இன்று சுதந்திர தினத்தில், நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கம்பீரமாக தேசிய கொடி பறப்பதை அவதானிக்க முடிகின்றது. ஒரு நாட்டில் பெருமையை பறைசாற்றும் சின்னமாக தேசிய கொடி மதித்து கெளரவிக்கப்படுகிறது.
தேசிய கொடியை கொடிக்கம்பத்தில் ஏற்றும் போதும், அதைக் கம்பத்திலிருந்து இறக்கும் போதும், ஒரு நாட்டின் தலைவருக்குக் கொடுக்கப்படும் மரியாதையின் அதே அளவு தேசிய கொடிக்கும் கொடுக்கப்படுகிறது. நாட்டின் முக்கிய உத்தியோகபூர்வ நிகழ்வுகளின் போது, தேசிய கொடி சகல அரசாங்க கட்டடங்களிலும் கம்பீரமாகப் பறக்கவிடப்படுகிறது.
பலவகையான கொடிகளை, ஓர் இடத்தில் பறக்கவிடும் போது, அவற்றை விட சற்று உயரத்தில் குறித்த நாட்டின் தேசிய கொடி பறக்கவிடப்பட வேண்டும் என்பது நியதியாகும்.
1972ஆம் ஆண்டில் இலங்கை ஒரு ஜனநாயக குடியரசாக மாற்றமடைந்த போதும், 1978ஆம் ஆண்டில் இலங்கையில் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி ஆட்சி முறை அறிமுகம் செய்யப்பட்ட போதும், எமது நாட்டின் தேசிய கொடியில் எவ்வித குறிப்பிடத்தக்க மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய இராச்சியத்திடமிருந்து இலங்கை விடுதலை அடையும் வேளையில், இலங்கை நாட்டுக்கான தேசிய கொடிக்கான தேவை ஏற்பட்டது. அதுவரை, பிரித்தானிய ஒன்றியக் கொடியே, இலங்கையின் தேசிய கொடியாக இருந்து வந்தது.
சுதந்திரத் தினத்தன்றுக்கு முன்னர் கொடி குறித்த முடிவுக்கு வர முடியாத நிலையில் 1815இல் கண்டியில் ஆங்கிலேயர்களால் இறக்கி வைக்கப்பட்ட சிங்கக்கொடி 133 ஆண்டுகளுக்கு பின்னர் 1948ஆம் ஆண்டு, ‘ஒருங்கிணைந்த இலங்கைக்குரிய கொடி’யாக மீண்டும் முதலாவது சுதந்திர தினத்தன்று சுதந்திர சதுக்கத்தில் ஏற்றப்பட்டது.
1948இல் சுதந்திரம் கிடைக்கும்போது, இலங்கையின் பிரதமராக இருந்த டி. எஸ். சேனாநாயக்க, இலங்கையின் கடைசி இராச்சியமான கண்டி இராச்சியத்தின் கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் சிவப்பு நிறப் பின்னணியில் மஞ்சள் நிற போர் வாளேந்திய சிங்கக் கொடியே, சுதந்திர இலங்கையைக் குறிக்கும் சிறந்த கொடியாக அமையும் எனத் தெரிவு செய்தார்.
எனினும், அக் கொடியில் தங்கள் இனத்துவங்களை பிரதிபலிக்கும் அடையாளங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என தமிழ், முஸ்லிம் தலைவர்கள் கேட்டுக்கொண்டனர்.
அதன்பிரகாரம், சில நாள்களின் பின்னர், தேசிய கொடியில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பான பாராளுமன்றக் குழு அமைக்கப்பட்டது. அக்குழுவில், எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க, ஜீ. ஜீ. பொன்னம்பலம், ஜே.எல். கொத்தலாவல, டி.பி. ஜாயா, எல்.ஏ. ராஜபக்ஷ, எஸ். நடேசன், ஜே. ஆர். ஜயவர்தன என்போர் உள்ளடங்கியிருந்தார்கள்
தேசிய கொடியைத் தெரிவு செய்வதற்காக பிரதமர் நியமித்திருந்த பாராளுமன்றத் தெரிவுக் குழுவின் தலைவராக எஸ்.டபிள்யூ.ஆர்.டீ.பண்டாரநாயக்கவும், செயலாளராக கலாநிதி செனரத் பரண விதாரனவும் செயற்பட்டனர். பெரும்பான்மை சிங்களவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் வாளேந்திய சிங்கக் கொடியில் சிறிதளவு மாற்றத்தையேனும் செய்வதற்கு இணங்காமையால் பத்துத் தடவைக்கு மேல் தெரிவுக் குழு கூடியபோதும் தீர்க்கமான முடிவு எதனையும் பரிந்துரைக்க இயலவில்லை.
பொது மக்கள் கருத்துக் கோரப்பட்டபோது பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மதங்கள் நான்கையும் சேர்ந்தவர்களால் வணக்கத்துக்குரிய ஒருதலமாகப் போற்றப்படும் ஆதாமின் சிகரமாக அழைக்கப்படும் சிவனொளிபாத மலையையே சின்னமாக தேசிய கொடி கொண்டிருத்தல் வேண்டும் என்று யாழ்ப்பாண வாலிபர் காங்கிரஸ் தலைவர் ஹன்டி பேரின்பநாயகம் வலியுறுத்தியிருந்தார்.
ஆயினும் திரைக்குப் பின்னால் சம்பவித்திருந்த சூழ்ச்சியால் திடீரென்று வாளேந்திய சிங்கக் கொடிக்குப் புறத்தே தமிழ், இஸ்லாமிய மக்களைப் பிரதிபலிப்பதாக இரு வரைகோடுகளைத் தேசிய கொடியில் இணைப்பதற்கு ஜீ.ஜீ.பொன்னம்பலமும் ரி.பி.ஜாயாவும் இணக்கம் தெரிவித்தனர்.
1950ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி இந்தக்குழு இலங்கையின் தேசிய கொடிக்கான தமது பரிந்துரையை வெளியிட்டது. இந்தக் குழுவின் பெரும்பான்மையோர் எடுத்த இந்த முடிவுக்கு செனட்டர் நடேசன் இணக்கம் தெரிவிக்கவில்லை; கையெழுத்திடவுமில்லை. அதற்கான காரணங்களைத் தெரிவித்த அவர் 15.2.1950 அன்றே ஓர் அறிக்கையையும் வெளியிட்டார்.
இக்குழுவின் பரிந்துரைக்கமைய, தேசிய கொடியில் சமஅளவு அகலம் கொண்ட மஞ்சள், பச்சை நிறமான இரண்டு நிலைகுத்தான பட்டைகள் உருவாக்கப்பட்டன. செம்மஞ்சள் நிறப் பட்டை தமிழரையும் பச்சை நிறப் பட்டை முஸ்லிம்களையும் அடையாளப்படுத்துவதாக இருந்தது.
இலங்கையின் தேசிய கொடி, மஞ்சள் நிறப் பின்னணியில் அமைந்துள்ளது. இதில் இரண்டு பகுதிகளைக் காணமுடியும். கொடிக் கம்பத்தின் பக்கம் இருக்கும் பகுதியில் செம்மஞ்சளும், பச்சையுமான நிலைக்குத்தான இரண்டு பட்டைகள் உள்ளன. கொடியின் பெரும்பகுதியை அடக்கியுள்ள மற்றப்பகுதி கருஞ் சிவப்பு நிறத்தில் மஞ்சள் நிறத்திலான வாளேந்திய சிங்கமொன்றையும், நான்கு மூலைகளிலும் அரச மர இலைகளையும் கொண்டுள்ளது.
சிங்கத்துடன் கூடிய கருஞ் சிவப்பு நிறப் பகுதி சிங்களவர்களைக் குறிப்பதாகக் கொள்ளப்படுகின்றது. அத்துடன் பௌத்த மதத்தைக் குறிக்கும் வகையில் நான்கு அரசிலைகள் கொடியின் நான்கு முலைகளிலும் இணைக்கப்பட்டன. இக்கொடியே தற்போது இலங்கையில் பயன்பாட்டில் உள்ளது.
இலங்கையின் இன்றைய தேசிய கொடி பின்வரும் அம்சங்களை உடையதாகும்.
சிங்கம்: தலை – நாட்டின் தலைவர்
சிங்கத்தின் தலையில் காணப்படும் சுறுள் முடி – சமயம், தியானம், அறிவு
சிங்கத்தின் தாடி – தூய்மையான வார்த்தை
சிங்கத்தின் மூக்கு – புத்திக்கூர்மை
சிங்கத்தின் முன் இரண்டு கால்கள் – தூய்மையான முறையில் செல்வத்தைக் கையாளல்
சிங்கத்தின் உடல் – வீரம்
சிங்கத்தின் வால் – நீதி, நேர்மையான ஆட்சி
சிங்கத்தின் வாள் – அநீதிக்கு எதிரான போராட்டம்
சிங்கத்தின் வாளின் பிடி – நீர், நெருப்பு, ஆகாயம், பூமி ஆகிய கூறுகள்
அரச இலைகள் நான்கு: அன்பு (மெத்தா) – ஒற்றுமையை பலப்படுத்தல்; காருண்யம் (கருணா) -துன்பத்திலிருந்து மீட்சி பெறல்; மகிழ்ச்சி (முதிதா) – மற்றவர் மகிழ்ச்சியில் தானும் மகிழ்தல்; பற்றின்மை (உபேக்கா) – நன்மை, தீமை இரண்டையும் சமமாக மதித்தல் ஆகியவை ஆகும்.
சிவப்பு நிறம்: சமத்துவம் மிக்க சமுதாய அமைப்பினை உருவாக்குதல்.
மஞ்சள் நிறம்: அறிவு, சமாதானம், அஹிம்சை, சத்தியம், தர்மம் என்பவற்றை வெளிப்படுத்தல்.
செம்மஞ்சள் நிறம்: தமிழர்.
பச்சை நிறம்: முஸ்லிம்கள்
இவ்வாறாக, இலங்கையின் தேசிய கொடி பல அம்சங்களைத் தன்னகத்தே அடையாளங்களாக வெளிப்படுத்தி நிற்கின்றது.
1948ஆம் ஆண்டு பெப்ரவரி நான்காம் திகதியன்று பிரிட்டிஷ் அரசாங்கத்திடமிருந்து இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்றது. அன்று, இலங்கையின் கடைசி மன்னன் ஸ்ரீ விக்கிரம இராஜசிங்கனின் கொடி ஏற்றப்பட்டு, பிரிட்டிஷ் கொடி இறக்கப்பட்டமை, எமது நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வாக அமைந்துள்ளது.
இத்தனை சிறப்புவாய்ந்த தேசிய கொடியானது, ஒரு தேசிய தலைவரின் மரணம், இயற்கை அனர்த்தத்தால் ஏற்படும் மனித அழிவு போன்ற சம்பவங்களின் போது, தேசத்தின் சோகத்தைக் காண்பிக்கும் முகமாக, தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும்.
முக்கிய நிகழ்வுகளின் போது தேசிய கொடியை பயன்படுத்திய பின்னர், அவற்றை மிகவும் பாதுகாப்பாக இறக்கி, நெறிப்படி மடித்து வைக்க வேண்டும். அடுத்த தேசிய நிகழ்வுகள் நடைபெறும் தினத்தில் அல்லது முக்கிய நிகழ்வுகளில் மாத்திரம் கம்பங்களில் பறக்க விட வேண்டும்.
தேசிய கொடியை தலைகீழாக, கவனக்குறைவின் நிமித்தம் கட்டுவது மன்னிக்க முடியாத குற்றம் மட்டுமல்ல, இலங்கை குற்றவியல் சட்டத்தின்படி ஒரு தண்டனைக்குரிய குற்றமாகவும் கருதப்படுகிறது.
தேசிய கொடியை பறக்கவிடும் போது, அதன் ஒரு பகுதி தரையில் படுவதையோ, வேறு ஏதாவது ஒரு பொருளின் மீது விழுவதையோ தடுக்க வேண்டும். இவ்விதம் தேசிய கொடியை கட்டுவதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.
அதுபோல், தேசிய கொடிகளை அச்சிடும் போது, அச்சகங்கள் அதன் நிர்ணயிக்கப்பட்ட நியம வர்ணங்களை மாற்றிவிடாமலும் அவதானமாக இருக்க வேண்டும். தேசிய கொடியை பாதைகளிலும் வீதியின் குறுக்கே கட்டுவதும் அதனை அவமதிக்கும் செயலாக கருதப்படும்.
1951ஆம் ஆண்டிலும் 1972ஆம் ஆண்டிலும் ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கனின் கொடியில் சில திருத்தங்களை மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிலர் தேசிய கொடியை பொலிதீனில் அச்சிட்டு, தேசிய வைபவங்களின் போது தெருத்தெருவாகக் கட்டிவிடுவதுண்டு. அந்த வைபவம் முடிவடைந்த பின்னர், ஒருவருமே அவற்றை அகற்றி விடவேண்டும் என்பதில் அக்கறை காட்டுவதில்லை. இறுதியில் கொடிகள் வீதியில் அநாதரவாக விழுந்துவிடும் போது, அவற்றை பலரும் பொருட்படுத்தாமல் மிதித்து செல்கின்ற வேதனைக்குரிய சம்பவங்களும் இடம்பெறுகின்றன.
ஆகவே, பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு, தேசிய கொடியை அவமதிக்கக்கூடிய வகையில் அவற்றை பயன்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொலிஸாருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சர்வதேச கிரிக்கட் போட்டிகளின் போது, இலங்கையின் தேசிய கொடி மாத்திரமின்றி இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளின் தேசிய கொடிகள் தரக்குறைவான முறையில் பயன்படுத்துவதுண்டு. சில பெண்கள் தேசிய கொடியை பயன்படுத்தி, ஆடைகளைத் தைத்து விடுவதுண்டு. வேறு சிலர், கிரிக்கட் போட்டியில் ஆரவாரம் செய்யும் போது, தேசிய கொடியை இடுப்பில் கட்டிக்கொண்டும், தோளில் போர்த்திக் கொண்டும் ஆடுவதும், அப்பொழுது அந்தக் கொடி நழுவி கீழே விழும் சம்பவங்களும் நடைபெறுவதும் இப்போது அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.
இனிமேல் நாட்டின் சுதந்திரத்தின் சின்னமாக விளங்கும் தேசிய கொடியை கெளரவிக்கக்கூடிய நற்பண்புகளை, இப்போது பாடசாலைகளில் அறிவுறுத்துவதற்கான திட்டங்களை கல்வி அமைச்சு மேற்கொண்டு வருகின்றது.
தேசிய கீதம் இசைக்கப்படும் போது, நாம்அனைவரும் எங்களை அறியாமலேயே எழுந்து நின்று, சிரம் தாழ்த்தி அதற்கு மாரியாதை செலுத்துவதைப் போன்று, தேசிய கொடி கட்டடங்களில் ஆடம்பரமாக பறந்து கொண்டிருக்கும் போது, அதனை அண்ணார்ந்து பார்த்து சிரம் தாழ்த்தி கெளரவித்தல் அவசியமாகும்.
74 ஆவது சுதந்திரத்தினமான இன்று, நாட்டிலுள்ள எல்லா வீடுகளிலும் தேசிய கொடியை பறக்கவிடுதல் அவசியமாகும். இதன்முலமே, இந்நாட்டு மக்கள் தற்போது அவர்களுக்குக் கிடைத்திருக்கும் சுதந்திரக் காற்றை மகிழ்ச்சியோடு அனுபவித்து வருகிறார்கள் என்பதையும் எங்கள் நாட்டில் வலுவடைய வேண்டிய வரும் தேசிய ஐக்கியத்தையும் பிரதிபலிக்கக்கூடியதாக இருக்கும்.