அப்படியிருக்கும்போது வடக்கிற்கு மட்டும் ஏன் இப்படியொரு படையேற்பாடு?” என்று கேட்கிறார் கொழும்பிலிருந்து வடக்கிற்கு வந்த கொழும்புவாசியான நண்பர். நண்பருக்கு மட்டுமல்ல, நமக்கும்தான் இந்தச் “சிதம்பர ரகசியம்” புரியவேயில்லை.
தேசிய பாதுகாப்பு முக்கியமானதுதான். அப்படியென்றால் எல்லா இடங்களிலும் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமல்லவா! வடக்குக் கிழக்கில்தான் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றால் அதைப்பற்றி அரசாங்கம் பகிரங்கமாகச் சொல்ல வேணும். அதற்கான காரணங்களை விளக்க வேண்டும். அப்பொழுதான் மக்களும் விழிப்பாக இருக்க முடியும். அது ரகசியம். பாதுகாப்புக் காரணங்களுக்காக அதையெல்லாம் சொல்ல முடியாது என்று சொதப்பல் காரணங்களைச்சொல்ல முடியாது.
இதைப்பற்றிப் பேசுவதற்கும் கேள்வி கேட்பதற்கும் எந்தத் தமிழ்த்தலைவர்களும் இல்லை. ஆனால் அரசாங்கத்திற்கு ஏதாவது நெருக்கடி என்றால் மட்டும் பதறிப்போய்விடுகிறார்கள். (ரணிலுக்கு ஏதாவது தலையிடியென்றாலே பனடோலும் தண்ணீருமாகப் பதறிக் கொண்டிருக்கிறார்கள் சுமந்திரன் அன்ட் கோவினர்) அந்தளவுக்கு அரசாங்கத்தின் மீது பற்றும் பக்தியும் பாசமும். வாக்களித்த சனங்களோ வழி நெடுகச் சந்தேகிக்கப்படுகிறார்கள். பாதுகாப்பற்றவர்களாகப் பார்க்கப்படுகிறார்கள்.
“ஏன் இப்படியொரு நெருக்கடி எங்களுக்கு?” என்று விடுதலை இயக்கமொன்றின் பெயரில் அரசியல் நடத்தும் தரப்பைச் சேர்ந்த ஒருவரிடம் கேட்டேன்.
“இப்ப நாடிருக்கிற நிலைமையில நாங்கள் இதைப்பற்றிக் கதைக்க முடியாது. கொஞ்சம் பொறுத்துப் போகத்தான் வேணும்” என்றார் நண்பர்.
“இப்ப மட்டுமல்ல, எப்பவுமே அரசாங்கத்தோட கதைக்க முடியாமல்தானே இருக்கிறீங்கள். அதுவும் கொஞ்சமாக அல்ல, அளவுக்கு அதிகமாகவே விட்டுக் குடுக்கிறீங்கள். அதனால்தான் நாங்கள் இப்பிடி அலைக்கழிய வேண்டியிருக்கு” என்றேன்.
என்னுடைய வார்த்தைகள் அவருக்குச் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். அவருடைய முகம் சோர்ந்து விட்டது.
“இன்னும் விடுதலை இயக்கத்தின் பெயரிலேயே இயங்கிக் கொண்டிருக்கிற நீங்கள் எப்பிடி அரசாங்கத்தின் நடவடிக்கைகளை நிபந்தனையில்லாமல் ஆதரிக்க முடியுது? இது முரண்பாடாகத் தெரியவில்லையா?” எனக் கேட்டேன்.
“இப்ப நாங்கள் இயக்கமில்லை. அரசியல் கட்சி. ஜனநாயக வழிக்குத் திரும்பி அரசியற்கட்சியாகப் பதிவு செய்திருக்கிறம். தேர்தலில் மக்களுக்கு முன்னே நின்று பகிரங்கமாகப் பேசுகிறம். வாக்குக் கேட்கிறம். அவர்கள் தந்த ஆணைப்படி செயற்படுகிறம். இதில என்ன பிழையிருக்கு?” என்று பதிலுக்குக் கேள்வி எழுப்பினார் அவர்.
இதைக் கேட்கும்போது சிரிப்பே வந்தது.
“அரசியல் கட்சியாகப் பதிவு செய்து தேர்தலில் வெற்றியும் பெற்று விட்டால் எல்லாமே சரியாகி விடுமா? அப்படி நினைத்துத்தானே ஆட்சிக்கும் அதிகாரத்துக்கும் வந்த பிறகு சனங்களுக்கு மாறாகப் பலரும் செயற்படுகிறார்கள். ஆக, தேர்தலில் வென்ற பிறகு எதையும் எப்படியும் செய்யலாம் என்று அர்த்தமா? இதுக்கு ஈழவிடுதலை இயக்கம் என்ற பெயரிலேயே இன்னும் தொங்கிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமென்ன? ஒரு விடுதலை இயக்கத்தின் பெயர் என்பது சாதாரணமானதல்ல. அதனுடைய கொள்கை, கோட்பாடு, இலட்சியம், ஒழுக்கம், நடைமுறை எனப் பலவற்றைத் தன்னுள்ளீடாகக் கொண்டது. இவையெல்லாமே உயிருக்கு நிகரானவை. என்பதால்தான் உயிரையே இழப்பதற்கும் தம்மை முழுமையாக ஈகம் செய்வதற்கும் போராளிகள் முன்வந்தனர். ஏராளமானவர்கள் உயிரையே அர்ப்பணித்தனர். அப்படியான ஒரு உயர்ந்த நிலையிலிருந்த இயக்கம் அரசியல் கட்சியாகி, தேர்தல் அரசியலில் ஈடுபடத் தொடங்கி விட்டால் எல்லாவற்றையும் கைவிட்டதாகி விடுமா? எந்தளவுக்கும் விட்டுக்கொடுப்புகளைச் செய்யுமா? முடிவற்ற சமரசங்களில் ஈடுபடுமா? அப்படியே தேய்ந்து விடுமா?” என்று சற்றுச் சூடாகக் கேட்டேன்.
“நீங்கள் கால மாற்றத்தை விளங்காமல் கதைக்கிறீங்கள். உலகம் மாறீட்டுது. அரசியலும் எவ்வளவோ மாறீட்டுது. நீங்கள் இன்னும் பழைய இடத்திலேயே நிக்கிறீங்கள். விட்டுக் கொடுப்புகளைச் செய்ய மறுத்ததால்தான் எவ்வளவு போராடியபோதும் புலிகள் தோல்வியையும் அழிவையும் சந்திக்க வேண்டி வந்தது. நாங்கள் தந்திரோபாயத்தைக் கடைப்பிடிச்சபடியாலதான் எவ்வளவோ நெருக்கடிகளுக்கு மத்தியிலயும் தாக்குப் பிடிக்க முடிஞ்சது. எங்களை அழிக்க முற்பட்ட புலிகளே எங்களை அரவணைக்க வேண்டி வந்ததும் எங்கட தந்திரோபாயங்களால்தான். இப்பவும் முன்னிலையில நிற்கிறம் எண்டால் அது எங்களுடைய அரசியல் சாணக்கியமே…!”
எனக்குத் தலை சுற்றியது.
இதற்கெல்லாம் காரணம், காலமாற்றமா சந்தர்ப்பவசமா தந்திரோபாயமா? இப்படியெல்லாம் தர்க்கரீதியாகக் கோட்பாட்டு விளக்கமளிக்கும் அளவுக்கு வந்திருப்பதை அரசியல் வளர்ச்சி என்பதா? அறத்தின் வீழ்ச்சி என்பதா?
“தர்க்க ரீதியாகப் பார்த்தால் உங்கள் வாதங்களில் உண்மையுள்ளதைப்போலப் படும். ஆனால்…”
“என்ன ஆனால்?” என்று அவசரமாக நண்பர் இடைமறித்தார். “தர்க்கரீதியாக மட்டுமல்ல, உண்மையாகவும்தான் சொல்லுறம்.. உங்களால் இதை விளங்கிக் கொள்ளவும் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. அதுதான் பிரச்சினை” என்று சொல்லிக் கொண்டு புறப்பட ஆயத்தமானார்.
அவரை வழிமறித்து, “அரசியல்பற்றிப் பேசும்போது இந்த மாதிரி அபிப்பிராய பேதங்களும் முரண்பாடுகளும் ஏற்படுவது வழமை. அதைக் கடந்து பேசுவதும் உரையாடுவதுமே அரசியலுக்கும் வலிமை. நமக்கும் நல்லது. இப்பிடி இடையில முறிச்சுக் கொண்டு போனால் பகையும் இழப்பும்தான் மிஞ்சும். அரசியலுக்கு அது உதவாது” என்றேன்.
“மக்கள் எங்களை ஆதரிக்கிறார்கள். அவர்கள் எங்களை வெற்றியடைய வைத்திருக்கிறார்கள். அவர்களுக்குத் தெரியும் எது சரி. எது தவறு எண்டு. யார் சரி? யார் தேவையானவர்கள் எண்டெல்லாம் சனங்களுக்குத் தெரியும். நாங்கள் தேர்தலில் நிண்டு வெண்டிருக்கிறம் எண்டதே போதும் எங்களுடைய பாதை சரியானதெண்டு விளங்கிறதுக்கு. இதுக்கு மேலயும் விளக்கம் தேவையில்லை எண்டு நினைக்கிறன்” சூடாகவே வார்த்தைகள் வந்தன.
“அப்படியெண்டால் தேர்தல் மேடைகள் தொடக்கம் நினைவு கூரல்கள் வரையில் நீங்கள் புலிகளைக் கொண்டாடுவதும் புலிகளின் பெயரைப் பயன்படுத்துவதும் எதுக்காக? ஒரு பக்கம் புலிகளை மறுக்க முடியாமல், அவர்களை வைத்து அரசியல் செய்யிறீங்கள். மற்றப்பக்கத்தில அரசாங்கத்தோட சேர்ந்து நிண்டுகொண்டு நியாயம் பேசுறீங்கள். இதுக்கெல்லாம் கோட்பாட்டு விளக்கங்கள் வேறு…”
“தேர்தல் அரசியல் எண்டால் எல்லாமிருக்கும். சனங்களுக்கு எது விருப்பமாக இருக்கோ அதைச் செய்யிறதில என்ன தவறிருக்கு? ஆனால், நாங்கள் எங்களுடைய பாதையில சரியாகத்தான் பயணிக்கிறம். பயணத்தில தெளிவாக இருக்கிறம். அண்டைய சூழலில் இயக்க அரசியல். இண்டைய சூழலில் கட்சி அரசியல் – தேர்தல் அரசியல். இப்ப எதிர்ப்புக் காட்டிப் பிரயோசனமில்லை. ஆனாலும் நாங்கள் எதிர்ப்பைக் காட்டாமல் இருக்கேல்ல. வன்முறை ரீதியாக எதிர்ப்புக் காட்ட முடியாது. மற்றும்படி தந்திரோபாய அரசியல்தான் இப்ப சாத்தியம். அதை வெற்றியாகச் செய்யிறம். இதை காலம் உங்களுக்கு விளங்க வைக்கும்…” என்றார் நண்பர்.
“உங்களுடைய இந்தத் தந்திரோபாய அரசியலினால் சனங்களுக்குக் கிடைத்த நன்மைகள், பயன்கள் என்ன? சனங்களுடைய எந்தெந்தப் பிரச்சினைகள் எல்லாம் தீர்த்து வைக்கப்பட்டிருக்கு?” என்று கேட்டேன்.
“நாங்கள் அதுக்காக எவ்வளவு வேலை செய்திருக்கிறம் எண்டதை அறிஞ்சிட்டுக் கதையுங்கோ. மனசில வெறுப்பையும் சந்தேகத்தையும் வைச்சுக் கொண்டு கதைக்காதையுங்கோ” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார்.
அதற்குமேல் அவர் தொடர்ந்து பேசத் தயாரில்லை என்று புரிந்தது. ஆனாலும், “வெறுப்பும் சந்தேகமும் இல்லை. சனங்களின் மனதில் உள்ள கேள்வியைத்தான் கேட்கிறன்” என்று சற்றுச் சத்தமாகச் சொன்னேன்.
“அதைச் சனங்கள் கேட்கட்டும்…” எனச் சொல்லிக் கொண்டு போய் விட்டார்.
பதிலுக்கு “சனங்களுக்கொரு காலம் வரும். அவர்கள் அப்போது கேட்பார்கள்” என்று உரத்துச் சொன்னேன்.
நண்பர் பதிலளிக்கவில்லை. சென்று விட்டார்.
இதுதான் இன்றைய தமிழ் மக்களின் அரசியலும் வாழ்நிலையுமாகும்.
ஒரு பக்கம் புலிகளைக் கொண்டாடுவது. மறுபக்கம் புலிகளின் வழிமுறை, நடைமுறைக்கு மாறான வகையில் சிந்திப்பதும் செயற்படுவதும். இதைப்போல அரசாங்கத்தை வெளியே எதிர்ப்பதாகத் தோற்றம் காட்டுவது. மறுபக்கத்தில் அரசாங்கத்தோடு ஒத்தோடுவது. விடுதலை இயக்கமாக இருந்த அடையாளத்தை இன்னும் பேண முற்படுவது. அதற்கு எதிரான கீழிறக்க அரசியலைச் செய்வது. இதைப்பற்றிய கேள்விகள் எழும்போது அதை நியாயப்படுத்துவது. அதற்கான தருக்கங்களை உருவாக்கிக் கொள்வது. மற்றும்படி சனங்களின் பிரச்சினைகளுக்கான தீர்வோ அபிலாஷைகளுக்கான பெறுபேறுகளோ கிடைக்க வழியேற்படுத்துவதில்லை.
இதனை அவர்களே தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். 1970, 80 களில் இலங்கைத் தமிழரசுக்கட்சி, தமிழர் விடுதலைக்கூட்டணி போன்றவற்றின் சமரச அரசியல் உருவாக்கிய அதிருப்திகளின் விளைவுகளே தாம் என. அவை முன்னெடுத்த சீரழிவு அரசியலுக்கு மாற்றாக – புதிய அரசியலை முன்னெடுப்பதற்காகவே அன்று விடுதலை இயக்கங்கள் உருவாகின. அவற்றின் பிரதிநிதிகளாக இருந்தவர்கள் இன்று தங்களைக் கீழிறக்கி, நாற்பதாண்டுகள் பின்னோக்கிய அரசியலில் கரைத்துக் கொண்டிருப்பதை.
இன்னும் இதைச் செறிவாகச் சொல்வதாக இருந்தால் இரண்டு கேள்விகளை மட்டும் எழுப்பலாம். அன்றைய தமிழர் விடுதலைக்கூட்டணி (இன்றையை தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைப்போல) ஐ.தே.க அரசாங்கத்தோடு நிபந்தனையற்ற சமரச அரசியலில் ஈடுபட்டதற்காக ஆலாலசுந்தரத்தையும் தர்மலிங்கத்தையும் சுட்டுக் கொன்றது எதற்காக?
இயக்க அரசியலின் உள்ளடக்கத்தை – அது முன்னிறுத்திய கோட்பாட்டுறுதியைக் கைவிட்டு அன்றைய தமிழர் விடுதலைக்கூட்டணியின் அரசியலைத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேரில் இன்று செய்ய வேண்டிய அவசியமென்ன?
அப்படியெனில் இதுவரையான தங்களின் பாதையும் பயணமும் தவறா? அதற்கான பெறுமதி என்ன? அந்தப் பயணத்தில் தம்மை அர்ப்பணித்த போராளிகளின் உயிருக்கான பெறுமானம் என்ன? அந்தப் போராளிகளையும் தலைவர்களையும் இன்னும் நினைவு கூர்வது எதற்காக? இதில் எங்கே உள்ளது உண்மையும் நேர்மையும்?
இது தனியே ஒரு இயக்கத்தின் சீரழிவல்ல. இன்று அரசியலில் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் முன்னர் விடுதலைப்போராட்ட அரசியலில் – இயக்க அரசியலில் ஈடுபட்டவர்கள். அவர்களில் பலரும் இன்று இத்தகைய கீழிறக்க நிலையிலேயே தமது அரசியலைத் தொடருகின்றனர். இதனால்தான் தமிழ்ச்சமூகம் தன்னுடைய அரசியலை முன்னோக்கி நகர்த்த முடியாதிருக்கிறது.
ஆக மொத்தத்தில் தமிழ்ச்சமூகம் இன்று உள்ளகக் குழப்ப – தடுமாற்ற அரசியலில் முக்குளித்துக் கொண்டிருக்கிறது.
இந்தச் சந்தர்ப்பத்தில் இன்னொரு உதாரணத்தையும் குறிப்பிட வேண்டும். கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின்போது புலிகள் இயக்கத்தின் முன்னாள் உறுப்பினர்கள் சிலரும் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்தவர்களில் சிலரும் போட்டியிட்டனர். ஆனால், இவர்களுக்கு வெற்றி கிட்டவில்லை. பதிலாக புலிகளை மேடைகளில் மட்டும் போற்றிப் பேசியவர்களுக்கே மக்கள் வாக்களித்தனர். இவ்வளவுக்கும் வெற்றி பெற்றவர்கள் ஒன்றும் பெரிய சமூகப் பணியாளர்களோ, போராட்டப் பங்களிப்பாளர்களோ அரசியல் அனுபவம் கொண்டவர்களோ அல்ல. மேடையில் புலிகளைப் பற்றிப் பெருமிதமாகப் பேசியதே இவர்களுடைய சாதனை. இதே மக்கள் புலிகளை இன்னும் நினைவு கொள்கிறார்கள். மாவீரர் நினைவு கூரலைச் செய்வதற்காக துயிலுமில்லங்களுக்குச் சென்று சுடரேற்றுகின்றனர். ஆனால், அரசியல் தெரிவுகளை முற்றிலும் மாறான வகையிலேயே செய்கின்றனர்.
இது எப்படி நிகழ்கிறது?
இந்த முரண்கள் எதனால் ஏற்படுகின்றன? சனங்களிடமும் இதற்குப் பதிலுமில்லை தெளிவுமில்லை. அரசியலாளர்களிடமும் இதற்குப் பதிலுமில்லை. தெளிவுமில்லை.
எனவேதான் சோதனைமேல் சோதனை என்ற நெருக்கடிகள் தமிழர்களைச் சுற்றி வளைத்திருக்கிறது.