பிரிட்டனிலிருந்து பிரிந்து ஸ்காட்லாந்து தனி நாடாவது தொடர்பாக இரண்டாவது முறை பொது வாக்கெடுப்பு நடத்தக் கோரியிருக்கிறார், ஸ்காட்லாந்தின் முதன்மை அமைச்சர் நிகோலா ஸ்டர்ஜன். இந்தக் கோரிக்கையை அவர் வெளியிட்ட அதே சமயத்தில்தான், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பான பேச்சுவார்த்தையைத் தொடங்குவதற்கான வரலாற்றுச் சிறப்பு மிக்க மசோதா பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நிகோலா ஸ்டர்ஜனின் இந்தக் கோரிக்கை, பிரிட்டனிலிருந்து வெளியேற வேண்டும் எனும் கனவு, ஸ்காட்லாந்து மக்களிடம் இருந்து முற்றிலுமாக அகன்றுவிடவில்லை என்பதை பிரிட்டன் அரசுக்குச் சுட்டிக்காட்டுகிறது எனலாம். ஆனால், இது காலப் பொருத்தமிக்க கோரிக்கையா என்பது தெரியவில்லை.
முன்னதாக 2014-ல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், பிரிட்டன் ஒன்றியத்திலேயே ஸ்காட்லாந்து இருக்க வேண்டும் என்றே ஸ்காட்லாந்து மக்களில் பெரும்பான்மையினர் வாக்களித்திருந்தனர். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டனிலேயே நீடிக்க வேண்டும் என்று கருதியிருந்த ஸ்காட்லாந்து மக்கள், சமீபத்திய நிகழ்வுகள் காரணமாக அதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கும் சூழல் உருவாகிவிட்டது. ஸ்காட்லாந்து சுதந்திர நாடாக வேண்டும் எனும் பொதுக் கருத்து வளர்ந்துவந்தது. பிரெக்ஸிட்டுக்குப் பிறகு நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளில் இது தெரியவந்தது. எனினும், அடுத்த சில மாதங்களிலேயே அதற்கான ஆதரவு குறையத் தொடங்கியது. ஜனவரியில் பிரிட்டன் பிரதமர் தெரஸா மே ஆற்றிய உரையில், பொதுச் சந்தையிலிருந்து வெளியேறுவது எனும் தனது முடிவைத் தெரிவித்ததை அடுத்து, தனி நாடாக வேண்டும் எனும் எண்ணம் ஸ்காட்லாந்து மக்களிடையே மீண்டும் வலுப்பெறத் தொடங்கியது. தங்களுடைய பொருளாதார நலன்களுக்காக பிரிட்டனிலிருந்து வெளியேறுவது; சுதந்திர ஸ்காட்லாந்தைப் பொருளாதாரரீதியாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைப்பது எனும் குரல்கள் ஸ்காட்லாந்தில் கேட்கின்றன. “தங்களுடைய தேசிய இறையாண்மையை மீட்டெடுப்பதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்துடனான 40 ஆண்டு கால உறவை முறித்துக் கொள்ள பிரிட்டன் தயாராக இருக்கும் நிலையில், ஸ்காட்லாந்து பிரிந்துசெல்வது தொடர்பாகவும் அது பரிசீலிக்கும்” என்று ஸ்காட்லாந்து விடுதலைக்கு ஆதரவானவர்கள் வாதிடு கிறார்கள். எனினும், ஸ்காட்லாந்து தேசியவாதிகளின் இத்தகைய கணக்குகளுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்பது தெரியவில்லை.
ஏற்கெனவே, தத்தமது நாடுகளுக்குள்ளேயே பிரிவினை வாத இயக்கங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் ஸ்பெயின் போன்ற நாடுகள், ஸ்காட்லாந்து தேசியக் கட்சி விடுத்திருக்கும் கோரிக்கையை ஆதரிக்க வாய்ப்பில்லை. ஒருவேளை, ஸ்காட்லாந்து பிரிய பிரிட்டன் சம்மதித்தாலும், பொருளாதாரரீதியாகத் தனித்து இயங்குதல் ஸ்காட்லாந்துக்குச் சிரமம். ஐரோப்பிய ஒன்றியத்தில் ஸ்காட்லாந்து இடம்பெற வேண்டும் என்றால், அதன் எல்லா உறுப்பு நாடுகளும் அதற்குச் சம்மதிக்க வேண்டும். ஆனால், அதற்கு நேர் எதிரான சமிக்ஞைகளையே ஐரோப்பியத் தலைவர்கள் வெளிப்படுத்திவருகின்றனர். பிரிட்டன் பிரதமர் தெரஸா மே இது தொடர்பில் உண்மையான அக்கறையோடு ஸ்காட்லாந்தியர்களை அணுகுவது இரு தரப்புக்கும் நன்மை பயக்கும். பிரிவு எளிது; கூட்டுறவு அப்படி அல்ல!
(The Hindu)