என் தங்கை இளம் வயதிலேயே
ஒரு பெண் குழந்தையையும்
ஒரு ஆண் குழந்தையையும் விடுத்து விண்ணுற்றாள்.
அவற்றுள் அம்மாயி என்று அழைக்கப்பெறும் அப்பெண் குழந்தைக்கு அதன் 10ஆவது வயதில்
சிறந்த செல்வாக்கோடு ஒரு செல்லக் கலியாணம் செய்து வைத்தோம்.
கலியாணம் செய்த 60 ஆம் நாள் அப்பெண்ணின் கணவன் என்னும் 13 வயதுள்ள சிறு பையன்
பகல் 2 மணிகக்கு ‘விஷபேதி’யால் விண்ணுற்றான்.
அவன் இறந்தான் என்ற செய்தியைக் கேட்டதும், அப்பெண் குழந்தை என்னிடம் ஓடிவந்து,
“மாமா! எனக்கு கலியாணம் செய்து வை என்று நான் உன்னிடம் கேட்டேனா?
இப்படி என் தலையில் கல்லைப் போட்டாயே”
என்று ஓ வென்று அலறிய சத்தத்தோடு
என் காலடியில் அதன் மண்டையில் காயமுண்டாகும்படி திடீரென்று விழுந்தது.
துக்கம் விசாரிப்பதற்காக அங்கு வந்திருந்த
ஆண் பெண் உள்படச் சுமார் 600, 700 பேர்கள் அக்குழந்தையையும், என்னையும் பார்த்த வண்ணமாய்க் கண்களிலிருந்து
தாரை தாரையாக நீர் வடித்தனர்.
எனக்கும் அடக்கவொண்ணா அழுகை வந்துவிட்டது.
ஆனால் கீழே கிடந்த அந்தக் குழந்தையை
நான் கையைப் பிடித்துத் தூக்கும் போதே,
மறுபடியும் அதற்குக் கலியாணம் செய்துவிடுவது என்கின்ற உறுதியுடன் தூக்கினேன்.
பிறகு அந்தப் பெண் பக்குவமடைந்த
ஒரு வருடத்திற்குப் பின் அதற்குக் கலியாணம் செய்ய நானும், எனது மைத்துனரும் முயற்சி செய்தோம்.
இச்செய்தி எனது பெற்றோருக்கும் மற்றோருக்கும் எட்டவே அவர்கள் தங்கள் வகுப்புக்கு
ஒரு பெரிய ஆபத்து வந்து விட்டதுபோலக் கருதி பெரிதும் கவலைக்குள்ளானவர்களாகி
நாங்கள் பார்த்து வைத்திருந்த இரண்டொரு மாப்பிள்ளைகளையும் கலைத்தார்கள்.
முடிவில் எனது மைத்துனரின் இரண்டாம்தாரம் மைத்துனரைப் பிடித்துச் சரி செய்து
எவரும் அறியாவண்ணம்
பெண்ணையும், மாப்பிள்ளையையும்
சிதம்பரத்திற்கு அழைத்துச் சென்று
அங்கு கோயிலில் கல்யாணம் செய்வித்து
ஊருக்கு கூட்டி வந்தனர்.
ஆனால் நான் சிதம்பரத்திற்குப் போகாமல்
ஊரிலேயே இருக்க வேண்டியதாயிற்று.
ஏனெனில் அவர்கள் போயுள்ள செய்தியைச்
சுற்றத்தார் அறிந்தால்
ஏதாவது மாப்பிள்ளையைத்
தடை செய்து விடுவார்களோ என்கிற பயத்தால்
நான் ஊரிலிருந்தால் கலியாணத்திற்காக வெளியூறுக்குப் போயிருக்கிறார்களெனச் சந்தேகமிருக்காது என்கிற எண்ணங்கொண்டேயாகும்.
இக்கலியாணத்தின் பலனாக
இரண்டு மூன்று வருட காலம்
பந்துக்களுக்குள் வேற்றுமையும், பிளவும் ஏற்பட்டு ஜாதிக் கட்டுப்பாடு இருந்து
பிறகு அனைத்தும் சரிப்பட்டுப்போயின.
பெண்ணும் மாப்பிள்ளையும் ஒத்து வாழ்ந்து
ஓர் ஆண் மகவைப் பெற்றனர்.
ஆனால் துரதிருஷ்டவசமாகக்
கொஞ்ச நாளையில் அந்த இரண்டாவது புருஷனும் இறந்து விட்டான்.
எவ்வளவோ இடருக்குள் அகப்பட்டு அக்கலியாணத்தை முடித்து வைத்தோம்.
ஆனால் கடைசியில்
அந்த இரண்டாவது கணவனும் மரிக்கவே…
விதவா விவாக விஷயத்தில்
தீவிரமாகத் தலையிட வேண்டுமென
எனக்கிருந்த கருத்துக்குப்
பெரிய முட்டுக்கட்டை போட்டது போலாயிற்று.
………………………………………………………………………………………………
தமிழ்நாட்டின் முதல் விதவைத் திருமணம்
என்ற – ஆசிரியை தேவதா தமிழ்
பதிவைத்தொடர்ந்து இணையத்தில் தேடியபோது
‘தமிழ் ஓவியா’ தளத்தில் கிட்டிய
22.8.1926 ஆம் வருடத்து
‘குடி அரசு’ இதழ்க் கட்டுரைப் பதிவு.
நன்றி / Devatha Tamil
(Rathan Chandrasekar)