தனிமனித பலவீனங்களில் இருந்து விடுபட முடியாவிட்டால் தலைவர் பதவியில் இருந்து விலகுங்கள் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு பகிரங்க வேண்டுகோள் விடுத்து உள்ளார் இலங்கை போர் நிறுத்த கண்காணிப்பு குழுவின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினராகவும், முஸ்லிம் சமாதான செயலகத்தின் மட்டக்களப்பு பிராந்திய பணிப்பாளராகவும், இனத்துவ கற்கைகளுக்கான சர்வதேச நிலையத்தின் உயர் மட்ட குழு அங்கத்தவராகவும் பதவிகள் வகித்த எஸ். எம். இஸ்ஸடீன்.
மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையின் ஸ்தாபக செயலாளரும், பேராதனை ஆசிரியர் கலாசாலையில் படித்த பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியரும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் நடப்பு விவகாரங்களில் துறை சார்ந்த நிபுணருமான இவர் அண்மையில் வழங்கிய பேட்டி வருமாறு:-
கேள்வி:- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் தற்போது ஏற்பட்டு உள்ள தலைமைத்துவ நெருக்கடி குறித்த உங்கள் பார்வை என்ன?
பதில்:- யானை அதன் தலையில் அதுவாகவே மண்ணை அள்ளி கொட்டுவது போல ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அதுவாகவே ஏற்படுத்தி கொண்ட நெருக்கடிதான் இது. இதனோடு சேர்த்து சொல்ல வேண்டிய இன்னொரு விடயம் கடந்த 17 வருடங்களாக தலைவர் பதவியில் இருந்து வருகின்ற ரவூப் ஹக்கீம் அவரின் தலைமைத்துவ ஆளுமையை விருத்தி செய்யவில்லை அல்லது அதில் வெற்றி அடைய தவறி விட்டார். இதனால்தான் அவர் சாய்வு நாற்காலியில் உள்ளார் என்றும் அவருக்கு இறங்குமுகமே அன்றி ஏறுமுகம் கிடையாது என்றும் நாம் கூறுகின்றோம். அதாவது அவரின் தலைமை பலவீனமானது.
கேள்வி:- ஸ்தாபக தலைவர் அஷ்ரப்புக்கு இப்போதைய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா அப்போது நெருக்கடி கொடுத்து இருந்தாரே?
பதில்:- அஷ்ரப்புக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் அன்று நடந்த பிரச்சினைக்கும், ஹக்கீம் காலம் காலமாக எதிர்கொண்டு வந்திருக்கின்ற பிரச்சினைகளுக்கும் இடையில் அடிப்படையிலேயே வித்தியாசம் உள்ளது. அஷ்ரப்பின் தலைமைத்துவ கதிரையை குறி வைத்து ஹிஸ்புல்லாவோ, வேறு எவருமோ பிரச்சினை செய்திருக்கவில்லை. அஷ்ரப்பின் தலைமைத்துவம் எவரும் போட்டியிட முடியாத அளவுக்கு மாபெரும் ஆளுமையாக இருந்தது.
ஆனால் ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவத்துக்கு காலத்துக்கு காலம் சவால்கள் விடப்பட்டு வந்திருக்கின்றன. தலைமைத்துவ போட்டிகள் உக்கிர தாண்டம் ஆடி வந்திருக்கின்றன. இவருடன் இருந்த ஆட்களே போட்டி போட தொடங்கினர்.
இவருடன் இருந்த ஆட்கள் தலைவர் பதவிக்கு ஹக்கீமை விட அவர்கள் பொருத்தமானவர்கள் என்கிற உள்ளுணர்வால் உந்தப்பட்டு பிரச்சினை பண்ணி வந்திருக்கின்றனர்.
கேள்வி:- ஹக்கீமின் தலைமை பலவீனமானது என்கின்றீர்கள். ஆனால் அவரின் தலைமையை இன்னமும் இன்னொருவரால் தட்டி பறிக்க முடியாமல்தானே உள்ளது?
பதில்:- முன்னைய தலைமைத்துவ நெருக்கடிகளின்போது கட்சியின் செயலாளர் நாயகமாக இருந்த ஹசன் அலி, தவிசாளராக இருந்த பஷீர் சேகு தாவூத் ஆகியோர் ரவூப் ஹக்கீமின் தலைமைத்துவத்தை பாதுகாத்து கொடுப்பதில் மிக காத்திரமான பங்காற்றி உள்ளனர். ஆனால் இப்போது அவர்களே ஹக்கீமின் தலைமைத்துவத்துக்கு பாரிய சவாலாக, அச்சுறுத்தலாக மாறி உள்ளனர். நாம் முன்பு சொன்னதை போல ஹக்கீம் அவராகவே ஏற்படுத்தி கொண்ட பிரச்சினைகளால் வலு பெற்றுள்ள இப்போதைய நெருக்கடி பல பின்னணிகளை கொண்டதாக உள்ளது.
கேள்வி:- அந்த பின்னணிகளை எமது வாசகர்களுக்காக எடுத்து கூற முடியுமா?
பதில்:- தற்போது அரசியல் அரங்கில் தேசிய மட்டத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த பேசுபொருளாக இருக்கின்ற அரசமைப்பு மாற்றம், தேர்தல் முறை மாற்றம் போன்ற விடயங்களில் மு. கா தலைமைத்துவம் பரந்து பட்ட கலந்துரையாடல்களை துறை சார்ந்த நிபுணர்கள் மற்றும் ஆர்வலர்களுடன் மேற்கொள்ளவில்லை.
கடந்த கால அரசாங்கத்திலும், தற்போதைய அரசாங்கத்திலும் முஸ்லிம்கள் எதிர்நோக்கிய, எதிர்நோக்குகின்ற பொதுபலசேனா, ராவணபலய போன்ற சிங்கள பௌத்த பேரினவாத அமைப்புக்களின் அச்சுறுத்தல்களை தீர்க்க போதுமான அளவு நடவடிக்கைகளை எடுக்கவில்லை.
நாட்டில் புரையோடி காணப்படுகின்ற தேசிய இன பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில் ஓரங்கமாக தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற பொறிமுறை சம்பந்தமான முன்னெடுப்புகளில் தற்போதைய அரசாங்கம் ஓரளவு கரிசனை எடுப்பதாக தெரிகின்ற சூழ்நிலையில் முஸ்லிம்களின் அரசியல் இருப்பு அல்லது உரிமை சம்பந்தமான விடயங்களில் முஸ்லிம்களுக்கென முழுமையான ஒரு தீர்வு திட்டத்தை இது வரை முறையாக தயாரிக்கவோ, சமர்ப்பிக்கவோ இல்லை.
குறைந்த பட்சம் இலங்கை திருநாட்டில் முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்டிருக்கின்ற ஒரே ஒரு மாவட்டமான அம்பாறையை முன்னிறுத்தி முஸ்லிம்களுக்கென ஒரு கரையோர மாவட்டத்தை அல்லது தனி அலகை பெற்று கொடுப்பதற்கான முறையான அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளவில்லை.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கென கட்டப்பட்ட நுரைச்சோலை வீட்டு திட்டத்தை பாதிக்கப்பட்டவர்களுக்கு பெற்று கொடுக்க எவ்வித முறையான முயற்சிகளையும் எடுக்கவில்லை. இவ்வீடுகள் பயன்படுத்துவார் எவரும் இல்லாமல் காடு பரவி காட்சி தருகின்றன.
அம்பாறை மாவட்டத்தில் அபிவிருத்தி திட்டங்களுக்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளுக்கான நஷ்டஈடு , வட்டமடு காணி பிரச்சினை, கடலரிப்பு பாதிப்புகள், மாணிக்கமடு புத்தர் சிலை விவகாரம், தம்புள்ளை பள்ளிவாசல் விவகாரம், பொத்தானை பள்ளிவாசல் விவகாரம், தர்ஹா நகர் கலவரம் போன்ற விடயங்களில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறையீனம் காட்டியது. குறிப்பாக தர்ஹா நகர் கலவரத்துக்கு பொறுப்பானவர்களுக்கு தண்டனை பெற்று கொடுக்கின்ற முன்னெடுப்புகளை பற்றுறுதியுடன் மேற்கொள்ளவில்லை.
கண்டியில் அவருடைய தேர்தல் வெற்றிக்கு தடையாக இருக்க கூடிய காரணிகளை அகற்றுவதில் தலைவர் ரவூப் ஹக்கீம் அதீத கவனம் காட்டி வருகின்றார். உதாரணமாக ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக அசாத் சாலி நிறுத்தப்பட கூடாது என்று அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு நிபந்தனை போட்டு சொந்த வெற்றியை உறுதிப்படுத்தினார்.
அதே நேரம் அம்பாறையில் தயா கமகே பொது தேர்தல் கேட்பதற்கும், அவரின் மனைவி அனோமா கமகே தேசிய பட்டியல் வேட்பாளராக இடம் பிடிப்பதற்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேர்தல் கூட்டாளியான ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆட்சேபனை வெளிப்படுத்த ரவூப் ஹக்கீம் தவறுவதன் மூலம் அம்பாறையின் அரசியல் அதிகாரம் சிங்களவர்களுக்கு தாரை வார்த்து கொடுக்கப்படுகின்றது. அதாவது அமைச்சரவை அமைச்சராக தயா கமகேயும், பிரதி அமைச்சராக அனோமா கமகேயும் வந்து அம்பாறை மாவட்டத்தின் அதிகாரத்தை அவர்களின் பிடியில் வைத்திருக்கின்றனர். இதற்கு உதாரணமாக கல்முனையில் அமைந்திருந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் பயிற்சி நிலையம் அம்பாறைக்கு மாற்றப்பட்ட சம்பவத்தை சொல்லலாம். ஸ்தாபக தலைவர் அஷ்ரப்பின் காலத்தில் அம்பாறை மாவட்டத்தின் அதிகாரம் முஸ்லிம்களின் வசம் காணப்பட்டது.
தேர்தல் காலங்களில் வாக்குறுதிகளை ஊர்களுக்கும், நபர்களுக்கும் அள்ளி வழங்குகின்ற கட்சி தலைவர் அவற்றை காப்பாற்றுவதில் முனைப்பு காட்டுவதில்லை. உதாரணம் தேசிய பட்டியல் எம். பி பதவிக்கான வாக்குறுதிகள். சாய்ந்தமருதுக்கு தனியான பிரதேச சபை அமைத்து கொடுப்பார் என்கிற வாக்குறுதியும் இதே மாதிரியானதே.
புனித குர்ஆனையும், இறை தூதரின் பாரம்பரியங்களையும் அதியுயர் வழிகாட்டல்களாக கொண்ட கட்சியின் தலைமைத்துவம் தனி மனித பலவீனங்களை முடியுமான வரை தவிர்த்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கேள்வி:- இவையெல்லாம் எவ்வாறு தற்போதைய தலைமைத்துவ நெருக்கடிக்குள் ரவூப் ஹக்கீமை தள்ளின?
பதில்:- முஸ்லிம் பிரதேசங்களில் மேற்சொன்ன பின்னணிகளோடு சம்பந்தப்பட்டு அவரின் தலைமைத்துவத்துக்கு பாதகமான கள சூழ்நிலைகள் மேலோங்கி வருவதை ஹக்கீம் அவதானித்தார். அவரை பலப்படுத்தி கொள்ள அல்லது காப்பாற்ற தவறான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
தலைமைத்துவத்துக்கு எதிராக கேள்வி கேட்க கூடிய உயர் பீட உறுப்பினர்களை ஓரம் கட்டியது, கட்சி யாப்பில் மாற்றங்களை கொண்டு வந்தது போன்ற நடவடிக்கைகளை உதாரணமாக சொல்ல முடியும். இவரால் ஒரம் கட்டப்பட்டவர்களில் பஷீர் சேகு தாவூத், ஹசன் அலி ஆகியோர் முக்கியமானவர்கள். அத்துடன் சூறா சபை உறுப்பினர்கள் இடை நிறுத்தப்பட்டதையும் குறிப்பிட வேண்டி உள்ளது.
தலைமையை காப்பாற்றி தக்க வைக்க இவ்விதம் இவர் எடுத்த நடவடிக்கைகள் பிரச்சினைகளை மேலும் இடியப்ப சிக்கல்களாக்கி தீவிரப்படுத்தி உள்ளன.
கேள்வி:- தற்போதைய தலைமைத்துவ நெருக்கடிக்கு சம்பந்தப்பட்ட எதிர் தரப்பினருடன் பேசி ரவூப் ஹக்கீம் தீர்வு காண்பார் என்று நினைக்கின்றீர்களா?
பதில்:- கட்சி யாப்பில் மாற்றம் கொண்டு வந்து கட்சி உயர் பீட உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்தது, அதிகாரம் உள்ள செயலாளர் நாயகம் பதவியை இல்லாமல் செய்தது போன்ற நடவடிக்கைகள் மூலம் அவருடைய தலைமையின் பாதுகாப்பை மிக சாணக்கியமாக உறுதிப்படுத்தி உள்ளார் என்று பிழையாக விளங்கி வைத்து உள்ளார் ஹக்கீம். உண்மை நிலையை அல்லது நிலைமை கை மீறி செல்வதை இவர் உள்ளபடி உணர்கின்றபோது ஹசன் அலி, பஷீர் சேகு தாவூத் ஆகியோரை இவர் தேடி போய் கண்டு சமரசம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடும். அதற்குள் நிலைமை கட்டுக்கடங்காததாகவும் ஆகி விடலாம்.
கேள்வி:- தலைமைத்துவ கதிரையை கண் முன் நிறுத்தி வைத்து எதிரும், புதிருமாக இடம்பெற்று வருகின்ற மோதல் நீடிப்பது முஸ்லிம் சமூகத்துக்கு ஆரோக்கியமான விடயம் அல்லவே?
பதில்: முஸ்லிம் சமூகத்துக்கு படுமோசமான விளைவுகள் நேரலாம் என்று எச்சரிக்கின்றோம். தற்போதைய சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி சர்வதேச மற்றும் உள்நாட்டு சக்திகள் பலவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை மேலும் பலவீனம் அடைய செய்வதற்கான வாய்ப்புகள் தெரிகின்றன. ஏற்கனவே சந்திக்க நேர்ந்த விளைவுகளை விட மிக மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். இந்நிலையில் இரு தரப்பினரும் அவரவர் நலன் சார்ந்த விடயங்களை சிந்திப்பதை உடனடியாக நிறுத்தி விட்டு, சமூக நலன் சார்ந்து சிந்தித்து, சுமூகமான சூழலுக்குள் உடனடியாக செல்ல முயற்சிப்பது காலத்தின் கட்டாயம் ஆகும். தவறினால் காலம் செல்ல செல்ல அவரவர் தரப்பு நியாயங்களை சொல்ல இரு தரப்பினரும் நீதிமன்ற வாசல்களில் காத்திருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படலாம். உணர்வுகளால் உந்தப்பட்டு முடிவுகளை எடுப்பதை விடுத்து அறிவுபூர்வமான அணுகுமுறைகளை இவர்கள் கைக்கொள்ள வேண்டியது அவசியமானது ஆகும். ஆனால் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் வானத்தில் இருள் மேகங்கள் அதிகமாக பரவ தொடங்கி உள்ளபோதிலும் நம்பிக்கையூட்டும் ஒளி கீற்றுகள் எவையும் இன்னமும் தென்படவில்லை.
அதே போல ஹக்கீமுக்கும் ஒரு ஆலோசனையை முன்வைக்கின்றோம். அவருடைய தனி மனித பலவீனங்கள் அவருடைய கட்சியையையும், அவர் சார்ந்த சமூகத்தையும் பாதிக்கின்ற பட்சத்தில் அவர் அந்த தனி மனித பலவீனங்களில் இருந்து விடுபட வேண்டும், அவ்வாறு முடியாவிட்டால் தலைவர் பதவியில் இருந்து விடுபடுவது கட்சிக்கும், சமூகத்துக்கும் மாத்திரம் அன்றி அவருக்கும் நன்மை கொடுக்கும்.
கேள்வி:- ஹக்கீமை தென்னிலங்கை தலைவர்கள் எப்படி பார்க்கின்றனர்?
பதில்:- தலைவர் அஷ்ரப்பை அவர்கள் பார்த்த, அணுகிய விதம் வேறு, தலைவர் ஹக்கீமை பார்க்கின்ற விதம் வேறு. சமூகம் சார்ந்த அரசியல் விடயங்களில் விட்டு கொடுக்காத ஒரு இறுக்கமான போக்கை தலைவர் அஷ்ரப்பிடமும், இளக்கமான, தளர்ச்சியான நொய்தல் போக்கை தலைவர் ஹக்கீமிடமும் கண்டனர். அதாவது சேற்றில் நடப்பட்ட நாற்று அல்லது கம்பு மாதிரி ரவூப் ஹக்கீம் ஸ்திரம் அற்றவர் என்பது இவர்களின் பொதுவான அளவீடு ஆகும்.
.கேள்வி:- முஸ்லிம் சமுதாயத்துக்கு நீங்கள் கூற கூடிய ஆலோசனை என்ன?
பதில்:- முஸ்லிம்களை பொறுத்த வரை இது மிக இக்கட்டான கஷ்ட காலம். முஸ்லிம் சமூகம் மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம். அரசமைப்பு மாற்றம், தேர்தல் முறை மாற்றம் போன்றவை முஸ்லிம் சமூகத்தை எவ்வாறு பாதிக்க போகின்றன? என்பது குறித்த புரிதல் மிக முக்கியமானது. முஸ்லிம் புத்திஜீவிகள், சமய தலைவர்கள், கல்வி சமூகம் மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றின் பிரதிநிதிகள், இளைய தலைமுறையினர் போன்றோர் விழிப்படைந்து முஸ்லிம் அரசியல் செயற்பாட்டு தளத்தை விஸ்தரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. ஒற்றுமைப்பட்டு பாரிய அமுக்க குழுவாக முஸ்லிம் சமூகம் செயற்பட வேண்டும்.
கேள்வி:- தேசிய அரசியலில் ஏதேனும் மாற்றங்கள் நேரலாம் என்று நினைக்கின்றீர்களா?
பதில்:- தேசிய அரசியலில் தற்போதைக்கு உடனடியாக மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக கண் முன் தெரியவில்லை. ஏனென்றால் சர்வதேச பூகோள சக்திகளின் அனுசரணை உள்ள அரசாங்கம் இது. பொருளாதார ஸ்திர தன்மையை ஏற்படுத்துவதிலும், சிறுபான்மை இன மக்களின் நலன்களை பேணுவதிலும் ஏற்படுகின்ற முன்னேற்றகரமான நிலைமைகள் மற்றும் சாதக பாதக தன்மைகள்தான் இலங்கையின் அரசியல் ஸ்திர தன்மையை தீர்மானிக்க கூடிய காரணிகளாக அமையும்.
உலக வல்லரசுகள் அவற்றின் கண்களை அகல திறந்து அவதானித்து வருகின்றன. இலங்கையின் உடைய புவிசார் அமைவிடத்தின் கேந்திர முக்கியத்துவமே இதற்கான காரணம் ஆகும். அவர்களுடைய நலன்களுக்கு குந்தகம் ஏற்படாத வரையில் எந்தவொரு மாற்றமும் உடனடியாக நிகழ வாய்ப்பு இல்லை.
இலங்கையின் தேசிய இன பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகள் பின்னடைவு அடைகின்றபோது, சிறுபான்மை இனங்கள் அவர்களுடைய அபிலாஷைகள் பாதிக்கப்படுவதாக உணர்கின்றபோது, வேலை வாய்ப்பை பெறுவதற்கான போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றபோது அரசியல் ஸ்தர தன்மை பாதிப்படைகின்றது. மேற்சொன்ன சூழ்நிலைகள் கரு கொள்கின்றபோது கால ஓட்டத்தில் அரசியல் மாற்றத்துக்கான வாய்ப்புகள் ஏற்படுகின்ற சந்தர்ப்பங்கள் உருவாகலாம்.